Thursday, August 13, 2015

01.41 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)


01.
41
ஒற்றியூர்



2008-11-16
ஒற்றியூர் (திருவொற்றியூர்)
"ஒற்றியுறை கோன்"
-----------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்;
(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருப்புகலி - திருவிராகம் - பண்: இந்தளம் -
"முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்")



1)
தெண்டனிடு தேவரிடர் தீரவமு தாக
வெண்டிரைகள் வீசுகிற வேலையுமிழ் நஞ்சை
உண்டருளும் எந்தையுறை ஊர்அடியர் நாளும்
ஒண்டமிழ்கள் கொண்டுதொழும் ஒற்றிநகர் ஆமே.



பதம் பிரித்து:
தெண்டனிடு தேவர் இடர் தீர, அமு(து) ஆக,
வெண் திரைகள் வீசுகிற வேலை உமிழ் நஞ்சை
உண்(டு) அருளும் எந்தை உறை ஊர், அடியர் நாளும்
ஒண் தமிழ்கள் கொண்டு தொழும் ஒற்றி நகர் ஆமே.


தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - மார்பு நிலத்துற விழுந்து வணங்குதல்;
அமுது ஆக - அமிர்தம் என்று; / அமிர்தம் விளைய;
வெண்டிரை - வெண் திரை - வெள்ளிய அலை;
வேலை - கடல்;
அடியர் நாளும் - அடியவர்கள் தினந்தோறும்;
ஒண் தமிழ் - சிவஞானம் ததும்பும் தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப் பாடல்கள். (ஒண்மை - அறிவு : சிவ ஞானம்);
ஒற்றி நகர் - திருவொற்றியூர்;



2)
நாதவரு ளாயெனவு ரைத்துமிக நம்பிப்
பாதமலர் பாடுகிற பாலகனை அண்டும்
காதகந மன்றனுயிர் மாளவுதை காலன்
ஓதமலி கின்றதிரு ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
"நாத! அருளாய்" என உரைத்து மிக நம்பிப்
பாத மலர் பாடுகிற பாலகனை அண்டும்
காதக நமன்தன் உயிர் மாள உதை காலன்,
ஓத[ம்] மலிகின்ற திரு ஒற்றி உறை கோனே.


நம்புதல் - விரும்புதல்;
பாலகன் - இங்கே மார்க்கண்டேயர்;
காதகம் - கொலை (killing, taking away life); பீடிக்கை (harassing, torturing);
உதை காலன் - உதைத்த காலை உடையவன்;
ஓதம் - கடல் அலை; ஒலி;
மலிதல் - மிகுதல்;
கோன் - அரசன்; தலைவன்;



3)
ஆழிதுயில் மால்மலர்கள் ஆயிரமும் இட்டு
வாழியென வாழ்த்தியடி போற்றிடவ ருள்வான்
ஆழியினை ஆரிருளில் ஆடுகிற ஐயன்
ஊழிமுதல் ஆகுமிறை ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
ஆழி துயில் மால் மலர்கள் ஆயிரமும் இட்டு
வாழி என வாழ்த்தி அடி போற்றிட அருள்வான்
ஆழியினை, ஆரிருளில் ஆடுகிற ஐயன்,
ஊழி முதல் ஆகும் இறை, ஒற்றி உறை கோனே.


ஆழி துயில் மால் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;
ஆழி - சக்கராயுதம்;
ஆர் இருள் - செறிந்த இருள்; (திருவாசகம் - சிவபுராணம் - "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே" - )
ஊழி முதல் - ஊழிகள் பலவற்றிற்கும் முதல்வன்; ("ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை" - திருவெம்பாவை - 8)


குறிப்பு: திருவீழிமிழலையில் திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கிய வரலாறு.



4)
சொன்னமொழி மீறிநகர் தன்னைவிடு தோழர்
இன்னலுறு மாறுகுரு டாக்கியவர் பின்னர்க்
கன்னலன இன்தமிழ்கள் பாடவிழி தந்தான்
உன்னுமடி யார்க்கருளும் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
சொன்ன மொழி மீறி, நகர்தன்னை விடு தோழர்
இன்னல் உறுமாறு குருடாக்கி, அவர் பின்னர்க்
கன்னல் அன இன் தமிழ்கள் பாட, விழி தந்தான்;
உன்னும் அடியார்க்(கு) அருளும் ஒற்றி உறை கோனே.


விடுதல் - நீங்குதல்;
கன்னல் அன - கரும்பைப் போன்ற;
உன்னுதல் - நினைத்தல்;


குறிப்பு: சங்கிலியார்க்குத் தாம் கொடுத்த வாக்கை மீறித் திருவொற்றியூரை நீங்கித் திருவாரூர்க்குச் சென்ற சுந்தரரது பார்வையை ஈசன் பறித்துப் பின் அவர் பாடல்களுக்கு இரங்கிப் பார்வையை மீண்டும் அளித்த வரலாறு.



5)
ஏதுமறி யாதவரும் எந்தைதிரு நாமம்
ஓதுபவர் ஆயினவர் உள்ளமது நீங்கான்
மாதுபிரி யாதபெரு மான்மதுவை நாடி
ஊதுகிற வண்டுமிகும் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
ஏதும் அறியாதவரும் எந்தை திரு நாமம்
ஓதுபவர் ஆயின் அவர் உள்ளம் அது நீங்கான்,
மாது பிரியாத பெருமான், மதுவை நாடி
ஊதுகிற வண்டு மிகும் ஒற்றி உறை கோனே.


எந்தை - எம் தந்தை;
மாது பிரியாத பெருமான் - அர்த்தநாரீஸ்வரர்;
ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல் (to hum, as bees or beetles, in getting out honey from flowers);
"மாது பிரியாத பெருமான், மதுவை நாடி ஊதுகிற வண்டு மிகும் ஒற்றி உறை கோனே" என்பதை 'அர்த்தநாரீஸ்வரன் என்ற தேனை விரும்பி வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருவொற்றியூரில் உறையும் அரசன்" என்றும் பொருள்கொள்ளலாம்.


(அப்பர் தேவாரம் - 5.60.1 -
"ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே")


(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 3
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றுதாய் கோத்தும்பீ.)






6)
பத்தியொடு நித்தமிசை பாடுமடி யாரின்
அத்தனைவி னைப்பயனும் அற்றுவிட நோக்கி
முத்திதர வல்லவனெ ழுத்தறியு நாதன்
உத்தமனி ருத்தனவன் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
பத்தியொடு நித்தம் இசைபாடும் அடியாரின்
அத்தனை வினைப்பயனும் அற்றுவிட நோக்கி
முத்தி தர வல்லவன் எழுத்தறியு[ம்] நாதன்
உத்தமன் நிருத்தன் அவன் ஒற்றி உறை கோனே.


பத்தி - பக்தி;
நித்தம் - எப்பொழுதும்; தினந்தோறும்;
அறுதல் - இல்லாமற்போதல் (to cease, become extinct, perish);
விடுதல் - ஒரு துணைவினை (an auxiliary verb having the force of certainty, intensity, etc.);
நோக்கி - அருட்கண்ணால் பார்த்து;
எழுத்தறியும் நாதன் - திருவொற்றியூர் ஈசன் பெயர்களுள் ஒன்று 'எழுத்தறியும் பெருமான்';
உத்தமன் - சிரேஷ்டன்; கடவுள்;
நிருத்தன் - கூத்தன்; நடனம் புரிபவன்;


(அப்பர் தேவாரம் - 4.57.3 -
"கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய் ..." - கட்டமே ஆன வினைகள் இவை காத்து நோக்கி ஆளாய் - துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து, நீ அருட்கண்ணால் நோக்கி ஆட்கொள்வாய்;)


(சம்பந்தர் தேவாரம் - 2.43.8
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள(து) உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.);



7)
நெற்றியினில் ஒற்றைவிழி பெற்றபெரு மானைப்
பற்றெதுவும் அற்றுமண மிக்கமலர் இட்டு
நற்றமிழ்கொ டெத்தினமு நச்சியடி போற்ற
உற்றதுணை ஆவர்திரு ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
நெற்றியினில் ஒற்றை விழி பெற்ற பெருமானைப்,
பற்(று) எதுவும் அற்று மண[ம்] மிக்க மலர் இட்டு
நற்றமிழ்கொ(டு) எத்தினமு[ம்] நச்சி அடி போற்ற,
உற்ற துணை ஆவர் திரு ஒற்றி உறை கோனே.


நெற்றியினில் ஒற்றை விழி - நெற்றிக்கண்; (அப்பர் தேவாரம் - 6.32.3 - "நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி")
பற்று எதுவும் அற்று - ஆசைகள் இன்றி;
(பெரியபுராணம் - திருக்கூட்டச் சிறப்பு - 12.0143
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.”
இவ்வடியவர் பெருமக்கள், ….. அன்பு காரணமாய்ச் சிவபெருமானை வணங்குதலே அன்றி, வீடுபேற்றையும் விரும்பாத பக்தி உடையவர்கள். )



8)
செப்பரிய சீருடைய அப்புனித வெற்பை
மப்புடன சைத்திடும ரக்கனைநெ ரித்துத்
தப்புணர வைத்தருளும் அப்பனவன் எந்த
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
செப்பரிய சீர் உடைய அப்புனித வெற்பை
மப்புடன் அசைத்திடும் அரக்கனை நெரித்துத்,
தப்(பு) உணர வைத்(து) அருளும் அப்பன்; அவன் எந்த
ஒப்பும் இலன்; நல் புனலன்; ஒற்றி உறை கோனே.


செப்பரிய - சொல்வதற்கு அரிய;
சீர் - பெருமை;
வெற்பு - மலை; (இங்கே கயிலைமலை);
மப்பு - மயக்கம் (bewilderment; beclouded state of the intellect); மட்டித்தனம் (dullness);
நல் புனலன் - கங்கையை அணிந்தவன்;



9)
மண்ணகழு மால்பிரமன் என்றிருவர் அன்று
நண்ணரிய சோதியென நின்றநம தண்ணல்
உண்ணெகிழு மன்பரடை தற்கெளியன் ஆலம்
உண்டருளும் அண்டனவன் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
மண் அகழு[ம்] மால், பிரமன் என்றிருவர் அன்று
நண்ணரிய சோதி என நின்ற நம(து) அண்ணல்,
உள் நெகிழும் அன்பர் அடைதற்(கு) எளியன்; ஆலம்
உண்(டு) அருளும் அண்டன்; அவன் ஒற்றி உறை கோனே.


மால் - திருமால்;
என்றிருவர் - என்ற இருவர்; (என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் விகாரம்);
(சுந்தரர் தேவாரம் - 7.86.9 - “மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்”);
நண்ணரிய - நண்ணுதற்கு அரிய - அடைய முடியாத;
உள் நெகிழும் - மனம் உருகும்;
ஆலம் - ஆலகால விடம்;
அண்டன் - கடவுள் (God, as Lord of the universe)



10)
நல்லவழி ஒன்றுமறி யாதுபல பொய்யே
சொல்லியிழி கின்றவரை நம்பியழி யாதே
அல்லினட மாடிமலை வில்லிபெயர் சொல்ல
ஒல்லைவினை தீர்த்தருளும் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
நல்ல வழி ஒன்றும் அறியாது பல பொய்யே
சொல்லி இழிகின்றவரை நம்பி அழியாதே;
அல்லில் நடம் ஆடி, மலைவில்லி பெயர் சொல்ல
ஒல்லை வினை தீர்த்(து) அருளும் ஒற்றி உறை கோனே.


அல்லினடமாடி - அல்லில் நடம் ஆடி - இருளில் திருநடம் செய்பவன்;
மலைவில்லி - மலையை வில்லாக ஏந்தியவன்;
ஒல்லை - விரைவில்; சீக்கிரம்;
தீர்த்து அருளும் - தீர்த்து அருள்கின்றவன்;
இலக்கணக் குறிப்பு: செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும். (எடுத்துக்காட்டு): அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.



11)
அற்றநிலை பற்றியுள குற்றமிவை எல்லாம்
அற்றுமகிழ் வுற்றிடவு ரைக்கசிவன் நாமம்
பற்றுமடி யார்க்குநலம் அத்தனையும் ஈவான்
வெற்றிவிடை மீதுவரும் ஒற்றியுறை கோனே.



பதம் பிரித்து:
அற்ற நிலை, பற்றி உள குற்றம், இவை எல்லாம்
அற்று மகிழ்(வு) உற்றிட உரைக்க சிவன் நாமம்;
பற்றும் அடியார்க்கு நலம் அத்தனையும் ஈவான்,
வெற்றி விடை மீது வரும் ஒற்றி உறை கோனே.


அற்றம் - வறுமை; கேடு; வருத்தம்;
பற்றுதல் - பிடித்தல்; மனத்துக்கொள்ளுதல்;
பற்றும் அடியார் - சிவனைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்ட பக்தர்;
(பற்றுக்கோடு - ஆதாரம்; புகலிடம்);
பற்றுமடி யார்க்குநலம் அத்தனையும் ஈவான் - "அடி பற்றும் ஆர்க்கும் நலம் அத்தனையும் ஈவான்” என்றும் பொருள்கொள்ளலாம்; (ஆர்க்கும் - யாருக்கும்);
வெற்றி விடை - வெற்றி பொருந்திய இடபம்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
  • சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்;
  • சீர்களின் முதல் அசையில் மட்டுமே நெடிலோ ஒற்றோ அமையும்.
  • சீர்களின் மற்ற அசைகளில் இடையின ஒற்றுகளோ மெல்லின ஒற்றுகளோ வரலாம்.
  • சீர்களின் முதல் அசையைத் தவிர மற்ற அசைகளில் மெல்லின ஒற்று வரின், அவ்வடிக்குள் அதையடுத்து வல்லின எழுத்து வாராது.



(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருப்புகலி - திருவிராகம் - பண்: இந்தளம் -
"முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.")



No comments:

Post a Comment