Wednesday, August 12, 2015

01.38 – பொது - (சிவனைப் பரவு நெஞ்சே)


01.
38
பொது - (சிவனைப் பரவு நெஞ்சே)



2008-09-27
பொது
"சிவனைப் பரவு நெஞ்சே"
---------------------------------
(வெண்டளை அமைந்த கட்டளைக் கலிவிருத்தம் - "கருவிளம் தேமா கருவிளம் தேமா" என்ற வாய்பாடு.
கட்டளை அடிகள். அடிக்குப் 12 எழுத்துகள்.
திருமந்திரம் - அடிக்குப் 12 எழுத்துகள் கொண்டு, வெண்டளையால் அமைந்த பாடல்கள்)



1)
அரகர என்னும் அடியரைக் கொல்ல
விரைகிற காலன் விழவுதை செய்த
விரைகமழ் பாத மரைதனை நாளும்
பரவிடத் தீரும் பயம்மட நெஞ்சே.



* மார்க்கண்டேயர்க்கு அருளிய வரலாறு.
விரைகிற காலன் - விரைந்த காலன்; (இலக்கணக் குறிப்பு - காலவழுவமைதி);
விரை கமழ் பாத மரைதனை - மணம் கமழும் பாத தாமரையை; (மரை - தாமரை - முதற்குறை விகாரம்);
நாளும் - தினந்தோறும்;
பரவுதல் - துதித்தல்; புகழ்தல்;


(திருமந்திரம் - நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் - பாடல் 3 :
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.)



2)
சிவனடிப் பூசை சிதைக்கிற தந்தை
அவனடி வெட்டும் அடியவர் செய்கை
தவமெனக் கொண்டு தயைபுரிந் தானை,
உவமையில் லானை உரைமட நெஞ்சே.



* சண்டேசுர நாயனார் வரலாற்றைச் சுட்டியது
தயை புரிந்தான் - அருள்செய்தவன்;
உவமை இல்லான் - ஒப்பில்லாதவன்;
உரைத்தல் - சொல்லுதல்;



3)
அடிதொழும் தேவர் அருளென வேண்டக்
கொடியவி டத்தைக் குளிரமு தாயுண்
கடிவிடை ஏறும் கனல்விழி யானை
நொடிஅள வேனும் நுவல்மட நெஞ்சே.



மிடறு - கழுத்து;
குளிர் அமுதாய் உண் - குளிர்ச்சி பொருந்திய அமுதாக உண்ட;
கடி விடை - விரைந்து செல்லக்கூடியதும், அடியவர்களுக்குக் காவலாக உள்ளதுமான இடபம்; (கடி - விரைவு; காவல்)
(அப்பர் தேவாரம் - 4.2.1 - “...அண்ணல் அரண்முரண் ஏறும்..." - தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் காளையும்);
கனல் விழியான் - தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவன்;
நொடி அளவேனும் நுவல் - கணப்பொழுதாவது சொல்;
(அப்பர் தேவாரம் - 6.31.10 - "புலன்கள்ஐந்தால் .... நெஞ்சே .. நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே"



4)
கரியமி டற்றன் கழல்தொழு வோர்க்காத்
திரிஅரண் மூன்றும் திகுதிகு வென்றே
எரிந்திடு மாறு சிரித்தவன் தன்னைப்
பரிவொடு நீயும் பணிந்திடு நெஞ்சே.



கரிய மிடற்றன் - நீலகண்டன்;
கழல் தொழுவோர்க்கா - திருவடியைத் தொழுத தேவர்களுக்காக;
திரி அரண் மூன்று - விண்ணில் திரிந்த முப்புரங்கள்;
பரிவு - அன்பு; பக்தி;



5)
மலரெனக் கண்ணை மலரடி இட்ட
உலகினை உண்டாற்(கு) உகந்தருள் செய்த
மலைமகள் கோனை, மதியணி கின்ற
தலைவனைப் போற்றித் தளையறு நெஞ்சே.



* ஆயிரம் பூவில் ஒரு பூக் குறையத், தன் கண்ணையே பூவாக இட்டு அர்ச்சித்த திருமாலுக்குச் சக்கரம் அருளிய வரலாற்றைச் சுட்டியது
உலகினை உண்டான் - திருமால்;
மலைமகள் கோன் - பார்வதி நாயகன்;
தளை அறுதல் - வினைக்கட்டு நீங்குதல்;


(திருவாசகம் - திருத்தோணோக்கம் - 15
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்(து)அரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற்(கு) அருளியவா(று)
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.).


6)
இருடிகள் ஏவும் கருமலை போன்ற
பெருமத ஆனை உரிதனைப் போர்த்தான்,
அருமறை போற்றும் பொருளென நின்றான்
திருவடி தன்னைத் தினம்நினை நெஞ்சே.



இருடிகள் - தாருகாவனத்து ரிஷிகள்;
உரி தனை - உரி தன்னை - தோலை;
போர்த்தான், நின்றான் - போர்த்தவன், நின்றவன்;



7)
அமரரி றைஞ்ச அனல்விழி மூலம்
குமரனைத் தந்தார், உமையவள் தன்னைத்
தமதொரு கூறு தரித்திடும் நாதர்,
விமலரின் தாளை விரும்பிடு நெஞ்சே.



அமரர் - தேவர்கள்;
குமரனைத் தந்தார் - முருகனைத் தந்தவர்;
அனல்விழி - நெற்றிக்கண்;
கூறு - பாகம்;
தரித்தல் - தாங்குதல்;
(அப்பர் தேவாரம் - 6.66.2 - "உரித்தானை மதவேழம் ... உமையோர் பாகம் தரித்தானை ...")



8)
இலங்கைமன் ஆட்டும் மலைமிசை ஈசன்
மலர்விரல் வைத்துப் புலம்பிட வைத்தான்;
பலபுகழ் பாடிப் பணியவும் வாணாள்
நலமிகத் தந்தான்; நரைவிடை யானே.



இலங்கை மன் - இலங்கைக்கு அரசன் - இராவணன்;
மலைமிசை - கயிலாய மலையின் மீது;
மலர்விரல் - மலர் போன்ற விரல்;
வாணாள் - வாள் நாள் / வாழ் நாள்;
(கயிலையின் அடியில் நசுக்கப்பட்டுப் பின் பல காலம் அழுது தொழுத இராவணனுக்குச் சிவபெருமான் சந்திரஹாசம் என்ற வாளும் நீண்ட ஆயுளும் அளித்தார்).
நரை விடையான் - வெள்ளை எருதை வாகனமாக உடைய சிவபெருமான்;

9)
மலரவன் மாயோன் பறந்(து)அகழ்ந்(து) அன்று
மலரடி யோடு மணிமுடி காணார்;
அலைபுனல் சூடும் அமலனைப் போற்றி
நிலைபெற இன்றே நினைத்திடு நெஞ்சே.



மலரவன் - தாமரை மலரில் உறையும் பிரமன்;
மாயோன் - திருமால்;
அமலன் - மலமற்றவன்;
நிலைபெறுதல் - நற்கதி அடைதல்;



10)
மறைமொழி காட்டும் அறவழி விட்டுப்
புறவழி தன்னில் புகுமெனச் சொல்வோர்
புறனுரை தள்ளிப், புனற்சடை கொண்ட
இறைவனை எண்ணி இருப்பவர்க் கின்பே.



தள்ளுதல் - அங்கீகரியாதிருத்தல் (to reject, disapprove); நிராகரித்தல் (to refute, confute);


வேதங்கள் காட்டும் அறத்தின் பாதையைக் கைவிட்டுப் புறச்சமயங்களில் சேர்வீர் என்று சொல்வோர் கூறும் பொய்ம்மொழிகளை நிராகரித்துக், கங்கையைச் சடையில் உடைய சிவபெருமானைத் தியானித்து வாழ்பவர்களுக்கு இன்பமே.



11)
வருதினம் எல்லாம் மகிழ்ந்திடச் சொல்லாய்
இருளினை நீக்கி இருவினை போக்கி
அருளிடும் ஈசன் அடியவர் நேசன்
திருவெழுத் தஞ்சைத் தினம்தினம் நெஞ்சே.



இருமை - 1) பெருமை; கருமை; 2) இரண்டு. (இருவினை - பாவபுண்ணியங்கள்; வல்வினை);


அறியாமையைப் போக்கி, வல்வினையை அழித்து, ஈசன் அருள்செய்வான். அவன் அடியார்க்கு அன்பு உடையவன். நெஞ்சே! இனி வரும் நாள் எல்லாம் இன்புற்றிடத் தினம்தோறும் அவனுடைய திருவைந்தெழுத்தைச் சொல்வாயாக.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment