Thursday, August 20, 2015

01.70 – பராய்த்துறை - (திருப்பராய்த்துறை)

01.70 – பராய்த்துறை - (திருப்பராய்த்துறை)



2010-05-17
திருப்பராய்த்துறை
"பராய்த்துறை மேவிய பரனே"
--------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - “மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை”)



1)
கறவையென் றெண்ணி மலட்டிடம் சென்று
.. கறக்கநான் மிகமுயன் றெய்த்தேன்
உறவென இங்கே உள்ளவன் நீயே
.. உன்னடி போற்றினேன் எந்தாய்
அறவனே அடியேன் பழவினை எல்லாம்
.. அறவருள் புரிந்தெனைக் காவாய்
பறவைகள் நண்ணிப் பழமுணும் பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



முதல் அடி - உலக வாழ்வில் இன்பம் காண முயன்று வருந்தியதைச் சுட்டியது;
கறவை - பால் பசு (Milch cow);
எய்த்தேன் - இளைத்தேன்; வருந்தினேன்;
அறவனே - அற வடிவினனே; தர்மஸ்வரூபியே;
அடியேன் பழவினை எல்லாம் அற அருள்புரிந்து எனைக் காவாய் - என்னுடைய பழைய வினைகள் எல்லாம் தீர்வதற்கு அருள்செய்து என்னைக் காப்பாயாக;
நண்ணுதல் - சேர்தல்; அடைதல்;

2)
தகவிலாச் செயல்கள் தம்மையே செய்து
.. தரணியில் உழன்றுநான் எய்த்தேன்
புகலெனக் கண்டு பொன்னடி தன்னைப்
.. போற்றிவ ணங்கினேன் எந்தாய்
அகலென நின்றென் அகத்திரு ளுடனே
.. அருவினை அகற்றிய ருள்வாய்
பகலவன் கதிர்கள் புகலொணாப் பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



தகவு இலாச் செயல்கள் தம்மையே செய்து - தகாத செயல்களையே செய்து;
தரணி - பூமி;
புகல் - அடைக்கலம்;
எந்தாய் - எந்தையே;
அகல் என நின்று என் அகத்து இருளுடனே அருவினை அகற்றி அருள்வாய் – என் உள்ளத்துள் விளக்காகி நின்று என் மன இருளையும் தீவினைகளையும் நீக்கி அருள்வாயாக;;
பகலவன் கதிர்கள் புகலொணாப் பொழில் சூழ் - சூரிய கிரணங்கள் புகாத அடர்ந்த சோலைகள் சூழ்ந்த;



3)
மலவிருள் மூடி மதியினை மறைக்க
.. வழியறி யாதுநான் எய்த்தேன்
நலமளி கழலை ஞானியர் போல
.. நானுமின் றேத்தினேன் காவாய்
புலர்கிற பொழுது பொலிகிற இரவி
.. போல்நிறம் உடையமெய்ப் பொருளே
பலவித மலர்கள் பூக்கிற பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



மல இருள் - மும்மலக்கட்டு என்ற இருள்;
நலம் அளி கழலை ஞானியர் போல நானும் இன்று ஏத்தினேன் காவாய் - நலங்கள் அருளும் திருவடியை ஞானிகள் தொழக்கண்டு அவர்களைப் போல நானும் இன்று வணங்கினேன்; காத்தருள்வாயாக;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.91.3 -
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்;
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே.)
புலர்கிற பொழுது பொலிகிற இரவி போல் நிறம் உடைய மெய்ப்பொருளே - உதிக்கின்ற பொழுதில் விளங்கும் சூரியனைப் போல செந்னிறம் உடையவனே; மெய்ப்பொருளே;



4)
நிசியன இருளே நிலவிடும் மனத்தேன்
.. நிதம்வினை பெருக்கியு ழன்றேன்
கசிகிற மனத்தால் கற்றவர் போற்றக்
.. கண்டுநான் போற்றினேன் காவாய்
சசிதனைச் சடைமேல் தாங்கிய சிவனே
.. தாயெனக் காத்தருள் வோனே
பசியற உண்ட மந்திபாய் பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



நிசி அன - இரவைப் போன்ற;
இருளே நிலவிடும் மனத்தேன் - இருளே இருக்கும் மனத்தை உடைய நான்;
சசி - சந்திரன்;



5)
அடர்வினை யாலே அடைகிற துன்பம்
.. அளவில அதன்பய னாகத்
தொடர்கிற பிறப்பும் அளவில நீயே
.. துணையெனக் கண்டடி தொழுதேன்
இடர்களை நீக்கி இன்னருள் புரிவாய்
.. எழிலுற மதிபுனை ஈசா
படர்கொடி ஏறும் மரம்நிறை பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



அடர் வினையாலே அடைகிற துன்பம் அளவு இதாக்குகின்ற வினைகளால் நான் அடையும் துன்பம் அளவற்றது; (அடர்த்தல் - அமுக்குதல்; தாக்குதல்);



6)
எண்ணிலி வினைகள் இங்குவந் தென்னை
.. இடருறச் செய்வது தாளேன்
நண்ணிய நமனை அடியவர்க் காக
.. நன்குதை கழல்தனைத் தொழுதேன்
ஒண்ணுதல் உமையோர் பங்கென உடைய
.. ஒருவனே காத்தருள் புரிவாய்
பண்ணிசை பாடி வண்டணை பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



எண்ணிலி வினைகள் - கணக்கற்ற வினைகள்;
ன்னை இடர் உறச் செய்வது தாளேன் - என்னைத் துன்புறச் செய்வதைத் தாங்கமாட்டேன்;
நண்ணிய நமனை - நெருங்கிய எமனை;
ஒண்ணுதல் - ஒள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி;
ஒருவனே - ஒப்பற்றவனே;
பண்ணிசை பாடி வண்டு அணை பொழில் - வண்டுகள் இசைபாடி அடையும் சோலை;

7)
அரணெனக் காக்கும் அடியிணை தன்னை
.. அனுதினம் போற்றிநிற் கின்றேன்
தரணியில் பிறந்து தளைகளில் சிக்கித்
.. தவித்திடும் என்றனைக் காவாய்
முரணிய புரங்கள் மூன்றையும் அன்று
.. முறுவலால் தீப்புகச் செய்தாய்
பரவிய பொன்னி நதியயல் பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



அரண் - மதில்; கோட்டை;
என்றனைக் காவாய் - என் தனைக் காவாய் - என்னைக் காப்பாயாக;
முரணிய புரங்கள் - பகைத்த முப்புரங்கள்; (முரணுதல் - மாறுபடுதல் - To be at variance);
பரவிய பொன்னி நதி யல் பொழில் சூழ் - பரந்த காவிரி ஆற்றின் அருகே சோலைகள் சூழ்ந்த; (பரவுதல் - பரந்திருத்தல் - To spread);



8)
கரியதன் உரியைத் தரிக்கிற தலைவா
.. கடல்விடம் சேர்கறைக் கண்டா
பெரியநின் மலையைப் பெயர்க்கநி னைந்த
.. பேதையன் மணிமுடி பத்தும்
நெரியமெல் விரலை நிறுவிய இறைவா
.. நின்கழல் போற்றினேன் காவாய்
பரிமளம் வீசும் மலர்நிறை பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



கரியதன் உரியை - யானைத்தோலை;
பேதையன் மணிமுடி பத்தும் - அறிவிலாத இராவணனின் பத்துத் தலைகளும்;



9)
கழலரி காணான் முடியயன் காணான்
.. கனலெனக் கடந்துநின் றவனே
உழையொடு மழுவைக் கரங்களில் ஏந்தி
.. உமையொடு விடைமிசை வருவாய்
தழலுமிழ் விழியாய் மழைபொழி சடையாய்
.. தாளிணை போற்றினேன் காவாய்
பழமுணும் புட்கள் பாட்டறாப் பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



கழல் அரி காணான் முடி யன் காணான் - அடியையும் முடியையும் திருமாலும் பிரமனும் காணமாட்டார்கள்;
கனல் எனக் கடந்து நின்றவனே - அப்படிச் சோதியாகி எல்லையின்றி அண்டமெல்லாம் கடந்து நின்ற பெருமானே;
உழை - மான்;
விடைமிசை - இடபத்தின்மேல்;
தழல் உமிழ் விழியாய் - தீயை உமிழும் நெற்றிக்கண் உடையவனே;
மழை பொழி சடையாய் - சடையில் கங்கையை உடையவனே;
புட்கள் பாட்டு அறாப் பொழில் சூழ் - பறவைகளின் பாட்டு எப்பொழுதும் இருக்கும் சோலைகள் சூழ்ந்த;



10)
நன்மொழி நவிலார் நாதனைத் தெளியார்
.. நல்லவர் போல்நடித் தேய்ப்பார்
புன்மையர் அவர்தம் பொய்களை மதியா(து)
.. இளம்பிறை சூடியைப் போற்றும்
தன்மையர்க் கருளும் சங்கரன் தனக்கோர்
.. தலைவனி லாதமுக் கண்ணன்
பன்மலர் மதுவுண்(டு) அளிஅறை பொழில்சூழ்
.. பராய்த்துறை மேவிய பரனே.



நன்மொழி நவிலார் நாதனைத் தெளியார் நல்லவர் போல் நடித்து ஏய்ப்பார் - நன்மை தரும் சொற்களைப் பேசமாட்டார்கள்; கடவுளை அறியார்; நல்லவரைப் போல நடித்து ஏமாற்றுவார்கள்;
புன்மையர் - கீழோர்;
இளம்பிறை சூடியை - பிறைச்சந்திரனை அணிந்த பெருமானை;
தனக்கு ஓர் தலைவன் இலாத முக்கண்ணன் - தேவாதிதேவன், நெற்றிக்கண்ணன்;
அளி அறை பொழில் சூழ் - வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த;



11)
கங்குலும் பகலும் கழலிணை போற்றிக்
.. களிக்கிற அடியவர் மனமே
தங்கிட மாக்கொள் தன்னிகர் இல்லாத்
.. தகைமையன் சங்கரன் முன்னம்
அங்கரு கணைந்த ஐங்கணை வேளின்
.. அழகுடல் தனையெரி அம்மான்
பங்கமில் புகழான் பைம்பொழில் சூழ்ந்த
.. பராய்த்துறை மேவிய பரனே.



கங்குல் - இரவு;
தங்கு இமாக் கொள் - தான் உறையும் இடம் என்று கொள்ளும்;
தன்னிகர் இல்லாத் தகைமையன் - தனக்கு எவ்வொப்பும் இல்லாத பெருமை உடையவன்;
ஐங்கணை வேள் - ஐந்து மலர் அம்புகள் உடைய மன்மதன்;
பங்கம் இல் புகழான் - குற்றமற்ற புகழ் உடையவன்;
பைம்பொழில் - பசிய சோலைகள்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment