Friday, August 21, 2015

01.75 – பொது - (மனம் போன போக்கில்)


01.75 –
பொது - (மனம் போன போக்கில்)



2010-07-24
பொது
'மனம் போன போக்கில்'
--------------------------------
(அறுசீர் விருத்தம் - 4 மா + 'மா-கருவிளங்காய் / விளம்-கூவிளங்காய்' - என்ற அமைப்பு.
மண்டலித்து வரும் அந்தாதி அமைப்பில். முதற்பாடல் 'மிடறு' என்று தொடங்குகின்றது. கடைசிப்பாடல் 'நீல மிடற்றினனே' என்று முடிகின்றது.)
(கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா - 9.20.7 - “இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற”)
(சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - 'ஒல்லை யாறி' என்ற பதிக அமைப்பையும் ஓரளவிற்கு ஒத்திருக்கும்)



1)
மிடறு தன்னில் ஆல கால விடமணி போல்திகழும்
சடையின் மீது தண்ணி லாவும் தாதவிழ் நாண்மலரும்
அடையும் மோத வந்த பனைக்கை ஆனையின் ஈருரிவை
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே.



பதம் பிரித்து:
மிடறு தன்னில் ஆலகால விடம் மணி போல் திகழும்;
சடையின் மீது தண் நிலாவும், தாது அவிழ் நாண்மலரும்
அடையும்; மோத வந்த பனைக்கை ஆனையின் ஈர் உரிவை
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யல் உண்டே.


மிடறு - கண்டம்; கழுத்து;
தண் நிலாவும் - குளிர்ச்சி பொருந்திய திங்கள்;
தாது - மகரந்தம்;
அவிழ்தல் - உதிர்தல்; மலர்தல்;
நாண்மலர் - நாள்+மலர் - புதுமலர்;
ஈர் உரிவை - உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்; உரிவை - தோல்);
உய்யல் - உய்தல்;



2)
உய்யு மாறு செய்வ தொன்றும் உள்ளுவ தின்றிநிதம்
மெய்யை எண்ணிப் பொய்யை நண்ணி வினைக்கட லுள்விழுந்து
வையம் தன்னில் வந்து வந்து மயங்குகி றார்களைப்போல்
தொய்ய வேண்டா முக்கண் அப்பன் துணையடி போற்றுநெஞ்சே.



உய்யுமாறு - உய்யும்படி;
உள்ளுதல் - சிந்தித்தல்;
மெய் - உடல்;
நண்ணுதல் - அடைதல்;
வந்து வந்து - மீண்டும் மீண்டும் பிறந்து;
துணை அடி - இரு திருவடிகள்; துணையாக உள்ள திருவடி;


மனமே! உய்வதற்குச் செய்யவேண்டியதைச் சிந்தியாமல், என்றும் உடலையே ஓம்ப எண்ணி வஞ்சகமே செய்து, பெரிய வினைக்கடலுள் மூழ்கி, மீண்டும் மீண்டும் பிறந்து மயங்குகிறவர்களைப்போலத் தொய்வு அடையாதே! மூன்று கண்களையுடைய எந்தை சிவபெருமானின் இரு திருவடிகளை வணங்குவாயாக!

3)
நெஞ்சு தன்னில் வஞ்சம் இன்றி நித்தல் அரன்திருத்தாள்
தஞ்சம் என்றே அஞ்செ ழுத்தைத் தழுவிய நாவினர்க்குச்
செஞ்ச டைமேல் திங்கள் ஏற்ற சிவபெரு மானருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே.



நித்தல் - தினமும்;
எஞ்சல் - எஞ்சுதல் - மிச்சம்;


மனத்தில் வஞ்சம் இல்லாமல், தினந்தோறும் சிவபெருமானின் திருவடியே தஞ்சம் என்று, திருவைந்தெழுத்தை ஓதும் நாவை உடைய பக்தர்களுக்குச், செஞ்சடையின்மேல் சந்திரனைத் தாங்கும் அப்பெருமானின் அருளால் எல்லா வினைகளும் தீர்ந்து இன்பமே நிலைக்கும்.



4)
நிலைகொள் ளாமல் அலையும் நெஞ்சே, நிறைவு விரும்புதியேல்,
அலைகொள் கங்கை ஆறு தன்னை அஞ்சடை வைத்தருளும்
தலைவன், அம்பை எய்யும் வேளைத் தழலெழ நோக்கியவன்,
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே.



நிறைவு - பூரணம்; மகிழ்ச்சி; திருப்தி; மிகுதி;
விரும்புதியேல் - விரும்புவாயானால்;
அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;
வேள் - காமன்;
கலை ஒன்று ஏந்தி - ஒரு மானை ஏந்துபவன்;
கழல் இணை - இரு திருவடிகள்;



5)
கருதும் கருத்தாய்ச் சொல்லும் சொல்லாய்க் காண்கிற காட்சியுமாய்
அரிதின் அரிதாய் எளிதின் எளிதாய் இருக்கிற ஈசனவன்
பெரிதிற் பெரியன் சிறிதிற் சிறியன் பெண்ணொரு கூறுடையான்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே.



அரிதின் அரிதாய் - அரியவற்றினும் அரியவன் ஆகி; (போற்றாதவர்க்கு அடைய இயலாதவன்);
எளிதின் எளிதாய் - பக்தர்களால் மிகவும் எளிதில் அடையப்படுபவனாகி;
பெரிதிற் பெரியன் சிறிதிற் சிறியன் - பெரிதின் பெரியன் சிறிதின் சிறியன் - பெரியவற்றினும் பெரியவன், சிறியவற்றினும் சிறியவன்;
பொருது வினை - தாக்குகிற வினை;



6)
மகிழ எண்ணிப் பணத்தை எண்ணி மதியை மயக்குகிற
புகழை எண்ணிப் போது போக்கும் புன்மை தவிர்மனமே;
திகழ மதியைச் சென்னி வைத்த சிவபெரு மானடியைப்
பகலும் இரவும் பத்தி செய்து பாட வரும்திருவே.



எண்ணுதல் - சிந்தித்தல்; கணக்கிடுதல் (count);
போது போக்குதல் - காலத்தைக் கழித்தல்;
புன்மை - கீழ்மை;
சென்னி - தலை;
பத்திசெய்தல் - பக்தியோடு வழிபடுதல்;
திரு - நன்மை; செல்வம்;


மனமே! மகிழ விரும்பிப், பணத்தை எண்ணிப், புத்தியைப் பேதலிக்கச் செய்கிற புகழை எண்ணிக், காலத்தை வீணாக்கும் கீழ்மையைத் தவிர்வாயாக! திகழும்படி திங்களைத் தலைமேல் வைத்த சிவபெருமானின் திருவடியை இரவும் பகலும் பக்தியோடு பாடி வணங்கினால் எல்லாச் செல்வங்களும் பெறலாம்.



7)
திருவ ளிக்கும், தொடர்ந்து வந்த தீய வினைத்தொகுதிக்
கருவ ழிக்கும், கணையை ஏவு காமனை ஓர்நொடியில்
உருவ ழிக்கும் முக்கண் எந்தை உலகு படைத்தவனின்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே.



திரு - நன்மை; செல்வம்;
கரு அழிக்கும் - அடியோடு அழிக்கும்;
உரு அழிக்கும் - உருவத்தை அழிக்கும்;



8)
மனத்த கந்தை மிக்கி லங்கை மன்னன் அரன்மலையைச்
சினத்தொ டாட்ட அங்கு மெல்லத் திருவிரல் இட்டடர்த்தார்
பனைக்கை வேழத் துரிவை யாரைப் பாடி அவன்தொழவாள்
தனைக்கொ டுத்த ஈச னாரைச் சார வரும்சுகமே.



பதம் பிரித்து:
மனத்து அகந்தை மிக்கு இலங்கை மன்னன் அரன்மலையைச்
சினத்தொடு ஆட்ட, அங்கு மெல்லத் திருவிரல் இட்டு அடர்த்தார்;
பனைக்கை வேழத்து உரிவையாரைப் பாடி அவன் தொழ,
வாள் தனைக் கொடுத்த ஈசனாரைச் சார வரும் சுகமே (/சார அரும் சுகமே).


பனைக்கை வேழத்து உரிவையார் - பனை போன்ற துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்த்தவர்;
சார வரும் சுகம் - சார்ந்தால் சுகம் வரும்; / (சார அரும் சுகம்) சார்ந்தால் அரிய சுகம் ;


மனத்தில் ஆணவம் மிகுந்து, இராவணன் கோபத்தோடு சென்று கயிலைமலையைப் பிடுங்கி எறிய முயன்றபொழுது, அம்மலைமேல் மலர்போன்ற பாதவிரல் ஒன்றை இட்டு அவனை நசுக்கினார். பின், யானைத்தோலைப் போர்த்த சிவனைப் பாடி அவன் வணங்கவும், அவனுக்குச் சந்திரஹாம் என்ற வாளைத் தந்தருளினார். அப்பெருமானை அடைந்தால் அரிய சுகம் வரும்.



9)
சுகதுக் கங்கள் மாறி மாறிச் சுழன்று கலங்கனெஞ்சே
இகலும் இருவர் இடையில் எரியாய் எழுந்த பரம்பொருளைப்
புகலென் றடைவாய் புரிபுன் சடையுட் புனலன் நூல்திகழும்
அகலத் தையன் அகலா திருப்பான் அகலும் ஆரிருளே.



கலங்கனெஞ்சே - கலங்கல் நெஞ்சே; (கலங்கல் - கலங்காதே);
(சம்பந்தர் தேவாரம் - 2.79.5 - "பிறவியால் வருவன ..... அறவன் ஆரூர் தொழுது ய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே");
இகலுதல் - மாறுபடுதல்; போட்டிபோடுதல்;
புகல் - சரண்;
புரி புன் சடையுள் புனலன் - சுருண்ட சடையுள் கங்கையைத் தரித்தவன்;
அகலம் - மார்பு;
நூல் திகழும் அகலத்து ஐயன் - முப்புரிநூல் திகழும் மார்பை உடைய தலைவன்;
அகலுதல் - நீங்குதல்;
ஆரிருள் - பேரிருள்;
இருள் - அஞ்ஞானம்; துன்பம்;


நெஞ்சமே! சுகமும் துக்கமும் மாறி மாறிச் சுழன்று வருவதால் கலங்காதே! வாதிட்ட, போட்டியிட்ட பிரமனுக்கும் திருமாலுக்கும் நடுவே சோதியாக உயர்ந்த பரம்பொருளைச் சரணடைவாய். சடையுள் கங்கையை வைத்தவன், முப்புரிநூல் விளங்கும் மார்பு உடைய, தலைவன் நீங்காமல் துணையாக இருப்பான்; எல்லாத் துன்பங்களும் நீங்கும்.



10)
இருளை ஒளியென் றெண்ணி நிற்பார் ஏத மனத்தினராய்த்
தெருளில் லாது தெருவில் நிற்பார் செப்பிய சொல்விடுமின்;
அருளை வாரி அளிக்கும் அண்ணல் அடல்விடை மேலமரும்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறும்வினையே.



இருளை ஒளி என்று எண்ணி நிற்பார் - இருளை ஒளி என்று மனமயக்கத்தால் எண்ணுகின்றவர்கள்;
ஏத மனத்தினராய் - குற்ற நெஞ்சினர்கள் ஆகி; (ஏதம் - குற்றம்);
தெருள் இல்லாது தெருவில் நிற்பார் - தெளிவின்றித் தெருவில் நின்று பலவும் சொல்கின்றவர்கள் (தெருள் - தெளிவு);
செப்பிய சொல் விடுமின் - (அவர்கள்) சொல்லும் பேச்சை நீங்கள் புறக்கணியுங்கள்; (அவற்றை மதிக்கவேண்டா);
அடல் விடை - வலிய இடபம்;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அன்பின் உருவன் நாமம் ஓதில் அறும் வினையே - அன்பே வடிவான சிவபெருமான் திருநாமத்தை ஓதினால் வினைகள் நீங்கும்;



11)
வினைமி குத்துப் படையெ டுத்து வேதனை நல்குவதால்
நினைம றந்து திரியு மென்னை நின்னெறி சேர்த்தருளாய்
கனைக ழல்கள் பாடி யன்பர் கைதொழு கற்பகமே
நினைவ ரங்கள் நல்கு கின்ற நீலமி டற்றினனே.



நினை மறந்து - நின்னை மறந்து - இடைக்குறை விகாரம்;
நின் நெறி - உன் வழி;
கனைகழல் - வினைத்தொகை - கனைக்கின்ற கழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி;
நினைவரங்கள் - நினைகின்ற வரங்கள்;
நீல மிடற்றினன் - நீலகண்டன்; (மிடறு - கழுத்து);


என்மேல் வினைகள் மிகுத்துப் படையெடுத்து வந்து துன்பம் தருவதால் உன்னை மறந்து திரியும் என்னை உன் நெறியில் சேர்ப்பிப்பாயாக! ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடிகளைப் பாடிப் பக்தர்கள் கரங்குவித்துத் தொழும் கற்பகம் போன்றவனே! அவர்கள் மனத்தில் விரும்பும் வரங்களை எல்லாம் தந்தருளும் நீலகண்டனே!



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • அறுசீர் விருத்தம் - 4 மா + 'மா-கருவிளங்காய் / விளம்-கூவிளங்காய்' - என்ற அமைப்பு.
  • இப்பதிகம் மண்டலித்து வரும் அந்தாதி அமைப்பில் உள்ளது. (மண்டலித்து வரும் அந்தாதி அமைப்பில். முதற்பாடல் 'மிடறு' என்று தொடங்குகின்றது. கடைசிப்பாடல் 'நீல மிடற்றினனே' என்று முடிகின்றது.)
  • (ஆனால், கீழே குறிப்பிடப்பெற்ற தேவார, திருவிசைப்பாப் பதிகங்களில் அந்தாதித்தொடை இல்லை).
  • சம்பந்தர் தேவாரப் பதிகம் - 1.50.1 - 'ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ள மொழிந்துவெய்ய' என்ற பதிகத்தின் அமைப்பு - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவை ஒத்தது. (“தானதான தானதான தானன தானதனா" என்ற சந்த அமைப்பு)
  • கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா - 9.20.7 - “இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற” - அறுசீர் விருத்த அமைப்பு.
  • இவ்விரு பதிகங்களிலும் அடிதோறும் 5-6 சீர்களிடையே வெண்டளை பயில்கின்றது.
  • ஆறாம் சீர் விளங்காய். மேற்சுட்டிய திருமுறைப் பதிகங்களில் ஒரோவழி ஆறாம் சீர் மாங்காய்.

---- --------

No comments:

Post a Comment