Thursday, August 20, 2015

01.69 – பொது - (தலமாலை)


01.69 –
பொது - (தலமாலை)



2010-05-13
பொது
தலமாலை - ஒருபா ஒருபஃது
--------------------------------------
(நேரிசை வெண்பா)
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 பாடல்களால் ஆனது.
முதற்பாடல் 'கடலில்' என்று தொடங்கிப் பத்தாம் பாடல் “அன்புக் கடல்” என்று முடிகின்றது)



1) -- தில்லை --
கடலில் கரைத்தபெருங் காயமாய் இந்த
உடலும் மறையும் ஒருநாள் - மடநெஞ்சே
இல்லையெனும் நாள்வருமுன் எம்பெருமான் ஆடுகிற
தில்லையெனும் சேத்திரத்தைச் சேர்.



சேத்திரம் - க்ஷேத்திரம்; தலம்;



2) -- திருவேடகம் --
சேர்த்துவைத்த செல்வமெலாம், சென்றுவிட்டார் என்றுடலைப்
பார்த்துமனை ஒப்பாரி பாடும்போ(து) - ஆர்க்குதவும்?
காடடைந்த கட்டையெனக் காலன்செய் யாமுன்னம்
ஏடடைந்த ஏடகத்தை ஏத்து.



காடு - சுடுகாடு;
கட்டை - பிரேதம்;
காலன் செய்யாமுன்னம் - எமன் செய்வதற்கு முன்னரே;
ஏடு அடைந்த ஏடகம் - சம்பந்தர் இட்ட தேவார ஏடு வைகை வெள்ளத்தில் எதிர்ந்து சென்று அடைந்த திருவேடகம்;



3) -- திருவொற்றியூர் --
ஏத்திய பேரும், இலையென்றால் ஏசுவதும்
சாத்தியமே; உன்னுநெஞ்சே; தாழ்வற, - நேத்திரம்சேர்
நெற்றி உடையானை, நின்மலனை, நீடுபுகழ்
ஒற்றி உடையானை ஓது.



ஏத்திய பேரும் - புகழ்ந்தவர்களும்;
இலை என்றால் - நம் உயிர் / பொருள் இல்லை என்று ஆகிவிட்டால்;
உன்னு - நினை;
ஒற்றி உடையானை - திருவொற்றியூர்ப் பெருமானை;



4) -- திருவான்மியூர் --
ஓதமறந் தோயா துழல்வதேன் நெஞ்சமே;
வாதையற, வான்மியூர் வள்ளலைப், - பேதை
இலங்கையனை அன்றடர்த்த ஈசனைத்தீ அங்கை
இலங்கையனை எண்ணுவரும் இன்பு.



ஓத மறந்து ஓயாது உழல்வது ஏன் - ஈசனைத் துதிசெய்யாமல் ஏன் எப்போதும் உழல்கின்றாய்?
வாதை துன்பங்கள் தீர;
பேதை இலங்கையனை அன்று அடர்த்த - அறிவிலி இராவணனை முன்னர் நசுக்கிய;
தீ அங்கை இலங்கு ஐயனை - கையில் தீ இலங்கும் தலைவனை;
இன்பு - இன்பம்;



5) -- திருவிடைமருதூர் --
இன்பம் எனஎண்ணி ஏதேதோ தேடிமிகத்
துன்பமுறு நெஞ்சே; தொழுதுய்ந்நீ - அன்பன்
எருதூர் பெருமான் இணைத்தாள் மறவார்
கருதூர் இடைமருதூர் கண்டு.



எருது ஊர் பெருமான் இணைத்தாள் மறவார் கருது ஊர் இடைமருதூர் நீ கண்டு தொழுது உய்.
எருது ஊர் பெருமான் - இடப வாகனன்; (ஊர்தல் - ஏறுதல்; ஏறி நடத்துதல்);
இணைத்தாள் - இரு திருவடிகள்;
கருது ஊர் - கருதுகின்ற ஊர்;
இலக்கணக் குறிப்பு: உய், மை, போன்ற சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், புணர்ச்சியில் அம்மெல்லின ஒற்று மிகும்.



6) -- திருவாரூர் --
கண்டவர்சொல் கேட்டுக் கவல்வதேன்; ஈசனைக்
கண்டவர்சொல் கேள்வினைக் கட்டெலாம், - உண்டநஞ்சால்
காரூர் மிடறுடைய கண்ணுதலான் மேவிய
ஆரூர் அடைவார்க் கறும்.



உரைநடை அமைப்பில்: "கண்டவர் சொல் கேட்டுக் கவல்வதேன்; ஈசனைக் கண்டவர் சொல் கேள்; உண்ட நஞ்சால் கார் ஊர் மிடறு உடைய கண்ணுதலான் மேவிய ஆரூர் அடைவார்க்கு வினைக்கட்டு எல்லாம் அறும்.“
கண்டவர் - 1) யார் யாரோ; 2) தரிசித்தவர்;
கவலுதல் - கவலைப்படுதல்;
கார் ஊர் மிடறு - கருமை திகழும் கழுத்து; (ஊர்தல் - பரவுதல் - to extend over a surface, as spots on the skin);.
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
அறும் - இல்லாமல் போகும்;



7) -- திருப்பேரெயில் --
அறுமுகனைத் தந்த அழல்விழி அண்ணல்,
நறுமலர்க் கொன்றையணி நம்பன், - முறுவலொடு
பேரெயில் மூன்றெரித்த பெம்மான், பிறப்பில்லாப்
பேரெயில் முத்தனையே பேசு.



நம்பன் - சிவன்; (விரும்பப்படுபவன்);
முறுவலொடு - சிரிப்பால்;
பேர் எயில் மூன்று - முப்புரங்கள்; (பேர் - பெரிய);
பேரெயில் - திருப்பேரெயில் என்ற தலம்;
முத்தன் - இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்;



8) -- திருவேகம்பம் --
பேசற் கரிய பெருமானைத், தேடியமால்
வாச மலரான் இவர்காணாத் - தேசனைக்,
கச்சித் திருவேகம் பத்துறையும் கண்ணுதலை
இச்சித் திருநீ இனிது.



பேசற்கு அரிய பெருமானை - சொல்லற்கு அரிய கடவுளை;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.47.8 -
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்....”);
வாசமலரான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமன்;
தேசனை - ஒளிமயமாய் உள்ளவனை;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;
இச்சித்தல் - விரும்புதல்;



9) -- திரு ஆவூர்ப் பசுபதியீச்சரம் --
இனியமொழி சொல்லார்; இழிவழியே சென்று
நனியுழல்வார்; அன்னாரை நம்பா(து), - "இனித்துணை
ஆவூர்ப் பசுபதி யீச்சரத்தான்" என்பவரை
ஆவூர் பசுபதிகாப் பான்.



ஆவூர்ப் பசுபதியீச்சரம் - ஆவூர் தலத்தின் பெயர் - பசுபதியீச்சரம் அவ்வூர்க் கோயிலின்பெயர்;
ஆவூர் பசுபதி - ஆ ஊர் பசுபதி - ஏற்றின்மேல் ஏறி வரும் பசுபதி;



10) -- திருமாற்பேறு --
பான்மதி சூடுவான்; பாய்புலித் தோலினான்;
மான்மறி ஏந்துவான்; மாற்பேறன், - கான்மலர்
கோக்கின்ற அன்பர் கொடுவினை தீர்த்தவரைக்
காக்கின்ற அன்புக் கடல்.



பான்மதி - பால் மதி - வெண்திங்கள்;
மான்மறி - மான் கன்று;
மாற்பேறன் - திருமாற்பேறு என்ற தலத்தில் உறையும் சிவன்;
கான் மலர் - வாச மலர்கள்;
கொடுவினை தீர்த்து அவரைக் காக்கின்ற அன்புக் கடல் - கொடிய தீவினையைத் தீர்த்து அடியவர்களைக் காக்கின்ற கருணைக்கடல்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1)
ஒருபா ஒருபஃது' என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகும். வெண்பாவிலாவது, அகவற் பாவிலாவது பத்துப் பாடல்கள் பாடுவது என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது.



இது பத்துப்பாடல்களில் அந்தாதி மாலையாக அமைவது. அதாவது முதல் பாடலின் கடைசிச் சீரோ, சீரின் கடைசிச்சொல்லோ எழுத்தோ அடுத்த பாடலின் முதற்சீரில் முதலாக வருமாறு தொடுக்க வேண்டும். இப்படிப் பத்து வெண்பாக்கள் எழுத வேண்டும். கடைசிப்பாடலின் ஈறும் முதற்பாடலின் தொடக்கமும் அந்தாதியாகுமாறு மண்டலித்து ஒரு மாலையாக அமையும்.



2) இலக்கணக் குறிப்பு : இணைதாள் / இணைத்தாள் :
இணைதாள்” - ப்பிரயோகம் வினைத்தொகையாக வந்தால்தான் பொருந்தும். - இணைதல்/இணைத்தல் + தாள்;
"இணைத்தாள்" - என்று ஒற்று மிக்கு ரின் - இரண்டு திருவடிகள்;



சம்பந்தர் தேவாரம்: 2.53.3
வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.
---- கழல் - கழல்களை அணிந்த. இணைத்தாள் - இரண்டு திருவடிகள்.



சம்பந்தர் தேவாரம்: 3.2.8:
காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்
.. கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
தீசன் மேவும் இருங்கயி லையெடுத்
.. தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.
---- இணைச்சேவடி - சேவடிகள் இரண்டினையும்



1.88.7:
இயலும் விடையேறி யெரிகொண் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட
இயலு மிசையானை யெழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
---- கயலின் இணைக்கண்ணாள் - கயல் போன்ற இரு விழிகளைக் கொண்ட உமையம்மை



இராமலிங்க அடிகளார் பாடல்:
" எளியேன் கருணைத் திருநடஞ்செய்
.. இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம் "

-------------------------------- -------------------------------

2 comments:

  1. கண்டேன் கண்டறியாதன கண்டேன்
    உண்டேன் உண்டறியாதன உண்டேன்
    செந்தேன் செந்தமிழ்ப் பால்வழிச்
    சென்றேன்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தறிந்து மகிழ்ந்தேன்.

      Delete