2019-04-28
N.054 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2019
----------------
("கந்த பத்யம்" - அமைப்பில்)
கேடில் வாழ்வது கிட்டும்
வாடிச் சுழலிந் நிலையறு வழிநினை நெஞ்சே
பாடிக் கல்புணை செய்தவ
ரீடில் வாக்கின் மனரடி யிணைதனை மறவேல்.
பதம் பிரித்து:
கேடு இல் வாழ்வு-அது கிட்டும்,
வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே;
பாடிக் கல் புணை செய்தவர்,
ஈடு-இல் வாக்கின்-மனர் அடியிணைதனை மறவேல்.
வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, வாடிக் கலங்குகின்ற இந்த நிலை தீர்வதற்கு வழியை எண்ணுவாயாக;
கேடு இல் வாழ்வு-அது கிட்டும் வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, உயர்கதி அடையும் வழியை எண்ணுவாயாக; ("வழி நினை நெஞ்சே" என்ற சொற்றொடரைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளலாம்);
("நெஞ்சே, வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை; கேடு இல் வாழ்வு-அது கிட்டும்" என்று இயைத்தும் பொருள்கொள்ளலாம்);
பாடிக் கல் புணை செய்தவர் - (கடலில் தம்மை ஆழ்த்தச் சமணர்கள் பிணித்த) கல்லையே, ஒரு பதிகம் பாடித் தெப்பம் ஆக்கியவர்; (புணை - தெப்பம்);
ஈடு-இல் வாக்கின்-மனர் அடியிணைதனை மறவேல் - ஒப்பற்ற திருநாவுக்கரசரது இருதிருவடிகளை மறவாதே! (மனர் - மன்னர்; இடைக்குறை விகாரம்) (சம்பந்தர் தேவாரம் - 1.16.8 - "இலங்கைமனன் முடிதோளிற");
பிற்குறிப்பு: "கந்த பத்யம்" - இந்தப் பாடல் அமைப்பில் தெலுங்கு, கன்னட மொழிகளில் பல நூல்கள் பாடப்பெற்றுள்ளன. இந்தப் பாடலின் யாப்புக்குறிப்பை "மதிசூடி துதிபாடி - தொகுதி 1" நூலின் பிற்சேர்க்கைப் பகுதியில் காண்க.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment