Thursday, August 20, 2015

01.68 – பரங்குன்றம் - (திருப்பரங்குன்றம்)


01.68 –
பரங்குன்றம் - (திருப்பரங்குன்றம்)



2010-05-02
திருப்பரங்குன்றம்
---------------------
(திருவிருக்குக்குறள் அமைப்பில் - “மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு - வஞ்சித்துறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.6 - “மொய்யார் முதுகுன்றில்”)



1)
மெலியும் மனமேநீ
பலிதேர் பரங்குன்றன்
கலிதீர் கழல்பாடிப்
பொலிவாய் புவிமீதே.



மெலிதல் - வருந்துதல்;
பலி தேர் - பிச்சை ஏற்கும்;
கலி தீர் கழல் - துன்பத்தைத் தீர்க்கும் திருவடி;



2)
தரியாத் துயர்தீரத்
தரிநீ மடநெஞ்சே
நரியோர் பரியாக்கிப்
பரிவான் பரங்குன்றே.



தரித்தல் - பொறுத்தல்; மனத்தில் எப்பொழுதும் எண்ணுதல்;
தரியாத் துயர் - தாங்கமுடியாத துயரம்;
தரி நீ மட நெஞ்சே - பேதைமனமே, நீ எண்ணுவாயாக;
ர் - ஒரு; ஒப்பு இல்லாத;
பரி - குதிரை;
பரிவான் - இரங்குபவன்;



தாங்கொணாத துயர்கள் எல்லாம் நீங்க, மனமே, நரியைக் குதிரையாக்கி அருளும் சிவபெருமானின் திருப்பரங்குன்றத்தை நீ எண்ணுவாயாக!



3)
வரையில் வினைதீர
விரைவில் அடைநெஞ்சே
பிரமன் சிரமேந்தும்
பரமன் பரங்குன்றே.



வரை இல் - அளவற்ற;



4)
எண்ணாய் மனமேநீ
கண்சேர் நுதலீசன்
திண்போர் விடையேறும்
பண்பன் பரங்குன்றே.



எண்ணாய் - எண்ணுவாயாக;
நுதல் - நெற்றி;
திண் போர் விடை - திடமான, போர்க்குரிய இடபம்;



5)
கதியைப் பெறச்சேர்வாய்
நதிபாய் சடைமீது
மதியைப் புனையீசன்
பதியாம் பரங்குன்றே.



கதி - நற்கதி;
பதி - தலம்;



6)
பிணிதீர் வழிவேண்டில்
நணிநீ தொழுநெஞ்சே
அணியாய் அடியார்கள்
பணியும் பரங்குன்றே.



நணி - நண்ணி - அடைந்து;


பிணிகள் தீரும் வழி வேண்டும் என்றால், மனமே, திரளாகிப் பக்தர்கள் வணங்கும் திருப்பரங்குன்றத்தை அடைந்து நீ தொழுவாயாக.



7)
விரைவில் வினைதீர
உரைசெய் மடநெஞ்சே
விரவும் அடியார்கள்
பரவும் பரங்குன்றே.



உரைசெய் - சொல்லு;
விரவுதல் - கலத்தல்; சேர்தல்;
பரவுதல் - துதித்தல்;



8)
அலைசேர் சடையானின்
மலையை அசைத்தானை
அலற நெரித்தானூர்
நலமார் பரங்குன்றே.



மலையை அசைத்தானை - கயிலையை அசைத்த இராவணனை;
நலம் ஆர் பரங்குன்றே - நன்மை பொருந்திய திருப்பரங்குன்றம்;



9)
ஏதம் அவைதீர
கீதம் இசைத்தேத்தாய்
வேதன் அரிநேடு
பாதன் பரங்குன்றே.



ஏதம் - துன்பம்;
வேதன் அரி - பிரமனும் திருமாலும்;
நேடுதல் - தேடுதல்;


பிரமனும் திருமாலும் தேடிய பாதத்தையுடைய ஈசனின் திருப்பரங்குன்றத்தை, உன் துன்பங்கள் எல்லாம் தீரக், கீதங்கள் பாடித் துதிப்பாயாக!



10)
கேடே உரைகீழோர்
மாடே அடையாதே;
வீடே பெறநாளும்
பாடாய் பரங்குன்றே.



மாடு - பக்கம்;
பாடாய் - பாடுவாயாக;


தீயவே சொல்லித் திரியும் கீழோர்கள் பக்கமே போகாதே; நற்கதி அடையத் தினந்தோறும் சிவனாரின் திருப்பரங்குன்றத்தைப் பாடுவாயாக.



11)
நங்கை உமையாள்ஓர்
பங்கன் பரங்குன்றை
நங்கை குவித்தேத்தப்
பொங்கு மகிழ்வாமே.



நங்கை - 1) பெண்ணில் சிறந்தவள்; 2) நம் கை;


உமையைத் தன் திருமேனியில் ஒரு பங்காகக் கொண்ட சிவன் உறையும் திருப்பரங்குன்றத்தை நம் கைகளைக் குவித்துத் துதித்தால், என்றும் இன்பம் பொங்கும்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • தேவாரத்தில் உள்ள திருவிருக்குக்குறள் அமைப்பை ஒட்டியது.
  • தமிழ் யாப்பிலக்கணத்தில் "வஞ்சித்துறை";
  • இப்பதிகத்தில் "மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு பயில்கின்றது.



2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
  • நான்கு அடிகள்; ஒவ்வோர் அடியிலும் இரண்டு சீர்கள் - (குறளடி நான்கு);
  • எவ்விதச் வாய்பாட்டிலும் இருக்கலாம். (வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்);
  • சம்பந்தர் தேவாரம் - 1.93.6 -
மொய்யார் முதுகுன்றில்
ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச்
செய்யாள் அணியாளே”.



3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html

------- --------

No comments:

Post a Comment