Wednesday, August 19, 2015

01.60 – பொது - (வருக்க எழுத்தில்)


01.60 –
பொது - (வருக்க எழுத்தில்)



2010-01-16 – 2010-01-23
பொது
வருக்க எழுத்தில் நிருத்தரை வழுத்து
-------------------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தனதனதன தனதனதன தனதனதன தனதன” என்ற சந்தம்);
(பாடலின் யாப்பு அமைப்பைக் கீழே பிற்குறிப்பில் காண்க)



1) – ழகர வருக்கம் --
அடி புகழ் தமிழ் மொழி
-------------------------------
நிழல்திகழ்மழு உழுவையினுரி கமழ்குழலுமை விழைபவன்
அழலுமிழ்விழி தழலனஉரு மழைபொழிசடை மழவிடை
முழவதிர்வெழக் கழல்சுழல்தரக் குழுமியகழு தொடுநடன்
உழைநிகழ்கரன் அழிவிலன்அடி புகழ்தமிழ்மொழி மகிழவே.



(7+7+6+7=27 ழகரம் வரும் பாடல்.
'புகழ் + தமிழ் = புகடமிழ்' என்ற புணர்ச்சியையும் நோக்கின், 26 ழகரம்.
புணர்ச்சி உதாரணங்கள்:
கந்தபுராணம் : திகடசக்கரம் - திகழ் தசக்கரம்;
சம்பந்தர் தேவாரம் - 3.86.10 - "துகடுறு விரிதுகில்....": முகிழ் + தரு = முகிடரு; திகழ் + தரு = திகடரு; இவ்வாறு புணர்வதற்கு விதி வீரசோழியத்துக் காண்க);


பதம் பிரித்து:
நிழல் திகழ் மழு, உழுவையின் உரி, கமழ் குழல் உமை விழைபவன்;
அழல் உமிழ் விழி, தழல் அன உரு, மழை பொழி சடை, மழ விடை,
முழவு அதிர்வு எழக் கழல் சுழல்தரக் குழுமிய கழுதொடு நடன்;
உழை நிகழ் கரன்; அழிவு இலன் அடி புகழ் தமிழ் மொழி, மகிழவே.
நிழல் திகழ் மழு - ஒளி வீசும் மழுவாள்;
உழுவையின் உரி - புலித்தோல்;
கமழ் குழல் உமை விழைபவன் - மணம் கமழும் கூந்தலை உடைய பார்வதியை விரும்புபவன்;
அழல் உமிழ் விழி - தீ உமிழும் நெற்றிக்கண்;
தழல் அன உரு - தீப் போன்ற மேனி;
மழை பொழி சடை - கங்கை பாயும் சடை;
மழ விடை - இளம் காளை வாகனம்;
முழவு அதிர்வு எழக், கழல் சுழல்தரக், குழுமிய கழுதொடு நடன் - முழவுகள் அதிர்ந்து ஒலிக்கப், பாதம் சுழலக், கூடியிருக்கும் பேய்களோடு திருநடம் செய்பவன்;
(திருவாசகம் - திருச்சதகம் - 7 - "முழுவதுங் ....கழுதொடு காட்டிடை நாடக மாடிக்....")
உழை நிகழ் கரன், அழிவு இலன் அடி புகழ் தமிழ் மொழி, மகிழவே - மான் இருக்கும் கரத்தினன்; அழிவில்லாதவன்; அச்சிவபெருமான் திருவடியைப் புகழும் தமிழான தேவாரம், திருவாசகம் முதலிய பாடல்களைக் கூறித் துதிப்பாயாக! இன்புறலாம்.



2) – ரகர வருக்கம் --
வரைவிலி பெயர் உரை
--------------------------
விரிகதிர்ஒளிர் வளர்மதிபுரி படர்சடைநிரை விரைமலர்
வரியரவரு கிரைதரஒரு திரைபொருபெரு நதிபுனை
கரியுரியினர் நரர்சுரர்பர வொளியுருவினர் இடர்புரி
திரிபுரமெரி வரைவிலிபெயர் உரையவர்வரம் அருள்வரே.



(9+9+12+10 = 40 ரகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
விரி கதிர் ஒளிர் வளர் மதி புரி படர் சடை நிரை விரைமலர்
வரி வு அருகு ரைதர ஒரு திரை பொரு பெரு நதி புனை
கரி ரியினர்; நரர் சுரர் பரவு ஒளி ருவினர்; இடர் புரி
திரிபுரம் எரி வரைவிலி பெயர் உரை; வர் வரம் அருள்வரே.


புரிதல் - விரும்புதல்; முறுக்குக்கொள்ளுதல்;
இரைதருதல் - இரைத்தல் - சீறுதல்; / இரைதல் - ஒலித்தல்; (தருதல் - ஒரு துணைவினை - An auxiliary added to verbs);
வரைவிலி - வரை வில்லி (மேருமலையை வில்லாக ஏந்தியவர்);


விரி கதிர் ஒளிர் வளர் மதி புரி படர் சடை நிரை விரை மலர் - விரிகிற கிரணங்கள் ஒளிர்கிற வளர்பிறைச் சந்திரனை விரும்புகின்ற முறுக்கிய படர்ந்த சடையில் வரிசையாக வாச மலர்களும்;
வரி அரவு அருகு இரைதர ஒரு திரை பொரு பெரு நதி புனை - வரிகளையுடைய சீறுகிற பாம்பின் அருகே ஒலிக்கின்ற அலை மோதும் ஒரு பெரிய கங்கை ஆற்றையும் சூடுகிற;
கரி ரியினர் - யானைத்தோலைப் போர்த்திய சிவனார்;
நரர் சுரர் பரவு ஒளி ருவினர் - மனிதர்களும் தேவர்களும் துதிக்கின்ற ஒளி உருவம் உடையவர்;
இடர் புரி திரி புரம் எரி வரைவிலி பெயர் உரை - இன்னல் செய்த முப்புரங்களையும் எரித்த, மலையை வில்லாக ஏந்திய சிவபெருமானார் திருநாமத்தைச் சொல்வாயாக;
வர் வரம் அருள்வரே - அப்பெருமானார் வரங்கள் அருள்வார்;



3) – றகர வருக்கம் --
முறைமுறை தொழு
-------------------------
மறையறைபதி பொறிதெறிவிழி சிறுமறிதரி கரம்ஒரு
பிறைஅறுபதம் அறைவெறிகமழ் நறைசெறிமலர் உறைமுடி
கறைமிடறுமை புறமடையிறை நிகழ்துறைஉறை இறுமுனம்
முறைமுறைதொழு குறையறநிறை வுறவருள்பெற லுறுதியே.



(6+7+7+8=28 றகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
மறை அறை பதி; பொறி தெறி விழி; சிறு மறி தரி கரம்; ஒரு
பிறை, அறுபதம் அறை வெறி கமழ் நறை செறி மலர், உறை முடி;
கறை மிடறு; உமை புறம் அடை இறை நிகழ் துறை, உறை இறு முனம்,
முறைமுறை தொழு; குறை அற, நிறைவு உற, அருள்பெறல் உறுதியே.


அறைதல் - 1) சொல்லுதல் (To speak, utter, declare); 2) ஒலித்தல் (To sound);
மறி - மான்கன்று;
அறுபதம் - வண்டு;
வெறி - வாசனை;
நறை - தேன்;
உறைதல் - தங்குதல்;
புறம் - பக்கம் (Side; part);
நிகழ்தல் - தங்குதல்;
உறை - போர்வை; கூடு; - இங்கே உடம்பு என்ற பொருளில் வந்தது.
இறுதல் - அழிதல்; கெடுதல்; சாதல்;
முறைமுறை - முறைப்படி; விதித்தபடி;
குறை - குற்றம்;
நிறைவு - மகிழ்ச்சி; திருப்தி;


மறை அறை பதி - வேதங்கள் சொல்லும் தலைவனுக்கு;
பொறி தெறி விழி; சிறு மறி தரி கரம் - தீப்பொறி தெறிக்கும் நெற்றிக்கண்; மான்கன்றை ஏந்தும் கரம்;
ஒரு பிறை, அறுபதம் அறை வெறி கமழ் நறை செறி மலர், உறை முடி - பிறைச்சந்திரனும் வண்டுகள் ஒலிக்கும் மணம் கமழும் தேன் நிறைந்த மலர்களும் இருக்கும் திருமுடி;
கறை மிடறு - நீலகண்டம்;
உமை புறம் அடை இறை நிகழ் துறை, உறை இறு முனம், முறைமுறை தொழு - அர்த்தநாரீஸ்வரனான அவன் இருக்கும் துறை எனப்படும் தலங்களை இவ்வுடல் அழியும் முன் முறைப்படித் தொழுவாயாக!
குறை அற, நிறைவு உற, அருள்பெறல் உறுதியே - குறைகள் தீர்ந்து நன்மைகள் நிறைய அருள்பெறுவது நிச்சயமே.



4) – கர வருக்கம் --
அடியாரே சிவன்
----------------------
பவநிலைதரு வவவினைவிடு தவவழிவிழை பவரெவர்
சிவவடிவொடு வரினுமவரை யவனடியவர் இவரென
வுவகையொடியல் வணம்வழிபடு மனமுடையவர் விரைவிடை
யிவரிறைநவன் வரமருள்பவன் உறையுலகினை யடைவரே.



(10+8+7+5=30 வகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
பவநிலை தரு அவ வினை விடு தவ வழி விழைபவர், எவர்
சிவ வடிவொடு வரினும், அவரை அவன் அடியவர் இவர் என
உவகையொடு இயல் வணம் வழிபடு மனம் உடையவர்; விரை விடை
இவர் இறை, நவன், வரம் அருள்பவன் உறை உலகினை அடைவரே.


வணம் - வண்ணம் - இடைக்குறை விகாரம்;
இவர்தல் - ஏறுதல் (mount; climb); விரும்புதல்;
நவன் - புதியவன்;


பவ நிலை தரு அவ வினை விடு தவ வழி விழைபவர் - பிறப்பை அளிக்கும் தீவினைகளை நீக்குகிற தவநெறியை விரும்புபவர்கள்;
எவர் சிவ வடிவொடு வரினும், அவரை அவன் அடியவர் இவர் என - ஒருவர் எவரே ஆயினும் அவர் சிவன் அடியார் கோலத்தில் வந்தால், அவரை அச்சிவபெருமானின் அடியார் இவர் என்று உணர்ந்து;
உவகையொடு இயல் வணம் வழிபடு மனம் உடையவர் - அவரை மகிழ்ச்சியோடு இயலும் வண்ணம் வழிபடுகிற மனத்தை உடையவர்கள் ஆவார்கள்;
விரை விடை இவர் இறை, நவன், வரம் அருள்பவன் உறை உலகினை அடைவரே - அத்தகைய மனம் உடையவர்கள், விரைந்து செல்லும் காளையின் மேல் செல்லும் இறைவனும், என்றும் புதியவனும், வேண்டும் வரம் தருபவனும் ஆன சிவனார் உறையும் சிவலோகத்தை அடைவார்கள்.


(அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக .... தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" - .... திருவேடம் உடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவபிரானைக் காணலாம்)



5) – லகர வருக்கம் --
தலம் வலம் வருதல்
--------------------------
சலசலவென அலைமலிபுனல் ஒலியொடுலவ அயலினில்
இலகுநிலவு நிலவமுடியில் அலர்பலபொலி யிறைதலை
கலனொடுபலி கொளவுலகலை கழலனமலன் அலகிலன்
நிலமிதிலவன் உறைதலம்வலம் வரவிலைநிலை கெடுதலே.



(9+8+8+7=32 லகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
சலசலவென அலைமலி புனல் ஒலியொடு உலவ, அயலினில்
இலகு நிலவு நிலவ, முடியில் அலர் பல பொலி இறை; தலை
கலனொடு பலிகொள உலகு அலை கழலன்; அமலன்; அலகு இலன்;
நிலம் இதில் அவன் உறை தலம் வலம் வர, இலை நிலை கெடுதலே.


கழலனமலன் - கழலன், அமலன்;
அமலன் - மும்மலம் இல்லாதவன்;
இலை - இல்லை;


சலசலவென அலை மலி புனல் ஒலியொடு உலவ - அலை மிகுந்த கங்கைநதி சலசல என்று ஒலிசெய்து அங்கே உலவ;
அயலினில் இலகு நிலவு நிலவ - அருகில் பிரகாசிக்கும் பிறைச்சந்திரன் இருக்க;
முடியில் அலர் பல பொலி இறை - முடிமேல் பல பூக்கள் விளங்குகிற இறைவன்;
தலை - தலைவன்; முதல்;
கலனொடு பலி கொள உலகு அலை கழலன் - பிச்சைப்பாத்திரம் ஏந்திப், பிச்சை ஏற்க உலகில் திரிகிற திருவடியை உடையவன்; (தலைகலனொடு - தலைக்கலனொடு என்பது யாப்பு நோக்கி 'க்' மிகாது வந்தது என்று கொண்டால், "பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்தி”)
அமலன் அலகு இலன் - தூயவன்; அளவில்லாதவன்;
நிலம் இதில் அவன் உறை தலம் வலம் வர, இலை நிலை கெடுதலே - இவ்வுலகில் அவன் எழுந்தருளியிருக்கும் தலங்களை வலம்செய்பவர்கள் என்றும் துன்பமின்றி இருப்பார்கள்;



6) – ளகர வருக்கம் --
தளிகளை அடை
------------------------
நெளியரவொளிர் வளரிளமதி குளிர்நதிமுடி உளனொரு
துளிவிடமிளிர் களன்எளியவன் அளிபவருளன் நிலமெரி
வளிவெளிபுனல் அவனருளொளி களிறதனதள் அணியிறை
தளிகளையடை களிகளைமிகும் மருள்வெருளறும் உறுதியே.



(6+6+6+6=24 ளகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
நெளி அரவு, ஒளிர் வளர் இள மதி, குளிர் நதி முடி உளன்; ஒரு
துளி விடம் மிளிர் களன்; எளியவன்; அளிபவர் உளன்; நிலம் எரி
வளி வெளி புனல் அவன்; அருள் ஒளி; களிறு அதன் அதள் அணி இறை
தளிகளை அடை; களி களை மிகும்; மருள் வெருள் அறும்; உறுதியே.


உளன் - 1) உள்ளவன்; 2) உள்ளத்தில் உறைபவன்;
களம் - கழுத்து;
அளிதல் - கனிதல்; குழைதல்;
வளி - காற்று;
வெளி - ஆகாசம்;
அதள் - தோல்;
தளி - கோயில்;
களி - மகிழ்ச்சி;
களை - அழகு;
மருள் - மயக்கம்; அறியாமை;
வெருள் - பயம்; மனக்கலக்கம்;


நெளி அரவு, ஒளிர் வளர் இள மதி, குளிர் நதி முடி உளன் - நெளியும் பாம்பும் பிரகாசிக்கும் வளர்பிறைச்சந்திரனும் குளிர்ந்த கங்கை நதியும் முடியில் கொண்டவன்;
ஒரு துளி விடம் மிளிர் களன் - ஆலகால விஷம் மிளிர்கிற கழுத்தை உடையவன்; (1. எங்கும் பரவிய விடத்தைத் திரட்டி ஒரு துளி ஆக்கி அதைக் கண்டத்தில் இட்டவன்; 2. துளி - விடம் என்று ஒருபொருட்பன்மொழியாகவும் கொள்ளலாம்);
எளியவன்; அளிபவர் உளன் - பக்தர்களால் எளிதில் பெறப்படுபவன்; குழையும் பக்தர்கள் உள்ளத்தில் இருப்பவன்;
நிலம் எரி வளி வெளி புனல் அவன்; அருள் ஒளி - ஐம்பூதங்களாய் வருபவன்; அருள் ஒளியாக இருப்பவன்;
களிறு அதன் அதள் அணி இறை தளிகளை அடை - யானைத்தோலைப் போர்த்திய இறைவனான சிவபெருமானின் கோயில்களைச் சென்று அடைவாயாக;
களி களை மிகும்; மருள் வெருள் அறும்; உறுதியே - மகிழ்ச்சியும் அழகும் பெருகும்; அறியாமையும் பயமும் விலகும்; இது நிச்சயமே.



7) – ணகர வருக்கம் --
பிணைஉமைதுணை சரணமே
--------------------------------------
முரணரணெரி கணையிணைகரன் இருணிறமணி மிடறினன்
திரணறுமலர் பணிதுணிமதி சுருணிகழ்சடை அணியிறை
மரணமுமிலன் இணையிலன்அரு ணெறிதணலன வணன்அணி
சரணிணைதொழ அணைபவர்புணை பிணையுமைதுணை சரணமே.



(6+5+6+7=24 ணகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
முரண் அரண் எரி கணை இணை கரன்; இருள் நிற மணி மிடறினன்;
திரள் நறு மலர், பணி, துணி மதி, சுருள் நிகழ் சடை அணி இறை;
மரணமும் இலன்; இணை இலன்; அருள் நெறி; தணல் அன வணன்; அணி
சரண் இணை தொழ அணைபவர் புணை; பிணை உமை துணை சரணமே.


முரண்-தல் (முரண்டல்)- பகைத்தல்;
அரண் - கோட்டை; மதில்;
இணை - 1) இணைதல் (சேர்தல்); 2) ஒப்பு; 3) இரட்டை (pair, couple);
மிடறு - கழுத்து;
பணி - பாம்பு;
அணி - 1) அணிதல்; சூடுதல்; 2) அழகு;
தணல் - நெருப்பு;
அன வணன் - அன்ன வண்ணன் - போன்ற நிறம் உடையவன்;
சரண் - 1) பாதம்; 2) அடைக்கலம்;
புணை - தெப்பம்; கப்பல்;
பிணை - 1) பிணைதல் - சேர்தல்; 2) பெண்மான்;


(இலக்கணக் குறிப்பு : ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:
154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும் (அல்வழி வேற்றுமை இரண்டினும்), லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.
155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)


முரண் அரண் எரி கணை இணை கரன் - பகைத்த முப்புரங்களையும் எரித்த அம்பு பொருந்திய கையினன்;
இருள் நிற மணி மிடறினன் - கரிய மணிபோல் விஷம் ஒளிரும் கழுத்தினன்;
திரள் நறு மலர், பணி, துணி மதி, சுருள் நிகழ் சடை அணி இறை - மணம்வீசும் மலர்த்தொகுதியும், பாம்பும், பிறைச்சந்திரனும் சுருண்ட சடையில் அணிகிற இறைவன்;
மரணமும் இலன்; இணை இலன் - இறப்பும் இல்லாதவன்; எவ்வித ஒப்பும் இல்லாதவன்;
அருள் நெறி; தணல் அன வணன் - அருள்நெறியாக இருப்பவன்; நெருப்புப்போன்ற நிறம் உள்ளவன்;
அணி சரண் இணை தொழ அணைபவர் புணை - அவன் அழகிய இரு திருவடிகளைத் தொழ அடைபவர்களுக்கு (வினைக்கடலைக் கடக்கும்) தெப்பம் ஆவான்;
பிணை உமை துணை சரணமே - பிணைந்திருக்குக்கும் பார்வதியின் கணவன் (நம்) அடைக்கலமே.



8) – னகர வருக்கம் --
அடிதனை உன மறவல்
------------------------------
முனமவுணனை நெரிவிரலினன் இனிதருளினன் நனிதொழ
மினலனசடை அதினிலவின மலர்நனைநதி புனையிறை
புனலனனிலம் வளிவெளியவன் அனையினுநலன் நினைபவர்
மனமுறைபவன் நரைவிடையவன் அடிதனையுன மறவலே.



(8+6+8+5=27 னகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
முனம் அவுணனை நெரி விரலினன், இனிது அருளினன் நனி தொழ;
மினல் அன சடை அதில் நிலவு, இன மலர், நனை நதி புனை இறை;
புனல் அனல் நிலம் வளி வெளி அவன்; அனையினும் நலன்; நினைபவர்
மனம் உறைபவன்; நரை விடையவன் அடிதனை உன மறவலே.


அவுணன் - அரக்கன்; இங்கே, இராவணன்;
நனி - மிகவும்;
முனம், மினல், அன, அனை, நலன், உன - முன்னம், மின்னல், அன்ன, அன்னை, நல்லன், உன்ன - இடைக்குறை விகாரம்;
உன்னுதல் - நினைத்தல்;
நரை - வெண்மை;
மறவல் - மறவாதே என்ற ஏவல் வினை; (சம்பந்தர் தேவாரம் - 1.90.8 - "நறவ மார்பொழிற் , புறவ நற்பதி இறைவன் நாமமே , மறவல் நெஞ்சமே.)"


முனம் அவுணனை நெரி விரலினன், இனிது அருளினன் நனி தொழ - முன்பு இராவணனைக் கயிலையின்கீழ் விரலினால் நெரித்தவன்; பின் அவன் மிகவும் தொழவும், இனிது அருள்புரிந்தவன்;
மினல் அன சடை அதில் நிலவு, இன மலர், நனை நதி புனை இறை - மின்னல் போன்ற சடையில் சந்திரனையும், நல்ல மலர்களையும், நனைக்கும் கங்கையையும் அணிகிற இறைவன்;
புனல் அனல் நிலம் வளி வெளி அவன் - நீர், நெருப்பு, நிலம், காற்று, விண் என ஐம்பூதங்களாக உள்ளவன்;
அனையினும் நலன்; நினைபவர் மனம் உறைபவன் - தாயினும் நல்லவன்; தியானிப்பவர் உள்ளத்தில் தங்கியிருப்பவன்;
நரை விடையவன் அடிதனை உன மறவலே - வெள்ளை எருதில் வரும் சிவபெருமானின் திருவடியைச் சிந்திக்க மறவாதே.



9) – யகர வருக்கம் --
உரை இறை பெயர்
--------------------------
வயதுமுயரும் எயிறுமறையு மனையுமயலும் அழவுயிர்
தயையிலெமனின் வயமடையுமுன் உயநினையுரை யிறைபெயர்
கயல்விழியுமை யிணையுடலுடை யவன்நதியலை முடியினன்
அயனரியிடை யெரியெனவரும் அரியனபயம் அருள்வனே.



(7+8+7+6=28 யகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
வயதும் உயரும்; எயிறும் மறையும்; மனையும் அயலும் அழ, உயிர்
தயை இல் எமனின் வயம் அடையும் முன் உய நினை; உரை இறை பெயர்;
கயல் விழி உமை இணை உடல் உடையவன்; நதி அலை முடியினன்;
அயன் அரி இடை எரி என வரும் அரியன்; அபயம் அருள்வனே.


எயிறு - பல்;
மனையும் அயலும் - மனைவியும் அருகில் இருப்பவர்களும்;
தயை இல் எமன் - கருணை இல்லாத காலன்;
வயம் - வசம் (State of subjugation);
உய - உய்ய; (இடைக்குறை விகாரம்)
அரியன் - அரியவன் - அடைய இயலாதவன்;


வயதும் உயரும்; எயிறும் மறையும் - வயது கூடி முதுமை வந்து பல்லும் விழுந்துவிடும்;
மனையும் அயலும் அழ, உயிர் தயை இல் எமனின் வயம் அடையும் முன் உய நினை - குடும்பமும் சுற்றியுள்ளோரும் அழக், கருணையில்லாத எமன் வந்து உயிரைப் பற்றிக்கொள்ளும் முன் உய்வதற்கு எண்ணுவாயாக;
உரை இறை பெயர் - ஈசன் திருப்பெயரைச் சொல்;
கயல் விழி உமை இணை உடல் உடையவன் - கயல் போன்ற கண்ணுடைய பார்வதி ஒரு கூறாகத் திகழும் திருமேனி உடையவன்;
நதி அலை முடியினன் - கங்கை தங்கும் திருமுடி உடையவன்;
அயன் அரி இடை எரி என வரும் அரியன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே அவர்களால் அடைதற்கு அரிய சோதியாக உயர்ந்தவன்;
அபயம் அருள்வனே - அப்பெருமான் நமக்கு அபயம் அளிப்பான்.



10) – மகர வருக்கம் --
அடிமலர் மனமிடு
-------------------------
மதமதுமிக மொழியிதமிலர் மயலுறுமதி அதமரை
உதறுமினற முரைதலமென வடமரமமர் எமதிறை
முதலிறுதியும் அவன்அடுமெம னையுமுதைபதம் உடையவன்
மதனையுமெரி அரனடிமலர் மனமிடவரும் அமைதியே.



(8+7+6+7=28 மகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
மதம் அது மிக மொழி இதம் இலர், மயல் உறு மதி அதமரை
உதறுமின்; அறம் உரை தலம் என வட மரம் அமர் எமது இறை;
முதல் இறுதியும் அவன்; அடும் எமனையும் உதை பதம் உடையவன்;
மதனையும் எரி அரன் அடி மலர் மனம் இட, வரும் அமைதியே.


மதம் - செருக்கு;
இதம் - நன்மை;
வட மரம் - ஆல மரம்;


மதம் அது மிக மொழி இதம் இலர் - ஆணவம் மிகப் பேசுகிற, நன்மை இல்லாதவர்கள்;
மயல் உறு மதி அதமரை உதறுமின் - அறியாமையால் மயங்குகிற மதியை உடைய கீழோரை விலக்குங்கள்;
அறம் உரை தலம் என வட மரம் அமர் எமது இறை - அறத்தை உரைக்கக் கல்லால மரத்தின்கீழ் அமரும் எம் தட்சிணாமூர்த்தி;
முதல் இறுதியும் அவன் - அனைத்திற்கும் முதலிலும் முடிவிலும் இருப்பவன்;
அடும் எமனையும் உதை பதம் உடையவன் - கொல்லும் எமனையும் உதைத்த திருவடி உடையவன்;
மதனையும் எரி அரன் அடி மலர் மனம் இட, வரும் அமைதியே - காமனையும் எரித்த சிவபெருமானின் திருவடிமலரை மனத்தில் கொண்டால், நமக்கு அமைதி வரும்.



11) -- டகரம் --
அடிமலர் பிடி
-------------------------
வெடிபடுதுடி யொடுநடமிடு பவனடல்விடை யுடையிறை
கடிவிடுதொடை படர்சடையணி அரனடுவிட மிடறனொர்
கொடியிடைமட அனநடையுமை யிடமுடனுறை யுடலினன்
அடிமலர்பிடி இடர்மிடிசெடி வினைகெடுநொடி யளவிலே.



(9+8+7+7=31 டகரம் வரும் பாடல்.)


பதம் பிரித்து:
வெடிபடு துடியொடு நடம் இடுபவன்; அடல் விடையுடை இறை;
கடிவிடு தொடை படர் சடை அணி அரன்; அடு விட மிடறன்; ஒர்
கொடி இடை மட அன நடை உமை இடம் உடன் உறை உடலினன்;
அடி மலர் பிடி; இடர், மிடி, செடி வினை, கெடும் நொடி அளவிலே.


ஒர் - ஓர் என்பதன் குறுக்கம்;
துடி - உடுக்கை;
அடல் - வலிமை; வெற்றி;
கடி - வாசனை;
தொடை - பூமாலை;
மிடி - வறுமை;
செடி - பாவம்; தீமை;


வெடிபடு துடியொடு நடம் இடுபவன் - வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கை ஒலிக்கத் திருநடம் செய்பவன்;
அடல் விடையுடை இறை - வலிய/வெற்றியையுடைய காளையை வாகனமாக உடைய இறைவன்;
கடி விடு தொடை படர் சடை அணி அரன் - மணம் வீசும் மாலையைப் படரும் சடையில் அணிகிற சிவன்;
அடு விட மிடறன் - கொல்லும் விஷம் தங்கும் கழுத்தை உடையவன்;
ஒர் கொடி இடை மட அன நடை உமை இடம் உடன் உறை உடலினன் - ஒரு கொடி போன்ற இடையை உடைய, இள அன்னம் போன்ற நடையை உடைய, பார்வதியைத் தன் திருமேனியில் இடப்புறம் வைத்தவன்;
அடி மலர் பிடி; இடர், மிடி, செடி வினை, கெடும் நொடி அளவிலே - அவன் பாதமலரைப் பற்றுவாயாக! இடர்களும், வறுமையும், தீவினையும் கணப்பொழுதில் இல்லாமல் ஒழிந்துவிடும்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • சந்தக் கலிவிருத்தம் - “தனதனதன தனதனதன தனதனதன தனதன” என்ற சந்தம்;
  • முடுகு ஓசை பயிலும் பாடல்கள். (புணர்ச்சியால் சீர் ஈற்றில் ஒரோவழி வல்லொற்று மிகக்கூடும்);
  • இப்பதிகத்தில் பல பாடல்களை வண்ணவிருத்தம் என்றும் கருதலாம்.
  • பாடலின் முடிவில் ''காரம் அமையும்.
  • ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு வருக்கவெழுத்து மிகுந்து வரும்.
    • (வருக்க எழுத்து என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரெழுத்துகளும் கூடி வரும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் குறிப்பதாகும். உதாரணம்: வகர வருக்கம் - , வா, வி, வீ, வு, வூ,,,,வோ, வௌ)
  • புணர்ச்சியில் தோன்றும் எழுத்து மாற்றங்களையும், உடம்படுமெய்களையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
  • ஒவ்வொரு பாடலிலும் எச்சொல்லும் ஒரு பொருளில் ஒரு முறை மட்டுமே வருமாறு அமைந்த பாடல்கள்.

-------

No comments:

Post a Comment