Friday, August 21, 2015

01.78 – ஆனைக்கா - (திருவானைக்கா)


01.78 –
ஆனைக்கா - (திருவானைக்கா)



2010-08-04
திருவானைக்கா
-------------------
(கலிவிருத்தம் - 'மா மா மா கூவிளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")



1)
மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
இருளை நீங்க எய்து நெஞ்சமே
ஒருசி லந்திக் குலகை ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.



* கோச்செங்கணான் வரலாற்றைச் சுட்டியது. தலவரலாற்றுச் சுருக்கத்தைப் பிற்குறிப்பிற் காண்க.
மருள் - மயக்கம் (Bewilderment of mind, confusion);



2)
விளித்துக் காலன் பாசம் வீசுமுன்
களிக்க எண்ணில் கருது நெஞ்சமே
களிற்றின் அன்பைக் கண்டு நற்பதம்
அளித்த அண்ணல் ஆனைக் காவையே.



("களிக்க எண்ணில், காலன் விளித்துப் பாசம் வீசுமுன் கருது நெஞ்சமே" என்று பொருள் கொள்க).
* யானைக்கு அருளியதைச் சுட்டியது. தலவரலாற்றுச் சுருக்கத்தைப் பிற்குறிப்பிற் காண்க.



3)
துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.



தன்பத்தர்க்கு - தன் பத்தர்க்கு; (பத்தர் - பக்தர்);
அன்பத்தனுறை - அன்பு அத்தன் உறை;
அத்தன் - தந்தை;


(அப்பர் தேவாரம் - 5.31.6 -
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா ண்ணலே. )



4)
நம்மை வினைகள் நாடி எய்துமுன்
செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
அம்மை யப்பன் ஆனைக் காவையே.



இம்மை அம்மை - இம்மை மறுமை;



5)
சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
அழலார் விழியன் ஆனைக் காவையே.



சுழல் ஆர் வினை - சுழல் பொருந்திய வினை / சுழல் மிக்க வினை;
தோய்தல் - முழுகுதல்;
நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
அழல் ஆர் விழியன் - தீ உமிழும் கண்ணை உடையவன்;


நெஞ்சே! வினைச்சுழலில் முழுகித் துன்பமுற்று அழுவது ஏன்? இன்புற வேண்டில், ஒளிவீசும் மழுவை ஏந்தியவனும், திருநீறு பூசியவனும், தீ உமிழும் கண்ணை நெற்றியில் உடையவனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவைச் சென்று அடைவாயாக.



6)
அலையும் நிலையும் அழியும்; வல்வினை
தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
கலையும் ஏந்தி கழலைக் காவிரி
அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.



கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;
(கலையும் ஏந்தி - 'கலையும்' என்றது எச்சவும்மை. சூலம், மழு, முதலியவற்றையும் சிவன் ஏந்துவது உணர்த்தப்பெற்றது);


நெஞ்சே! கையில் மானையும் ஏந்தும் சிவபெருமானின் திருவடியைக் காவிரி தன் அலைகளால் வழிபடும் திருவானைக்காவிற்குச் சென்று அப்பெருமானை நீயும் தொழுவாயாக! அவ்வாறு செய்தால், இப்படி அலைந்து வருந்தும் நிலையும் நீங்கும்; அதற்குக் காரணமான வல்வினைகளும் அழியும்;



7)
ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
ஆறு சூடி ஆனைக் காவையே.



நெஞ்சே! கேடு விளைக்கும் வினைகள் எல்லாம் அழிந்து நீ நற்கதி பெறுவதற்குச் சென்றடைவாயாக, திருநீறு பூசியவனும் நெற்றிக்கண்ணனும், கங்காதரனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவை!



8)
நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.



நடுக்கம் - மிக்க அச்சம்;
நண்ணு - கிட்டுதல் (approach, reach);
வெடுக்கெனல் - திடீரெனற்குறிப்பு (suddenness and unexpectedness); விரைவுக்குறிப்பு (quickness);
இடத்தல் - பெயர்த்தல்;
அடர்த்தல் - நசுக்குதல்;


நெஞ்சமே! திடீரென்று ஓடிக் கயிலைமலையை பெயர்க்க இராவணன் முயன்றபொழுது, அவனை அம்மலைக்கீழ் நசுக்கிய அண்ணல் சிவபெருமான் உறையும் திருவானைக்காவைச் சென்றடைந்து நீ அச்சம் தீர்ந்து மகிழ்வாயாக!



9)
புரிவல் வினையுன் புடைபு காமலே
இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
அரியன் உறையும் ஆனைக் காவையே.



புரிவல்வினை - புரிந்த வலிய வினைகள்;
புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
எண்ணில் - எண்ணினால்;
எரி - சோதி;
இரிதல் - அஞ்சி ஓடுதல்;


நெஞ்சே! முன்செய்த வலிய வினைகள் எல்லாம் உன்னை அணுகாமல் ஓடவேண்டும் என்று நீ விரும்பினால், திருமாலுக்கும் பிரமனுக்கும் காண அரிய சோதி வடிவினன் ஆன சிவபெருமானின் திருவானைக்காவைச் சென்றடைவாயாக!



10)
வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
வந்தித் துய்வர் மதியம் சூடிய
அந்தி வண்ணன் ஆனைக் காவையே.



வெந்த நீறு - திருநீறு;
விலக்குதல் - கூடாதென்று தடுத்தல் (To forbid, prohibit); நீக்கிவிடுதல் (To eschew, discard, remove);
மந்தம் - அறிவுமழுக்கம்;
மதி - அறிவு;
கொள்ளுதல் - கருதுதல்; மதித்தல்; அங்கீகரித்தல்;
வந்தித்தல் - வணங்குதல்;
மதியம் - சந்திரன்;
அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;


தாமும் திருநீறு அணியாமல் பிறரையும் திருநீறு அணியக்கூடாது என்கிற வஞ்சகர்கள் சொல்லும் அறிவற்ற சொற்களை அறிவுடையோர் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். பிறைச்சந்திரனைச் சூடியவனும் மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவை அறிவுடையோர் வணங்கி உய்வார்கள்.



11)
பிணிசெய் வினைகள் பிரிய வேண்டினீர்
பணிசெய் தரனைப் பரவச் சேர்மினே
பணியும் நிலவும் பாயும் கங்கையும்
அணிசெய் முடியன் ஆனைக் காவையே.



பிணி - கட்டு; நோய்; துன்பம்;
வேண்டினீர் - வேண்டில் நீர்; வேண்டியவர்களே;
வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்;
பணி - 1) தொண்டு; 2) நாகம்;


பிணித்திருக்கும் வினைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனில் நீங்கள் தொண்டுசெய்து ஹரனைப் போற்றச் சேருங்கள், நாகமும் திங்களும் பாய்கிற கங்கையும் அழகுசெய்யும் முடி உடைய சிவபெருமான் உறையும் திருவானைக்காவை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



ஆனைக்கா - திருவானைக்காவல் - கோயில் தகவல்கள்:
தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=314



யானைக்கும் சிலந்திக்கும் அருளியது: http://www.thevaaram.org/katturai/27.html
"…..... முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக்கீழ் வீற்றிருந்த பெருமான்மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் வரலாறு பெரியபுராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள், முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்னர் ஆனார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவர் ஆனார். முற்பிறவியில் மாலியவானே சிலந்தி, புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தைப், "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்" (தி. 6 . 75 பா.8) என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம்....... “

-------- ---------------

No comments:

Post a Comment