Monday, August 17, 2015

01.51 – பொது - (ஸ்ரக்விணீ )


01.51 –
பொது - (ஸ்ரக்விணீ )



2009-10-11
பொது
"தாள்தொழாய் நெஞ்சமே"
-------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்)
(சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு - “அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")



1)
ஈசனார் மீதிலோர் பூச்சரம் விட்டவன்
நாசமாய் வீழவே கண்ணினால் பார்த்தவர்
நேசமார் நெஞ்சினர் வாசமார் பூவினால்
பூசைகள் செய்யவான் வாழ்வுதான் ஈவரே.



பூச்சரம் விட்டவன் - மலர் அம்பு தொடுத்த மன்மதன்;
நேசம் ஆர் - அன்பு பொருந்திய;
வாசம் ஆர் பூவினால் - மணமிக்க பூக்களால்;



2)
சீலனாய்ச் சேவடிக் கன்புசெய் நற்றவப்
பாலகன் வாழுநாள் ஆனதென் றண்டிய
காலனார் மாளவோர் காலினால் செற்றவன்
சூலமார் கையினன் பேரருங் காவலே.



நற்றவப் பாலகன் - நல தவம் உடைய சிறுவரான மார்க்கண்டேயர்;
வாழுநாள் - வாழும் நாள் - ஆயுள்;
அண்டுதல் - நெருங்குதல்;
சூலம் ஆர் கையினன் பேர் அரும் காவல் - சூலபாணியின் திருப்பெயர் சிறந்த காப்பு;



3)
முப்புரம் சாம்பலாய் வீழுமா றத்தினம்
வெற்புவில் கொண்டுமோர் அம்பையும் விட்டிலன்
அப்புவெண் திங்களைச் சென்னிமேல் வைத்தவன்
அற்புதன் பேர்நிதம் சிந்திநீ நெஞ்சமே.



வெற்பு வில் கொண்டும் - மேருமலையை வில்லாகக் கொண்டும்
அப்பு - நீர்; இங்கே கங்கை;
நிதம் - தினந்தோறும்;



4)
பாற்கடல் மத்திடும் போதெழும் வல்விடம்
நாற்புறம் பாயவா னோர்பயந் தேத்தவும்
காப்பதற் காதைப் போனகம் செய்தவன்
மூப்பிலா மூத்தவன் பேருரைத் துய்ம்மினே.



பதம் பிரித்து:
பாற்கடல் மத்திடும் போ(து) எழும் வல்விடம்
நாற்புறம் பாய, வானோர் பயந்(து) ஏத்தவும்,
காப்பதற்கா அதைப் போனகம் செய்தவன்,
மூப்(பு) இலா மூத்தவன் பேர் உரைத்(து) உய்ம்மினே.


மத்திடுதல் - கடைதல்;
காப்பதற்கா - காப்பதற்கா;
போனகம் - உணவு; உண்ணுதல்;
மூத்தவன் - முற்பட்டவன்;
உய்ம்மின் - உய்வீராக;



5)
தாயவன் தத்துவன் சங்கரன் தந்தையும்
ஆயவன் கேளவன் மண்புனல் காற்றுவிண்
தீயவன் பத்தருள் நிற்பவன் தீதிலாத்
தூயவன் பேர்நிதம் சொல்லுவார்க் கின்பமே.



ஆயவன் - ஆனவன்;
கேள் - உறவு; நண்பன்;
மண் புனல் காற்று விண் தீ வன் - ஐம்பூதங்கள் ஆனவன்;
பத்தர் உள் நிற்பவன் - பக்தர்களின் உள்ளத்தில் உறைபவன்;

6)
அத்தனே ஐயனே அன்பராய்ப் பாடுவார்
சித்தனே செல்வனே ஓட்டினிற் பிச்சைகொள்
பித்தனே நித்தனே பெண்ணுமோர் கூறனே
சுத்தனே என்பவர்க் கில்லையே துன்பமே.



அத்தன் - தந்தை;
ஐயன் - தலைவன்;
சித்தன் - சித்தத்தில் இருப்பவன்;
நித்தன் - என்றும் இருப்பவன்;
சுத்தன் - பரிசுத்தன்; தூயவன்;



7)
பெற்றமூர் முக்கணா பேதையோர் பாகனே
பெற்றவா உச்சியில் முற்றிலாத் திங்களாய்
உற்றவா உண்மையாய் நிற்பவா மும்மலம்
அற்றவா என்பவர்க் கில்லையோர் அல்லலே.



பெற்றம் ஊர் முக்கணன் - எருதின்மேல்றிச் செல்லும் நெற்றிக்கண்ணன்;
பேதை ஓர் பாகன் - பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன்;
உச்சியில் முற்றிலாத் திங்களாய் - திருமுடிமேல் இளம் பிறைச்சந்திரனை அணிந்தவனே;
உற்றவன் - உறவினன்; நண்பன்;



8)
அண்ணலார் மேவுவெற் பாட்டினான் ஓவெனப்
பண்ணினார் பத்துவாய் பாடவாள் நல்கினார்
வெண்ணிலாச் சூடினார் விண்ணவர் நாதனார்
எண்ணிலாப் பேரினார் தாள்தொழாய் நெஞ்சமே.



பதம் பிரித்து:
அண்ணலார் மேவு வெற்(பு) ஆட்டினான் '' எனப்
பண்ணினார்; பத்து வாய் பாட, வாள் நல்கினார்;
வெண் நிலாச் சூடினார்; விண்ணவர் நாதனார்;
எண் இலாப் பேரினார், தாள் தொழாய் நெஞ்சமே.


அண்ணலார் மேவு வெற்பு - சிவன் உறையும் கயிலை மலை;
பத்து வாய் பாட, வாள் நல்கினார் - இராவணன் தன் பத்து வாய்களாலும் பாடி வழிபடவும், அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற வாளைத் தந்தவர்;
எண் இலாப் பேரினார் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவர்;



9)
நான்முகன் கேசவன் தேடுநீள் சோதியே
கான்தனில் பல்கணம் காணநின் றாடுவாய்
மான்மறிக் கையனே மைந்நிறக் கண்டனே
நான்மகிழ்ந் தேத்துவேன் நாளுமுன் தாளையே.



கான் - சுடுகாடு;
பல் கணம் - பல பூதகணங்கள்;
மான்மறி - மான்கன்று; மான்குட்டி;
மைந்நிறம் - கருமை;
நாளும் - தினமும்;



10)
தெய்வமும் தேர்கிலார் பொய்யையும் கைவிடார்
உய்யவும் வல்லரோ? நையுநெஞ் சத்தராய்
"ஐயனே செய்யனே அம்மையோர் கூறனே
மெய்யனே" என்பவர் நிச்சயம் வெல்வரே.



தேர்தல் - அறிதல்; ஆராய்தல்; (தேர்கிலார் - அறியார் / அறியமாட்டார்);
நையு நெஞ்சத்தராய் - நையும் நெஞ்சத்தராய் - உருகும் மனத்தை உடையவராகி;
செய்யன் - சிவந்த நிறம் உடையவன்;
மெய்யன் - மெய்ப்பொருள் ஆனவன்;



11)
ஆற்றையும் தண்மதிக் கீற்றையும் சூடினான்
ஏற்றினில் செல்பவன் கூற்றையும் கொல்பவன்
தோற்றமொன் றற்றவன் தோத்திரம் செய்யவோர்
தோற்றமும் கொள்பவன் பேர்சொனால் ஏற்றமே.



தோற்றம் - 1) பிறப்பு; ஆரம்பம்; 2) உருவம்;
தோத்திரம் செய்ய - 1) துதிப்பதற்காக; 2) துதித்தால்;
தோத்திரம் செய்ய ஓர் தோற்றமும் கொள்பவன் - 1) பல பக்தர்கள் எளிதில் துதிப்பதற்காக உருவமும் கொள்பவன்; 2) பக்தர்கள் துதித்த வண்ணம் ஓர் உருவமும் ஏற்று வருபவன்;
ஏற்றம் - உயர்வு;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு.
அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' அமைப்புப் பெற்று வந்து, 4 அடிகளால் ஆவது.
பலரும் அறிந்த அச்சுதாஷ்டகம் இவ்வமைப்பில் அமைந்த பாடல்.
அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே)



சம்பந்தர் தேவாரம் - 3.35.7 -
கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.



No comments:

Post a Comment