2019-05-19
P.469 - வான்மியூர்
------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)
(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
(அச்யுதாஷ்டகம் - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
1)
நான்மறைப் பாடலார் நாவினான் நாதியன்
கூன்பிறைச் சென்னியான் கொம்பனாள் கூறமர்
கோன்பெருங் கூட்டமாய்த் தேவரெல் லாந்தொழ
வான்புரம் சுட்டவன் வான்மியூர் ஈசனே.
நான்மறைப் பாடல் ஆர் நாவினான் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;
நாதியன் - காப்பவன்; தலைவன்; (நாதி - உறவினன்; காப்போன்); (நாதியன் - தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான்");
கூன்-பிறைச் சென்னியான் - வளைந்த திங்களைத் தலையில் சூடியவன்; (கூன் - வளைவு);
கொம்பு அனாள் கூறு அமர் கோன் - பூங்கொம்பு போன்ற உமாதேவியை ஒரு பாகமாக விரும்பிய தலைவன்; (அனாள் - அன்னாள் - போன்றவள்); (அமர்தல் - விரும்புதல்);
பெருங்-கூட்டமாய்த் தேவரெல்லாம் தொழ, வான்-புரம் சுட்டவன் - பெரிய கூட்டமாக எல்லாத் தேவர்களும் வந்து வணங்க, இரங்கி, வானில் பறந்து திரிந்த முப்புரங்களை எரித்தவன்;
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;
2)
வெங்கனற் கண்ணினால் வேள்படப் பார்த்தவன்
கொங்கலர்க் கொன்றையைக் குஞ்சிமேற் சூடினான்
சங்கரன் தாழ்சடைத் தத்துவன் வெற்புமன்
மங்கையோர் பங்கினன் வான்மியூர் ஈசனே.
வெங்கனற் கண்ணினால் வேள் படப் பார்த்தவன் - சுட்டெரிக்கும் தீயை உமிழும் நெற்றிக்கண்ணால் காமன் அழியுமாறு நோக்கியவன்; (கனல் - தீ); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்து அன்று");
கொங்கு-அலர்க்-கொன்றையைக் குஞ்சிமேல் சூடினான் - தேன் நிறைந்த கொன்றைமலரைத் தலைமேல் சூடியவன்; (கொங்கு - வாசனை; தேன்); (அலர் - பூ); (குஞ்சி - தலை);
சங்கரன் - சுகத்தைச் செய்பவன்;
தாழ்சடைத் தத்துவன் - தாழும் சடையை உடைய மெய்ப்பொருள்;
வெற்பு-மன் மங்கை ஓர் பங்கினன் - மலையரசன் மகளை ஒரு பங்கில் உடையவன்; (மன் - அரசன்);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;
3)
வாசமார் பூவினால் வார்கழல் போற்றிடும்
நேசருக் கன்பினான் நெற்றியிற் கண்ணினான்
மாசிலாச் சீரினான் மாமதிக் கண்ணியான்
மாசுணக் கச்சினான் வான்மியூர் ஈசனே.
வாசம் ஆர் பூவினால் வார்-கழல் போற்றிடும் நேசருக்கு அன்பினான் - மணம் மிக்க பூக்களால் நீள்-கழலைப் போற்றும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்;
நெற்றியில் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;
மாசு-இலாச் சீரினான் - குற்றமற்ற தூய புகழ் உடையவன்;
மா-மதிக் கண்ணியான் - அழகிய திங்களைக் கண்ணிமாலை போலச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);
மாசுணக் கச்சினான் - பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;
4)
அங்கமோர் ஆறுடன் வேதமும் பாடினான்
மங்கைமார் தாமிடும் பிச்சைகொள் மாண்பினான்
சங்கமார் முன்கரத் தையலோர் பங்கினன்
வங்கமார் வேலைசூழ் வான்மியூர் ஈசனே.
அங்கம் ஓர் ஆறுடன் வேதமும் பாடினான் - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் பாடியருளியவன்;
மங்கைமார் தாம் இடும் பிச்சைகொள் மாண்பினான் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்கும் பெருமையை உடையவன்;
சங்கம் ஆர் முன்கரத் தையல் ஓர் பங்கினன் - வளையலை அணிந்த முன்கையை உடைய உமையை ஒரு பங்காக உடையவன்; (சங்கம் - கைவளை);
வங்கம் ஆர் வேலை சூழ் வான்மியூர் ஈசனே - அலை (/மரக்கலங்கள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்; (வங்கம் - அலை; மரக்கலம்); (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);
5)
வெஞ்சினச் சேவினான் விண்ணினார் வாழவே
நஞ்சினைத் துற்றவன் செஞ்சடைச் சேவகன்
அஞ்செழுத் தோதிநின் றன்புசெய் தார்க்கெலாம்
வஞ்சமில் கையினான் வான்மியூர் ஈசனே.
வெஞ்சினச் சேவினான் - கொடிய சினத்தையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்;
விண்ணினார் வாழவே நஞ்சினைத் துற்றவன் - தேவர்கள் உய்யும்படி ஆலகாலத்தை உண்டவன்; (அப்பர் தேவாரம் - 4.17.5 - "துற்றவர் வெண்டலையில்"); (திருத்தொண்டர் அந்தாதி - 11.33.25 - "விடம் அடையார் இட ஒள்ளமுதாத் துற்றவன்");
செஞ்சடைச் சேவகன் - சிவந்த சடையையுடைய வீரன்; (சேவகன் - வீரன்);
அஞ்செழுத்து ஓதிநின்று அன்புசெய்தார்க்கெலாம் வஞ்சம்-இல் கையினான் - நமச்சிவாய மந்திரத்தை ஓதி வழிபடும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவன்;
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
6)
ஆற்றினைச் சூடினான் ஆரழல் மேனிமேல்
நீற்றினைப் பூசினான் நித்தலும் தாள்மலர்
போற்றினார் துன்பெலாம் போக்கிடும் புண்ணியன்
மாற்றிலாப் பொன்னவன் வான்மியூர் ஈசனே.
ஆற்றினைச் சூடினான் - கங்காதரன்;
ஆரழல் மேனிமேல் நீற்றினைப் பூசினான் - அரிய தீப் போன்ற செம்மேனியின்மேல் திருநீற்றைப் பூசியவன்;
நித்தலும் தாள்மலர் போற்றினார் துன்பெலாம் போக்கிடும் புண்ணியன் - தினமும் திருவடித்தாமரையை வணங்கியவர்களது துன்பங்களையெல்லாம் தீர்க்கும் புண்ணியன்; (நித்தலும் - தினமும்; எந்நாளும்); (துன்பு - துன்பம்);
மாற்று-இலாப் பொன்-அவன் - தூய செம்பொன் போன்றவன்; (மாற்று இலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த); (அப்பர் தேவாரம் - 5.60.5 - "மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே");
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
7)
ஆழ்கடல் வல்விடம் தான்மருந் தாக்கினான்
தாழ்பவர்க் கன்பனாய்த் தாயினும் காப்பவன்
வீழ்பெருங் கங்கையும் வெண்மதித் துண்டமும்
வாழ்சடைப் பெற்றியான் வான்மியூர் ஈசனே.
ஆழ்கடல் வல்விடம் தான் மருந்து ஆக்கினான் - ஆலகாலத்தை அமுது ஆக்கியவன் அவன்; (தான் - தேற்றச்சொல்; படர்க்கை ஒருமைப் பெயர்);
தாழ்பவர்க்கு அன்பனாய்த் தாயினும் காப்பவன் - வணங்கும் பக்தர்களுக்கு அன்புடையவன் ஆகி அவர்களைத் தாயினும் மேலாகப் பாதுகாப்பவன்;
வீழ் பெருங்-கங்கையும் வெண்மதித்-துண்டமும் வாழ் சடைப் பெற்றியான் - வானிலிருந்து வீழ்ந்த பெரிய கங்கையாறும் வெண்பிறையும் வாழ்கின்ற சடையை உடைய பெருமையை உடையவன்; (பெற்றி - பெருமை);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
8)
நாமமோ தாதுபோய் நல்லவெற் பேந்தினான்
மாமலைத் தோளெலாம் வாடவே ஊன்றினான்
தாமரைத் தாளினாற் கூற்றினைச் சாய்த்தவன்
வாமமோர் மாதினான் வான்மியூர் ஈசனே.
நாமம் ஓதாது போய் நல்ல-வெற்பு ஏந்தினான் மா-மலைத்-தோளெலாம் வாடவே ஊன்றினான் - திருநாமத்தையும் திருப்புகழையும் பாடி வணங்காது, போய் நல்ல கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனது பெரிய மலை போன்ற புஜங்களெல்லாம் நசுங்கி அழியும்படி திருப்பாதவிரலை ஊன்றியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.120.8 - "விடைத்த வல்லரக்கன் நல்வெற்பினை எடுத்தலும்"); (அப்பர் தேவாரம் - 5.42.10 - "முடி பத்திற வாட ஊன்றி மலரடி வாங்கிய");
தாமரைத்-தாளினால் கூற்றினைச் சாய்த்தவன் - தாமரைப்-பாதத்தால் காலனை உதைத்து அழித்தவன்;
வாமம் ஓர் மாதினான் - உமாதேவியை இடப்பாகமாக உடையவன்; (வாமம் - இடப்பக்கம்);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
9)
பூமகன் மாலிவர் போற்றுமா றோங்கினான்
கோமகன் குஞ்சியிற் கூவிளம் சூடினான்
தூமனத் தொண்டருக் கோரரண் சுந்தரன்
வாமமோர் மாதினான் வான்மியூர் ஈசனே.
பூமகன் மால் இவர் போற்றுமாறு ஓங்கினான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் திருமாலும் போற்றும்படி ஜோதியாகி நீண்டவன்; (பூமகன் - பிரமன்);
கோமகன் - அரசன்;
குஞ்சியில் கூவிளம் சூடினான் - தலையில் வில்வத்தைச் சூடியவன்; (கூவிளம் - வில்வம்);
தூ-மனத்-தொண்டருக்கு ஓர் அரண் - தூய-மனம் உடைய அடியார்களுக்கு ஒப்பற்ற பாதுகாவல் ஆனவன்;
சுந்தரன் - அழகன்;
வாமம் ஓர் மாதினான் - உமாதேவியை இடப்பாகமாக உடையவன்; (வாமம் - இடப்பக்கம்);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
10)
பொய்த்தவம் செய்துழல் புன்மையர் வன்கணர்
தத்துவம் தேர்ந்திலார் எத்தினில் வீழ்ந்திடேல்
பத்தருக் கின்னலம் பல்குமா றீபவன்
மைத்தநஞ் சுண்டவன் வான்மியூர் ஈசனே.
பொய்த்தவம் செய்து உழல் புன்மையர், வன்கணர் - பொய்த்தவம் செய்து உழல்கின்ற கீழோர்கள், கொடியவர்கள்; (வன்கணர் - வன்கண்ணர் - கொடுமையுள்ளவர்);
தத்துவம் தேர்ந்திலார் எத்தினில் வீழ்ந்திடேல் - மெய்ப்பொருளை உணராதவர்கள் இவர்களது வஞ்சனையில் மயங்கி விழவேண்டா; (தேர்தல் - ஆராய்தல்; அறிதல்); (எத்து - வஞ்சகம்);
பத்தருக்கு இன்-நலம் பல்குமாறு ஈபவன் - பக்தர்களுக்கு இனிய நலம் பெருகும்படி அருள்பவன்; (பல்குதல் - மிகுதல்);
மைத்த நஞ்சு உண்டவன் - கரிய விடத்தை உண்டருளியவன்; (மை - கருநிறம்);
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
11)
முன்பணிந் தேத்தினார்க் கின்பமே நல்குவான்
என்பணிந் தாடுவான் ஏறதே றும்பரன்
முன்புமாய்ப் பின்புமாம் முக்கணன் மூப்பிலான்
வன்புலித் தோலினான் வான்மியூர் ஈசனே.
முன் பணிந்து ஏத்தினார்க்கு இன்பமே நல்குவான் - வணங்கித் துதிக்கும் அன்பர்களுக்கு இன்பத்தையே தருபவன்;
என்பு அணிந்து ஆடுவான் - எலும்பை அணிந்து கூத்து ஆடுபவன்; (என்பு - எலும்பு);
ஏறுஅது ஏறும் பரன் - இடபவாகனம் உடைய பரமன்;
முன்புமாய்ப் பின்பும் ஆம் முக்கணன், மூப்பு இலான் - காலத்தைக் கடந்தவன், நெற்றிக்கண்ணன், என்றும் இளமையோடு இருப்பவன்;
வன்-புலித் தோலினான் - கொடிய வலிய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்;
வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
வடமொழி யாப்பில் "ஸ்ரக்விணீ" (sragviNI - स्रग्विणी ) என்ற பெயரில் அழைக்கப்பெறும் சந்தம்; அடிதோறும் "குரு-லகு-குரு" என்ற அமைப்பு நான்கு முறை வரும்.
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்";
சம்பந்தர் தேவாரம் - 3.33.3 - தாமலார் போலவே தக்கனார் வேள்வியை";
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment