Thursday, August 13, 2015

01.40 – கச்சி ஏகம்பம்


01.
40
கச்சி ஏகம்பம்



2008-11-09
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்)
------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.47.1 - “பண்டு செய்த பழவினை யின்பயன்");



1)
எல்லை இல்லா இடர்க்கடல் தன்னிலே
அல்லல் எய்தி அலமரும் நெஞ்சமே,
தொல்லை வல்வினைத் துன்பங்கள் ஏதுமே
இல்லை யேதிரு ஏகம்பம் ஏத்தவே.



அலமருதல் - வருந்துதல்;
தொல்லை - பழைய;
ஏத்துதல் - துதித்தல்;



2)
என்றன் பேதை மனமே இதையுணர்,
முன்வி னைப்பயன் என்னும் முடிவிலாத்
துன்ப மும்துய ரும்தொலைந் தெய்தலாம்
இன்ப மேதிரு ஏகம்பம் ஏத்தவே.



3)
விடமாட் டாத வினைகளும் வீடுமே,
மடமா தோர்பால் மகிழ்பவன், சென்னியில்
படநா கத்தொடு பால்மதி சூடுவான்,
இடபத் தான்உறை ஏகம்பம் ஏத்தவே.



வீடுதல் - கெடுதல் (to perish; to be destroyed);
மட மாது - பார்வதி;
பட நாகம் - படம் பொருந்திய நாகம்;
பால் மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன்;
இடபத்தான் - இடப வாகனன்; (இடபம் - எருது);



4)
ஆசைச் சேற்றினில் ஆழ்ந்துழல் நெஞ்சமே
மாசைப் போக்கி மகிழ்வழி ஆவது,
பாசத் தோடெமன் பாயும்கால் காக்கிற
ஈச னார்உறை ஏகம்பம் ஏத்தலே.



உழல்தல் - அலைதல்; சுழலுதல்; நிலைகெடுதல்;
மாசு - அழுக்கு; குற்றம்;
மகிழ் வழி - மகிழ்கின்ற வழி; (வழி - மார்க்கம்; உபாயம்);
பாசம் - எமன் கையில் இருக்கும் கயிறு;
பாயும் கால் - பாயும் பொழுது;



5)
கோடி கோடி பிறவியில் செய்வினை
ஓடிப் போய்இன் புறுவது திண்ணமே,
கேடி லான்உமை கேள்வன்உம் பர்தொழும்
ஈடி லான்திரு ஏகம்பம் ஏத்தவே.



செய்வினை - செய்த வினை;
ஓடிப்போதல் - விட்டுநீங்குதல்;
திண்ணம் - நிச்சயம்;
கேடு இலான் - அழிவு இல்லாதவன்;
கேள்வன் - கணவன்; நாயகன்;
உம்பர் - தேவர்கள்;
ஈடு இலான் - ஒப்பற்றவன்;



6)
மாறி மாறிப் பிறப்பளி வல்வினை
பாறிப் போய்விடும் பார்வதி கூறனார்
ஆறி ருக்கும் அவிர்சடை அண்ணலார்
ஈறி லார்திரு ஏகம்பம் ஏத்தவே.



பிறப்பு அளி வல்வினை - பிறவியை அளிக்கும் வலிய வினைகள்;
பாறுதல் - அழிதல்;
போதல் - நீங்குதல்; ஒழிதல்; emphasising the meaning of the main verb; பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணை வினை;
அவிர்தல் - பிரகாசித்தல்;
ஈறு இலார் - முடிவு இல்லாதவர்;



7)
பண்டிக் கென்றே பலநாள் உழல்வதால்
கண்ட தென்னே; கலிபோய்த் திருவரும்,
சண்டிக் கின்னருள் செய்தவன் தான்உறை,
எண்டிக் கும்புகழ் ஏகம்பம் ஏத்தவே.



பண்டி - வயிறு; உடல்;
கலி - துன்பம்; வறுமை;
திரு - பாக்கியம்; செல்வம்;
சண்டி - சண்டேசுர நாயனார்;
எண்டிக்கும் - எண் திக்கும் - எட்டுத் திசைகளும்;



8)
தருக்கி னால்மலை தன்னை அசைத்தவன்
அரற்று மாறோர் விரலால் அடர்த்தநம்
நிருத்த னார்உறை ஏகம்பம் நித்தலும்
விருப்பி னால்தொழ வீடும் வினைகளே.



தருக்கு - ஆணவம்;
அரற்றுதல் - To lament, cry, weep aloud, bewail; புலம்புதல்.
நிருத்தன் - கூத்தன்;
நித்தலும் - நாள்தோறும்;
விருப்பினால் - விருப்பத்தோடு;
வீடுதல் - ஒழிதல்; விடுதல்;



9)
அயனும் மாலும் அறிதற் கரியதாய்
உயரும் சோதிஏ கம்பனுக் கன்பராய்
இயலும் வண்ணம் பணிசெய் திருப்பவர்
துயர்கள் எல்லாம் தொலைவது திண்ணமே.



அயன் - பிரமன்;
மால் - திருமால்; விஷ்ணு;
அறிதற்கு அரியது ஆய் உயரும் சோதி - அறிய இயலாத ஒன்று ஆகி ஓங்கிய சோதி;
இயலும் வண்ணம் - இயன்ற வகையில்;



10)
கைத வத்தொடு பொய்களு ரைத்தவம்
செய்தி ழிந்திடும் தெண்ணர் தெளிகிலார்;
உய்தி வேண்டில் அதனை உறுதியா
எய்த லாம்திரு ஏகம்பம் ஏத்தவே.



பதம் பிரித்து:
கைதவத்தொடு பொய்கள் உரைத்(து) அவம்
செய்(து) இழிந்திடும் தெண்ணர் தெளிகிலார்;
உய்தி வேண்டில் அதனை உறுதியா
எய்தலாம் திரு ஏகம்பம் ஏத்தவே.


கைதவம் - கபடம் (cunning, craftiness); பொய் (falsehood);
அவம் - கேடு;
தெண்ணர் - அறிவிலிகள். (senseless or dense persons, fools);
தெளிதல் - ஆராய்தல்; அறிதல்; (தெளிகிலார் - அறியமாட்டார்);
உய்தி - ஈடேற்றம் (salvation, deliverance);
உறுதியா - உறுதியாக – நிச்சயமாக;
எய்துதல் - அடைதல்;

11)
கறைக ளோடு கவலைக ளும்பிற
குறைக ளும்போய்க் குடிகொளும் இன்பமே,
மறைகள் எல்லாம் வழுத்தும் மணிகண்டர்
இறைவ னார்உறை ஏகம்பம் ஏத்தவே.



கறை - குற்றம்; பழி;
குறை - குறைபாடு; குற்றம்;
குடிகொள்ளுதல் - நிலையாகத் தங்கியிருத்தல்;
வழுத்துதல் - துதித்தல்;
மணிகண்டன் - நீலகண்டன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
ஒவ்வோர் அடியிலும்
1. முதற்சீர் மாச்சீர்.
2. இரண்டாம் சீரின் முதல் அசை நேரசை.
3. அதன்பின் அடியுள் வெண்டளை பயிலும். (அதாவது - 2-3-4 சீர்கள் இடையே வெண்டளை இருக்கவேண்டும்);
4. நேரசையில் தொடங்கும் அடிக்குப் 11 எழுத்துகள். நிரையசையில் தொடங்கும் அடிக்குப் 12 எழுத்துகள்.
5. 1, 3 சீர்களில் மோனை வருதல் நன்று. வாராமலும் இருக்கலாம்.



(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.47.1
பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டும் கண்டும் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.)

1 comment:

  1. நல்ல முயற்சி

    நாளும் வளர
    நல்வாழ்த்துகள்

    அன்புடன்
    சிவனகம்
    ந அருளரசு

    ReplyDelete