Sunday, August 23, 2015

01.79 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)


01.79 –
சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)



2010-09-18
திருச்சிராப்பள்ளி
"சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி"
----------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் - 6.86.1 - “கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்”)



1)
நீராரும் சடையானை, நிகரில் லானை,
.. நெருப்புமிழும் கண்திகழும் நெற்றி யானைக்,
காராரும் மிடற்றானை, உமையோர் கூறு
.. காட்டுகின்ற காதலனைக், கயிலை யானை,
ஓராத கன்னெஞ்சர் காணா தானை,
.. உள்ளத்துள் போற்றுகின்ற அடியார் தங்கள்
தீராத வினைதீர்த்துக் காக்கின் றானைச்,
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



நீர் ஆரும் சடையானை - கங்கை பொருந்திய சடையினனை;
நிகர் இல்லானை - ஒப்பு இல்லாதவனை;
கார் ஆரும் மிடற்றானை - கருமை பொருந்திய கண்டம் உடையவனை;
ஓராத கன்னெஞ்சர் - எண்ணாத கல்மனம் உடையவர்கள்; (ஓர்தல் - எண்ணுதல்);
சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி;



2)
தூயவனைத் தீயவனைக் கடலில் அன்று
.. தோன்றியமா நஞ்சடைந்து கண்டம் நீலம்
ஆயவனை இமையாமுக் கண்ணி னானை
.. அஞ்செழுத்தை எப்பொழுதும் ஓது வார்தம்
வாயவனை வளையொருகை அணிவான் தன்னை
.. மறையானைப் பிறையானை இறைவன் தன்னைச்
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



தீயவன் - தீயாய்த் திகழ்பவன்;
இமையா முக்கண்ணினானை - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடையவனை;
வாயவன் - வாயின்கண் இருப்பவன் - வாக்கில் இருப்பவன்;
வளை ஒரு கை அணிவான் தன்னை - ஒரு கையில் வளையல் அணிபவனை - அர்த்தநாரீஸ்வரனை;
மறையான் - வேதசொரூபன்; வேதங்களை அருளியவன் எனலுமாம்;
சேயவன் - முருகன்; (சேய் - முருகன்; மகன்);
தாயும் ஆன சிராப்பள்ளிச் சிவன் - தாயுமானவன் என்பது திருச்சிராப்பள்ளி ஈசன் திருநாமம்;



3)
வான்தங்கு தேவரெலாம் வந்து வேண்ட
.. வன்னஞ்சை அமுதாக உண்டான் தன்னை
மான்தங்கு கரத்தானை மான்நேர் நோக்கி
.. வாமத்தில் தங்குதிரு மேனி யானை
மீன்தங்கு கொடியானின் உடல்நீ றாக
.. விழித்தவனை வெண்திங்கட் கண்ணி யோடு
தேன்தங்கு கொன்றையையும் சூடு வானைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



வன்னஞ்சு - வலிய நஞ்சு - கொடிய விடம்;
மான் நேர் நோக்கி - மானை ஒத்த கண்களையுடைய பார்வதி; (திருவாசகம் - குழைத்த பத்து - 8.33.4 - “மானேர் நோக்கி மணவாளா”);
வாமம் - இடப்பக்கம்;
மீன் தங்கு கொடியான் - மீனக்கொடியோன் / மகரக்கொடியான் - மன்மதன்;
கண்ணி - தலையில் அணியும் மாலை;



4)
பாவையலாற் பாகமிலாப் பரமன் தன்னைப்
.. பாய்விடைமேல் வருவானைப் பலியேற் பானைப்
பூவைநிலாப் பிறைதன்னை முடியிற் சூடும்
.. புண்ணியனை நாவாரப் புகழ்ந்து நாளும்
கோவையுலாப் பாடியடி போற்று கின்ற
.. குற்றமிலா மனத்தினராம் அன்பர் தங்கள்
தேவையெலாம் தீர்த்தருளும் தேவ தேவைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



பாவை லால் பாகம் இலாப் பரமன் தன்னை - உமையை ஒரு பாகமாக உடைய பரமனை; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.40.9- "உமையலா துருவ மில்லை .... ஐயனை யாற னார்க்கே");
பாய்விடை - பாயும் இடபம்;
பலி - பிச்சை;
பூவை நிலாப்பிறைதன்னை முடியிற் சூடும் - பூக்களையும் பிறைச்சந்திரனையும் முடிமேல் அணியும்;
கோவை உலா - கோவை, உலா, போன்ற பலவகைப் பாமாலைகள்;





5)
வெந்தபொடி பூசியவா கான கத்தில்
.. வேட்டுவனாய்ப் பாசுபதம் விசய னுக்குத்
தந்தவனே உலகங்கள் ஈன்ற தாயே
.. தன்னொப்பார் இல்லாத தன்மை யானே
செந்தழல்போல் மேனியனே தீயை ஏந்தித்
.. திருநடஞ்செய் தேவவென்பார் பாவம் எல்லாம்
சிந்தவருள் செய்வானைப் பொன்னித் தென்பால்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



வெந்தபொடி பூசியவா …. …. திருநடம் செய் தேவ" என்பார் பாவம் எல்லாம் சிந்த அருள் செய்வானை....... சிந்தி நெஞ்சே;
வெந்தபொடி பூசியவா - திருநீறு பூசியவனே;
வேட்டுவன் - வேடன்;
விசயன் - அருச்சுனன்;
சிந்துதல் - அழிதல்;



6)
ஓங்குமலை போற்கரியின் உரியைப் போர்த்த
.. உத்தமனே ஒளியுருவா உமையோர் கூறா
ஆங்கொருபுன் னகையாலே அரண்மூன் றட்டாய்
.. அருள்வாயே என்றுபணி அன்பர் தங்கள்
தாங்கரிய துயர்தீர்த்துத் தாங்கு வானைத்
.. தன்னடியார் சித்தத்துள் என்றும் நின்று
தீங்கரும்பாய்த் தித்திக்கும் தேவ தேவைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



கரியின் உரி - யானையின் தோல்;
அரண் மூன்று அட்டாய் - முப்புரங்களை எரித்தவனே;



7)
நாடிவந்து கோடிவினை நலிக்கும் முன்னே,
.. நான்நவிலும் சொல்கேளாய்; மிழலை தன்னிற்
பாடிவந்த அடியாரின் பசியைத் தீர்க்கப்
.. படிக்காசு பரிந்தளித்த பண்பி னானை
ஓடிவந்த காவிரியின் வெள்ளத் தாலே
.. உதவிக்கு வரவியலாத் தாயே ஆகித்
தேடிவந்த அருந்துணையைத் தேவ தேவைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



* திருவீழிமிழலையில் அப்பருக்கும் சம்பந்தருக்கும் படிக்காசு அளித்ததைச் சுட்டியது.
** இரத்தினாவதிக்குத் தாய் போல வந்து அருளியதைச் சுட்டியது. திருச்சிராப்பளித் தலவரலாற்றிற் காண்க.


நலித்தல் - வருத்துதல்;
நவில்தல் - சொல்லுதல்;



8)
ஆத்திரங்கொண் டருமலையை அரக்கன் ஆட்ட
.. அவன்முடிபத் தடர்த்தானைக், கீதம் பாடித்
தோத்திரஞ்செய் தடிபோற்ற இரங்கி னானைத்,
.. தோற்றமிலாத் தொன்மையனைச், சுடரைக் கக்கும்
நேத்திரங்கொள் நெற்றியனை, எவ்வி டத்தும்
.. நிறைந்தானை, நிலாத்துண்டம் சூடி னானைத்,
தீத்திரள்போல் மேனியனைத், தேவ தேவைச்,
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



அருமலை - கயிலைமலை;
அரக்கன் - இராவணன்;
அடர்த்தல் - நசுக்குதல்;
தோற்றம் - ஆரம்பம்; உருவம்;
சுடர் - தீ;
நேத்திரம் - கண்;
நிலாத்துண்டம் - பிறைச்சந்திரன்;
தேவதேவை - தேவதேவனை; (தேவதேவு - தேவதேவன் - பரம்பொருள்);



9)
மூவடியால் உலகளந்த முகில்நி றத்தன்
.. முளரிமிசை உறைபிரமன் முன்னம் ஓர்நாள்
மாவடிவாய்ப் புள்வடிவாய் எங்கும் தேடி
.. வாடிநிற்க அவர்நடுவே வான்க டந்த
தீவடிவாய்த் திகழ்ந்தானை வன்தொண் டர்க்காத்
.. திருவாரூர்த் தெருவினிலே நடந்து சென்ற
சேவடியால் மாணிக்காக் கூற்று தைத்த
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



முகில் நிறத்தன் - மேகம்போன்ற நிறத்தை உடையவன் - திருமால்;
முளரி மிசை - தாமரைமேல்;
மா வடிவாய் - விலங்கு உருவம் ஆகி - இங்கே பன்றி;
புள் வடிவாய் - பறவை உருவம் ஆகி - இங்கே அன்னம்;
வன்தொண்டர்க்கா - வன்தொண்டர்க்காக – சுந்தரருக்காக;
* சிவபெருமான் சுந்தரருக்காகப் பரவையார் மனைக்குத் தூது சென்றதைப் பெரியபுராணத்திற் காண்க;
சேவடி - சிவந்த திருவடி;
மாணிக்கா - மாணிக்காக; (மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்);



10)
பாங்கில்லாச் சொற்களையே பகர்ந்து நாளும்
.. பாழுக்கே உழல்கின்ற பதர்போல் வாரை
நீங்கித்தாம் நீறணிந்த மேனி யாராய்
.. நீலகண்டா நின்மலனே நெற்றிக் கண்ணா
மூங்கில்போல் தோளிபங்கா முடிவொன் றில்லா
.. முழுமுதலே என்றென்றே போற்று வார்க்குத்
தீங்கில்லா நிலையருளும் செல்வன் தன்னைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



மூங்கில்போல் தோளி பங்கா - மூங்கில் போன்ற புஜங்களை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே; (வேயுறு தோளி பங்கன், காம்பன தோளி பங்கா, என்றெல்லாம் தேவாரத்தில் வருவதைக் காண்க);



11)
கொம்பனைய இடையாளோர் கூறா னானைக்
.. கோலமுற விரிசடைமேல் குளிர்வெண் திங்கள்
வம்பவிழும் மலர்க்கொன்றை சூடி னானை
.. மலரடியை மறவாது வாழ்த்து வாரின்
வெம்பவநோய் தீர்த்தருள வல்லான் தன்னை
.. மேருவில்லால் புரமெரித்த வீரன் தன்னைச்
செம்பவள நிறத்தானைத் தேவ தேவைச்
.. சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



கொம்பு அனைய இடையாள் - கொடி போல் இடை உடைய பார்வதி;
வம்பு அவிழும் மலர்க்கொன்றை - மணம் வீசும் கொன்றைமலர்;
வெம் பவநோய் - கொடிய பிறவிப்பிணி;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment