Thursday, August 20, 2015

01.66 – கச்சி ஏகம்பம்


01.
66
கச்சி ஏகம்பம்



2010-03-28
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்)
"காத்தருள் கச்சி ஏகம்பனே"
------------------------------------
(வஞ்சி விருத்தம் - 'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு)



1)
ஆர்த்திரு வினையெனை ஆரிருள்
சேர்த்திடில் செய்வதென் செப்புவாய்
பூத்திரள் கொடுன்கழல் போற்றினேன்
காத்தருள் கச்சியே கம்பனே.



பதம் பிரித்து:
ஆர்த்(து) இரு வினை எனை ஆர் இருள்
சேர்த்திடில் செய்வ(து) என் செப்புவாய்;
பூத் திரள் கொ(டு) உன் கழல் போற்றினேன்;
காத்(து) அருள் கச்சி ஏகம்பனே.


ஆர்த்தல் - பிணித்தல் (கட்டுதல்); ஒலித்தல்;
ஆர்த்திருவினை - ஆர்த்து இரு வினை - பிணித்திருக்கும் இருவினை;
ஆர்தல் - நிறைதல்;


பிணித்திருக்கும் வினைகள் என்னைப் பேரிருளில் கொண்டுசேர்த்துவிட்டால், நான் என்ன செய்வேன்? கூறுவாய்! பல மலர்கள் கொண்டு உன் திருவடியைத் தொழுதேன். கச்சி ஏகம்பனே! அடியேனைக் காத்து அருள்வாயாக!
('செய்வது என் செப்புவாய்' - "உன் பக்தனாகிய என்னை வினைகள் தாக்கினால், என்னைக் காவாமல் நீ செய்வது என்னவோ? சொல்வாய்" என்றும் பொருள்கொள்ளலாம்).



2)
செய்வினைக் கடலினில் திகைக்கிறேன்
மைவிழி மங்கைம ணாளனே
கொய்ம்மலர் கொடுன்கழல் போற்றினேன்
கைகொடு கச்சியே கம்பனே.



செய்வினை - முன் செய்த வினை;
திகைத்தல் - மயங்குதல்; சோர்தல்;
கொய்ம்மலர் - வினைத்தொகை - கொய்த மலர் - பறித்த மலர்;


முன் செய்த வினைக்கடலினில் மூழ்கித் தவிக்கிறேன். பறித்த மலர்களைக்கொண்டு உன் திருவடியைத் தொழுதேன். பார்வதி மணாளனே! கச்சி ஏகம்பனே! கைகொடுத்து அருள்வாயாக!



3)
அண்டிய வினைகளால் ஆரிடர்
கொண்டிடில் செய்வதென் கூறுவாய்
தொண்டனாய்த் தமிழ்த்தொடை சூட்டினேன்
கண்டருள் கச்சியே கம்பனே.



ஆர் இடர் - மிகுந்த இடர்கள்;
தொடை - மாலை;


என்னை நெருங்கிய வினைகளால் நான் பெரும் துன்பம் கொண்டால், செய்வது என்ன என்று கூறுவாய்! உனக்குப் பக்தன் ஆகிப் பாமாலைகள் அணிவித்தேன். கச்சி ஏகம்பனே! என்னைக் கண்டு இரங்குவாயாக!


4)
உண்ணுதல் உறங்குதல் உறுபிணி
நண்ணுதல் என்றுநான் நலிவனோ
எண்ணுதல் செய்கிறேன் ஏன்றுகொள்
கண்ணுதல் கச்சியே கம்பனே.



உறு பிணி - மிக்க பிணி; பெரும் பிணி;
நண்ணுதல் - அடைதல்;
நலிதல் - அழிதல்; வருந்துதல்;
ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்வாயாக;
கண்ணுதல் - நெற்றிக்கண்;


உண்பது, உறங்குவது, பெரும்பிணிகள் வந்தடைவது, என்றென்றே நான் அழிவேனோ? நெற்றிக்கண்ணுடைய கச்சி ஏகம்பனே! உன்னையே எண்ணுகிறேன்; என்னை ஏற்றுக்கொள்வாயாக!



5)
சதிபுரி புலன்களால் சழக்கனாய்,
விதிவழி நின்றுனை வேண்டிலேன்;
மதியிலேன்; அன்பனாய் வழிபடும்
கதியருள் கச்சியே கம்பனே.



சழக்கன் - தீயவன்;
வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்;
கதி - நிலை;


சதி செய்கிற ஐம்புலன்களால் தீயவனாகி, அதன் விளைவாக முறைப்படி இருந்து உன்னை வேண்டமாட்டேன்; அப்படி அறிவின்றி உள்ளேன்; கச்சி ஏகம்பனே! இத்தகைய நானும் பக்தனாகி உன்னைத் தொழும் கதியை அருள்வாயாக!



6)
வழிப்படா மனத்தினால் வல்வினைச்
சுழிப்பட விரைகிறேன் தூயனே;
விழித்துவேள் எரித்தவா; வெவ்வினை
கழித்தருள் கச்சியே கம்பனே.



வழிப்படுதல் - நேர்படுதல் (To be reformed);
வெவ்வினை - கொடுவினை;
நல்வழியில் செல்லாத மனத்தால், வலிய வினை என்ற சுழியுள் அழுந்தவே நான் விரைகிறேன். தூயவனே! காமனை நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்தவனே! கச்சி ஏகம்பனே! என் கொடிய வினைகளை நீக்கி அருள்வாயாக!



7)
குமிழ்க்கிணை சுகங்களைக் குறியென,
அமிழ்த்திடும் அருவினை பெருக்கினேன்;
தமித்துநான் வாடினேன்; தாயெனக்
கமித்தருள் கச்சியே கம்பனே.



பதம் பிரித்து:
குமிழ்க்(கு) இணை சுகங்களைக் குறி என,
அமிழ்த்திடும் அருவினை பெருக்கினேன்;
தமித்து நான் வாடினேன்; தாய் எனக்
கமித்து அருள் கச்சி ஏகம்பனே.


குமிழ் - நீர்க்குமிழ்;
அமிழ்த்துதல் - ஆழ்த்துதல்; அமுக்குதல்;
அருவினை - நீங்குதற்கு அரிய வினை;
தமித்தல் - தனியாதல் (lonely);
கமித்தல் - க்ஷமித்தல் - பொறுத்தல்; மன்னித்தல்; (endure, forgive, pardon);


நீர்க்குமிழி போன்ற நிலையற்ற சுகங்களைப் பெரிதென எண்ணிச் செயல்பட்டுத், துன்பத்தில் ஆழ்த்தும் தீவினைகளையே பெருக்கினேன். அதனால் ஒரு துணையின்றி நான் வருந்தினேன். கச்சி ஏகம்பனே! தாயைப் போல என் குற்றங்களைப் பொறுத்து அருள்வாயாக.



8)
உரத்தினால் மலையசை அரக்கனும்
உரக்கவோ எனவிரல் ஊன்றினாய்
சரக்கவே அருள்புரி கரப்பிலாக்
கரத்தினாய் கச்சியே கம்பனே.



பதம் பிரித்து:
உரத்தினால் மலை அசை அரக்கனும்
உரக்க "" என விரல் ஊன்றினாய்;
சரக்கவே அருள் புரி; கரப்(பு) இலாக்
கரத்தினாய்; கச்சி ஏகம்பனே.


உரம் - வலிமை;
சரக்க – விரைவாக;
கரப்பு - மறைத்தல்; வஞ்சகம்;


தன் பலத்தினால் கயிலையை எறிய எண்ணி அதை அசைத்த இராவணன், பெருங்குரலோடு ஓ என்று அலறும்படி ஒரு விரலை வைத்தவனே! வஞ்சமின்றி வாரி வழங்கும் கரம் உடையவனே! கச்சி ஏகம்பனே! சீக்கிரம் அருள்புரிவாயாக!



9)
பழவினைப் பற்றினால் பாரினில்
உழல்கிறேன் உய்வதும் எங்ஙனே?
அழலென அன்றுயர் அண்ணலே
கழலருள் கச்சியே கம்பனே.



எங்ஙன் - எங்ஙனம் - எவ்வாறு (How, in what manner);


என் முன்வினைக் கட்டுகளால் உலகில் உழல்கிறேன். நான் உய்வதும் எவ்வாறோ? தீயாக அன்று (திருமால் பிரமன் இவர்கள் இடையே) உயர்ந்த பெருமானே! கச்சி ஏகம்பனே! உன் திருவடியைத் தந்தருள்வாயாக!



10)
புலமிலார் பொய்யலாற் புகல்கிலார்
நலமிலார் புகலிலார் மலமிலான்
அலகிலான் அன்பரை அகல்கிலான்
கலையினான் கச்சியே கம்பனே.



பதம் பிரித்து:
புலம் இலார், பொய் அலால் புகல்கிலார்,
நலம் இலார், புகல் இலார்; மலம் இலான்,
அலகு இலான், அன்பரை அகல்கிலான்,
கலையினான், கச்சி ஏகம்பனே.


புலம் - Knowledge, learning, wisdom; அறிவு.
புகல்தல் - சொல்லுதல்;
புகல் - அடைக்கலம்; சரண்;
மலம் - மும்மலங்கள்;
அலகு - அளவு;
அகலுதல் - நீங்குதல்;
கலை - சாத்திரம்; அறுபத்து நான்கு கலைகள்;


அறிவீனர்கள்; பொய்களையே சொல்பவர்கள்; நன்மை இல்லாதவர்கள்; இவர்கள் ஓர் புகலிடம் இல்லாதவர்கள்.
மும்மலங்களும் இல்லாதவன்; அளவற்றவன்; அடியவர்களை நீங்காதவன்; ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவன்; கச்சி ஏகம்பன்.



11)
இலைமலர் அடியவர் இடஅவர்
மலைவினை நீக்கிவான் வழங்குவான்
தலைமிசைத் தண்புனல் தாங்குவான்
கலைமலி கச்சியே கம்பனே.



பதம் பிரித்து:
இலை மலர் அடியவர் இட, அவர்
மலைவினை நீக்கி, வான் வழங்குவான்;
தலைமிசைத் தண் புனல் தாங்குவான்;
கலை மலி கச்சி ஏகம்பனே.


மலைவு - மயக்கம் (confusion of mind);
மலைவினை - 1) மலை அளவு இருக்கும் வினை; 2) மயக்கத்தை;
மலைத்தல் - பொருதல் / வருத்துதல் என்றுகொண்டு வினைத்தொகையாகவும் பொருள்கொள்ளக்கூடும். (அப்பர் தேவாரம் - 4.88.4 - "உருவினை யூழி முதல்வனை .... பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் திய்யுறையும் ...." - பொருவினை - தாக்கும் வினைகள்);
புனல் - நீர்; ஆறு;
கலை - கல்வி; அறுபத்துநான்கு கலைகள்;
மலிதல் - மிகுதல்;


கல்வி மிகும் காஞ்சியுள் ஏகம்பத்தில் உறையும் சிவபெருமான், தன் முடிமேல் கங்கையைத் தாங்குவான். (வில்வம் முதலிய) இலையும், மலர்களும் இட்டு வணங்கும் அடியவர்களின் அறியாமையையும் மலை போன்ற முன்வினையையும் தீர்த்து, அவர்களுக்கு வானுலக வாழ்வு தந்தருள்வான்.



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment