Tuesday, August 18, 2015

01.56 – பொது - (கந்த பத்யம் - kanda padyam)

01.56 – பொது - (கந்த பத்யம் - kanda padyam)



2009-12-25 – 2009-12-27
பொது
"கந்த பத்யம்"
-------------------------------------------
('கந்த பத்யம்' அமைப்பில் - in 'kanda padya' meter)
(இப்பாடல்களின் யாப்பு இலக்கணத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)


1)
அலைமதி லெரிபுக நகுவார்
மலைமக ளொருபால் துணையென மகிழும் சிவனார்
தலைமலி மாலையு மணிவார்
மலரன அவரடி வழிபட மறவேல் மனமே.


அலை மதில் எரி புக நகுவார் - திரியும் முப்புரங்கள் தீப்புகச் சிரிப்பார்;
மலைமகள் ஒரு பால் துணை என மகிழும் சிவனார் - பார்வதியை இடப்பக்கம் கொண்ட சிவபெருமான்;
தலை மலி மாலையும் அணிவார் - மண்டையோடுகளால் ஆன மாலையையும் அணிபவர்;
மலர் அன அவர் அடி வழிபட மறவேல் மனமே - மனமே! மலர் போன்ற அவர் திருவடியை வணங்குவதற்கு மறவாதே.

2)
வினையின் பயனால் துன்புறு
மனமே; வல்வினை அறுவழி, மறைபல போற்றும்,
புனலணி முக்கட் பரமன்,
சினவிடை யான்பேர் அளியொடு தினமுரை செயலே.


வல்வினை அறுவழி - வல்வினையை அறுக்கும் வழி;
புனல் அணி முக்கட் பரமன் - கங்கையை அணிந்தவனும், முக்கண்ணனும் ஆன பரமன்;
சின விடையான் பேர் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் திருநாமத்தை;
அளியொடு தினமுரை செயலே - அன்போடு நாள்தோறும் சொல்லுவதே;



3)
உலகினி லுழன்று மயலொடு
நிலைகெடு நெஞ்சே; ஒளிவிடு நிலவொடு பாம்பும்
சலசல வெனவிரை ஆறும்
தலைமிசை அணியிறை பெயருரை; தாழ்விலை யாமே.



உலகினில் உழன்று மயலொடு நிலைகெடு நெஞ்சே - இவ்வுலக வாழ்வில் உழன்று அறியாமையால் நிலைகெடுகின்ற மனமே; (மயல் - அறியாமை; மயக்கம்);
இறை பெயர் உரை - இறைவன் திருப்பெயரைச் சொல்வாயாக;
தாழ்வு இலை மே - தாழ்வு இல்லாத நிலை ஆகும்;


4)
பணமே பெரிதாய்ப் பலநாள்
குணமில் செயலே புரிவது குறியாய்க் கொண்டாய்;
துணையா வருமோ கடைநாள்?
துணையில் புகழான் அரனடி தொழுதுய்ம் மனமே.


பணமே பெரிது ஆய் - பணமே முக்கியம் ஆகி;
குணம் இல் - குணமற்ற; தீய;
குறி - குறிக்கோள்;
கடை நாள் - அந்திமக் காலம்;
துணையா - துணையாக; (துணை - கூட்டு; காப்பு; உதவி);
துணை இல் - ஒப்பில்லாத;
அரன் அடி தொழுது உய்ம் மனமே - மனமே, சிவன் திருவடியை வணங்கி உய்வாயாக;

இலக்கணக் குறிப்பு: தனிக்குறிலை அடுத்து ய் என்று முடியும் சொற்களையும் (உய், பெய், செய்,,,), ஐ ஒலி உடைய ஓரெழுத்துச் சொற்களையும் (கை, பை,,,,) அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், அம்மெல்லின ஒற்று மிகும்..
உதாரணங்கள்: ஐந்நூறு,
அப்பர் தேவாரம் - 5.49.1 - “வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே”
அப்பர் தேவாரம் - 4.60.4 - “மைஞ்ஞவில் கண்டன் றன்னை”, “பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்”


5)
காலம தோடிமு துமையின்
கோலம தெய்திக் கரமொரு கோலேந் திடுமுன்
சூலம தேந்தும் பெருமான்
ஆலம துண்டவ னடிமல ரடைமட நெஞ்சே.

பதம் பிரித்து:
காலம் அது ஓடி, முதுமையின்
கோலம் அது எய்திக், கரம் ஒரு கோல் ஏந்திடு[ம்] முன்,
சூலம் அது ஏந்தும் பெருமான்,
ஆலம் அது உண்டவன் அடிமலர் அடை மட நெஞ்சே.


6)
வாழ்வில் பலநாள் போயின
ஆழ்வினை அதனில் விழுகிற அறிவிலி மனமே
ஊழ்வினை நீங்கிம கிழ்வழி
தாழ்சடை அண்ணலி னலரன தாளிணை தொழலே


ஆழ்வினை - ஆழமான வினை; ('ஆழ்கடல்' போல்);
ஊழ்வினை - பழவினை;
அலர் - பூ;
தாழ்சடை அண்ணலின் அலர் அன தாளிணை - தாழும் சடையை உடைய சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகள்;

7)
அன்றடி போற்றன் பர்பால்
சென்றந மன்தான் விழவொரு சேவடி ஓச்சும்
வென்றிவி டைக்கொடி அண்ணல்
மன்றினி லாடியி னடியிணை மறவேல் மனமே.


பதம் பிரித்து:
அன்று அடி போற்று அன்பர்பால்
சென்ற நமன்தான் விழ ஒரு சேவடி ஓச்சும்
வென்றி விடைக்கொடி அண்ணல்
மன்றினில் ஆடியின் அடிஇணை மறவேல் மனமே.

* மார்க்கண்டேயர்க்காக எமனை உதைத்த நிகழ்ச்சியைச் சுட்டியது.
ஓச்சுதல் - உயர்த்துதல்;
(சம்பந்தர் தேவாரம் - 1.103.9 - "இடந்தபெம்மான் .... கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான்...");
வென்றி விடைக்கொடி அண்ணல் - வெற்றியுடைய இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய சிவபெருமான்;
மன்றினில் ஆடி - சிற்றம்பலத்தில் ஆடுபவன்;


8)
மதியில் தசமுக னழவே
மதிசூ டரனொரு விரலினை வைத்துநெ ரித்தான்
துதிசெய் தேத்தவ ருள்செய்
பதியவ னடியிணை மலரொடு பணிவாய் மனமே.



பதம் பிரித்து:
மதி இல் தசமுகன் அழவே
மதி சூடு அரன் ஒரு விரலினை வைத்து நெரித்தான்;
துதிசெய்து ஏத்த அருள் செய்
பதி அவன் அடிஇணை மலரொடு பணிவாய் மனமே.

மதி இல் தசமுகன் - அறிவில்லாத இராவணன்;
பதி - தலைவன்;


9)
பங்கய னோடரி என்றிவ
ரங்கடி தேடிய அழலென அன்றுய ரெம்மான்
நங்குறை எல்லாம் தீர்ப்பான்
அங்கண னவனடி இணைதனை அடைமட நெஞ்சே.


பதம் பிரித்து:
பங்கயனோடு அரி என்றிவர்
அங்கு அடி தேடிய அழல் என அன்று உயர் எம்மான்
நம் குறை எல்லாம் தீர்ப்பான்
அங்கணன் அவன் அடிஇணைதனை அடை மட நெஞ்சே.

பங்கயன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
அழல் - நெருப்பு; சோதி;
எம்மான் - எம் தலைவன்;
என்றிவர் - என்ற இவர் - 'என்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் ஆயிற்று;
அங்கணன் - அருள்நோக்கு உடையவன்;


10)
மறைவழி தன்னைப் பழிசொல்
குறைமதி யாளர் பிறையணி கூத்தனை அறியார்
பறையும் பழவினை எல்லாம்
கறைமிட றுடையான் கழலிணை கைதொழு வார்க்கே.


மறை வழி - வேத நெறி;
பறையும் பழவினை எல்லாம் - பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும்;
கறை மிடறு உடையான் - நீலகண்டன்;
கழல் இணை - கழலை அணிந்த இரு திருவடிகள்;


11)
அந்தமி லாதாய் ஆதீ
சுந்தர னேயுமை மணாள துணைநீ என்றே
சந்தத மீசனை நெஞ்சே
வந்தனை செய்வாய் உவந்து வாழ்வினி லின்பே.


பதம் பிரித்து:
"அந்தம் இலாதாய்! ஆதீ!
சுந்தரனே! உமை மணாள! துணை நீ" என்றே
சந்ததம் ஈசனை, நெஞ்சே,
வந்தனை செய்வாய் உவந்து; வாழ்வினில் இன்பே.

'நெஞ்சே' என்ற விளியை முதலில் கொள்க.
அந்தம் இலாதாய் - முடிவு இல்லாதவனே;
ஆதீ - ஆதியே;
சந்ததம் - எப்பொழுதும்;
வந்தனை செய்வாய் உவந்து - மகிழ்ந்து வணங்குவாயாக;
இன்பு - இன்பம்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
கந்த பத்யம் - ( kanda padyam” metre )
---------------------------------
"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை. (தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).
இப்பாடல் அமைப்பின் இலக்கணம் (நான் அறிந்த அளவில்):
1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"


3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z


இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:


X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU IUI UII UU


W = "IUI" (லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU UII UU


Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IUI


Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIU UU


4) எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே முதற்சீரில் எதுகை அமைய வேண்டும்.
5) மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.



மேலதிகக் குறிப்பு : தமிழ் யாப்பை ஒட்டி ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் '' ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாக – அதாவது 'குரு' - என்று கருதப்படும்).

------------------- 

2 comments:

  1. 1)
    அலைமதி லெரிபுக நகுவார்
    மலைமக ளொருபால் துணையென மகிழும் சிவனார்
    தலைமலி மாலையு மணிவார்
    மலரன அவரடி வழிபட மறவேல் மனமே. IS THIS KANDA PATHYAM?

    ReplyDelete
  2. ஆம், இப்பதிகம் கந்த பத்ய அமைப்பில் அமைந்ததே.

    ReplyDelete