Friday, August 14, 2015

01.46 – வெண்காடு - (திருவெண்காடு)


01.
46வெண்காடு - (திருவெண்காடு)


2009-03-05

திருவெண்காடு

வெண்காடு அடை மனமே”

----------------------------------------------------------

(வெண்டளை பயின்று வரும் "தேமா/கூவிளம், விளங்காய், தேமா/கூவிளம், விளங்காய்" என்ற வாய்பாடு. வெண்டளை பயிலும் தரவு கொச்சகம் அல்லது கலிவிருத்தம் என்று வகைப்படுத்தலாம். 14 எழுத்தடிகள்.)

(சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி")


1)

முன்னை வினையதனால் மோகக் கடலினிலே

இன்னல் உறுவதுமேன் என்றும் மகிழ்ந்திருக்க

அன்னை உமையவளை ஆகத் திடமுடையான்

மின்னற் சடையரன்றன் வெண்கா டடைமனமே.


பதம் பிரித்து:

முன்னை வினை அதனால் மோகக் கடலினிலே

இன்னல் உறுவதும் ஏன்? என்றும் மகிழ்ந்து இருக்க,

அன்னை உமையவளை ஆகத்து இடம் உடையான்,

மின்னல் சடை அரன்தன் வெண்காடு அடை மனமே.


மனமே! பழவினையால் ஆசைக்கடலில் மூழ்கி ஏன் வருந்துகின்றாய்? என்றும் இன்புறவேண்டுமானால், அர்த்தநாரீஸ்வரனும் ஒளிரும் சடையை உடையவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

ஆகத்து இடம் உடையான் - உடலில் இடப்பக்கம் உடையவன்;


2)

நாளைக் கெனநினைந்து நம்பன் கழல்மறந்து

நாளைக் கழிப்பதுமேன் நல்ல கதியடைய

காளைக் கொடியுடையான் கண்ணால் மலர்ச்சரத்து

வேளை எரித்தவன்றன் வெண்கா டடைமனமே.


மனமே! பிற்காலத்தில் பக்திசெய்யலாம் என்று எண்ணி, ஈசன் திருவடியைச் சற்றும் எண்ணாமல் காலத்தை ஏன் வீணாக்குகின்றாய்? நற்கதி பெறவேண்டுமானால், இடபக்கொடியை உடையவனும் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

நம்பன் - விரும்பப்படுபவன் - சிவன்; (நம்புதல் - விரும்புதல்);

மலர்ச்சரத்து வேள் - மலர்க்கணை எய்யும் மன்மதன்;


3)

தேடும் பொருள்பலவும் செல்லும் வழிவருமா

ஆடும் திருவடியான் ஆர்க்கும் ஒருதலைவன்

ஓடும் நதிச்சடையான் உன்னும் அடியவர்க்கு

வீடும் தருமிறைவன் வெண்கா டடைமனமே.


உன்னுதல் - எண்ணுதல்;

வீடும் தரும் - முக்தியும் கொடுக்கும்; (உம் - எச்சவும்மை - something understood - முக்தியும் என்றதனால் இவ்வுலக இன்பமும் கொடுப்பான் என்பது பெறப்படும்);


4)

ஆலைக் கரும்பெனவே அல்லல் படுவதுமேன்

மேலை வினையனைத்தும் விட்டு விலகிடவே

சூலப் படையுடையான் தூவெண் பொடியணிவான்

வேலை விடமிடற்றன் வெண்கா டடைமனமே.


ஆலை - கரும்பாலை (Sugar-cane press);

மேலை வினை - பழவினை;

சூலப்படை - சூலாயுதம்;

வெண்பொடி - திருநீறு;

வேலை - கடல்;

மிடறு - கழுத்து;

வேலை விட மிடற்றன் - கடல் நஞ்சை உண்ட திருநீலகண்டன்;


5)

துக்கம் மிகக்கொடுக்கும் தொல்வினை யாவுமறப்

பக்கென முப்புரந்தீப் பற்ற நகைத்தஅரன்

முக்குள நீர்தனிலே மூழ்கி வணங்கவரம்

மிக்கருள் செய்பவன்தன் வெண்கா டடைமனமே.


மனமே! பெரும் துன்பம் செய்யும் பழவினை எல்லாம் அழியவேண்டுமானால், சிரித்து முப்புரங்களை எரித்தவனும், முக்குளங்களில் நீராடி வழிபடும் பக்தர்களுக்கு மிகுந்த வரங்கள் அருள்பவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

தொல்வினை - பழவினை;

யாவும் அற - அனைத்தும் நீங்க;

பக்கென - சிரிப்பின் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்பு;

முக்குளம் - திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்கள் (குளங்கள்);


6)

கள்ளம் இலாதவராய்க் கைதொழு தன்றலர்ந்த

கள்ளிழி பூச்சொரிந்து காவென வேண்டுவரம்

அள்ளி அளிக்கிறவன் அன்பர்க் கருந்துணைவன்

வெள்விடை ஏறுமிறை வெண்கா டடைமனமே.


பதம் பிரித்து:

கள்ளம் இலாதவராய்க், கைதொழுது, அன்று அலர்ந்த

கள் இழி பூச் சொரிந்து 'கா' என, வேண்டு வரம்

அள்ளி அளிக்கிறவன், அன்பர்க்கு அரும் துணைவன்,

வெள் விடை ஏறும் இறை வெண்காடு அடை மனமே.


அன்று அலர்ந்த கள் இழி பூ - புதிதாகப் பூத்த தேன் வழியும் மலர்;

வேண்டு வரம் - வினைத்தொகை - வேண்டுகிற வரம்;

வெள் விடை - வெள்ளை நிறம் உடைய எருது;

இறை - இறைவன்;


7)

பாண்டவ னுக்கருளப் பண்டொரு வேடனுருப்

பூண்டவன் எவ்விடமும் போகும் அரண்களில்தீ

மூண்டு விடச்சிரித்தான் முக்குள[ம்] மூழ்குபவர்

வேண்டு வரந்தருவான் வெண்கா டடைமனமே.


பதம் பிரித்து:

பாண்டவனுக்கு அருளப் பண்டு ஒரு வேடன் உருப்

பூண்டவன்; எவ்விடமும் போகும் அரண்களில் தீ

மூண்டுவிடச் சிரித்தான்; முக்குளம் மூழ்குபவர்

வேண்டு வரம் தருவான் வெண்காடு அடை மனமே.


பாண்டவன் - இங்கே அர்ச்சுனன்;

பண்டு - முன்பு;

பூண்(ணு)தல் - தரித்தல்; அணிதல்;

அரண் - கோட்டை. இங்கே, முப்புரங்கள்;

மூள்(ளு)தல் - நெருப்புப்பற்றுதல்;


8)

வல்லன் எனச்செருக்கி மாவெற் பெடுப்பவன்மேல்

மெல்விரல் இட்டடர்த்து வீணை இசைக்கருள்வான்

எல்லியில் ஆடுபவன் ஈடிலி ஓர்மலையை

வில்லென ஏந்துபவன் வெண்கா டடைமனமே.


பதம் பிரித்து:

வல்லன் எனச் செருக்கி மா வெற்பு எடுப்பவன்மேல்

மெல் விரல் இட்டு அடர்த்து, வீணை இசைக்கு அருள்வான்;

எல்லியில் ஆடுபவன்; ஈடிலி; ஓர் மலையை

வில் என ஏந்துபவன் வெண்காடு அடை மனமே.


மனமே! தன் வலிமையை எண்ணிக் கருவத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிப் பின் அவன் வீணை இசையோடு துதிபாடக் கேட்டு இரங்கி அருளியவனும், இருளில் கூத்தாடுபவனும், ஒப்பற்றவனும், மேருமலையை வில்லென ஏந்தியவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

வல்லன் - வலிமை உடையவன்; (வல் - வலிமை)

செருக்குதல் - கர்வம்கொள்ளுதல்;

மா வெற்பு - கயிலை மலை; (வெற்பு - மலை);

அடர்த்தல் - நசுக்குதல்;

எல்லி - இரவு; இருள்;

ஈடிலி - ஈடு இல்லாதவன்; ஒப்பற்றவன்;


9)

பன்றியும் அன்னமுமாய்ப் பாற்கட லான்பிரமன்

சென்றடி யோடுமுடி தேடிய சோதியவன்

என்றும் இருக்கிறவன் இன்பம் அளிக்கிறவன்

வென்றி விடைக்கொடியான் வெண்கா டடைமனமே.


மனமே! திருமாலும் பிரமனும் பன்றியும் அன்னமுமாகி அடிமுடி தேடிய சோதியும், என்றும் அழிவற்றவனும், இன்பம் அளிப்பவனும், இடபக்கொடியை உடையவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

வென்றி - வெற்றி;

விடைக்கொடியான் - காளைச் சின்னம் பொறித்த கொடியை உடைய சிவன்;


10)

போதனை ஒன்றறியார் பொய்யுரை செய்பவர்தம்

வேதனை மிக்கவழி விட்டரன் இன்பநெறி

ஏதம் இலாதநெறி எய்தி மகிழ்பவர்சொல்

வேத முதல்வனுறை வெண்கா டடைமனமே.


மனமே! ஒரு ஞானமும் அறியாமல் என்றும் பொய்கள் பேசுபவர்களது துன்பத்திற் செலுத்தும் மார்க்கங்களை நீங்கி, ஹரனை அடையும் இன்பநெறியான குற்றமற்ற மார்க்கத்தைப் பின்பற்றி மகிழும் பக்தர்களும் ஞானியரும் போற்றுகின்ற வேதமுதல்வனான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

போதனை - ஞானம்;

வழி - மார்க்கம்;

விட்டு - நீங்கி; (விடுதல் - நீங்குதல்);

நெறி - வழி;

ஏதம் - குற்றம்; துன்பம்; கேடு;

எய்துதல் - அடைதல்; சேர்தல்;

சொல்லுதல் - புகழ்தல்;


11)

மாணியை நாடுமெமன் மாள உதைத்தருள்வான்

கோணிய வெண்பிறையைக் கோலம் உறத்தலைமேல்

பூணிறை நம்வினையைப் போக்கி அருள்புரிவான்

வேணியில் நீருடையான் வெண்கா டடைமனமே.


பதம் பிரித்து:

மாணியை நாடும் எமன் மாள உதைத்து அருள்வான்;

கோணிய வெண் பிறையைக் கோலம் உறத் தலைமேல்

பூண் இறை; நம் வினையைப் போக்கி அருள்புரிவான்;

வேணியில் நீர் உடையான் வெண்காடு அடை மனமே.


மனமே! மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை அழியுமாறு உதைத்து அருளியவனும், வளைந்த வெண்பிறைச் சந்திரனை அழகுறத் திருமுடிமேல் அணிந்தவனும், நம் வினையைப் போக்கி அருள்பவனும், சடையில் கங்கையை உடையவனுமான சிவபெருமானது திருவெண்காட்டைச் சென்றடை.

மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;

கோணிய - வளைந்த; (கோணுதல் - வளைதல்);

கோலம் - அழகு;

பூண்(ணு)தல் - அணிதல்;

வேணி - சடை;


வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment