01.73 – பொது - (அங்க மாலை)
2010-07-10
பொது
"அங்க மாலை" - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள். முதற்பாடல் 'பிறப்பை' என்று தொடங்கிப் பத்தாம் பாடல் “பிறப்பு” என்று முடிகின்றது )
(அப்பர் தேவாரம் - திரு அங்க மாலை - 4.9 - 'தலையே நீவணங்காய்')
1)
பிறப்பை அறுக்கும் பிரானோர் பிறப்பும்
இறப்பும் இலாமுக்கண் எந்தை; - சிறக்கப்
பிறைக்கும் முடியிலிடம் தந்த பெருமான்;
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.
இலா
-
இல்லாத;
கறைக்கண்டன்
-
நீலகண்டன்;
2)
கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
காண நடக்குமென் கால்.
அருள்செய்ம்மைசேர்
-
அருள்செய்
+
மை
சேர்;
இலக்கணக்குறிப்பு:
(கை,
பை,
செய்,
நெய்,
பொய்,
போன்ற
சொற்களுக்குப் பின் மெல்லினத்தில்
தொடங்கும் சொல் வரின்,
புணர்ச்சியில்
அம்மெல்லினம் மிகும்);
மை
சேர் மிடறன் -
கருமை
பொருந்திய கண்டன் -
நீலகண்டன்;
மலைமகள்
சேர் மெய் காட்டி -
இடப்பக்கம்
பார்வதி உறையும் திருமேனியைக்
காட்டுபவன்;
கோணல்
பிறையான் -
வளைந்த
பிறைச்சந்திரனைச் சூடியவன்;
3)
காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
தன்னைத் தொழுமென் தலை.
பால்
ஆடும் எம்பெருமான் -
பாலால்
அபிஷேகம் பெறும் எம்பெருமான்;
பங்கயன்
மாலார்க்கு முன் எரியாய்
நீண்ட முதல்வன்
-
தாமரை
மேலிருக்கும் பிரமன் திருமால்
இவர்கள்
முன் சோதியாகி
உயர்ந்த ஈசன்;
(முன்
-
எதிரில்;
முன்னொரு
சமயத்தில்);
4)
தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
கண்டு மகிழுமென் கண்.
கொண்டல்
-
மேகம்;
(கொண்டல்
நிறக் கண்டன் -
நீலகண்டன்);
(சுந்தரர்
தேவாரம் -
7.84.1 - "தொண்டர்
அடித்தொழலும் ...
கொண்டல்
எனத்திகழும் கண்டமும் ....");
5)
கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
சீர்கேட்கும் என்றன் செவி.
காய்தல்
-
எரித்தல்;
பெற்றி
-
தன்மை;
பெருமை;
எண்
இலாச் சீர் -
அளவற்ற
புகழ்;
என்றன்
-
என்
+
தன்
-
என்னுடைய;
6)
செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
நாளும் நவிலுமென் நா.
அவிர்
சடை -
(அவிர்தல்
-
பிரகாசித்தல்);
அன்பர்
புவி மீது மீளும்
நிலை தவிர்த்து விண் அளிப்பான்
-
பக்தர்கள்
மண்ணுலகில் மீண்டும் பிறக்கும்
நிலையை நீக்கி,
அவர்களுக்கு
விண்ணுலக வாழ்வு தருவான்;
நாமத்தை
-
அப்பெருமான்
திருப்பெயரை;
நாளும்
-
தினமும்;
நவிலும்
என் நா -
என்
நாக்குச் சொல்லும்;
(நவில்தல்
-
சொல்லுதல்);
7)
நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
ஆன்மிசை
ஊர் ஐயன் -
காளையின்மேல்
செல்லும் தலைவன்;
அஞ்சடை
-
அம்
சடை -
அழகிய
சடை;
கான்
-
வாசனை;
ஆர்த்தல்
-
ஒலித்தல்;
ஆரம்
-
மாலை
(Garland);
(புகழ்
ஆரம் -
துதிமாலை
-
தேவாரம்,
திருவாசகம்);
புகழாரக்
காற்று -
புகழ்
ஆர் அக்-காற்று
/
புகழ்
ஆரக் காற்று;
கான்மிகும்
பூச்சூடு அரனின் புகழாரக்
காற்று -
வாசமலர்களை
அணியும் சிவனின் பாமாலைகள்
ஒலிக்கும் அந்தக் காற்று;
8)
மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
உற்றுத் தொழுமென் உடல்.
மூக்கப்
பாம்பு -
மூர்க்கப்
பாம்பு;
கொடிய
பாம்பு;
(மூக்கம்
-
மூர்க்கம்
-
சீற்றம்);
ஆர்த்தல்
-
கட்டுதல்;
பிணித்தல்;
அரை
-
waist;
வேளைத்
தழல் எழ
நோக்கியவன் -
மன்மதனை
நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
(வேள்
-
மன்மதன்;
காமன்);
(தழல்
-
தீ);
விடை
-
இடபம்;
காளை;
விண்ணவர்
கோன் -
தேவர்கள்
தலைவன்;
நிலம்
உற்று -
தரையை
அடைந்து;
(தரையில்
வீழ்ந்து);
9)
உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
*
மயிலாப்பூரில்
திருஞான சம்பந்தர்
"மட்டிட்ட
புன்னை"
என்ற
பதிகம் பாடிப் பூம்பாவையை
எழுப்பிய நிகழ்ச்சியைச்
சுட்டியது.
ஒண்
தமிழ் -
சம்பந்தரின்
தேவாரம்;
மட
மங்கை -
அழகிய
இளம்பெண்;
மயிலை
விடையான் -
மயிலாப்பூரில்
உறையும் இடபவாகனான சிவபெருமான்;
அரித்தல்
-
வருத்துதல்;
மெல்ல
மெல்ல அழித்தல்;
தாளை
-
பாதத்தை;
மரித்தல்
-
ஸ்மரித்தல்
-
நினைதல்;
10)
மனத்தால் நினைத்தால் அனைத்தும் தருவார்
பனைக்கைப் பகட்டின் உரியார் - கனத்தவெற்பை
வீசவந்தான் வாய்பத்தும் வீரிடநெ ரித்தார்சீர்
பேசலே நல்ல பிறப்பு.
பனைக்கைப்
பகட்டின் உரியார் -
பனைபோன்ற
கையையுடைய யானையின் தோலை
அணிந்தவர்;
கனத்த
வெற்பு -
பெருமையுடைய
மலை -
கயிலைமலை;
(கனத்தல்
-
பெருமையுறுதல்);
கனத்த
வெற்பை வீச வந்தான் வாய்
பத்தும் -
கயிலையை
பெயர்த்து எறிவேன் என்று
வந்த இராவணனின் பத்து வாய்களும்;
வீரிடுதல்
-
திடீரெனக்
கத்துதல் (To
cry out suddenly);
நெரித்தல்
-
நசுக்குதல்;
சீர்
-
புகழ்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1)
‘ஒருபா ஒருபஃது' என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகும். வெண்பாவிலாவது, அகவற் பாவிலாவது பத்துப் பாடல்கள் பாடுவது என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது.
இது பத்துப்பாடல்களில் அந்தாதி மாலையாக அமைவது. அதாவது முதல் பாடலின் கடைசிச் சீரோ, சீரின் கடைசிச்சொல்லோ எழுத்தோ அடுத்த பாடலின் முதற்சீரில் முதலாக வருமாறு தொடுக்க வேண்டும். இப்படிப் பத்து வெண்பாக்கள் எழுத வேண்டும். கடைசிப்பாடலின் ஈறும் முதற்பாடலின் தொடக்கமும் அந்தாதியாகுமாறு மண்டலித்து ஒரு மாலையாக அமையும்.
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment