Thursday, August 20, 2015

01.64 – ஆலவாய் - (வண்ணவிருத்தம்)


01.64 –
ஆலவாய் - (வண்ணவிருத்தம்)



2010-03-05 – 2010-03-10
திருஆலவாய் (மதுரை)
"ஆலவாய் மேவிய எம்பிரானே"
-------------------------------
(வண்ணவிருத்தம். "தானனா தானன .. தந்ததான- என் சந்தக்குழிப்பு )
("வாரிமீ தேயெழு .. திங்களாலே" - திருப்புகழ் - பொது)


1) கோதிலா ஆறு அடை சிந்தை ஈவாய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)

தீதிலே நாளுமு .. ழன்று நோவே
.. சேரவீ ணேதிரி .. கின்ற நானும்
கோதிலா வாறடை .. கின்ற வாறே
.. கூனிலா வேணிய .. சிந்தை யீவாய்
மேதியான் வீழவெ .. குண்ட கோவே
.. வேதியா மாமணி .. கண்ட சீலா
ஆதியே ஆயிழை .. பங்க தேவா
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.



பதம் பிரித்து:
தீதிலே நாளும் உழன்று, நோவே
.. சேர, வீணே திரிகின்ற நானும்,
கோ(து) இலா ஆ(று) அடைகின்றவாறே,
.. கூன் நிலா வேணிய, சிந்தை ஈவாய்!
மேதியான் வீழ வெகுண்ட கோவே!
.. வேதியா! மா மணிகண்ட! சீலா!
ஆதியே! ஆயிழை பங்க! தேவா!
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.


தீது - தீமை; பாவம்;
நோவு - துன்பம்;
சேர்தல் - பெறுதல்;
கோது - குற்றம்;
ஆறு - நெறி;
கூன் - வளைந்த; (சம்பந்தர் தேவாரம் - 2,29,9 - 'கோடலொடு கூன்மதி குலாயசடை')
வேணி - சடை;
மேதியான் - [எருமை ஊர்பவன்] யமன்; (மேதி - எருமை);
வேதியா - மறைமுதல்வா; (அப்பர் தேவாரம் - 4.62.1 - 'வேதியா வேத கீதா')
சீலன் - ஒழுக்கமுடையவன்; தவவேடம் உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.15.6 - 'மூலனாம் மூர்த்தியாம் ... சீலனாம் ...');
ஆயிழை - அழகிய அணிகலன்கள் அணிந்தவள் - உமாதேவியார்;


தீதிலே நாளும் உழன்று, நோவே சேர, வீணே திரிகின்ற நானும் - தினந்தோறும் பாவங்களே செய்து, துன்பத்தையே பெறப் பயனின்றி இவ்வுலகில் திரியும் அடியேனும்;
கோ(து) இலா ஆ(று) அடைகின்றவாறே, கூன் நிலா வேணிய, சிந்தை ஈவாய் - வளைந்த பிறைச்சந்திரனைச் சடையில் சூடியவனே! குற்றமற்ற நன்னெறியை அடையும்படி மனம் தந்து அருள்வாயாக;
மேதியான் வீழ வெகுண்ட கோவே - (மார்க்கண்டேயர் மேல் பாய்ந்த) எமனே மாண்டுவிழும்படி கோபித்த தலைவனே;
வேதியா! மா மணிகண்ட! சீலா - வேத முதல்வனே! அழகிய நீலகண்டனே! சீலனே;
ஆதியே! ஆயிழை பங்க! தேவா - மூலப்பொருளே! அருத்தநாரீஸ்வரனே! தேவனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-06
2) தாள் தொழு சிந்தை ஈவாய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


காரமா றாமொழி .. கொண்டு நாளும்
.. காய்வதே நாடிடு .. நெஞ்சி னேனும்
ஈரமா றாதவன் .. என்று மாறி
.. ஏலமார் தாள்தொழு .. சிந்தை யீவாய்
வாரமாய் ஓதிடும் .. அன்பர் நேசா
.. வானிலா வாறணி .. கின்ற தேசா
ஆரனே ஆனமர் .. கின்ற வீசா
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.



பதம் பிரித்து:
காரம் ஆறா மொழி கொண்டு, நாளும்
.. காய்வதே நாடிடு[ம்] நெஞ்சினேனும்,
ஈர[ம்] மாறாதவன் என்று மாறி,
.. ஏலம் ஆர் தாள் தொழு சிந்தை ஈவாய்;
வாரமாய் ஓதிடும் அன்பர் நேசா;
.. வானிலா, (று) அணிகின்ற தேசா;
ஆரனே; ஆன் அமர்கின்ற ஈசா;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

காரம் - உறைப்பு (Pungency); கோபம்;
ஆறுதல் - தணிதல்;
காய்தல் - வெறுத்தல்; வெகுளுதல்;
ஈரம் - அன்பு; தயை; கருணை;
ஏலம் - வாசனை;
வாரம் - அன்பு; பக்தி;
வானிலா - வான் நிலா / வால் நிலா; (சம்பந்தர் தேவாரம் - 2/16.2 - "விதியானை ... வான் மதியானை");
வால் - வெண்மை; தூய்மை;
தேசன் - ஒளியுருவினன்;
ஆரன் - ஆத்திமாலையை அணிந்தவன்; (ஆர் - ஆத்தி; ஆரம் - மாலை). (அப்பர் தேவாரம் - 5.4.7 - "வீரனை ... ஆரனை ...");
ஆன் - எருது;
அமர்தல் - விரும்புதல்;

காரம் ஆறா மொழி கொண்டு, நாளும் காய்வதே நாடிடு[ம்] நெஞ்சினேனும் - சினம் தணியாத பேச்சினால், தினமும் வெறுக்கத்தக்க விஷயங்களையே விரும்பும் மனத்தை உடைய நானும்;
ஈர[ம்] மாறாதவன் என்று மாறி, ஏலம் ஆர் தாள் தொழு சிந்தை ஈவாய் - அன்பு மாறாதவன் என்று மாறி, உன் மணம் கமழும் திருவடியைத் தொழுகிற எண்ணத்தை அளிப்பாயாக;
வாரமாய் ஓதிடும் அன்பர் நேசா - அன்போடு போற்றும் பக்தர்கள் நேசனே;
வானிலா, (று) அணிகின்ற தேசா - (வானில் செல்லும்) வெண்திங்களும் கங்கையும் சூடும் சோதியே!
ஆரனே; ஆன் அமர்கின்ற ஈசா - ஆத்திமாலை அணிந்தவனே; காளை வாகனனே! ஈசனே!
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-06
3) ஓத அருள் தா
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


மூடனாய் ஆடிமி .. குந்த வாதை
.. மூடவே வாடிம .. யங்கு வேனும்
ஓடமா னாயுன .. தன்ப னாகி
.. ஓதவே ஆரருள் .. தந்தி டாயோ
சேடனே சேல்விழி .. மங்கை கூறா
.. சீறரா ஆணி .. கின்ற வாதீ
ஆடலா ஆலமர் .. கின்ற நாதா
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
மூடனாய் ஆடி, மிகுந்த வாதை
.. மூடவே வாடி மயங்குவேனும்,
ஓடம் ஆனாய் உன(து) அன்பன் ஆகி
.. ஓதவே, ஆரருள் தந்திடாயோ;
சேடனே; சேல்விழி மங்கை கூறா;
.. சீ(று) அரா, (று) அணிகின்ற ஆதீ;
ஆடலா; ஆல் அமர்கின்ற நாதா;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

சேடன் - பெரியோன்; கடவுள்;
அணிகின்றவாதீ - 1) அணிகின்றவா; தீ 2) அணிகின்ற ஆதீ;
ஆடலன் - ஆடுதலைச் செய்பவன்;
தீ ஆடலன் - நெருப்பின்கண் நின்று ஆடுபவன்; தழல் ஆடி; (திருவாசகம் - திருப்புலம்பல் - "சடையானே தழலாடீ ..."); (சம்பந்தர் தேவாரம் - 1.100.1 - 'நீடலர் சோதி .... சூடலன் ... ஆடலன் ... பாடலன் ...);
ஆல் - ஆல மரம்; ஆலகால விஷம்;
அமர்தல் - விரும்புதல்; இருத்தல் (உட்கார்தல்) (To abide, remain, be seated);

மூடனாய் ஆடி, மிகுந்த வாதை மூடவே வாடி மயங்குவேனும் - மதியின்றி உலக வாழ்வில் ஆடி, மிகுந்த துன்பம் சூழந்துகொள்வதனால் வருந்திக் கலங்கும் நானும்;
ஓடம் ஆனாய் உன(து) அன்பன் ஆகி ஓதவே, ஆரருள் தந்திடாயோ - பிறவிக்கடலைக் கடக்க உதவும் ஓடம் ஆனவனே, உனது பக்தன் ஆகி உன் புகழை ஓதும்படி இன்னருள் செய்வாயாக;
சேடனே; சேல்விழி மங்கை கூறா - பெரியோனே; சேல்மீன் போன்ற கண்ணுடைய பார்வதியை ஒரு கூறாக உடையவனே;
சீ(று) அரா, (று) அணிகின்ற ஆதீ ஆடலா - சீறும் பாம்பையும் கங்கையையும் அணிகிற ஆதியே; திருநடம் செய்பவனே; (--அல்லது-- சீறும் பாம்பையும் கங்கையையும் அணிகிறவனே; நெருப்பின்கண் நின்று ஆடுபவனே;)
ஆல் அமர்கின்ற நாதா - தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின்கீழ் இருப்பவனே; (-- அல்லது -- விஷத்தை விரும்பும் நாதனே);
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-07
4) தூயனாய் வாழ்கிற சிந்தை ஈவாய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


வேகமா ஓடுதி .. னங்க ளோரா
.. வீணனாய் நாளும .. வங்க ளாலே
சோகமே வாழ்வினில் .. மண்டி டாதே
.. தூயனாய் வாழ்கிற .. சிந்தை யீவாய்
ஏகனே மூவெயில் .. வெந்து வீழ
.. ஏவினாய் ஓர்கணை .. இந்து சூடீ
ஆகமோர் கூறுமை .. கொண்ட கோனே
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
வேகமா ஓடு தினங்கள் ஓரா
.. வீணனாய், நாளும் அவங்களாலே
சோகமே வாழ்வினில் மண்டிடாதே,
.. தூயனாய் வாழ்கிற சிந்தை ஈவாய்;
ஏகனே; மூ எயில் வெந்து வீழ
.. ஏவினாய் ஓர் கணை; இந்து சூடீ;
ஆகம் ஓர் கூ(று) உமை கொண்ட கோனே;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

ஓர்த்தல் - எண்ணுதல்;
வீணன் - பயனற்றவன்;
அவம் - கேடு;
மண்டுதல் - மிகுதல்;
எயில் - கோட்டை;
ஏவினாய் - ஏவியவனே;
இந்து - சந்திரன்;
ஆகம் - உடல்;

வேகமா ஓடு தினங்கள் ஓரா வீணனாய் - காலம் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதை எண்ணாத வீணன் ஆகி;
நாளும் அவங்களாலே சோகமே வாழ்வினில் மண்டிடாதே - எப்பொழுதும் அவச்செயல்களே செய்து, அதனால் வாழ்வில் சோகமே மிகுந்து அல்லற்படாமல்;
தூயனாய் வாழ்கிற சிந்தை ஈவாய் - தூயவனாகி வாழும் எண்ணத்தை எனக்கு அளிப்பாயாக;
ஏகனே; மூ எயில் வெந்து வீழ ஏவினாய் ஓர் கணை - ஒருவனே; முப்புரங்களும் தீயில் வெந்து விழ ஓர் அம்பைச் செலுத்தியவனே;
இந்து சூடீ; ஆகம் ஓர் கூ(று) உமை கொண்ட கோனே - பிறைச்சந்திரனைச் சூடியவனே; திருமேனியில் ஒரு பாகமாகப் பார்வதியைக் கொண்ட தலைவனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-07
5) நெறி தந்து காவாய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


மாணிலா தோருடன் .. நின்ற தாலே
.. வாரியே போல்வினை .. வந்து மூடி
நாணிலா தோடிவ .. ருந்து வேனோ
.. நாசமா காநெறி .. தந்து காவாய்
மாணிபால் ஓடிய .. டைந்த காலன்
.. மாளவே மார்புதை .. மைந்த சூலா
ஆணியே வானையி .. றந்த சோதீ
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
மாண் இலாதோருடன் நின்றதாலே,
.. வாரியே போல் வினை வந்து மூடி,
நாள் நிலா(து) ஓடி, வருந்துவேனோ;
.. நாசம் ஆகா நெறி தந்து காவாய்;
மாணிபால் ஓடி அடைந்த காலன்
.. மாளவே மார்பு உதை மைந்த; சூலா;
ஆணியே; வானை இறந்த சோதீ;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

மாண் - மாட்சிமை (Greatness; glory, excellence);
நிற்றல் - தங்குதல் (To stay, abide, continue);
நாணிலாது - 1) நாண் இலாது; 2) நாள் நிலாது;
நாண் - 1) நாணம்;
மாணி - அந்தணச் சிறுவன்; பிரம்மச்சாரி;
மைந்தன் - வீரன்;
ஆணி - உரையாணிப்பொன். (ஆணிப்பொன் - உயர்மாற்றுப் பொன் - Gold of the finest quality);
இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend);


மாண் இலாதோருடன் நின்றதாலே - மேன்மை இல்லாதவர்களோடு எப்பொழுதும் கூடி இருந்ததால்;
வாரியே போல் வினை வந்து மூடி - கடலே போல் வினை வந்து மூடிக்கொள்ள;
நாணிலா(து) ஓடி, வருந்துவேனோ - நாள்களும் நில்லாமல் ஓடிப்போய், எமன் வரவால் வருந்துவேனோ? (-- அல்லது -- "வெட்கம் இன்றித் திரிந்து வருந்துவேனோ?” என்றும் பொருள்கொள்ளலாம்);
நாசம் ஆகா நெறி தந்து காவாய் - நான் கேடு அடையாதபடி, அழிவில்லாத ன்னெறியை அளித்து என்னைக் காப்பாயாக;
மாணிபால் ஓடி அடைந்த காலன் மார்பு உதை மைந்த; சூலா - மார்க்கண்டேயரிடம் விரைந்து வந்த எமனுடைய மார்பில் உதைத்த வீரனே; சூலனே;
ஆணியே; வானை இறந்த சோதீ - உயர்ந்த பொன் போன்றவனே; விண்ணையும் கடந்த சோதியே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-08
6) நீ இரங்கிடாயோ
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


நானவா வேமிகு .. நெஞ்ச னாகி
.. ஞாலமீ தேவரு .. கின்ற வாறே
ஈனமே நாடிம .. யங்க லாமோ
.. ஈசனே நீயுமி .. ரங்கி டாயோ
வானவா ஏழிசை .. பந்தன் ஓத
.. வாசிதீர் காசுவ .. ழங்கு வோனே
ஆனனே மீன்விழி .. மங்கை யோடே
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
நான் அவாவே மிகு நெஞ்சன் ஆகி,
.. ஞால[ம்] மீதே வருகின்றவாறே,
ஈனமே நாடி மயங்கலாமோ?
.. ஈசனே, நீயும் இரங்கிடாயோ?
வானவா; ஏழிசை பந்தன் ஓத,
.. வாசி தீர் காசு வழங்குவோனே;
ஆனனே; மீன்விழி மங்கையோடே
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

ஞாலம் - பூமி;
ஈனம் - இழிவு;
வானவன் - சிவலோகன்;
ஏழிசை - ஏழு ஸ்வரங்கள்;
பந்தன் - திருஞான சம்பந்தர்; (நாம ஏகதேசம் - ஒருபுடைப் பெயர்);
வாசி - நாணயவட்டம் (Discount, in changing money);
ஆனன் - ஆனை (விடையை) ஊர்தியாக உடையவன்; (5.4.2 - "வானனைம் மதிசூடிய ...")
மீன்விழி மங்கை - அங்கயற்கண்ணி;


நான் அவாவே மிகு நெஞ்சன் ஆகி - நான் ஆசையே மிகுகிற மனம் உடையவன் ஆகி,
ஞால[ம்] மீதே வருகின்றவாறே, ஈனமே நாடி மயங்கலாமோ? - பூமியின்மேல் மீண்டும் பிறவி தரும் இழிவையே விரும்பி மதி மயங்கலாமோ?
ஈசனே, நீயும் இரங்கிடாயோ - ஈசனே, நீ என்மேல் இரக்கம் கொள்ளமாட்டாயோ?
வானவா - சிவலோகனே;
ஏழிசை பந்தன் ஓத, வாசி தீர் காசு வழங்குவோனே - இசையோடு பாடும் திருஞானசம்பந்தருக்குத் திருவீழிமிழலையில் வாசி இல்லாத படிக்காசு கொடுத்தருளியவனே;
ஆனனே; மீன்விழி மங்கையோடே ஆலவாய் மேவிய எம்பிரானே - இடப வாகனனே; அங்கயற்கண்ணியோடு திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-09
7) அன்பு தாராய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


ஆறலா ஆறுவி .. ரும்பி நாளும்
.. ஆதனாய் ஆடிவ .. ருந்து வேனோ
பாறலா காவினை .. குன்று மாறே
.. பாதமே பாடிடும் .. அன்பு தாராய்
நீறதே பூசிய .. பண்பி னானே
.. நேரிலா ஈசவ .. ணங்கு மானாய்
ஆறரா வேணிய .. அண்ட வாணா
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
(று) அலா ஆறு விரும்பி, நாளும்
.. ஆதனாய் ஆடி, வருந்துவேனோ?
பாறல் ஆகா வினை குன்றுமாறே,
.. பாதமே பாடிடும் அன்பு தாராய்;
நீ(று) அதே பூசிய பண்பினானே;
.. நேர் இலா ஈச; அணங்கும் ஆனாய்;
(று) அரா வேணிய; அண்ட வாணா;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

ஆறு - வழி; நெறி; மார்க்கம்;
ஆதன் - அறிவில்லான்; குருடன் (Blind man);
பாறல் - ஓடுதல்; அழிதல்; (பாறுதல் - அழிதல்; நிலை கெட்டோடுதல்);
குன்றுதல் - அழிதல்;
நேர் இலா - ஒப்பில்லாத;
ஈசவணங்குமானாய் - 1) ஈச; அணங்கும் ஆனாய்; 2) ஈச; வணங்கும் ஆனாய் (ஆன் - இடபம்) - நாம் தொழும் இடப வாகனனே;
வேணி - சடை;
அண்டவாணன் - எல்லா உலகங்கட்கும் தலைவன்;

(று) அலா ஆறு விரும்பி, நாளும் ஆதனாய் ஆடி, வருந்துவேனோ - வழி அல்லாத வழிகளை விரும்பி, என்றும் குருடனைப்போலத் திரிந்து, வருந்துவேனோ?
பாறல் ஆகா வினை குன்றுமாறே, பாதமே பாடிடும் அன்பு தாராய் - அழியாத வினைகளும் அழியும்படி உன் திருப்பாதமே பாடும் அன்பைத் தருவாயே;
நீ(று) அதே பூசிய பண்பினானே - திருநீறே பூசும் பண்பு உடையவனே;
நேர் இலா ஈச; அணங்கும் ஆனாய்; - ஒப்பில்லாத ஈசனே; பெண்ணும் ஆனவனே; ("வணங்கும் ஆனாய்" என்று கொண்டால் = "நாம் தொழும் இடப வாகனனே")
(று) அரா வேணிய; அண்ட வாணா - கங்கையும் பாம்பும் சடையில் அணிபவனே; எல்லா உலகங்கட்கும் தலைவனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-09
8) காதலாய் வந்தியேனோ
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


மாலனாய் ஆசைகள் .. உந்த ஓயா
.. வாதையே மேலிட .. அந்தி நாளாய்க்
காலனார் தூதுவர் .. கொண்டு போமுன்
.. காதலாய் நானுனை .. வந்தி யேனோ
சூலனே வாடியி .. லங்கை ஆளி
.. சோதியே காவென .. நின்ற தேவா
ஆலனே வேதமு .. ழங்கு கோனே
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
மாலனாய் ஆசைகள் உந்த, ஓயா
.. வாதையே மேலிட, அந்தி நாளாய்க்,
காலனார் தூதுவர் கொண்டு போ[ம்] முன்,
.. காதலாய் நான் உனை வந்தியேனோ?
சூலனே; வாடி இலங்கை ஆளி
.. "சோதியே; கா" என நின்ற தேவா;
ஆலனே; வேத[ம்] முழங்கு கோனே;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

மாலன் - மால் உடையவன்; (மால் - அறியாமை; மயக்கம்);
வாதை - துன்பம்;
ஆளி - ஆள்பவன் ( One who rules or controls); (சுந்தரர் தேவாறம் - 7.83.6 - “ஆரூர் புக்கு ஏழுலகு ஆளியை நான் என்றுகொல் எய்துவதே” - ஏழ் உலகு ஆளி - one who rules over the seven worlds.);
ஆலன் - கல்லால மரத்தின் கீழ் இருப்பவன்;

மாலனாய், ஆசைகள் உந்த ஓயா வாதையே மேலிட, - அறியாமை உள்ளவனாய், ஆசைகள் என்னைத் தள்ள, அதனால் தீராத துன்பமே மிகுந்திட;
அந்தி நாள் ஆய்க், காலனார் தூதுவர் கொண்டு போ[ம்] முன், காதலாய் நான் உனை வந்தியேனோ? - இறுதி நாள் ஆகி, எமதூதர்கள் என்னைக் கொண்டுபோவதன்முன், நான் அன்பு உடையவன் ஆகி உன்னைத் தொழமாட்டேனோ?
சூலனே; வாடி இலங்கை ஆளி "சோதியே; கா" என நின்ற தேவா - சூலபாணியே; இலங்கைக்கு அரசனான இராவணன் (கயிலைமலையின் கீழ் நசுக்கப்பெற்று) வாடி), "சோதி உருவினனே; காத்தருள்" என்று வணங்க இருந்த தேவனே;
ஆலனே; வேத[ம்] முழங்கு கோனே - தட்சிணாமூர்த்தியே; வேதங்கள் பாடும் தலைவனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.






2010-03-09
9) மதி தந்து காவாய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


கேடுசூ ழாசைமி .. குந்த தாலே
.. கீழ்மையே மேலென .. நின்று நாளும்
வாடுவே னோதமிழ் .. கொண்டு பாடி
.. வாழுமா றேமதி .. தந்து காவாய்
நேடுமால் நான்முகன் .. அன்று காணா
.. நீளுமா தீயென .. நின்ற ஈசா
ஆடுவாய் ஆவினி .. லஞ்சு சீரார்
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
கேடுசூழ் ஆசை மிகுந்ததாலே
.. கீழ்மையே மேல் என நின்று நாளும்
வாடுவேனோ; தமிழ்கொண்டு பாடி
.. வாழுமாறே மதி தந்து காவாய்;
நேடு மால் நான்முகன் அன்று காணா
.. நீளு மா தீ என நின்ற ஈசா;
ஆடுவாய் ஆவினில் அஞ்சு; சீர் ஆர்
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

நேடுதல் - தேடுதல்;
சீர் ஆர் - திரு மிகுந்த; புகழ் நிறைந்த;

கேடுசூழ் ஆசை மிகுந்ததாலே - அழிவே சூழும் ஆசை மிகுவதால்;
கீழ்மையே மேல் என நின்று நாளும் வாடுவேனோ - இழிவையே மேலானது என்று செயல்புரிந்து தினமும் வருந்துவேனோ?
தமிழ்கொண்டு பாடி வாழுமாறே மதி தந்து காவாய் - தேவாரம் திருவாசகம் பாடி உய்யும்படி அறிவைத் தந்து காப்பாயாக;
நேடு மால் நான்முகன் அன்று காணா நீளு மா தீ என நின்ற ஈசா - தேடிய திருமாலும் பிரமனும் அன்று காண இயலாதபடி நீண்ட பெரும் தீயாக நின்ற ஈசனே;
ஆடுவாய் ஆவினில் அஞ்சு - பசுவிலிருந்து பெறும் ஐம்பொருள்களால் அபிஷேகிக்கப்படுபவனே;
சீர் ஆர் ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு மலியும் ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.



2010-03-10
10) பீடுசேர் வாழ்வருள்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


சீரிலா வாறுந .. டந்து நாளும்
.. தீயவோ யாதுரை .. மிண்டர் சேரார்
பேரிலாய் நேரிலாய் .. என்று பாடில்
.. பீடுசேர் வாழ்வருள் .. உம்பர் கோனே
மாரிபோல் வாரிவ .. ழங்கு வோனே
.. மாசிலாய் மாவிடம் .. உண்ட தேவா
ஆரியா ஆதியும் .. அந்தம் ஆனாய்
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
சீர் இலா ஆறு நடந்து நாளும்
.. தீய ஓயா(து) உரை மிண்டர் சேரார்;
"பேர் இலாய்; நேர் இலாய்" என்று பாடில்,
.. பீடு சேர் வாழ்(வு) அருள் உம்பர் கோனே;
மாரி போல் வாரி வழங்குவோனே;
.. மா(சு) இலாய்; மா விடம் உண்ட தேவா;
ஆரியா; ஆதியும் அந்தம் ஆனாய்;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

மிண்டர் - கல் நெஞ்சர்கள்;
பீடு - பெருமை;
ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்; (திருவாசகம் - சிவபுராணம் - "... பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ...");

சீர் இலா ஆறு நடந்து நாளும் தீய ஓயா(து) உரை மிண்டர் சேரார் - நன்மை இல்லாத வழியில் சென்று தினமும் தீய சொற்களை ஓயாமல் சொல்லும் கல் நெஞ்சர்கள் சேரமாட்டார்;
"பேர் இலாய் நேர் இலாய்" என்று பாடில், பீடு சேர் வாழ்வு அருள் உம்பர் கோனே - "ஒரு நாமமும் இல்லாதவனே, ஒப்பில்லாதவனே" என்று பாடிப் பணிந்தால், பெருமை சேரும் வாழ்வினை அருள்பவனே; வானோர் தலைவனே;
மாரி போல் வாரி வழங்குவோனே - மழையைப் போல வரங்களை வாரி அளிப்பவனே;
மா(சு) இலாய்; மா விடம் உண்ட தேவா - களங்கமற்றவனே; ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனே;
ஆரியா; ஆதியும் அந்தம் ஆனாய் - ஆசிரியனே; முதலும் முடிவும் ஆனவனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.

2010-03-10
11) தாளைப் பாடும் அன்பு தாராய்
-----------------------------
(தானனா தானன .. தந்ததான)


பாவியாய் வாழ்வது .. சிந்தி யாதே
.. பாரிலே ஆடிவ .. ருந்து வேனோ
சாவியா காதுளம் .. ஒன்றி நாளும்
.. தாளையே பாடிடும் .. அன்பு தாராய்
சேவிலே ஊர்பவ .. சம்பு நாதா
.. சேவகா நீதுணை .. என்ற மாணி
ஆவிகா தேவம .. டந்தை கூறா
.. ஆலவாய் மேவிய .. எம்பி ரானே.


பதம் பிரித்து:
பாவியாய் வாழ்வது சிந்தியாதே,
.. பாரிலே ஆடி வருந்துவேனோ?
சாவி ஆகா(து) உளம் ஒன்றி, நாளும்
.. தாளையே பாடிடும் அன்பு தாராய்;
"சேவிலே ஊர்பவ; சம்பு நாதா;
.. சேவகா; நீ துணை" என்ற மாணி
ஆவி கா தேவ; மடந்தை கூறா;
.. ஆலவாய் மேவிய எம்பிரானே.

சாவி - பதர் (blighted empty grain);
சே - எருது;
சம்பு - இன்பத்தை அளிப்பவன்; நாவல் மரம்; (ஜம்புநாதன் - திருவானைக்கா ஈசன் திருநாமம்);
சேவகன் - வீரன்;
மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்;
ஆவி கா தேவ - ஆவியைக் காத்த தேவனே;

பாவியாய் வாழ்வது சிந்தியாதே, பாரிலே ஆடி வருந்துவேனோ - பாவங்கள் செய்து வாழ்வதை எண்ணாமல், இவ்வுலகில் உழன்று நான் வருந்துவேனோ?
சாவி ஆகா(து) உளம் ஒன்றி, நாளும் தாளையே பாடிடும் அன்பு தாராய் - பதர்போல் ஆகாமல், மனம் ஒன்றித் தினமும் உன் திருவடிகளையே பாடிப் பணியும் பக்தியைத் தருவாயாக;
"சேவிலே ஊர்பவ; சம்பு நாதா; சேவகா; நீ துணை" என்ற மாணி ஆவி கா தேவ - "எருதின்மேல் செல்பவனே; இன்பம் அளிக்கும் தலைவனே; வீரனே; நீ துணை" என்று வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிரைக் காத்த தேவனே;
மடந்தை கூறா - அருத்தநாரீஸ்வரனே;
ஆலவாய் மேவிய எம்பிரானே - திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment