Wednesday, March 4, 2026

S.150 - சிவன் - பஜ்ஜி - சிலேடை

2016-03-26

S.150 - சிவன் - பஜ்ஜி - சிலேடை

----------------------------

நெய்யாடும் நீர்மையினால் நேயர்கண் மாந்திடும்

செய்யாரும் மேனியினாற் பண்ணினால் - வையா(து)

உலகார் அமுதென் றுரைத்தலால் பஜ்ஜி

இலைமூன் றுடைவேல் இறை.


சொற்பொருள்:

நெய் - 1. பசுவின் பாலிலிருந்து பெறப்படும் நெய்; / 2. எண்ணெய்;

ஆடுதல் - 1. அபிஷேகம் செய்யப்பெறுதல்; / 2. கூத்தாடுதல்; அசைதல்; குளித்தல்;

நீர்மை - தன்மை; குணம்;

நேயர்கண்மாந்திடும் - 1. நேயர் கண் மாந்திடும்; / 2. நேயர்கள் மாந்திடும்;

மாந்துதல் - அனுபவித்தல்; உண்ணுதல்;

செய் - செம்மை;

பண்ணினால் - 1. இசையால்; / 2. செய்தால்;

வையாது - 1. திட்டாமல்; (வைதல்); / 2. கொஞ்சமும் மீதி இல்லாமல்; (வைத்தல்);

ஆர் அமுது - 1. அரிய அமுது; 2. உண்ணும் அமுது (ஆர்தல் - உண்தல்);

இலை மூன்றுடை வேல் - திரிசூலம்;


பஜ்ஜி:

நெய் ஆடும் நீர்மையினால் - எண்ணெயில் குளித்துக் குதித்து ஆடுகின்ற தன்மையால்;

நேயர்கள் மாந்திடும் செய் ஆரும் மேனியினால் - அன்பர்கள் உண்கின்ற செம்மை மிக்க வடிவத்தினால்;

பண்ணினால் வையாது உலகு ஆர் அமுது என்று உரைத்தலால் - செய்தால் கொஞ்சமும் மீதி வைத்தல் இன்றி மக்கள் உண்ணும் அமுதம் போன்றது என்று சொல்வதனால்;

பஜ்ஜி - பஜ்ஜி என்ற பணியாரவகை;


சிவன்:

நெய் ஆடும் நீர்மையினால் - பசுவின் பாலிலிருந்து பெறப்படும் நெய்யால் அபிஷேகம் செய்யப்பெறுவதால்;

நேயர் கண் மாந்திடும் செய் ஆரும் மேனியினால் - பக்தர்கள் தம் கண்களால் கண்டு அனுபவிக்கும் செம்மேனியன் ஆவதால்;

பண்ணினால் வையாது உலகு ஆர் அமுது என்று உரைத்தலால் - திட்டாமல் உலகத்தினர் (இங்கே பக்தர்கள் என்ற பொருளில்) இசையால் (புகழ்ந்து பாடி) அரிய அமுதம் ஒத்தவன் என்று சொல்வதனால்;

இலை-மூன்றுடை-வேல் இறை - திரிசூலத்தை ஏந்திய இறைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------


No comments:

Post a Comment