Tuesday, August 18, 2015

01.54 – மயிலாப்பூர்

01.54 – மயிலாப்பூர்



2009-11-19 -- 2009-11-21
மயிலாப்பூர்
"மயிலையை அடைபவர் மகிழ்வர்"
--------------------------------------------
(அறுசீர்ச் சந்த விருத்தம். "தனதன தனதன தனதன தனதன தனதன தனதன" என்று முடுகு பயிலும் சந்தம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.19 - “பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை” )
(தருமபுரம் சுவாமிநாதன் மேற்சொன்ன சம்பந்தர் பதிகத்தைப் பாடியுள்ளதைப்போல், அரையடியின் இறுதி அசையின் இடையே சற்று நிறுத்தி ஒலிநயம் சிறக்கப் பாடலாம்.
"நிலையில தெனவரும் உடலி-னை .. நிசமென நினைகிற மடம-தி")



1)
நிலையில தெனவரும் உடலினை நிசமென நினைகிற மடமதி
புலனிழு வழிதனில் இழிவினை புரிநிலை யொடுபழ வினையற
நலமுற அருளிறை முடிமிசை நதியலை மிகுபவன் ஒருபுறம்
மலைமகள் இணையரன் உறைநகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
நிலை இல(து) என வரும் உடலினை நிசம் என நினைகிற மட மதி,
புலன் இழு வழிதனில் இழி வினை புரி நிலையொடு பழ வினை அற,
நலம் உற அருள் இறை, முடிமிசை நதி அலை மிகுபவன்; ஒரு புறம்
மலைமகள் இணை அரன் உறை நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


நிலையற்ற இவ்வுடலை என்றும் இருக்கும் என எண்ணும் பேதைமையும், புலன்கள் இழுத்த வழியில் போய் உழலும் நிலையும், பழவினைகளும் இல்லாமல் போய், நன்மை பெற அருள்கிற இறைவன்; தலைமேல் கங்கை அலை வீசும் பெருமான்; ஒரு பக்கம் பார்வதியை வைத்த சிவனார் உறையும் மயிலாப்பூரைச் சேர்பவர்கள் மகிழ்வார்கள்.



2)
அணிபல அணிகிற கிளிமொழி அரிவையர் களைஅடை மதியொடு
பணிபல புரிவது தருகிற பலனிட ரொடுதுய ரடைவது
வணிகனி னருமக ளுயிர்பெறு வகைதமிழ் உரைபுக லியர்தொழு
மணியொளிர் மிடறுடை அரனகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
அணி பல அணிகிற கிளி மொழி அரிவையர்களை அடை மதியொடு
பணி பல புரிவது தருகிற பலன் இடரொடு துயர் அடைவது;
வணிகனின் அருமகள் உயிர்பெறுவகை தமிழ் உரை புகலியர் தொழு,
மணி ஒளிர் மிட(று) உடை அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


அணி - ஆபரணம்;
அரிவையர் - பெண்கள்;
அடைதல் - பொருந்துதல்; சேர்தல்; பெறுதல்;
மதி - உள்ளம்;
புரிதல் - செய்தல்; விரும்புதல்;
புகலியர் - புகலி என்னும் சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்;
மணி ஒளிர் மிடறு - நீலமணி பிரகாசிக்கும் கண்டம்;
* 3-ம் அடி மயிலாப்பூரில் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவையைத் திருஞான சம்பந்தர் 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர்ப்பித்த வரலாற்றைச் சுட்டியது.



3)
மழைபொழி விழியொடு விரைகமழ் மலரொடு தனதடி நினைபவர்
நிழலென வருபவன் அருளெனு[ம்] நிதியினை அளியிறை அளவிலன்
அழகிய மலைமகள் ஒருபுறம் அணைபவன் இலைநுனி அயிலொடு
மழவிடை மிசைவரும் அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
மழை பொழி விழியொடு விரை கமழ் மலரொடு தன(து) அடி நினைபவர்
நிழலென வருபவன்; அருள் எனு[ம்] நிதியினை அளி இறை; அள(வு) இலன்;
அழகிய மலைமகள் ஒருபுறம் அணைபவன்; இலை நுனி அயிலொடு
மழ விடை மிசை வரும் அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


விரை கமழ் மலர் - மணம் வீசும் பூ;
அளி இறை - அளிக்கும் இறைவன்;
இலை - ஆயுத அலகு (Blade of a weapon or instrument);
அயில் - வேல்; ஆயுதம் என்று பொதுவாகவும் கொள்ளலாம்;
இலை நுனி அயில் - இலை போன்ற நுனியை உடைய திரிசூலம்;
(சம்பந்தர் தேவாரம் - 3.4.11 - "அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை எம்மிறையை....")
மழ விடை மிசை - இளம் காளையின் மேல்;


பக்திப் பெருக்கால் கண்ணீர் சொரியும் கண்களோடு வாசம் கமழும் பூக்களைத் தூவித் தன் திருவடியைச் சிந்திக்கும் அன்பர்களின் நிழல்போல் அவர்களைப் பிரியாது இருப்பான்; அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவன்; எல்லை இல்லாதவன்; அழகிய பார்வதியை இடப்பக்கம் கொண்டவன்; சூலாயுதம் ஏந்தி இளம் காளை வாகனத்தின்மீது வரும் ஹரன்; அப்பெருமான் உறையும் நகரான மயிலாப்பூரைச் சேர்பவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.



4)
குழைகிற மனமுடை அடியவர் குரைகழல் இணைதொழ அவர்புரி
பழவினை தருதுயர் அறமிகு பரிவொடு வரமருள் கிறவிறை
குழைதிகழ் செவியினன் எரிவிழி குளிர்மதி இருளுறு மிடறொடு
மழைபொழி சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
குழைகிற மனம் உடை அடியவர் குரை கழல் இணை தொழ, அவர் புரி
பழ வினை தரு துயர் அற, மிகு பரிவொடு வரம் அருள்கிற இறை;
குழை திகழ் செவியினன்; எரி விழி, குளிர் மதி, இருள் உறு மிடறொடு,
மழை பொழி சடை உடை அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


குழைகிற மனம் - உருகுகின்ற மனம்;
குரை கழல் இணை - ஒலிக்கின்ற கழல் அணிந்த இரு திருவடிகள்;
அவர் புரி பழ வினை - அவர்கள் புரிந்த பழைய வினைகள்;
குழை திகழ் செவியினன் - குழையைக் காதில் அணிந்தவன்;
(அப்பர் தேவாரம் - 6.18.1 - "வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் ....காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்...);
இருள் உறு மிடறு - நீலகண்டம்;


உருகுகின் மனத்தை உடைய பக்தர்கள் தன் ஒலிக்கும் கழல் அணிந்த அடியிணையை வணங்க, அவர்கள் முன்செய்த பழைய வினைகள் தரும் துன்பம் தீருமாறு மிகுந்த அன்போடு வரம் அருள்கிற இறைவன்; அவன் ஒரு காதில் குழை அணிந்திருப்பவன்; நெற்றிக்கண்ணும், நிலாவும், நீலகண்டமும், கங்கை தங்கும் சடையும் உடையவன்; அப்பெருமான் உறையும் மயிலாப்பூரை அடைபவர்கள் மகிழ்வார்கள்.



5)
குழுமிய பலரொலி செயவொரு குட[ம்]நிறை பொடியுடல் உயிருடன்
எழுகிற வணம்உயர் தமிழுரை கழுமல நகருறை கவுணியர்
தொழுபதி சுரிகுழல் உமையவள் துணையென வருகிற துணையிலி
மழுவமர் கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
குழுமிய பலர் ஒலி செய, ஒரு குடம் நிறை பொடி உடல் உயிருடன்
எழுகிற வணம் உயர் தமிழ் உரை கழுமல நகர் உறை கவுணியர்
தொழு பதி; சுரி குழல் உமையவள் துணை என வருகிற துணையிலி;
மழு அமர் கரம் உடை அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


* இப்பாடல் மயிலாப்பூரில் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவையைத் திருஞான சம்பந்தர் 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர்ப்பித்த வரலாற்றைச் சுட்டியது.
பொடி- சாம்பல்;
எழுகிற வணம் - எழும்படி;
கழுமல நகர் உறை கவுணியர் - சீகாழியில் வாழ்ந்த, கௌண்டின்ய கோத்திரத்தில் வந்த திருஞான சம்பந்தர்;
(கழுமலம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று.
கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞானசம்பந்தர்.)
தொழு பதி - தொழுத தலைவன்;
சுரி குழல் - சுருண்ட கூந்தல்;
துணை - 1) கணவன்; கூட்டாக இருத்தல்; 2) ஒப்பு;
துணையிலி - ஒப்பற்றவன்;


கூடியிருந்த பலரும் ஆரவாரம் செய்யும்படி, ஒரு குடத்தில் நிறைந்திருந்த பூம்பாவையின் சாம்பல் மீண்டும் உடலும் உயிரும் பெற்று எழுந்து வருமாறு உயர்ந்த தேவாரப் பதிகம் பாடிய, கழுமலம் என்ற சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் தொழுத தலைவன்; சுருண்ட கூந்தலுடைய பார்வதியின் கணவன்; ஒப்பற்றவன்; மழு ஆயுதத்தை ஏந்துபவன்; அப்பெருமான் உறையும் மயிலாப்பூரை அடைபவர்கள் மகிழ்வார்கள்.



6)
சதைபொதி உடலிது சதமிலை தமர்அழ எமபடர் வரவிழும்
நிதமிதை உணர்கிற அடியவர் நிலைபெற வழிபடும் இறையவன்
முதலொடு முடிவிலன் நதிபுனை முடியினன் அழகிய துகிலென
மதகரி உரியணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
சதை பொதி உடல் இது சதம் இலை; தமர் அழ எமபடர் வர விழும்;
நிதம் இதை உணர்கிற அடியவர் நிலைபெற வழிபடும் இறையவன்,
முதலொடு முடி(வு) இலன், நதி புனை முடியினன், அழகிய துகில் என
மத கரி உரி அணி அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


பொதிதல் - நிறைதல்; உள்ளடக்குதல் (To contain, hold);
சதம் - சாஸ்வதம்; நித்தியமானது;
தமர் - சுற்றத்தார்;
எமபடர் - எம தூதர்கள்;
நிலைபெறுதல் - துன்பமற்ற நிலையை அடைதல்;
புனைதல் - அணிதல்;
துகில் - நல்லாடை ( Fine cloth, rich attire);
மத கரி உரி அணி - மத யானையின் தோலை அணியும்;


சதை நிறைந்த இவ்வுடல் நிலையில்லாதது. எமதூதரின் வரவால், சுற்றத்தார் அழுது புலம்ப, அது விழுந்துவிடும். இதை உணர்ந்த அடியவர்கள் நற்கதி அடைவதற்காகத் தினமும் வணங்கும் இறைவன் சிவபெருமான். அவன் முதலும் முடிவும் அற்றவன். கங்கையைத் தலையில் சூடியவன். துகில் போல மதயானையின் தோலைப் போர்த்தியவன். அவன் உறையும் மயிலாப்பூரை அடையும் அன்பர்கள் மகிழ்வார்கள்.



7)
கதியுன கழலிணை எனநனி கசிகிற மனமுடை அடியவர்
துதிசெய அருளிறை ஒளிர்பொடி துதைகிற திருவுரு உடையவன்
எதிர்அரண் அவையொரு நொடியினில் எரிபுக நகுபவன் எழிலுற
மதிதவழ் சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
"கதி உன கழல் இணை" என நனி கசிகிற மனம் உடை அடியவர்
துதிசெய அருள் இறை; ஒளிர் பொடி துதைகிற திரு உரு உடையவன்;
எதிர் அரண் அவை ஒரு நொடியினில் எரி புக நகுபவன்; எழில் உற
மதி தவழ் சடை உடை அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


கதி - புகலிடம்;
உன கழல் இணை - உன் இரு திருவடிகள்; (உன - உன்னுடையவான. - ஆறன் உருபு. கழல் - வீரக்கழல் அணிந்த திருவடிக்கு ஆகுபெயர்);
நனி - மிகவும்;
ஒளிர் பொடி - ஒளிர்கிற திருநீறு;
துதைதல் - படிதல் (To be steeped); (6.87.5 - "தூயவன்காண் நீறு துதைந்த மேனி ...");
திரு உரு - திருமேனி;
எதிர் அரண் - எதிர்த்த முப்புரங்கள்;



8)
வெறியொடு மலையசை தசமுகன் மிகவழ விரல்நுனி தனைஒரு
சிறிதிடு பவன்அவன் இசைகொடு திருவடி தொழவரம் அருள்பவன்
வெறிமிகு மலரொடு பிறைமதி விரைநதி முடிமிசை அணிபவன்
மறியொரு கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
வெறியொடு மலை அசை தசமுகன் மிக அழ விரல் நுனிதனை ஒரு
சிறி(து) இடுபவன்; அவன் இசைகொடு திருவடி தொழ, வரம் அருள்பவன்;
வெறி மிகு மலரொடு, பிறை மதி, விரை நதி முடிமிசை அணிபவன்;
மறி ஒரு கரம் உடை அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


வெறி - 1) சினம்; ஆணவம்; 2) வாசனை;
மலை அசை தசமுகன் - கயிலைமலையை அசைத்த இராவணன்;
வெறி மிகு மலர் - வாசமலர்;
விரை நதி - விரைந்து பாயும் கங்கை ஆறு;
மறி - மான்கன்று;



9)
இருவரின் இடையினில் எரியென எழுகிற முடிவிலி அளியொடு
திருவடி தொழுகிற அடியவர் திருவுற வினையற அருளிறை
பருகிய பெருவிடம் ஒளிர்கிற கருமணி மிடறினன் அரவொடு
மருமிகு மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
இருவரின் இடையினில் எரி என எழுகிற முடிவிலி; அளியொடு
திருவடி தொழுகிற அடியவர் திரு உற, வினை அற அருள் இறை;
பருகிய பெரு விடம் ஒளிர்கிற கரு மணி மிடறினன்; அரவொடு
மரு மிகு மலர் அணி அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


எரி - தீ; சோதி;
முடிவிலி - முடிவில்லாதவன்; அழிவில்லாதவன்;
அளி - அன்பு; பக்தி;
திரு உற - நன்மை பெற;
வினை அற – வினைகள் தீர;
கரு மணி மிடறினன் - அழகிய நீலகண்டத்தை உடையவன்; (மிடற்றினன் என்பது ஓசைக்காக மிடறினன் என்று இடைக்குறையாக வந்தது.
மரு - வாசனை;


திருமால் பிரமன் இவர்களிடையே அளவில்லாத சோதியாக உயர்ந்தவன்; அழிவில்லாதவன்; அன்போடு திருவடியைத் தொழும் பக்தர்கள் நன்மை பெறவும் அவர்களின் வினைகள் தீரவும் அருள்புரியும் இறைவன்; உண்ட ஆலகால விஷம் ஒளிரும் நீலகண்டன்; பாம்பையும் வாசமலர்களையும் முடிமேல் அணியும் சிவபெருமான் உறையும் மயிலாப்பூரை அடைபவர்கள் மகிழ்வார்கள்.



10)
எதுவழி எனவறி கிலர்சிலர் இடர்மிகு வழிதனில் உழல்இவர்
புதுவழி இதில்வரு கெனமொழி புறனுரை பொருளல சிவநெறி
அதுவழி எனவுணர் அடியவர் அனுதினம் அடியிணை தொழுகிற
மதுவழி மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
எது வழி என அறிகிலர் சிலர்; இடர் மிகு வழிதனில் உழல் இவர்,
புது வழி இதில் வருகென மொழி புறனுரை பொருள் அல; சிவநெறி
அது வழி என உணர் அடியவர் அனுதினம் அடியிணை தொழுகிற,
மது வழி மலர் அணி அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


வருகென - வருக என - (தொகுத்தல் விகாரம்);
மொழி புறனுரை - சொல்லும் புறனுரைகள்; (புறனுரை - பழிச்சொல்; வெற்றுரை);
பொருளல - பொருள் அல்ல;
உணர் அடியவர் - அறிந்த அடியவர்கள்;
("சிவநெறி அது வழி என உணர்" - என்பதைத் தனி வாக்கியமாகவும் பொருள்கொள்ளலாம்.)
மது வழி மலர் அணி அரன் - தேன் வடியும் பூக்களைச் சூடும் சிவன்;



11)
நறைமிகு மலரொடு தமிழ்கொடு நடநவில் அடிமலர் தொழுபவர்
குறைகளும் அவரொடு தொடர்கிற கொடுவினை களுமற நிதியொடு
நிறைபுகழ் உறவருள் புரிபவன் நிலவொடு புனலணி சடையிறை
மறைதுதி பசுபதி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.



பதம் பிரித்து:
நறை மிகு மலரொடு தமிழ்கொடு, நட[ம்] நவில் அடிமலர் தொழுபவர்
குறைகளும் அவரொடு தொடர்கிற கொடுவினைகளும் அற, நிதியொடு
நிறை புகழ் உற அருள்புரிபவன்; நிலவொடு புனல் அணி சடை இறை;
மறை துதி பசுபதி; அரன் நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


நறை - தேன்; வாசனை;
தமிழ் - திருமுறைப் பாடல்கள்;
நடம் நவில் அடிமலர் - திருநடம் செய்யும் பாதமலர்;
அற - நீங்க;
உற - அடைய;
புனல் - கங்கை;
மறை - வேதம்;


வாசமலர்களாலும் திருமுறைப் பதிகங்களாலும், திருநடம் செய்யும் பாதமலரைப் போற்றுபவர்களின் குறைகளும் பல பிறவிகளாகத் தொடர்ந்துவரும் தீவினைகளும் நீங்கும்படியும், செல்வமும் மிகுந்த புகழும் சேரும்படியும் அருள்செய்வான் சிவபெருமான். அவன் தன் சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிபவன்; வேதங்கள் போற்றும் கடவுள்; உயிர்களுக்குத் தலைவன். அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மயிலாப்பூரை அடைபவர்கள் மகிழ்வார்கள்.



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment