Sunday, August 23, 2015

01.82 – கயிலாயம் - (கோளரவ மாலைக் குழகன்)


01.82 –
கயிலாயம் - (கோளரவ மாலைக் குழகன்)


2010-10-15
கயிலாயம்
"கோளரவ மாலைக் குழகன்”
--------------------------------------
(12 பாடல்கள்)
(முதற் பாடலிருந்து ஒன்பதாம் பாடல்வரை ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்துவரப்பெற்றது)


(கலிவிருத்தம் - 'மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்') (சம்பந்தர் பதிகத்தில் இரண்டாம் சீர்கள் பெரும்பாலும் தேமா; ஒரோவழி புளிமா);


1)
எழுஞா யிறுபோல் திகழும் எழில்மேனி
முழுநீ றணியும் முதல்வன் முடிவில்லான்
தொழுவார் துணைவன் சுடலை தனிலாடி
மழுவாட் படையன் கயிலை மலையானே.


எழு ஞாயிறு - உதிக்கின்ற சூரியன்;
முழுநீறு அணியும் முதல்வன் - திருமேனி முழுதும் திருநீறு பூசிய ஆதி;
முடிவு இல்லான் - ஈறில்லாதவன்;
தொழுவார் துணைவன் - தொழும் அடியவர்களுக்குத் துணை;
சுடலைதனில் ஆடி - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;
மழுவாட் படையன் - கையில் மழுவாயுதத்தை ஏந்தியவன்;


2)
அங்கை குவிக்கும் அடியார்க் கருகாவான்
மங்கை ஒருபால் மகிழும் மணிகண்டன்
திங்கள் திகழும் முடிமேல் திரையாரும்
கங்கை அணிவான் கயிலை மலையானே.


அடியார்க்கருகாவான் - அடியார்க்கு அருகு ஆவான்;
திரை ரும் கங்கை - அலைகள் மிக்க கங்கை;
கைகூப்பித் தொழும் பக்தர்களுக்குப் பக்கத்தில் இருப்பான்; உமையம்மையை ஒரு பங்காக உடைய நீலகண்டன்; தலைமேல் பிறைச்சந்திரனையும் அலை பொருந்திய கங்கையையும் அணிபவன்; கயிலைமலைமேல் உறையும் சிவபெருமான்.


3)
செவ்வாய் உமையாள் கணவன் திருத்தாளை
எவ்வா றடியார் தொழினும் இனிதேற்றே
ஒவ்வா ததுசெய் உறுதீ வினைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே.


செவ்வாய் உமையாள் - சிவந்த வாய் உடைய உமாதேவி;
தொழினும் - தொழுதாலும்;
ஒவ்வாதது செய் - பொருந்தாததைச் செய்கின்ற; (ஒவ்வுதல் - பொருந்துதல்);
உறு தீவினை - மிகுந்த தீவினை;
கவ்வுதல் - வௌவுதல் (To seize);
தீவினை வந்து கவ்வாது அருள்வான் கயிலை மலையான்பாவங்கள் அடியாரைப் பற்றாவண்ணம் கயிலைப்பெருமான் அருள்வான்;
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - “....முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” - முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா);


4)
ஆர்க்கும் வினைவந் தடையா தருள்கொண்டு
நோக்கும் ஒருவன் நொடியில் மதனாகம்
தீய்க்கும் திருக்கண் ணினனற் புதன்தேவன்
காக்கும் கடவுள் கயிலை மலையானே.


பதம் பிரித்து:
ஆர்க்கும் வினை வந்து அடையாது அருள்கொண்டு
நோக்கும் ஒருவன்; நொடியில் மதன் ஆகம்
தீய்க்கும் திருக்கண்ணினன்; அற்புதன்; தேவன்;
காக்கும் கடவுள் கயிலை மலையானே.


ஆர்க்கும் - பிணிக்கும்; / எவர்க்கும்;
ஆர்க்கும் வினை - பிணிக்கும் வினை; தன்னை வழிபடும் எவர்க்கும் வினை;
மதன் - காமன்; மன்மதன்;
ஆகம் - உடல்;
அற்புதன் - பிறவிடத்துக் காணலாகாத தன்மைகளை உடையவன்;
( சுந்தரர் தேவாரம் - 7.20.3 - 'பாதிஓர் பெண்ணைவைத்தாய் ... ஆதியே அற்புதனே ... ');
(திருவாசகம் - திருவண்டப் பகுதி - 'அற்புதன் காண்க அநேகன் காண்க');


5)
பயமற் றடியார் மகிழும் படியீவான்
புயமெட் டுடையான் புனலிற் புவியாழன்
றுயர்தோ ணிபுரத் துறையும் உமைபங்கன்
கயமார் சடையான் கயிலை மலையானே.


பதம் பிரித்து:
பயம் அற்று அடியார் மகிழும்படி ஈவான்;
புயம் எட்(டு) உடையான்; புனலில் புவி ஆழ் அன்(று)
உயர் தோணிபுரத்(து) உறையும் உமைபங்கன்;
கயம் ஆர் சடையான் கயிலை மலையானே.

புயம் - புஜம் - தோள்;
தோணிபுரம் - சீகாழி; (தோணிபுரம் என்பது பிரளயகாலத்தில் உலகமே மூழ்கியபோது, இவ்வூர் ஒரு தோணி போல் மிதந்த காரணம் பற்றி அமைந்த பெயர்.)
(சம்பந்தர் தேவாரம் - 3.118.3 - "சீருறு தொண்டர் ... எங்கும் ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலிபுனல் கொளவுடன் மிதந்த ... கழுமல நகரென லாமே.");
கயம் ஆர் சடையான் - கங்கையைச் சடையில் உடையவன்; (கயம் - மடு ; அது, மிக்க நீரை - கங்கையை - உணர்த்திற்று).
(சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "அயனோ டன்றரியும் ... கயமா ருஞ்சடையாய் ...")


6)
வெள்ளி மலைபோல் விடையின் மிசையூர்வான்
உள்ளும் அடியார் நிழல்போல் உடனாகி
அள்ளிப் பருகும் அமுதாய் அகத்தின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே.


விடையின்மிசை - ஏற்றின்மிசை - இடபத்தின் மீது; காளைமேல்;
உள்ளுதல் - சிந்தித்தல்; எண்ணுதல்;
உடன் - ஒக்க (Together with); அப்பொழுதே (Instantly, immediately after, at once);
அகம் - மனம்; உள்;
கள் - தேன்;

வெள்ளி மலையைப்போல் திகழும் இடபத்தின்மேல் ஏறுபவன்; தியானிக்கும் பக்தர்கள்தம் நிழலைப்போல அவர்களைப் பிரியாது நின்று, அவர்கள் அள்ளி உண்ணும் அமுதம் ஆகி, அவர்கள் அகத்தில் இன்பத்தேனைச் சொரிவான் கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்.

உள்ளும் அடியார் நிழல்போல் உடனாகி அள்ளிப் பருகும் அமுதாய் -
1) தியானிக்கும் பக்தர்கள்தம் நிழலைப்போல அவர்களைப் பிரியாது நின்று, அவர்கள் அள்ளி உண்ணும் அமுதம் ஆகி;
2) போற்றித் திருவகவலில் வருவதுபோல் "நிழல்போல் உடனாகி உள்ளும் அடியார் அள்ளிப் பருகும் அமுதாய்" என்றும் பொருள் கொள்ளலாம்.
(திருவாசகம் - போற்றித் திருகவல் -
அருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
--- “.... திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல, முன்பின்னும் நீங்காது நின்று, வெறாது (வெறுத்தல் செய்யாமல்), ….”)


7)
அறையார் கழலன் தினமும் அடிபோற்றக்
குறைதீர்த் தருள்வான் குளிர்வெண் பிறைசூடி
நிறைவாய்த் திகழ்வான் மிகுநே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே.


பதம் பிரித்து:
அறை ஆர் கழலன்; தினமும் அடி போற்றக்
குறை தீர்த்து அருள்வான்; குளிர் வெண் பிறை சூடி;
நிறைவாய்த் திகழ்வான்; மிகு நேசன்; நிருத்தன்;
கறை ஆர் மிடறன் கயிலை மலையானே.

அறை - ஒலி; ஓசை;
ஆர்தல் - பொருந்துதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
கறை - கறுப்புநிறம் (Black); இருள் (Darkness); விஷம் (Poison);
மிடறு - கண்டம்;

ஆர்கழல், ஆர்மிடறு - வினைத்தொகைகள்;
அறைஆர்கழலன் - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியினன்;
கறைஆர்மிடறன் - கறை பொருந்திய கண்டத்தை உடையவன் - நீலகண்டன்.

ஒலிக்கும் கழல் அணிந்தவன்; தினந்தோறும் திருவடியை வணங்கும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பவன்; குளிர்ந்த பிறைச்சந்திரனைச் சூடுபவன்; பூரணன்; அன்பே வடிவானவன்; கூத்தன்; நீலகண்டன்; கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


8)
சிலையை அசைத்த அரக்கன் சிரமெல்லாம்
குலைய விரலூன் றியருள் தலைவன்தன்
தலைமேல் அராகு ரவம்தண் மதிவைத்தான்
கலைமான் கரத்தன் கயிலை மலையானே.


சிலை - மலை; இங்கே கயிலைமலை;
அரக்கன் - இராவணன்;
குலைதல் - அழிதல்;
அராகு ரவம்தண் மதி - அரா, குரவம், தண் மதி;
அரா - பாம்பு;
குரவம் - குரா - ஒரு மலரின் பெயர்;
தண் மதி - குளிர்ந்த சந்திரன்;
கலைமான் கரத்தன் - கையில் மானை ஏந்தியவன்;


9)
மரைமேல் அயன்மால் அறியா வளர்சோதி
விரைசே வடிக்கே துணைநன் மலர்தூவி
அரைசே அருளென் றரற்றும் அடியாரைக்
கரைசேர் புணையன் கயிலை மலையானே.
மரை - தாமரை - (முதற்குறை விகாரம்);
விரை சேவடி - மணம் கமழும் சிவந்த திருவடி; (விரைத்தல் - மணம் கமழ்தல்);
துணை - ஒப்பு;
துணைதல் - ஒத்தல் (To resemble, to be like);
அரைசே - அரசே; (போலி);
(சம்பந்தர் தேவாரம் - 2.24.6 - “.....நாகேச்சுரத்து எம் அரைசே எனநீங்கும் அருந்துயரே” - அரைசு - மொழியிடை நின்ற ஐகாரம் போலி. அரசனே என்று விளித்தது.);
புணை - தெப்பம்;

தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் திருமாலும் அறியாத உயர்ந்த சோதியான சிவபெருமானின் மணம் கமழும் சிவந்த திருவடிக்கு அவ்வடியை ஒத்த நல்ல மலர்களைத் தூவி, 'அரசனே! அருள்வாயாக' என்று அரற்றி வணங்கும் பக்தர்களைக் கரைசேர்க்கும் தெப்பம் ஆவான் கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


10)
பதியை அறியார் பகர்வார் பலபொய்கள்;
மதியில் அவர்தம் உரையை மதியேன்மின்;
மதியைப் புனைவான் கழலில் மலரிட்டால்
கதியைத் தருவான் கயிலை மலையானே.


பதி - தலைவன்; சுவாமி;
மதி இல் - அறிவற்ற;
மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா; பொருட்படுத்தாதீர்கள்;
மதியைப் புனைவான் - சந்திரனைச் சூடுபவன்; (மதி - சந்திரன்); (புனைதல் - சூடுதல்);
கதி - நற்கதி;


11)
கூவல் இடுமா றடைகோள் களும்பண்டைத்
தீவல் வினையும் இடர்கள் செயமாட்டா
சேவில் வருவான் திருப்பேர் தினஞ்சொன்னால்
காவல் நமக்குக் கயிலை மலையானே.


கூவல் - கூவுதல்;
பண்டைத் தீ வல்வினை - பழைய தீய வலிய வினைகள்;
சே - எருது;

துன்பத்தால் ஓலமிடச்செய்யும் கோள்களும், பழைய தீய வலிய வினைகளும், நமக்கு எவ்வித இடர்களும் செய்யா. இடபத்தின்மேல் வரும் ஈசனின் திருப்பெயரைத் தினமும் சொன்னால், கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் நமக்கு காவல் ஆவான்.


12)
கோள ரவமா லையணி குழகன்தாள்
நீள நினையும் அடியார் நெடுவானம்
ஆள அருள்வான் அமரர்க் கமுதீந்த
காள மிடறன் கயிலை மலையானே.


பதம் பிரித்து:
கோள் அரவ மாலை அணி குழகன்,தாள்
நீள நினையும் அடியார் நெடு வானம்
ஆள அருள்வான், அமரர்க்கு அமுது ஈந்த
காள மிடறன், கயிலை மலையானே.

கோள் - கொள்ளுதல்; வலிமை; கொடுமை; கொல்லுதல்; / கிரஹம்;
அரவம் - பாம்பு; / ஒலி;
கோள் அரவம் - கொள்ளும் வாயையுடைய பாம்பு; கொடிய பாம்பு; வலிய பாம்பு; கொல்லும் பாம்பு;
(கோள் அரவ மாலை - 'நவக்கிரகங்களின் பெயர்கள் ஒலிக்கும் பாமாலை' என்றும் பொருள்கொள்ளலாம்);
குழகன் - இளைஞன்; அழகன்;
தாள் - திருவடி;
நீள நினைதல் - மிக எண்ணுதல்;
நெடுவானம் - நெடு வானுலகு - நீண்ட வானுலகு - திருவடி நீழல்; (சம்பந்தர் தேவாரம் - 2.4.11 - “......ஞான சம்பந்தன்சொல் நீதியால் நினைவார் நெடு வானுலகு ஆள்வரே.")
அமரர் - தேவர்;
காளம் - கருமை; நஞ்சு;
மிடறு - கழுத்து; கண்டம்;
காள மிடறன் - காளகண்டன் - நீலகண்டன்;

கொடிய பாம்பை மாலையாக அணியும் அழகன்; தன் திருவடியை மிக எண்ணும் பக்தர்கள் சிவலோகத்தில் நிலைத்திருக்க அருள்புரிவான்; தேவர்களுக்கு அமுதம் அளித்த நீலகண்டன்; கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

இத்தலத்தை மனத்தால் உன்னிப் பாடியது இப்பதிகம்.

No comments:

Post a Comment