2019-05-19
P.470 - பொது
------------------
(ஈரடிமேல் வைப்பு ;
தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - சந்தம்)
(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)
முற்குறிப்புகள்:
படிப்போர் வசதி கருதிச், சந்தம் கெடாத சில இடங்களில் சீர்கள் / சொற்கள் பிரித்துக் காட்டப்பெற்றுள்ளன. சந்தம் கெடாமையை வாசித்து உணர்க. முதற்பாடல் மட்டும் சீர் பிரித்தும் பதம் பிரித்தும் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில், ஒவ்வோர் அடியிலும் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் (= 3-ஆம் சீர், 8-ஆம் சீர்) நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
மேல்வைப்பாக உள்ள அடியும் அதே சந்த-அமைப்பே.
மேல்வைப்பாக உள்ள அடியின் பொருள் முதற்பாடலில் தரப்பட்டுள்ளது. எல்லாப் பாடல்களிலும் அதே மேல்வைப்பே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்.
1)
வன்னஞ்சை வானுய்ய உண்டான் - கோல
.. மாதைத்த னாகத்தி லோர்கூறு கொண்டான்
முன்னங்கொ டுங்கூற்று தைத்தான் - அந்த
.. முக்கண்ண னாற்றைச்ச டைச்சுற்ற வைத்தான்.
.. .. .. மாதேவ னாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பதம் பிரித்து:
வன்-நஞ்சை வான் உய்ய உண்டான்; - கோல
.. மாதைத் தன் ஆகத்தில் ஓர் கூறு கொண்டான்;
முன்னம் கொடும்-கூற்று உதைத்தான்; - அந்த
.. முக்கண்ணன் ஆற்றைச் சடைச்-சுற்ற வைத்தான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே, - சொல்லு,
.. .. .. .. வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே.
வன்-நஞ்சை வான் உய்ய உண்டான் - கொடிய ஆலகாலத்தை வானோர்கள் உய்ய உண்டருளியவன்;
கோல மாதைத் தன் ஆகத்தில் ஓர் கூறு கொண்டான் - அழகிய உமையைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவன்;
முன்னம் கொடுங்-கூற்று உதைத்தான் - முன்பு கொடிய காலனை உதைத்தவன்;
அந்த முக்கண்ணன் ஆற்றைச் சடைச்-சுற்ற வைத்தான் - அந்த நெற்றிக்கண்ணன் கங்கையைச் சடையில் திரிய வைத்தவன்;
மாதேவன் நாமத்தை நாவே, சொல்லு - மகாதேவன் திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;
வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே - அவனைத் துதிப்பவர்களுக்குப் பேரின்ப வாழ்வு கிட்டும்;
2)
ஆதார(ம்) நீயென்று போற்றும் - தொண்டர்
.. ஆனாத பேரின்ப வானத்தில் ஏற்றும்
போதாரு(ம்) நீள்வேணி ஈசன் - ஆனை
.. போலேறு தானேறு(ம்) மாமங்கை நேசன்
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
"ஆதாரம் நீ" என்று போற்றும் தொண்டர் ஆனாத பேரின்ப வானத்தில் ஏற்றும் - "நீயே என் பற்றுக்கோடு" என்று வணங்கும் தொண்டர்களை நீங்காத பேரின்ப வானுலகில் (சிவலோகத்தில்) ஏற்றுவான் (/ ஏற்றுகின்ற); (ஆதாரம் - பற்றுக்கோடு); (ஆனுதல் - நீங்குதல்); (பெரியபுராணம் - 12.8.57 - "செஞ்சடையவர் பொற்றாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர்");
போது ஆரு(ம்) நீள்-வேணி ஈசன் - (கொன்றை முதலிய பல) மலர்களை அணிந்த நீளும் சடையை உடைய ஈசன்; (போது - பூ); (ஆர்தல் - அணிதல்; நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை);
ஆனை போல் ஏறுதான் ஏறு(ம்), மா-மங்கை நேசன் - யானை போல இடபத்தை வாகனமாக (விரும்பி) ஏறுகின்ற, அழகிய உமைக்கு அன்பன்; (ஏறு - இடபம்); (மா - அழகிய); (* எல்லார்க்கும் தலைவனான ஈசன், யானையை வாகனமாகக் கொள்ளாமல், எருதை வாகனமாக மகிழ்ந்தவன்); (ஈசன்னானை - ஈசன் ஆனை; சந்தம் கருதி னகர ஒற்று விரித்தல் விகாரம்);
3)
வம்பார் சரத்தைத் தொடுத்தான் - அந்த
.. வம்பன்றன் ஆகத்தை நோக்காற் கெடுத்தான்
வெம்போரில் ஓர்வாளி தொட்டான் - அன்று
.. மேவார் புரஞ்சாம்பல் ஆமாறு சுட்டான்
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வம்பு ஆர் சரத்தைத் தொடுத்தான் அந்த வம்பன்-தன் ஆகத்தை நோக்கால் கெடுத்தான் - மணம் மிகுந்த கணையைத் தொடுத்தவனான அந்தக் கலகம் செய்யும் மன்மதனது உடலை நெற்றிக்கண்ணால் நோக்கிச் சாம்பலாக்கியவன்; (வம்பு - வாசனை); (வம்பன் - துஷ்டன்);
வெம்-போரில் ஓர் வாளி தொட்டான் - கொடிய போரில் ஒரு கணையை எய்தவன்; (வாளி - கணை);
அன்று மேவார் புரம் சாம்பல் ஆமாறு சுட்டான் - அன்று, பகைத்த அசுரர்களது முப்புரங்களும் சாம்பலாகும்படி எரித்தவன்; (மேவார் - பகைவர்);
4)
வானஞ்சு மாநஞ்சை ஆர்ந்தான் - நாக(ம்)
.. மார்பேற ஓர்வெள்ளை ஏறேறி ஊர்ந்தான்
ஆனஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - மொந்தை
.. ஆர்த்துக் கணஞ்சூழ நட்டம் புரிந்தான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பதம் பிரித்து:
வான் அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான் - நாகம்
.. மார்பு ஏற, ஓர் வெள்ளை ஏறு ஏறி ஊர்ந்தான்;
ஆன்-அஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - மொந்தை
.. ஆர்த்துக் கணம் சூழ நட்டம் புரிந்தான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே.
வான் அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான் - தேவர்கள் அஞ்சிய கொடிய விடத்தை உண்டவன்; (ஆர்தல் - உண்தல்);
நாகம் மார்பு ஏற, ஓர் வெள்ளை ஏறு ஏறி ஊர்ந்தான் - மார்பில் பாம்பை மாலையாகப் பூண்டு, ஒரு வெள்ளை எருதை வாகனமாக ஏறியவன்;
ஆன்-அஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் விரும்பியவன்; (ஆடல் - ஆடுதல் - அபிஷேகம் பெறுதல்);
மொந்தை ஆர்த்துக் கணம் சூழ நட்டம் புரிந்தான் - மொந்தை முதலிய வாத்தியங்களை வாசித்துப் பூதகணங்கள் சூழத் திருநடம் செய்பவன்; (மொந்தை - ஒருவகைப் பறை); (நட்டம் - கூத்து);
5)
வெற்பொன்றை வில்லாக்க வல்லான் - வெந்த
.. வெண்ணீறு சேர்மார்பன் ஒப்பொன்றும் இல்லான்
நெற்குன்று தோழர்க்க ளித்தான் - அன்பு
.. நீங்காத நெஞ்சத்தில் என்றும்க ளித்தான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வெற்பு ஒன்றை வில் ஆக்க வல்லான் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;
வெந்த வெண்ணீறு சேர் மார்பன் - சுட்ட திருநீற்றை மார்பில் பூசியவன்;
ஒப்பு ஒன்றும் இல்லான் - ஒப்பற்றவன்;
நெற்குன்று தோழர்க்கு அளித்தான் - தோழரான சுந்தரருக்கு நெல்மலையை அளித்தவன்; (* சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
அன்பு நீங்காத நெஞ்சத்தில் என்றும் களித்தான் - பக்தி பொங்கும் மனத்தில் மகிழ்ந்து உறைபவன்;
6)
கல்லாலு(ம்) மொத்துண்ட ஈசன் - எந்தை
.. கல்லாலை நாடும் பரன்பாவ நாசன்
அல்லார்ந்த கண்டன் கபாலன் - கங்கை
.. ஆற்றைப் புனைந்தான் அகன்மார்பில் நூலன்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
கல்லாலு(ம்) மொத்துண்ட ஈசன் - கல்லாலும் அடியுண்ட ஈசன்; (* சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபாடு செய்ததைச் சுட்டியது); (கல்லாலும் - உம் - எச்சவும்மை; மதுரையில் பாண்டியன் பிரம்பால் மொத்துண்டதையும் குறிப்பால் சுட்டியது);
எந்தை - எம் தந்தை;
கல்லாலை நாடும் பரன் - (சனகாதியர்க்கு உபதேசிக்கக்) கல்லாலமரத்தின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் பரமன்;
பாவநாசன் - (அடியார்களின்) தீவினையை அழிப்பவன்;
அல் ஆர்ந்த கண்டன் - கரிய கண்டன்; (அல் - இருள்);
கபாலன் - கையில் மண்டையோட்டை ஏந்தியவன்; மண்டையோட்டு மாலை அணிந்தவன்;
கங்கை-ஆற்றைப் புனைந்தான் - சடையில் கங்கையை அணிந்தவன்;
அகன்-மார்பில் நூலன் - விசாலமான மார்பில் பூணூல் அணிந்தவன்;
7)
வெண்டிங்கள் நீர்சூடு தேவன் - மேரு
.. வில்லேந்தி நால்வேத ஆறங்க நாவன்
கண்டத்தில் ஆலங் கரந்தான் - ஓடு
.. கையேந்தி ஏறேறி வந்தூண் இரந்தான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
வெண்-திங்கள் நீர் சூடு தேவன் - வெண்பிறையையும் கங்கையையும் சூடிய தேவன்;
மேரு-வில் ஏந்தி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);
நால்வேத ஆறங்க நாவன் - நால்வேதத்தையும் ஆறங்கத்தையும் பாடியருளியவன்;
கண்டத்தில் ஆலம் கரந்தான் - ஆலகாலத்தை ஒளித்த நீலகண்டன்;
ஓடு கையேந்தி ஏறு ஏறி வந்து ஊண் இரந்தான் - கையில் கபாலத்தை ஏந்தி, இடபவாகனத்தில் ஏறி வந்து பிச்சை ஏற்பவன்; (ஊண் - பிச்சை);
8)
ஓடிப்பொ ருப்பன்றெ டுத்தான் - கத்த
.. ஊன்றித் தொழச்செய்து நாமங் கொடுத்தான்
பாடிப் பணிந்தார்க்கு நல்லான் - மீண்டு
.. பார்மீது வாராமை தந்தாள வல்லான்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
ஓடிப் பொருப்பு அன்று எடுத்தான் கத்த ஊன்றித் தொழச்செய்து நாமம் கொடுத்தான் - கோபத்தோடு ஓடிப்போய்க் கயிலைமலையை பெயர்த்த தசமுகன் கத்தி அழும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கி, அவன் மனம் திருந்தி தன்னைத் துதிக்கச்செய்து, அவனுக்கு இராவணன் என்ற பெயரைக் கொடுத்தவன்; (பொருப்பு - மலை);
பாடிப் பணிந்தார்க்கு நல்லான் - பாடி வணங்கும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;
மீண்டு பார்மீது வாராமை தந்து ஆள வல்லான் - அத்தகைய அடியார்கள் உலகில் திரும்பவும் பிறவி அடையாதபடி அவர்களுக்குப் பேரின்பம் தந்து அவர்களை ஆட்கொள்பவன்;
9)
மாலான மாலோடு வேதன் - தேடி
.. வாயார வந்தித்த தீவண்ண நாதன்
வேலாயு தன்போற்று பாதன் - கங்கை
.. வெள்ளஞ் சடைப்பாய்ந்த தோடார்ந்த காதன்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
மால்-ஆன மாலோடு வேதன் தேடி வாயார வந்தித்த தீவண்ண நாதன் - மதிமயக்கம் உடையவர்களான திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாமல் போற்றி வணங்கிய ஜோதி-வடிவினனான தலைவன்; (மால் - அறியாமை; ஆணவம்); (வேதன் - பிரமன்);
வேலாயுதன் போற்று பாதன் - வேலை ஏந்தும் முருகனால் வழிபடப்படும் திருவடியினன்;
கங்கை வெள்ளம் சடைப் பாய்ந்த, தோடு ஆர்ந்த காதன் - கங்கையைச் சடையில் தரித்த, ஒரு காதில் தோடு அணிந்தவன்;
10)
பொய்யர்க்க ருள்செய்ய மாட்டான் - அங்கி
.. போல்வண்ணன் அஞ்சொல் மடப்பாவை வேட்டான்
மெய்யான தேவன் புராணன் - கோல
.. வெண்ணீறு பூசும் பிரான்அண்ட வாணன்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பொய்யர்க்கு அருள்செய்ய மாட்டான் - பொய்யர்களுக்கு அருள்புரியாதவன்;
அங்கி போல் வண்ணன் - தீப் போன்ற செம்மேனியன்; (அங்கி - நெருப்பு);
அஞ்சொல் மடப்பாவை வேட்டான் - இன்மொழி பேசும் அழகிய உமாதேவிக்குக் கணவன்; (அம் - அழகு); (வேட்டல் - மணம்புரிதல்);
மெய்யான தேவன் - மெய்ப்பொருள் ஆனவன், தேவாதிதேவன்;
புராணன் - மிகத் தொன்மையானவன்;
கோல வெண்ணீறு பூசும் பிரான் - அழகிய வெண்ணீற்றைப் பூசும் தலைவன்;
அண்டவாணன் - எங்கும் இருப்பவன்; (அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து வாழ்பவன்);
11)
பேர்நூறு பத்தான பெம்மான் - சூழ்ந்து
.. பேய்பாட ஆடும் பிரான்செய்யன் எம்மான்
பார்போற்ற ஈகின்ற கையன் - சீறு
.. பாம்பார் புலித்தோலன் என்றென்று(ம்) மெய்யன்;
.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு
.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.
பேர் நூறு-பத்து ஆன பெம்மான் - ஆயிரம் திருநாமங்கள் உடைய பெருமான்;
சூழ்ந்து பேய் பாட ஆடும் பிரான் - பேய்கள் சூழ்ந்து நின்று பாடக் கூத்து ஆடும் தலைவன்;
செய்யன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);
எம்மான் - எம் தலைவன்;
பார் போற்ற ஈகின்ற கையன் - உலகு போற்ற வரங்கள் அள்ளி வழங்கும் திருக்கரம் உடையவன்;
சீறு பாம்பு ஆர் புலித்தோலன் - புலித்தோல் ஆடைமேல் சீறும் பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
என்றென்றும் மெய்யன் - என்றும் அழியாத மெய்ப்பொருள்;
மாதேவன் நாமத்தை நாவே சொல்லு - மகாதேவன் திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;
வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே - அவனைத் துதிப்பவர்களுக்குப் பேரின்ப வாழ்வு கிட்டும்;
பிற்குறிப்பு: மார்கபந்து ஸ்தோத்ரம்:
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ, ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
பா²லாவநம்ரத்கிரீடம்ʼ பா²லநேத்ரார்சிஷா த³க்³த⁴பஞ்சேஷுகீடம் .
ஶூலாஹதாராதிகூடம்ʼ, ஶுத்³த⁴மர்தே⁴ந்து³சூட³ம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்..
இப்பாடலின் சந்த-அமைப்பு - (U - குரு; I - லகு)
UUI UUI UU - UI UUI UUI UUI UU
UUI UUI UU - UI UUI UUI UUI UU
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment