2019-05-09
N.055 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2019
----------------
1) --- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ---
கழுமல நகரிறை உமைவர
அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்
வழுதியை நீறணி வித்தார்
பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.
கழுமலநகர் இறை உமை வர அழுதவர் - சீகாழிச் சிவபெருமானும் உமாதேவியும் வரும்படி அழுதவர்;
இசை ஆர் தமிழினை அருளிய நாவர் - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி அருளியவர்;
வழுதியை நீறு அணிவித்தார் - பாண்டிய மன்னனைத் திருநீறு பூசிச் சைவன் ஆக்கியவர்;
பழுது-இல் புகழார் - குற்றமற்ற புகழை உடையவர்;
அடியிணை பணி மடநெஞ்சே - அந்தத் திருஞான சம்பந்தரது இருதிருவடிகளை வழிபடு நெஞ்சமே.
* "கந்த பத்யம்" - இந்தப் பாடலின் யாப்புக்குறிப்பை "மதிசூடி துதிபாடி - தொகுதி 1" நூலின் பிற்சேர்க்கைப் பகுதியில் காண்க.
2) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---
காலனார் வீடவே காலையோச் செம்பிரான்
ஏலவார் கூந்தலாய் இங்கிவற் கூட்டெனப்
பாலையுண் பாலனார் பைந்தமிழ்ப் பாட்டறாச்
சீலனார் பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே.
காலனார் வீடவே காலை ஓச்சு எம்பிரான் - காலனே மாளும்படி காலை உயர்த்திய எம்பெருமான்; (வீடுதல் - சாதல்); (ஓச்சுதல் - உயர்த்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.103.9 - "வார்கழல் ஓச்சிக் காலனைக் கடந்த பெம்மான்");
"ஏல-வார்-கூந்தலாய்! இங்கு இவற்கு ஊட்டு" எனப் - "மணம் கமழும் நீண்ட கூந்தலை உடையவளே, இங்கு இவனுக்கு ஊட்டுவாயாக" என்று சொல்ல;
பாலை உண் பாலனார் - (அப்படி உமாதேவி ஊட்டிய) திருமுலைப்பாலை உண்ட காழிப்பிள்ளையார் சம்பந்தர்;
பைந்தமிழ்ப் பாட்டு அறாச் சீலனார் - அழகிய தமிழ்ப்பாமாலைகளை எப்பொழுதும் பாடியருளியவர்;
பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே - அந்தத் திருஞான சம்பந்தரது பொன்னடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;
3) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" - "dOdhakam" தோதகம்) ---
பாரின ருய்ந்திட நற்றொடை பாடி
நீரினி லேட்டினை நீந்திட வைத்தார்
நாரிசு ரந்தரு ளின்னமு துண்டார்
ஏரிய லுங்கழ லேத்திடு வோமே.
பதம் பிரித்து:
பாரினர் உய்ந்திட நற்றொடை பாடி
நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார்;
நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார்
ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே.
பாரினர் உய்ந்திட நல்-தொடை பாடி நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார் - உலகோர் உய்யுமாறு நல்ல தமிழ்ப்-பாமாலை பாடி வைகையாற்றில் தேவாரப்-பதிக ஏட்டினை மேல்நோக்கி நீந்தச்செய்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.54.11 - "தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்");
நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார் - உமை சுரந்தளித்த திருமுலைப்பாலை உண்டவர்;
ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே - அந்தத் திருஞான சம்பந்தரது அழகு பொருந்திய திருவடியைப் போற்றுவோம்; (ஏர் - அழகு); (இயல்தல் - பொருந்துதல்);
4) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---
மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப்
போனகம் செய்தவர் பூதியாற் பாண்டியர்
கோனுடல் வெப்பமண் கூட்டறத் தீர்த்தவர்
ஞானசம் பந்தனார் நற்கழல் வாழ்கவே.
மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப் போனகம் செய்தவர் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய சிவபெருமான் திருமேனியில் ஒரு பங்கு ஆன உமை தந்த திருமுலைப்பாலை உண்டவர்; (போனகம் - உணவு);
பூதியால் பாண்டியர்-கோன் உடல் வெப்பு, அமண் கூட்டு அறத் தீர்த்தவர் - திருநீற்றினால் பாண்டிய மன்னது உடலில் இருந்த ஜுரமும், சமணர் கூட்டமும் நீங்குமாறு செய்தவர்; (கூட்டு - உறவு; திரள்); (சம்பந்தர் தேவாரம் - 2.66.11 - "தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும்");
ஞானசம்பந்தனார் நற்கழல் வாழ்கவே - அந்தத் திருஞான சம்பந்தரது நன்மை பொருந்திய திருவடிகள் வாழ்க;
5) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" - வாய்பாடு) ---
அன்றாண்பனை குலையீன்றிட அரனாரடி ஏத்திக்
குன்றாத்தமிழ் உரைசெய்தவர் குடநீறது மங்கை
என்றாகிட அருள்செய்தவர் இருளார்நெறி எல்லாம்
வென்றாரவர் தமிழாகரர் விரையார்கழல் போற்றி.
அன்று ஆண்பனை குலை ஈன்றிட அரனார் அடி ஏத்திக் குன்றாத் தமிழ் உரைசெய்தவர் - முன்பு (திருவோத்தூரில்) ஆண்பனைமரங்கள் எல்லாம் (பெண்ணாகி) உடனே குலை ஈனும்படி சிவபெருமானது திருவடியைப் போற்றி என்றும் திருவருள் குன்றாத தமிழ்ப்பாமாலை பாடியவர்;
(சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.18.11 - "புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்ல")
குடநீறுஅது மங்கை என்று ஆகிட அருள்செய்தவர் - (மயிலாப்பூரில்) குடத்தில் இருந்த சாம்பல் பூம்பாவை ஆகும்படி அருளியவர்;
இருள் ஆர் நெறி-எல்லாம் வென்றார் அவர் - இருள் நிறைந்த புறச்சமயங்களையெல்லாம் வென்றவர்;
தமிழ் ஆகரர் - தமிமிழின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.117.11 - மாலைமாற்றுத் திருப்பதிகம் - ".... தமிழாகரனே");
விரை ஆர் கழல் போற்றி - அந்தத் திருஞான சம்பந்தரது வாசமலர்ப் பாதங்களை வணங்குகின்றேன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment