Thursday, August 20, 2015

01.63 – பொது - (மாலைமாற்று)


01.63 –
பொது - (மாலைமாற்று)



2010-02-13 to 2010-02-23
பொது
மாலைமாற்று (Palindrome)
-------------------------------
("குறள் வெண்செந்துறை” அமைப்பில்)
மாலைமாற்று (ஆங்கிலத்தில் Palindrome ) - செய்யுளை நேராகப் படித்தாலும் தலைகீழாகப் பின்னிலிருந்து படித்தாலும் ஒன்று போலவே தோன்றும்.
(தருமை ஆதீன உரையில் 3.117 பதிகக் குறிப்பிற் காண்பது:
மாலைமாற்று என்பது முதலிலிருந்து இறுதிவரை படித்தால் அமையும் பாடலே, இறுதியிலிருந்து முதல்வரை, படிப்பினும் அமைவது. அதைச் சிறுவர்கட்குக் குடகு, விகடகவி என்று கூறிக் காட்டுவர். சொல்லணியில், கூடசதுக்கம், கோமூத்திரி, சுழிகுளம், மாலைமாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள். மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவைபோன்ற கவிதைகளை அமைத்துள்ளனர்.)



2010-02-13
1)
மாலைமாற்று - 1
------------------------
தேவர் சார்பதி யடைவினை கழலவே
வேலழ கனைவிடை யதிபர் சார்வதே.



பதம் பிரித்து:
தேவர் சார் பதி அடை; வினை கழலவே
வேல் அழகன் ஐ, விடை அதிபர் சார்வதே.


சார்தல் - சரண்புகுதல்;
பதி - தலைவன்; கடவுள்;
வேல் அழகன் - முருகன்;
- தந்தை;
விடை அதிபர் - நந்திவாகனர்;


தேவர்கள் சென்று சரண்புகும் கடவுளை அடை; வினைகள் நீங்கவே, முருகனின் தந்தையும், இடப வாகனனும் ஆன சிவபெருமானைச் சரணடைவது.



2010-02-23
2)
மாலைமாற்று - 2
----------------------
வேளைவிழி யிறைபதி துணிமதி யாரே
ரேயாதி மணிதுதி பறையிழி விளைவே



பதம் பிரித்து:
வேளை விழி இறை, பதி, துணி மதியார்,
ஏர் ஏய் ஆதி, மணி, துதி; பறை இழி விளைவே.


வேள் - மன்மதன்;
பதி - தலைவன்;
துணி மதி - பிறைச் சந்திரன்; (துணி - துண்டம்); (திருவாசகம் - அச்சப்பத்து - 5 - "பிணியெலாம் வரினும் அஞ்சேன் .... துணிநிலா அணியினான்தன்....");
ஏர் - அழகு; நன்மை;
ஏய்தல் - பொருந்துதல்;
பறைத்தல் - நீக்குதல் (To remove, destroy);
விளைவு - பயன் (Result, consequence);


மன்மதனை விழித்து எரித்த கடவுள்; தலைவர்; பிறைச்சந்திரனைச் சூடியவர்; நன்மை பொருந்திய முதற்பொருள்; மணி போன்றவர்; அவரைத் துதி. தீய வினைப்பயனை நீக்கு.



2010-02-14
3)
மாலைமாற்று - 3
-----------------------
தீயா வாகா தேவா மேவேதா
தாவே மேவாதே காவா யாதீ.



பதம் பிரித்து:
தீயா; வாகா; தேவா; மே வேதா;
தாவே மேவாதே காவாய் ஆதீ.


தீயன் - கையில் தீயையுடையவன்; (1.56.2 - "நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்" - 'நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார்');
வாகன் - அழகுள்ளவன்; (வாகு - அழகு);
மே - மேம்பாடு (Excellence);
தாவு / தா - கேடு; (தாவுதல் - கெடுதல்; அழிதல்);
மேவுதல் - அடைதல்;


தீயை ஏந்தியவனே! அழகனே! தேவனே! மேம்பட்ட வேதனே! ஆதியே! (என்னைக்) கேடு அடையாமல் காப்பாயாக!



2010-02-14
4)
மாலைமாற்று - 4
-----------------------
காவாரண நாடா வீசா தேனே யாலா
லாயானே தேசா வீடா நாணர வாகா.



பதம் பிரித்து:
கா வாரண[ம்] நாடா ஈசா! தேனே ஆல் ஆல்!
ஆயானே! தேசா! வீடா! நாண் அரவா! கா!


கா - 1) காடு; 2) காப்பாய்;
வாரணம் - யானை;
கா வாரணம் - காட்டில் வாழ் யானை - இன அடையாக வந்தது.
ஆல் - 1) ஆலகால விஷம்; 2) அசைச்சொல்;
ஆயான் - தந்தை;
தேசன் - ஒளியுருவினன்; (தேசு - தேஜஸ் - ஒளி);
வீடன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்; ('முக்தி - முக்தன்', 'நாடு - நாடன்' போல, வீடு - வீடன்);
(அப்பர் தேவாரம் - 6.25.1 - "உயிராவணம் ...... அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி ....")


காட்டில் வாழ் யானையை வாகனமாக விரும்பாத ஈசனே! (இடப வாகனன்). (உனக்கு) ஆலகால விஷமும் தேனே! தந்தையே! சோதியே! இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே! பாம்பை அரைநாணாக அணிந்தவனே! (முப்புரம் எரித்த நாளில் வில்லில் நாணாகப் பாம்பைக் கொண்டவனே); காப்பாயாக!



2010-02-16
5)
மாலைமாற்று - 5
-----------------------
வேட னானாயே நாதா பாம்பூர் தேனேவா
வானே தேர்பூம் பாதா நாயேனா னாடவே.



பதம் பிரித்து:
வேடன் ஆனாயே! நாதா! பாம்(பு) ஊர் தேனே! வா!
வானே தேர் பூம் பாதா! நாயேன் நான் ஆடவே.


தேர்தல் - ஆராய்தல்; தேடுதல்;
பூம்பாதம் - மலர்ப்பாதம்;


(அருச்சுனனுக்கு அருள்புரிந்த நாளில்) வேடனாகச் சென்றவனே! தலைவனே! பாம்புகள் ஊரும் திருமேனியை உடைய தேனே! வானோர்கள் எல்லாம் தேடும் மலர்ப்பாதனே! வாராய்! நாயேன் நானும் மகிழ்ந்து ஆடவே!



2010-02-17
6)
மாலைமாற்று - 6
------------------------
வாடி யோதி நாயே னாயாதீ
தீயா னாயே நாதி யோடிவா.



பதம் பிரித்து:
வாடி ஓதி நாயேன் ஆய் ஆதீ!
தீ ஆனாயே! நாதி! ஓடி வா.


நாதி - (அண்மை விளி) - காப்பாற்றுவோன் (Protector);
ஆய்தல் - கருதுதல்; தியானித்தல்;


அடியேன் நையும் மனத்தோடு ஓதிக் கருதுகிற ஆதியே! சோதியே! காப்பவனே! விரைந்து வருவாயாக!



2010-02-18
7)
மாலைமாற்று - 7
------------------------
வேதா நீரா பருகுவிட மாதே
தேமா டவிகுரு பராநீ தாவே.



பதம் பிரித்து:
வேதா! நீரா! பருகு விடம் ஆதே?
தேம் ஆடு அவி! குருபரா! நீ தாவே!


நீரன் - கங்கையைத் தரித்தவன்; (அப்பர் தேவாரம் - 5.12.7 - "தீரன் தீத்திரளன் சடைத் தங்கிய நீரன்...");
ஆது - யாது; (சம்பந்தர் தேவாரம் - 2.84.8 - "வலமிகு வாளன் வேலன் ... கீழு மேலு நிகராது மில்லை..");
தேம் - இனிமை;
அவி - ஹவிஸ்;
தாவே - தா; ('' - ஈற்று அசை);


வேதனே! கங்கையைத் தரித்தவனே! பருகிய விடம் என்ன? இனிமை பொருந்திய ஹவிஸ் (போல் ஆயிற்று)! குருபரனே! நீ அருள் தருவாயாக!



2010-02-20
8)
மாலைமாற்று - 8
-----------------------
வாழுமலை யடைவிரை நனிசெரு விராவண வரதா
தார வணவரா விருசெனி நரைவிடை யலைமழுவா.



பதம் பிரித்து:
வாழு[ம்] மலை அடை விரை நனி செரு இராவண வரதா!
தார! அண(வு) அரா இரு செனி, நரை விடை அலை, மழுவா!


நனி - மிகுந்த;
செரு - போர்;
வரதன் - வரம் அளிப்பவன்;
தாரன் - மாலை அணிந்தவன்; (தார் - மாலை);
அணவுதல் - தழுவுதல்;
செனி - சென்னி (இடைக்குறையாக வந்தது);
அலைதல் - திரிதல்;


நீ உறையும் கயிலைமலையை (வீசி எறிவதற்காக) அடைய விரைந்த, மிகுந்த போர் விரும்பும் இராவணனுக்கு (அவனை நசுக்கிப் பின்) வரம் அருளியவனே! மாலை அணிந்தவனே! பின்னுகிற பாம்பு இருக்கும் முடியுடைய, வெள்ளை எருதில் எங்கும் செல்லும், மழுப்படையானே! (போற்றி).



2010-02-15
9)
மாலைமாற்று - 9
----------------------
கேழ லரிநே டடியா நீசனே
னேசநீ யாடிட நேரி லழகே.



பதம் பிரித்து:
கேழல் அரி நே(டு) அடியா! நீசனேன்
நேச! நீ ஆடிட நேர் இல் அழகே.


கேழல் - பன்றி;
நேடுதல் - தேடுதல்;
அடியன் - பாதன்;
நீசனேன் - கடையவன் ஆகிய நான்;
நேசன் - பிரியன்;
நேர் - ஒப்பு;
நேர்தல் - நிகழ்தல்; எதிர்ப்படுதல் (To appear, come to view);


திருமால் பன்றியாய்ச் சென்று தேடிய பாதனே! கடையவனேன் பிரியனே! (நான் விரும்புபவனே / என்னையும் விரும்புபவனே). நீ திருநடம் செய்ய, அது ஒப்பில்லா அழகே!



2010-02-17
10)
மாலைமாற்று - 10
-----------------------
வேறில ரேவழு வகமிகு வாரே
ரேவா குமிக வழுவரே லறிவே.



பதம் பிரித்து:
வே(று) இலரே வழு அக[ம்] மிகுவார்;
ஏரே ஆகு[ம்] மிக அழுவரேல்; அறிவே.


வேறு - சிறப்புடையது (That which is special or distinct);
வழு - குற்றம்;
ஏர் - நன்மை; எழுச்சி; அழகு;


மனத்தில் குற்றம் மிக உடையவர்கள் சிறப்பு இல்லார். ஒருவர் (பக்தியோடு) மிக அழுவாரேயானால் நன்மையே ஆகும் . அதுவே அறிவு.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.21.8 -
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.)



2010-02-17
11)
மாலைமாற்று - 11
------------------------
வேக மாரவா வினைநிலா சூதே
தேசூலா நினைவி வார மாகவே.



பதம் பிரித்து:
வேகம் ஆர் அவா வினை நிலா! சூ(து)
ஏதே? சூலா! நினைவி வாரம் ஆகவே.


வேகம் - வலிமை; கடுமை; விரைவு;
ஆர் - மிகுதல்; பொருந்துதல்;
நிலா - நில்லா; (நிற்றல் - தங்குதல்; எஞ்சுதல்);
நினைவி - நினைக்கச்செய்;
(அப்பர் தேவாரம் - 6.43.1 -
"நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
... நினையாவென் நெஞ்சை நினைவித் தானை")
வாரம் - அன்பு; பக்தி;


சூலபாணியே! என் மனத்தில் (உனக்கு) அன்பு விளையும்படி என்னை நினைக்கச்செய்வாயாக! (அதன்பின்) வலிய ஆசைகளும் வினைகளும் தீர்ந்துவிடும். பின் வஞ்சமும் உண்டோ?



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
குறள் வெண்செந்துறை - இலக்கணம் - பசுபதியாரின் “கவிதை இயற்றிக் கலக்கு:” என்ற நூலிற் காண்பதிலிருந்து:
  • அளவொத்த இரண்டு அடிகள். (ஓர் அடியில் எத்தனை சீர்கள் உள்ளனவோ அத்தனை சீர்கள் அடுத்த அடியிலும் இருக்கும்).
  • எவ்வகைச் சீரும் வரலாம்.
  • சீர்களுக்கிடையே எந்தத் தளையும் இருக்கலாம்.
----------------------------- Some Q&A on some songs of this padhigam --------------------
#4)
காவாரண நாடா வீசா தேனே யாலா
லாயானே தேசா வீடா நாணர வாகா.
பதம் பிரித்து:
கா வாரண[ம்] நாடா ஈசா! தேனே ஆல் ஆல்!
ஆயானே! தேசா! வீடா! நாண் அரவா! கா!


காட்டில் வாழ் யானையை வாகனமாக விரும்பாத ஈசனே! (இடப வாகனன்). (உனக்கு) ஆலகால விஷமும் தேனே! தந்தையே! சோதியே! இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே! பாம்பை அரைநாணாக அணிந்தவனே! (முப்புரம் எரித்த நாளில் வில்லில் நாணாகப் பாம்பைக் கொண்டவனே); காப்பாயாக!



----------- இப்பாடல் குறித்த ஓர் உரையாடல் ---------------
வாசித்தோர்களில் ஒருவர் எழுப்பிய வினா: "இருப்பதைத்தானே குறிப்பிடமுடியும்! இல்லாததையும் குறிப்பிடலாமா?"



என் மறுமாற்றம்: பாடல்களில் சில சமயம் சில விஷயங்கள் குறிப்பினால் உணர்த்தப்பெறுவதுண்டு. இல்லாததையும் குறிப்பிடுவதுண்டு. (உதாரணம்: இறப்பு இல்லாதவனே, மலம் இல்லாதவனே, போன்றவற்றைக் காண்க).



இந்தியா போன்ற நாடுகளில் அரசர்கள் யானையின் மிதே ஏறி வருவார்கள். எல்லா அண்டங்களுக்கும் அரசனான சிவனோ அவ்வாறன்றி ஒரு காளையின் மீது ஏறி வருகிறான். அப்பர் தேவாரத்தில் ஒரு பாடலில் (6.25.1) இப்படிக் கூறுகிறார்: "அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட அயிரா வணமே என் அம்மானே"



மற்றொருவர் அளித்த விளக்கம்: காட்டுயானை எனும்போது பழக்கப்படுத்தாத, கட்டுப்படாத யானை என்ற பொருள் வரும். யானையை ஆன்மீகத்தில் மனத்திற்குக் குறியீடாகச் சொல்வதும் வழக்கம். புலன்களுக்கும் குறியீடாகச் சொல்வது வழக்கம். (திருமந்திரம் - "ஆக மதத்தன ஐந்து களிறுள ...."). ஆகவே தறிகெட்டலையும் காட்டுயானை போன்ற மனத்தை நாடாத ஈசன், கட்டுப்பாடான மனத்தை விரும்பி ஏற்றுக்கொள்வான்.

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment