Friday, August 21, 2015

01.72 – பொது - (ஒருபா ஒருபஃது)


01.72 –
பொது - (ஒருபா ஒருபஃது)



2010-07-03
பொது
"சிவபெருமான் ஒருபா ஒருபஃது"
--------------------------------------
(ஒரு விகற்பத்தால் அமைந்த நேரிசை வெண்பா.
பாடல்களின் முதல் ஈரடிகளில் முதற்சீர் மடக்குப் பெற்று வந்துள்ளது)
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 பாடல்களால் ஆனது.
முதற்பாடல் 'வந்திக்கு' என்று தொடங்கிப் பத்தாம் பாடல் “உவந்து” என்று முடிகின்றது)



1)
வந்திக்கு முன்வந்து மண்சுமந்தாய் நின்கழல்
வந்திக்கு முன்னன்பர் வாயிலுள்ளாய் - உந்திக்குப்
பந்திக்கு முந்திக்கொள் பண்புடையேன் என்னையும்தாள்
சிந்திக்கு மாறரனே செய்.



வந்தி - 1) மதுரையில் பிட்டு விற்று வாழ்ந்த ஒரு பக்தையின் பெயர்; 2) வந்தித்தல் - வணங்குதல்;
உந்தி - வயிறு;
வந்திக்காக முன்னொரு சமயம் வந்து மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்தவனே! உன் திருவடியை வணங்கும் உன் பக்தர்களின் வாயில் திகழ்பவனே! வயிற்றுக்காகப் பந்திக்கு முந்துகிற குணம் உடைய என்னையும் உன் திருவடியை எண்ணும்படிச் செய்வாய் சிவனே


(அப்பர் தேவாரம் - 4.37.8 - "... வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார் ...");



2)
செய்ய திருப்பாதா செஞ்சடையா எல்லாமே
செய்ய வலவனே தேவர்க்கும் - ஐயனே
வெய்ய வினைதீர் விரைமலர்த்தாள் போற்றிமனம்
நையத் திருவருள் நல்கு.



செய்ய - 1) சிவந்த; 2) செய்தல் - ஆற்றுதல்;
வலவனே - வல்லவனே - (இடைக்குறை விகாரம்);
வெய்ய - வெம்மையான; (வெய்ய வினை - வெம்மையான வினைகள் - தீவினைகள்);
தேவர்க்கும் ஐயனே - தேவர்களுக்கெல்லாம் தலைவனே;
விரை மலர்த் தாள் போற்றி - மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடியைத் துதித்து;
மனம் நைஎன் மனம் உருகுவதற்கு;
(அப்பர் தேவாரம் - 6.14.1 - "நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்")



3)
குழையா மனத்தேனும் கும்பிட்(டு)ஓர் காதில்
குழையா மணிகண்டா கோனே - பழையா
உழையார் கரனே மழையார் சடையா
அழகா எனவே அருள்.



குழையா - 1) குழையாத - நெகிழாத; 2) குழை அணிந்தவனே;
கோனே - அரசனே;
பழையா - பழையவனே;
உழை ஆர் கரனே - மான் ஏந்திய கையினனே;
மழை ஆர் சடையா - நீர் பொருந்திய சடையானே;



4)
அருளார் கடையடைந்(து) அல்லல் உறலேன்?
அருளார் சிவனை அடைந்தால், - திருவும்
மருவும்; வினைகளும் மாயும்; மனமே,
ஒருவன் திருநாமம் ஓது.



அருளுதல் - அளித்தல்; கிருபை செய்தல்;
அருளார் - 1) கொடாதவர்கள்; 2) அருள் ஆர் - அருள் நிறைந்த;
கடை - வாயில்;
அல்லல் உறல் ஏன் - அல்லற்படுவது எதற்கு?
திருவும் மருவும் - செல்வம் வந்தடையும்; (திரு - செல்வம்); (மருவுதல் - பொருந்துதல்);
வினைகளும் மாயும் - வினைகள் அழியும்;
ஒருவன் - ஒப்பற்றவன் - சிவபெருமான்;



5)
ஓத விடமுண்ட உத்தமன் தாளிணையை
ஓத மறவாதே உன்னெம - தூதர்கள்
வேதனை செய்ய விரைநாளில் வெள்ளேற்று
நாதனே காப்பான் நமை.



ஓத விடம் - கடல் நஞ்சு;
ஓதுதல் - துதித்தல்;
தாள் இணை - இரு திருவடிகள்;
உன்னெம தூதர்கள் - "உன்னு; எம தூதர்கள்"; (உன்னு - எண்ணு);
வெள் ஏற்று நாதன் - வெள்ளை இடபத்தின் மேல் வரும் தலைவன்;
நமை - நம்மை; (இடைக்குறை விகாரம்);
"மனமே" என்ற விளி தொக்குநிற்கின்றது.



6)
நமைவினை சூழ்ந்து நரகிலிடு முன்னம்
நமைவினை எல்லாம் நலிய - உமைகோன்
இமையவர் நாதன் எருதேறி பாத
கமலம் இரண்டைக் கருது.



நமைவினை - 1) நம்மை வினை; 2) நமைக்கிற வினை; (நமைத்தல் - வருத்துதல்);
நலிதல் - அழிதல்;
உமைகோன் - உமாபதி;
இமையவர் நாதன் - தேவர்கள் தலைவன்;
எருதேறி - இடபவாகனன்;
கருது - எண்ணு; விரும்பு;


மனமே! நம்மை வினைகள் சூழ்ந்துகொண்டு நரகத்தில் தள்ளுமுன், வருத்தும் வினைகள் எல்லாம் அழிய, 'பார்வதியின் தலைவன், தேவர்கள் தலைவன்; எருதின்மேல் வரும் ஈசன்' ஆன சிவபெருமானின் இரு தாமரைத் திருவடிகளை எண்ணு.



7)
கருவார் வினைகள் கழல விரும்பின்,
கருவார் பொழில்சூழ் கடவூர்ப் - பெருமான்
திருவார் கழல்கள் தினமும் தொழுவாய்;
தருவான்; அவன்வான் தரு.



கரு ஆர் வினைகள் - கருவில் பிணைக்கும் வினைகள் - பிறவி கொடுக்கும் வினைகள்; (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);
கழல விரும்பின் - நீங்க விரும்பினால்; (கழலுதல் - நீங்குதல்);
கரு வார் பொழில் - கருமையாகிய பெரிய சோலை;
கடவூர்ப் பெருமான் - திருக்கடவூரில் (திருக்கடையூரில்) எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்;
திரு ஆர் கழல் - நன்மை பொருந்திய திருவடி;
தருவான் - வரம் அளிப்பான்;
வான் தரு - கற்பக மரம்;



8)
தருவாய் இதுவேநம் சங்கரனைப் போற்றாய்
தருவாய் எதையும் தருவான் - பெருமான்
அருமா மறையன் அடைந்தார்க் கருள்வான்
கருமா மிடறன் கடிது.



தருவாய் - 1) தக்க சமயம்; 2) தரு ஆய் - கற்பக மரமாகி;
போற்றாய் - போற்றுவாயாக;
அரு மா மறையன் - அரிய வேதங்கள் பாடியவன்;
கரு மா மிடறன் - அழகிய நீலகண்டம் உடையவன்;
கடிது - விரைவாய் ( Speedily, quickly);



9)
கடிவான் மலரால் கழலைத் தொழுதால்,
கடிவான் பழவினைக் கட்டின் - பிடிதான்;
முடிநான் முகனும் அடிமால் முயலும்
படிவான் கடந்தானைப் பாடு.



கடி வான் மலர் - வாசனைமிக்க அழகிய பூக்கள்;
கடிதல் - அழித்தல்; விலக்குதல்;
படி - 1) விதம்; 2) பூமி;
முயலும்படி வான் கடந்தானை - தேடும்படி மண்ணையும் விண்ணையும் கடந்து நின்றவனை;


(மனமே!) அழகிய நறுமலர்களால் திருவடியைத் தொழுதால், நம் பழவினைக் கட்டுகளின் பிடியை அவன் அழிப்பான். முடியைப் பிரமனும் அடியைத் திருமாலும் தேடும்படி மண்ணையும் விண்ணையும் கடந்து நின்றவனைப் பாடுவாயாக!



10)
பாடு விடவேண்டில் பார்வதி கோன்புகழ்
பாடு மடநெஞ்சே; பாலிப்பான் - வீடு,மதி
சூடும் பெருமான், சடையிடைத் தூநதி
ஓடும் இறைவன் உவந்து;



"பாடு விடவேண்டில் பார்வதி கோன்புகழ் பாடு மடநெஞ்சே; மதி சூடும் பெருமான், சடையிடைத் தூநதி ஓடும் இறைவன் உவந்து வீடு பாலிப்பான்" - என்று கொண்டுகூட்டிப் பொருள்கொள்க.


பாடு - 1) துன்பம்; வருத்தம்; 2) பாட்டுப் பாடுதல்;
பாலித்தல் - அருள்தல்; கொடுத்தல்; காத்தல்;
வீடு - முக்தி; வினைநீக்கம்;
உவந்து - மகிழ்ந்து;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1)
ஒருபா ஒருபஃது' என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகும். வெண்பாவிலாவது, அகவற் பாவிலாவது பத்துப் பாடல்கள் பாடுவது என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது.
இது பத்துப்பாடல்களில் அந்தாதி மாலையாக அமைவது. அதாவது முதல் பாடலின் கடைசிச் சீரோ, சீரின் கடைசிச்சொல்லோ எழுத்தோ அடுத்த பாடலின் முதற்சீரில் முதலாக வருமாறு தொடுக்க வேண்டும். இப்படிப் பத்து வெண்பாக்கள் எழுத வேண்டும். கடைசிப்பாடலின் ஈறும் முதற்பாடலின் தொடக்கமும் அந்தாதியாகுமாறு மண்டலித்து ஒரு மாலையாக அமையும்.



2)
மடக்கு : மடங்குதல் என்பது சொல், சொற்றொடர், முதலியன ஒரே பாடலில் திரும்ப வருவது. “செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துகள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு என்று பெயராகும்”
-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment