2019-04-10
P.467 - வெண்ணெய்நல்லூர்
-------------------------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா மா மா மா மா புளிமாங்காய் - வாய்பாடு; ஈற்றுச்சீர் ஒரோவழி தேமாங்காய்)
(சுந்தரர் தேவாரம் - 7.41.1 - முதுவாய் ஓரி கதற)
1)
பால்போல் நீற்றைப் பூசி மார்பில் .. பாம்பின் ஆரம் புனைவானே
நால்வே தத்தின் பொருளா னவனே .. நரைவெள் விடையொன் றுடையானே
நால்வாய் உரித்த நம்பா என்று .. நானும் தொழுதேன் அருளாயே
வேல்போல் நெடுங்கண் உமையாள் கணவா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
பால்போல் நீற்றைப் பூசி மார்பில் பாம்பின் ஆரம் புனைவானே - பால் போன்ற வெண்-திருநீற்றைப் பூசி, மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;
நால்வேதத்தின் பொருள் ஆனவனே - நான்மறைப்பொருள் ஆனவனே;
நரை-வெள்-விடை ஒன்று உடையானே - மிக வெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரை வெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");
நால்வாய் உரித்த நம்பா என்று நானும் தொழுதேன் அருளாயே - யானையை உரித்த நம்பனே என்று உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக; (நானும் - 1. இழிவுசிறப்பும்மை; 2. எச்சுவும்மை; அடியார்கள் தொழக்கண்டு நானும் தொழுதேன்). (அப்பர் தேவாரம் - 5.91.3 - "ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாய் உனை நானும் தொழுவனே");
வேல்போல் நெடுங்கண் உமையாள் கணவா - வேல் போன்ற நீண்ட கண்ணை உடைய உமைக்குக் கணவனே; (* வேற்கண்ணியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
2)
மானை மழுவை ஏந்தும் ஐயா .. மதியம் வாழும் முடியானே
கானை இடமாக் கருதும் கூத்தா .. கரிய மலைபோல் பொரவந்த
ஆனை உரித்தாய் அணிசே வடியை .. யானும் தொழுதேன் அருளாயே
மீனை ஒத்த கண்ணி பங்கா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
மானை மழுவை ஏந்தும் ஐயா - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவனே;
மதியம் வாழும் முடியானே - திங்களைத் திருமுடிமேல் வைத்தவனே;
கானை இடமாக் கருதும் கூத்தா - சுடுகாட்டில் திருநடம் செய்பவனே; (இடமா - இடமாக);
கரிய மலைபோல் பொரவந்த ஆனை உரித்தாய் - போர்செய்ய வந்த கரிய பெரிய யானையை உரித்தவனே; (பொருதல் - போர்செய்தல்);
அணி சேவடியை யானும் தொழுதேன் அருளாயே - உன் அழகிய சிவந்த திருவடியை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
மீனை ஒத்த கண்ணி பங்கா - மீன் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
3)
ஓலை ஒன்று காட்டி நாவ .. லூரர் தம்மை ஆட்கொண்டாய்
வேலை நஞ்சை அமுத மாக .. விரும்பி உண்ட மணிகண்டா
ஆல நீழல் அமர்ந்தாய் உன்னை .. யானும் தொழுதேன் அருளாயே
வேலை ஒத்த கண்ணி பங்கா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
ஓலை ஒன்று காட்டி நாவலூரர் தம்மை ஆட்கொண்டாய் - அடிமையோலையைக் காட்டிச் சுந்தரரை ஆட்கொண்டவனே; (நாவலூரர் - திருநாவலூரில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார்);
வேலை நஞ்சை அமுதமாக விரும்பி உண்ட மணிகண்டா - கடல்விடத்தை அமுதம்போல் விரும்பி உண்ட நீலகண்டனே; (வேலை - கடல்);
ஆலநீழல் அமர்ந்தாய் - கல்லால-மரத்தின்கீழ் இருந்தவனே;
உன்னை யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
வேலை ஒத்த கண்ணி பங்கா - வேல் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
4)
திரையார் கடலின் நஞ்சைக் கண்டு .. தேவ ரெல்லாம் மிகவஞ்சி
அரையா ஓலம் என்றி றைஞ்ச .. அவரைக் காத்த இறையோனே
நரையார் விடையை உடையாய் உன்னை .. நானும் தொழுதேன் அருளாயே
விரையார் சோலை புடைசூழ்ந் தழகார் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
திரை ஆர் கடலின் நஞ்சைக் கண்டு தேவரெல்லாம் மிக அஞ்சி - அலை மிக்க கடலின் விடத்தைக் கண்டு வானவர்களெல்லாம் மிகவும் நடுங்கி; (திரை - அலை)
அரையா ஓலம் என்று இறைஞ்ச - "அரசே! ஓலம்!" என்று தொழுது போற்றவும்; (அரையன் - அரசன்);
அவரைக் காத்த இறையோனே - அவர்களைக் காத்த இறைவனே;
நரை ஆர் விடையை உடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;
உன்னை நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
விரை ஆர் சோலை புடைசூழ்ந்து அழகு ஆர் - வாசம் மிக்க பொழில்களால் சூழப்பெற்ற அழகிய; (விரை - வாசனை);
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
5)
பந்தம் இன்றிச் சிந்தை ஒன்றிப் .. பகலும் இரவும் ஒழியாமல்
மந்தி ரத்தால் வாழ்த்து மாணி .. வாழக் காலன் தனைச்செற்றாய்
நந்தி என்ற நாமம் உடையாய் .. நானும் தொழுதேன் அருளாயே
வெந்த நீறு பூசும் விகிர்தா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
பந்தம் இன்றிச் சிந்தை ஒன்றிப் பகலும் இரவும் ஒழியாமல் - பற்றுகளை நீங்கி மனம் ஒன்றி இரவுபகல் எப்பொழுதும்;
மந்திரத்தால் வாழ்த்து மாணி வாழக் காலன்தனைச் செற்றாய் - வேதமந்திரங்களை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி கூற்றுவனை உதைத்தவனே; (செறுதல் - கோபித்தல்; அழித்தல்);
நந்தி என்ற நாமம் உடையாய் - நந்தி என்ற திருப்பெயரையும் உடையவனே; (நந்தி - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; ) (சம்பந்தர் தேவாரம் - 3.49.11 - "நந்தி நாமம் நமச்சிவாய எனும்"); (नन्दिः - Joy, pleasure, delight; - An epithet of Śiva);
நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
வெந்த நீறு பூசும் விகிர்தா - சுட்ட திருநீற்றைப் பூசிய விகிர்தனே; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
6)
சொன்ன வண்ணம் நாடி வந்து .. துரிசில் நம்பி ஆரூரன்
தன்னை அடிமை கொண்டு நாளும் .. தமிழைக் கேட்ட தனிநாதா
அன்ன நடையாள் உமையோர் பாகா .. யானும் தொழுதேன் அருளாயே
மின்னற் புரிநூல் விரவும் மார்பா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
சொன்ன-வண்ணம் நாடி வந்து, துரிசு-இல் நம்பி ஆரூரன்-தன்னை அடிமை கொண்டு - (முன்னம் கயிலையில்) சொன்னபடி தானே விரும்பித் தேடி வந்து, குற்றமற்ற சுந்தரரை அடிமையாக ஏற்றருளி; (துரிசு - குற்றம்);
நாளும் தமிழைக் கேட்ட தனி-நாதா - தினமும் இனிய தமிழைச் செவிமடுத்த ஒப்பற்ற தலைவனே; (தனி - ஒப்பற்ற);
அன்ன-நடையாள் உமை ஓர் பாகா - அன்னம் போல் நடையை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே;
யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
மின்னற் புரிநூல் விரவும் மார்பா - மின்னல்போல ஒளிவீசும் பூணூலை மார்பில் அணிந்தவனே;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
7)
ஆரும் உண்ண லாகா நஞ்சம் .. அரிய நீல மணியாகச்
சேரும் கண்டம் உடைய சிவனே .. சிவந்த சடைமேற் பிறையானே
ஆர மாக அரவம் பூண்டாய் .. யானும் தொழுதேன் அருளாயே
மேரு வில்லாற் புரமூன் றெய்தாய் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
ஆரும் உண்ணல் ஆகா நஞ்சம் அரிய நீல-மணியாகச் சேரும் கண்டம் உடைய சிவனே - எவராலும் உண்ண ஒண்ணாத ஆலகாலம் அரிய நீலமணி போலப் பொருந்தும் கண்டத்தை உடைய சிவனே;
சிவந்த சடைமேல் பிறையானே - செஞ்சடைமேல் பிறையை அணிந்தவனே;
ஆரமாக அரவம் பூண்டாய் - மாலை போலப் பாம்பை அணிந்தவனே; (ஆரம் - மாலை);
யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
மேரு-வில்லால் புரம் மூன்று எய்தாய் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எய்தவனே;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
8)
எண்ணா தோடி மலையைப் பேர்த்த .. இலங்கைக் கோனை நெரிசெய்து
பண்ணார் இசையைப் பாடக் கேட்டாய் .. பத்தர் தம்மைப் பழிபாவம்
நண்ணா வண்ணம் காக்கும் தலைவா .. நானும் தொழுதேன் அருளாயே
வெண்ணீ றணிந்த செந்தீ வண்ணா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
எண்ணாது ஓடி மலையைப் பேர்த்த இலங்கைக்கோனை நெரிசெய்து - சற்றும் யோசியாமல் ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி; (நெரிசெய்தல் - நெரித்தல் - நசுக்குதல்);
பண் ஆர் இசையைப் பாடக் கேட்டாய் - பிறகு, அவன் பண் பொருந்திய இசையைப் பாடி வழிபட, அதனைக் கேட்டு மகிழ்ந்தவனே;
பத்தர்-தம்மைப் பழி பாவம் நண்ணா-வண்ணம் காக்கும் தலைவா - அடியார்களைப் பழி பாவம் முதலியன அடையாதபடி அவர்களைக் காத்தருளும் தலைவனே;
நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
வெண்ணீறு அணிந்த செந்தீ வண்ணா - திருநீற்றை அணிந்த செந்தீப் போன்ற செம்மேனியனே;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
9)
கடல்மேல் துயில்மால் கமழ்தா மரையான் .. காணா தேத்த உயர்சோதீ
படமார் நாகம் அரைநா ணாகப் .. பதிகம் பாடிப் பலிதேர்வாய்
அடலே றுடையாய் அவிர்செஞ் சடையாய் .. யானும் தொழுதேன் அருளாயே
விடமே அமுதா விரும்பி உண்டாய் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
கடல்மேல் துயில் மால் கமழ்-தாமரையான் காணாது ஏத்த உயர் சோதீ - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் வாசத்தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் அடிமுடி காணாமல் வணங்கும்படி உயர்ந்த ஜோதியே;
படம் ஆர் நாகம் அரைநாணாகப் பதிகம் பாடிப் பலிதேர்வாய் - படமுடைய நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டிப், பாமாலைகளைப் பாடிப் பிச்சையேற்பவனே; (படம் - பாம்பின் படம்); (பதிகம் - பதியம் - பாட்டு); (சுந்தரர் தேவாரம் - 7.46.1 - "பத்தூர்புக்கு இரந்துண்டு பலபதிகம் பாடி");
அடல்-ஏறு உடையாய் - வலிய இடபத்தை ஊர்தியாக உடையவனே; (அடல் - வலிமை; வெற்றி);
அவிர்-செஞ்சடையாய் - ஒளிவீசும் செஞ்சடையை உடையவனே; (அவிர்தல் - பிரகாசித்தல்);
யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;
விடமே அமுதா விரும்பி உண்டாய் - ஆலகாலத்தையே அமுதம்போல் விரும்பி உண்டவனே; (அமுதா - அமுதாக);
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
10)
உண்மை தன்னை ஒளித்துப் பொய்யே .. உரைத்துத் திரிவார் தமைநீங்கும்
வண்மை மிக்க தமிழைப் பாடி .. வழுத்தும் அன்பர்க் கருள்செய்வான்
பெண்மை ஒருபால் உடைய ஒருவன் .. பேய்கள் சூழ நடமாடி
வெண்மை திகழும் நீறு பூசி .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
உண்மை-தன்னை ஒளித்துப், பொய்யே உரைத்துத் திரிவார்தமை நீங்கும் - உண்மையை மறைத்துப் பொய்யே பேசித் திரிகின்றவர்களை விட்டு நீங்குங்கள்;
வண்மை மிக்க தமிழைப் பாடி வழுத்தும் அன்பர்க்கு அருள்செய்வான் - வளம் மிக்க தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;
பெண்மை ஒருபால் உடைய ஒருவன் - திருமேனியில் ஒரு பக்கம் பெண்மையை உடைய ஒப்பற்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.5 - "ஒருமை பெண்மையுடையன்");
பேய்கள் சூழ நடமாடி - பேய்க்கணங்கள் சூழக் கூத்தாடுபவன்;
வெண்மை திகழும் நீறு-பூசி - வெண்ணீற்றைப் பூசியவன்;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
11)
நீள எண்ணி நாளும் ஏத்தும் .. நேயர் விரும்பு வரமீவான்
தாளை அடைந்த மதியம் தன்னைச் .. சடையின் மீது திகழ்வித்தான்
காள கண்டன் கால காலன் .. கருப்பு வில்லாற் கணையெய்த
வேளை நீறு செய்த விமலன் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.
நீள எண்ணி நாளும் ஏத்தும் நேயர் விரும்பு வரம் ஈவான் - மறவாமல் எப்போதும் நினைந்து தினமும் போற்றும் அன்பர்கள் விரும்பிய வரங்களைத் தருபவன்;
தாளை அடைந்த மதியம்-தன்னைச் சடையின் மீது திகழ்வித்தான் - திருவடியைச் சரண்புகுந்த திங்களைச் சடையின்மேல் ஒளிவீச வைத்தவன்;
காளகண்டன் - நீலகண்டன்;
காலகாலன் - காலனுக்கே காலன் ஆனவன்;
கருப்பு-வில்லால் கணை எய்த வேளை நீறு செய்த விமலன் - கரும்பை வில்லாக ஏந்தி அம்பு எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய தூயன்;
வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment