Friday, August 14, 2015

01.48 – கடவூர் - (திருக்கடையூர்)


01.
48
கடவூர் - (திருக்கடையூர்)



2009-06-15
திருக்கடவூர் (“திருக்கடையூர்”)
---------------------
(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - “அரவச் சடைமேல் மதிமத்தம்");



1)
பிறவிப் பிணிசேர் வினையெல்லாம்
அறவே அழிதற்(கு) அடைநெஞ்சே
பிறவாப் பெருமான் பிறைசூடி
கறைசேர் மிடறன் கடவூரே.



பிறைசூடி - பிறையைச் சூடுபவன்;
கறை சேர் மிடறன் - கருமை திகழும் கழுத்தை உடையவன்;

2)
வருகா லமெலாம் மகிழ்வோடு
திருவா கிடநீ அடைநெஞ்சே
ஒருபால் உமையாள் உறைகின்ற
கருமா மிடறன் கடவூரே.



ஒரு பால் - ஒரு பக்கம்;
கரு மா மிடறன் - அழகிய நீல கண்டத்தை உடையவன்;



3)
விருதா அலையா(து) அடைநெஞ்சே
ஒருபா சமுடன் மறையோன்பால்
வருகா லனையன்(று) உதைசெய்த
கருமா உரியான் கடவூரே.



விருதா - வீணா; பயனின்றி; (திருப்புகழ் - திருவாவினன்குடி - "சிவனார் மனங்குளிர ... உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை ....");
பாசமுடன் - பாசத்தோடு (எமன் கையில் இருக்கும் சுருக்குக்கயிறு); அன்போடு;
(பாசத்தை எமனோடு சேர்த்துப் பொருள்கொண்டால் - எமன் கையில் இருக்கும் கயிறு.
பாசத்தை இறைவனோடு பொருத்திக்கொண்டால் - அன்பு);
மறையோன் - இங்கே, அந்தணச் சிறுவனார் மார்க்கண்டேயர்;
கருமா உரியான் - யானைத் தோலை அணிந்த சிவன்; (கருமா - யானை; உரி - தோல்);
(தேவாரத்தில் 'கருமான் உரி', 'கருமானின் உரி', என்பன போன்று வரக் காணலாம்);



4)
உலகிற் பிணியுற்(று) உழலாத
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
நிலவைப் புனையும் பெருமாற்குக்
கலயர் பணிசெய் கடவூரே.



கலயர் - குங்கிலியக் கலய நாயனார்; இவர் திருக்கடவூரில் வாழ்ந்தவர்;



5)
புவியிற் புரிதீ வினையெல்லாம்
அவியக் கருதில் அடைநெஞ்சே
செவியோர் குழைசேர் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே.



அவிதல் - அழிதல்;
கருதில் லடை - லகர ஒற்று விரித்தல் விகாரம் - கருதில் அடை - கருதினால் அடைவாயாக;
கவின் ஆர் பொழில் சூழ் - அழகிய சோலைகள் சூழ்ந்த;



6)
அலமந்(து) உலகில் அலையாமல்
நிலையைப் பெறநீ நினைநெஞ்சே
பலபேர் இடவோர் தலையோட்டைக்
கலமா உடையான் கடவூரே.



அலமந்து - வருந்தி; கலங்கி;
உலகில் லலையாமல் - லகர ஒற்று விரித்தல் விகாரம் - உலகில் அலையாமல்;
பல பேர் இட ஓர் தலையோட்டை - பலரும் பிச்சை இடுவதற்காக ஒரு மண்டையோட்டினை;
கலமா - கலமாக - பிச்சைப் பாத்திரமாக;



7)
திணறும் கடைநாள் சிவனன்றித்
துணையார் உளர்நீ தொழுநெஞ்சே
அணையார் புரமூன்(று) அவைவேவக்
கணைதொட் டவனூர் கடவூரே.



திணறும் கடைநாள் - மூச்சுத்திணறும் மரணவேளை;
அணையார் - பகைவர்;
கணை தொட்டவன் - அம்பு எய்தவன்;



8)
விரையும் வினைகள் அணுகாத
அரணைப் பெறநீ அடைநெஞ்சே
விரலால் அவுணன் விறல்தீர்த்துக்
கரவாள் தருவான் கடவூரே.



வினைகள் ளணுகாத - ளகர ஒற்று விரித்தல் விகாரம் - வினைகள் அணுகாத;
அரண் - கவசம்; காவல்; கோட்டை;
விறல் - வலிமை; வெற்றி; வீரம்;
அவுணன் - அசுரன் - இங்கே இராவணன்;
கரவாள் தருவான் கடவூரே - கைவாள் தருபவன் (உறையும்) திருக்கடவூர்;
(சம்பந்தர் தேவாரம் - 1.51.8 - ".... இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய்...")
(சம்பந்தர் தேவாரம் - 1.81.8 - "இரவில் திரிவோர்கட்(கு) இறைதோள் இணைபத்தும் நிரவிக் கரவாளை நேர்ந்தான் இடம்போலும் ...")



9)
தரியாத் துயர்கள் தளையெல்லாம்
பிரியக் கருதில் அடைநெஞ்சே
எரியாய் எழுநாள் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே.



தரியா - தாங்குதற்கரிய; தாங்க ஒண்ணாத; (தரித்தல் - To bear patiently, endure; பொறுத்தல்);
(இலக்கணக் குறிப்பு: ));
எரியாய் எழு[ம்] நாள் - அளவில்லாத சோதியாகி நீண்டபொழுது;
கரியான் - திருமால்;
கரியாற்கரியான் - கரியாற்கு அரியான் - கரியானுக்கு அரியவன் - திருமாலால் அடையப்படாதவன்;
தாங்க மாட்டாத துயர்களும் அவற்றுக்குக் காரணமான வினைக்கட்டுகளும் உன்னை விட்டு விலகுமாறு நீ விரும்பினால், நெஞ்சமே, திருக்கடவூரை அடைவாயாக!
இலக்கணக் குறிப்புகள்:
தரியா - "தரித்தல்" எதிர்மறையில் பெயரெச்சமாகத் "தரியாத" என்று வரும். இங்கே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகித் “தரியா” என்று வந்தது
துயர்கட் டளையெல்லாம் - துயர்கள் தளையெல்லாம் - விரித்தல் விகாரம்; உம்மைத்தொகை;
கருதில் லடைநெஞ்சே - கருதில் அடைநெஞ்சே - விரித்தல் விகாரம்;



10)
சிவனைப் பரவார் சிலவீணர்;
அவலக் குழிவீழ்ந் தழிவாரே;
பவநோய் விலகப் பணிநெஞ்சே
கவசத் தலமாம் கடவூரே.



பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்;
வீணன் - பயனற்றவன்;
அவலம் - துன்பம்; குற்றம்; கவலை;
பவ நோய் - பவரோகம் - பிறவிப்பிணி;
கவசத் தலம் ஆம் கடவூர் - அடைந்தாரைக் கவசம் போல் காக்கின்ற தலம் ஆகும் கடவூர்;

11)
உயிருக்(கு) ஒருநற் றுணைவேண்டில்
இயலும் பணிசெய்(து) அடைநெஞ்சே
மயிலாள் ஒருபால் மகிழ்கின்ற
கயிலைக் கிறைவன் கடவூரே.



நற்றுணை - நல் துணை - நல்ல துணை;
இயலும் பணிசெய்து - இயன்ற வகையில் திருத்தொண்டு செய்து;
மயிலாள் - மயில்போலும் சாயலுடைய உமாதேவியார்;
(சம்பந்தர் தேவாரம் - 2.52.7 - "கலவ மாமயி லாளொர் பங்கனை....")
பால் - பகுதி (Part, portion, share, section, fraction);
மகிழ்தல் - விரும்புதல்;
கயிலைக்கு இறைவன் - சிவபெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 5.66.1 - "..... பொற்கயி லைக்கிறை ....")



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment