Tuesday, August 18, 2015

01.57 – ஆரூர் - (கந்த பத்யம் - kanda padyam)


01.57 –
ஆரூர் - (கந்த பத்யம் - kanda padyam)



2010-01-01
திருவாரூர் - "கந்த பத்யம்"
-------------------------------------------
('கந்த பத்யம்' அமைப்பில் - in 'kanda padya' meter)
(இப்பாடல்களின் யாப்பு இலக்கணத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)



1)
நோய்க்கே இடமாய் ஒருநாள்
மாய்க்கக் காலன் வருவதை மனமே நினைநீ
பூக்கொடு போற்றிடு வார்வினை
தேய்க்கும் சிவனார் உறைவது திருவா ரூரே.



பதம் பிரித்து:
நோய்க்கே இடமாய், ஒரு நாள்
மாய்க்கக் காலன் வருவதை மனமே நினை நீ;
பூக்கொடு போற்றிடுவார் வினை
தேய்க்கும் சிவனார் உறைவது திருவாரூரே.


நோய்க்கே இடமாய் - பிணிக்கே இடமாகி;
"மனமே நினைநீ" என்ற சொற்றொடரை இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்; (“காலன் வருவதை மனமே நினை நீ& “மனமே நினை நீ …. சிவனார் உறைவது திருவாரூரே);
பூக்கொடு - பூக்கொண்டு - பூவால்;
போற்றிடுவார் வினை தேய்க்கும் சிவனார் - போற்றுவார்தம் வினைகளை அழிக்கும் சிவபெருமான்;



2)
ஆரும் வந்தடி போற்றின்
தீரும் தீவினை வருமிகு திருவொடு புகழே
நீரும் பாம்பும் சடைமேல்
சேரும் சிவனார் உறைகிற திருவா ரூரே.



பதம் பிரித்து:
ஆரும் வந்(து) அடி போற்றின்,
தீரும் தீவினை; வரு[ம்] மிகு திருவொடு புகழே;
நீரும் பாம்பும் சடைமேல்
சேரும் சிவனார் உறைகிற திருவாரூரே.


ஆரும் - எப்படிப்பட்டவரும்; (மிகவும் பாவம் செய்தவர்களே என்றாலும்);
போற்றின் - போற்றினால்;
"நீரும் பாம்பும் சடைமேல் சேரும் சிவனார் உறைகிற திருவாரூர்" என்பதை முதலில் இயைத்துக்கொள்க.



3)
அல்லல ளிக்கிற வினைபோம்
ஒல்லும் வகையால் வழிபட உடனடை மனமே
வெல்லும் செங்கண் விடைமேல்
செல்லும் சிவனார் உறைகிற திருவா ரூரே.



ஒல்லும் வகையால் - இயன்ற அளவில்;
செங்கண் விடை - சிவந்த கண்களையுடைய இடபம்;



4)
பகைவர் புரமெரி செய்தான்,
மிகையொரு கணையென நகையொடு; வினைகெட மனமே
புகலென அடைமதி முடிமேல்
திகழும் சிவனார் உறைகிற திருவா ரூரே.



பகைவர் புரம் எரி செய்தான் - முப்புரங்களை எரித்தவன்;
மிகை - அதிகம்; அனாவசியமானது (That which is unnecessary, superfluous);
நகையொடு - சிரிப்பினால்;
வினைகெட மனமே புகலென அடைமதி முடிமேல் திகழும் சிவனார் உறைகிற திருவா ரூர் - வினைகள் தீர மனமே தஞ்சமென அடைவாய், தஞ்சமென அடைந்த சந்திரன் தலைமேல் திகழ்கிற சிவபெருமான் உறைகின்ற திருவாரூரை; (“புகலென அடை” என்பதை இரு பக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);

5)
முன்னம் புரிவினை எல்லாம்
இன்னல் செயுமுன், தொழநினை என்மட நெஞ்சே,
மின்னற் சடையார், திங்கட்
சென்னிச் சிவனார் உறைகிற திருவா ரூரே.



முன்னம் புரிவினை - முன்பு செய்த வினை - பழவினை;
செயுமுன் - செய்யும் முன்;
மின்னற் சடையார் - மின்னல் போன்ற சடையை உடையவர்;
திங்கட் சென்னிச் சிவனார் - தலைமேல் சந்திரனை அணிந்த சிவபெருமானார்;
(சம்பந்தர் தேவாரம் - 1.62.8 - "...கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.")



6)
வசையில் வாழ்வுபெ றச்சேர்
அசைவில் பொருளாய் அசைவன ஆகும் சிவனூர்
இசையுட னறுபத முரலெண்
திசையார் புகழும் திருமலி திருவா ரூரே.



பதம் பிரித்து:
வசை இல் வாழ்வு பெறச் சேர்,
அசை(வு) இல் பொருள் ஆய், அசைவன ஆகும் சிவன் ஊர்,
இசையுடன் அறுபத[ம்] முரல், எண்
திசையார் புகழும், திரு மலி திருவாரூரே.


வசை இல் - பழி அற்ற; குற்றம் அற்ற;
அசை(வு) இல் பொருள் ஆய், அசைவன ஆகும் சிவன் - சராசரம் எல்லாம் ஆகும் சிவன்; (சராசரம் - The categories of movables and immovables); (அசைவன - இயங்குவன; சரம் - Category of movables); (அசைவு இல் பொருள் - அசரம் - Motionless things);
அறுபதம் - வண்டு;
முரல் - முரல்கிற; ஒலிக்கிற; பாடுகிற;
எண் திசையார் - எட்டுத் திக்குகளிலும் உள்ளவர்கள்; உலகத்தவர்;
திரு மலி - செல்வம் மிகுந்த;
இசையுடன் அறுபதம் முரல் திருவாரூர், எண்திசையார் புகழும் திருவாரூர், திரு மலி திருவாரூர், என்று இயைக்க;



7)
உன்னென் நெஞ்சே முன்வினை
என்னும் பிணியற நுதலிடை எரிவிழி உடையான்
மன்னன் தெள்ளமு தாகிய
தென்னன் சிவனார் உறைகிற திருவா ரூரே.



பதம் பிரித்து:
உன்(னு) என் நெஞ்சே, முன் வினை
என்னும் பிணி அற; நுதல் இடை எரி விழி உடையான்,
மன்னன், தெள் அமு(து) ஆகிய
தென்னன்; சிவனார் உறைகிற திருவாரூரே.


உன்னு - சிந்தி;
நுதல் இடை எரி விழி உடையான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);
மன்னன் - இறைவன்;
தென்னன் - அழகியவன்; இனியவன்; (தென் - அழகு; இனிமை);



8)
இகழவு ணன்வெற் பின்கீழ்
மிகவழ ஒருவிர லிடுமிறை விரைகழ லிணையே
புகலறி மனமே சேர்பிறை
திகழும் சடையான் உறைகிற திருவா ரூரே.



பதம் பிரித்து:
இகழ் அவுணன் வெற்பின்கீழ்
மிக அழ ஒரு விரல் இடும் இறை விரைகழல் இணையே
புகல்; அறி மனமே; சேர் பிறை
திகழும் சடையான் உறைகிற திருவாரூரே.


இகழ் அவுணன் - மதியாத அரக்கன் - இராவணன்;
வெற்பு - மலை - கயிலைமலை;
விரை கழல் இணை - மணம் கமழும் இரு திருவடிகள்;
(விநாயகர் அகவல் - “வித்தக விநாயக விரைகழல் சரணே”);
புகல் - அடைக்கலம்;



9)
ஓடும் காலம்; தூதர்
நாடும் தினமெவ ருறுதுணை? நற்றுணை வேண்டில்
பாடுக மனமே, அயனரி
தேடும் சிவனார் உறைகிற திருவா ரூரே.



தூதர் - எமதூதர்கள்;
அயன் அரி - பிரமனும் திருமாலும்;



10)
கையர் நாளும் சொல்கிற
பொய்கள் மதியேல் மணமிகு பூவிட் டன்பால்
கைதொழு வார்கட் கருளும்
செய்யன் மாதோ டுறைவது திருவா ரூரே.



கையர் - கீழோர்;
நாளும் - நாள்தோறும்;
பொய்கள் மதியேல் - பொய்களை மதிக்கவேண்டா;
மணமிகு பூ இட்டு அன்பால் கைதொழுவார்கட்கு அருளும் - வாசம் மிகுந்த பூக்களைத் தூவி அன்போடு கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற;
செய்யன் - செம்மேனியன்;
மாது - பார்வதி;



11)
மார்க்கம் தெளிமன மேசேர்
நீர்க்குமி லைக்கும் மகிழ்ந்து நேயர்க் கரணாய்
ஆர்க்கும் வல்வினை யாவும்
தீர்க்கும் சிவனார் உறைகிற திருவா ரூரே.



பதம் பிரித்து:
மார்க்கம் தெளி, மனமே, சேர்,
நீர்க்கும் இலைக்கும் மகிழ்ந்து, நேயர்க்(கு) அரணாய்,
ஆர்க்கும் வல்வினை யாவும்
தீர்க்கும் சிவனார் உறைகிற திருவாரூரே.


மார்க்கம் - வழி;
தெளிதல் - அறிதல்; தெளிவாதல்;
தெளி மனமே - 'மனமே தெளி' என்று ஏவலாகவும், 'தெளிந்த மனமே' என்று வினைத்தொகையாகவும் பொருள்கொள்ளலாம்;
நீர்க்கும் இலைக்கும் மகிழ்ந்து - நீர், இலை, முதலிய எளிய பொருள்களால் வழிபட்டாலும் அதற்கு மகிழ்ந்து;
(இலக்கணக் குறிப்பு: இலைக்கும்மகிழ்ந்து - மகர ஒற்று விரித்தல்; (விரித்தல் - செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது). யாப்பு நோக்கி மகர ஒற்று விரிந்தது.)
நேயர்க்கு அரணாய் - பக்தர்களுக்குப் பாதுகாவலாகி;
ஆர்க்கும் வல்வினை - பிணித்துள்ள தீவினைகள்; (ஆர்த்தல் - பிணித்தல்; ஒலித்தல்);
('திருவெம்பாவை - "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்")


(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "காள கண்டன் அவனதா ரூர்தொழு துய்யலா[ம்] மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.");
(சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்....");



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
கந்த பத்யம் - ( kanda padyam” metre )
---------------------------------
"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை. தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).
இப்பாடல் அமைப்பின் இலக்கணம் (நான் அறிந்த அளவில்):
1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"



3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z
இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:



X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU IUI UII UU
W = "IUI" (லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU UII UU
Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IUI
Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIU UU
4) எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே முதற்சீரில் எதுகை அமைய வேண்டும்.
5) மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.



மேலதிகக் குறிப்பு : தமிழ் யாப்பை ஒட்டி ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் '' ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாக – அதாவது 'குரு' - என்று கருதப்படும்).

------------------- 

No comments:

Post a Comment