Tuesday, August 18, 2015

01.55 – ஆரூர் - (திருவாரூர்)


01.55 –
ஆரூர் - (திருவாரூர்)


2009-12-13
திருவாரூர்
"ஆரூர் அடை நெஞ்சே"
----------------------------------------------
(இன்னிசை வெண்பா)


1)
மலைபோல் உளவினைகள் வந்து துயரம்
விலகா நிலையை விளைக்குமுன் நெஞ்சே
கலைமானை ஏந்து கரத்தினன் கங்கை
அலைசடையான் ஆரூர் அடை.


கங்கை அலைசடையான் - கங்கை அலைகின்ற சடையை உடையவன்; கங்கை அலைமோதுகின்ற சடையை உடையவன்;

(சுந்தரர் தேவாரம் - 7.83.1 -
"அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
ந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே")


2)
பழைய வினையால் பலவின்னல் எய்தி
உழலும் நிலைவருமுன் ஒன்றுசெய் நெஞ்சே
கழல்தொழும் பத்தர்க்காக் காலனைக் காய்ந்த
அழல்வண்ணன் ஆரூர் அடை.



பலவின்னல் - பல இன்னல்;
பத்தர்க்கா - பக்தருக்காக;
காய்தல் - அழித்தல்;
அழல் வண்ணன் - தீப்போல் சிவந்த நிறம் உடையவன்;



3)
முன்வினை வந்துனை மூடி முடிவில்லா
இன்னல் தொடரால் இளைப்பதன்முன் என்நெஞ்சே
தன்னை நினைபவரைத் தாயினும் காக்கிற
அன்பன்மே(வு) ஆரூர் அடை.


இளைத்தல் - சோர்தல்; மெலிதல்;
தாயினும் காக்கிற அன்பன் - தாயிற் சிறந்த அன்பு உடையவன்;
மேவுதல் - அமர்தல் (To abide, dwell); விரும்புதல்;


4)
கத்து கடல்போல் கடுவினைகள் வந்தடைந்து
தத்தளிப் புற்றுத் தவியாமுன் என்நெஞ்சே
பத்தியொடு பாதம் பணிவார்க் கருள்செய்யும்
அத்தன்மே(வு) ஆரூர் அடை.



கத்து கடல் - வினைத்தொகை - ஒலிக்கும் கடல்;
கடுவினைகள் - கொடிய வினைகள்;
பத்தியொடு - பக்தியோடு;
அத்தன் - தந்தை;



5)
வெய்ய வினைசூழ்ந்து வேதனை எய்தும்முன்
உய்யும் வழிதன்னை உன்னு மடநெஞ்சே
நெய்யெனநீர் ஆக நமிநந்திக்(கு) அன்றருளும்
ஐயன்மே(வு) ஆரூர் அடை.


* 3-ம் அடி - கமலாலயக் குளத்து நீரால் நமிநந்தி அடிகள் விளக்கெரித்த வரலாற்றைச் சுட்டியது. நமிநந்தி அடிகள் நாயன்மார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.
வெய்ய வினைசூழ்ந்து வேதனை எய்தும்முன் - வெம்மையான வினை உன்னைச் சூழ்ந்துகொள்ள, அதனால் நீ துன்பம் அடைவதன் முன்னமே;
உன்னு - சிந்தி; எண்ணு;


6)
இமயமொத்த தீவினையால் இன்னல்கள் எய்திக்
குமைவதன் முன்னமென் கூற்றைக்கேள் நெஞ்சே
உமையவள்ஓர் கூறன் ஒளிநீறு பூசும்
அமலன்மே(வு) ஆரூர் அடை.


இமயம் ஒத்த தீவினை - மலை போன்ற பாவங்கள்;
(சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - “மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர்...”);
குமைதல் - வருந்துதல்; அழிதல்;
கூற்று - சொல்;
உமையவள் ஓர் கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;
அமலன் - மலமற்றவன்;


7)
பண்ணிய தீவினைகள் பாய்ந்துவந்து பற்றிக்கொண்(டு)
எண்ணில் இடர்கள் இழைக்குமுன் என்நெஞ்சே
விண்ணில் புரம்மூன்றும் வேவ நகைசெய்த
அண்ணல்மே(வு) ஆரூர் அடை.



எண்ணில் - எண் இல் - எண்ணற்ற;
நகைசெய்த – சிரித்த;



8)
துளியும் வினைகள் தொடராஎன் நெஞ்சே
எளிதில் மலைஎறிவேன் என்ற அவுணன்
நெளிய விரலை நிறுவிப்பின் வாள்நாள்
அளியரன்மே(வு) ஆரூர் அடை.


எளிதில் மலை எறிவேன் என்ற அவுணன் - சுலபமாகக் கயிலை மலையைப் பெயர்த்து வீசுவேன் என்ற அரக்கன் இராவணன்;
நெளிதல் - வருந்துதல்;
நிறுவி - ஊன்றி;
வாணாள் - வாள் நாள் / வாழ் நாள்;
வாள் நாள் அளி அரன் - இராவணனுக்கு வாளும் வாழ்நாளும் அளித்த அரன்;



9)
பொங்கிஎழும் முன்புரி பொல்லா வினையெல்லாம்
இங்கிடர் செய்வதன்முன் என்சொல்கேள் நெஞ்சமே
பங்கயனும் மாலும் பறந்தகழ்ந்து தேடெரியாம்
அங்கணன்மே(வு) ஆரூர் அடை.



இங்கிடர் - இங்கு இடர் - இப்பிறப்பில் துன்பம்;
பங்கயன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
மால் - திருமால் - விஷ்ணு;
தேடெரியாம் - தேடு எரி ஆம் - தேடிய சோதி ஆகும்;
அங்கணன் - அருள்நோக்குடையவன்;


10)
பணியார் சிவனைப்; பழிகள் உரைத்துப்
பிணிகொள்ளும் பேதையர்பின் போகாதே; நெஞ்சே
தணியாத இன்பம் தருமிறைவெண் திங்கள்
அணிஅரன்மே(வு) ஆரூர் அடை.


பணியார் - வணங்க மாட்டார்;
பேதையர் - அறிவிலிகள்;
தணியாத இன்பம் - குறையாத இன்பம்;
இறை - இறைவன்;
வெண் திங்கள் அணி அரன் - வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடும் ஹரன்;



11)
அரவும் மதியும் அலைசேர் நதியும்
விரவும் சடையன் விரைமலர்ப் பாதம்
பரவி மனமே பழவினை தீர்க்கும்
அரனார்மே(வு) ஆரூர் அடை.


விரவுதல் - பொருந்துதல்; கலத்தல்;
விரைமலர்ப் பாதம் பரவி - மணம் கமழும் மலரை ஒக்கும் திருவடிகளைப் போற்றி; (பரவுதல் - போற்றுதல்);


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment