2019-04-16
P.468 - பொது
------------------
(வஞ்சித்துறை - தனதன தானா) (திருவிருக்குக்குறள் அமைப்பு)
(வடமொழியில் - ஶஶிவதனா - शशिवदना )
முற்குறிப்புகள் -
1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.
2. படிப்போர் வசதி கருதிச், சந்தம் கெடாத இடங்களில் சொற்களை ஒட்டிச் சீர்பிரித்துக் காட்டப்பட்டுளது. புணர்ச்சியும் அவ்வாறே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
1)
விடையை விரும்பும் .. கடவுள் அவற்குச்
சுடலை அரங்கம் .. விடமு(ம்) மருந்தே.
விடையை விரும்பும் கடவுள் அவற்குச் - இடபவாகனான சிவபெருமானுக்கு; (அவற்கு = அவன் + கு = அவனுக்கு);
சுடலை அரங்கம் - சுடுகாடே கூத்தாடும் சபை;
விடமும் மருந்தே = நஞ்சும் அமுது ஆகும்;
2)
பரவிய மாணிக்(கு) .. அரணென நின்றான்
குரவணி குஞ்சிப் .. பரமனை வாழ்த்தே.
பரவிய மாணிக்கு அரண் என நின்றான் - வழிபாடு செய்த மார்க்கண்டேயருக்குக் காவல் ஆனவன்;
குரவு அணி குஞ்சிப் பரமனை வாழ்த்தே - குராமலரைத் திருமுடிமேல் அணிந்த சிவபெருமானை வாழ்த்து; (குரவு - குராமலர்); (குஞ்சி - சென்னி);
3)
தருநிழல் நால்வர்க்(கு) .. அருமறை ஓதும்
குருபரன் அன்பர்க்(கு) .. இருவினை தீர்வே
தரு-நிழல் நால்வர்க்கு அருமறை ஓதும் குருபரன் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;
அன்பர்க்கு இருவினை தீர்வே - அவனை வழிபடும் பக்தர்களுக்கு இருவினை நீக்கம் ஆகும்;
4)
கரியுரி போர்த்தான் .. வரியர வார்த்தான்
பெரியவன் நாமம் .. தரிமட நெஞ்சே.
கரியுரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கரி - யானை); (உரி - தோல்);
வரியரவு ஆர்த்தான் - வரிகளையுடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
பெரியவன் நாமம் தரி மட-நெஞ்சே - மகாதேவன் அவன் திருநாமத்தைப், பேதைமனமே, நீ எண்ணு;
5)
கடிமலர் அம்பற் .. பொடிபட நோக்கும்
அடிகளை வாழ்த்தச் .. செடிவினை வீடே.
கடிமலர் அம்பற் பொடிபட நோக்கும் - வாசமலரை அம்பாக உடைய மன்மதனைச் சாம்பலாகும்படி பார்த்த; (கடி - வாசனை); (அம்பற் பொடிபட - அம்பனைப் பொடிபட; இலக்கணக் குறிப்பு: இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவிற்காக முதற்சொல்லின் ஈற்றில் ன் - ற் என்று திரியும்);
அடிகளை வாழ்த்தச் செடிவினை வீடே - பெருமானை வாழ்த்தினால் தீவினைகள் நீங்கும்; (செடி - துன்பம்; தீமை);
6)
மறைமொழி நாவன் .. கறையணி கண்டன்
இறைவன் அளிப்பான் .. குறைகள் அறுத்தே.
மறைமொழி நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;
கறை அணி கண்டன் - நீலகண்டன்;
இறைவன் அளிப்பான் குறைகள் அறுத்தே - இறைவனான சிவபெருமான் பக்தர்களது குறைகளைத் தீர்த்து அருள்வான்;
7)
முடிவிலி அண்ணல் .. பொடியணி பெம்மான்
அடியை அடைந்தோர் .. படியடை யாரே.
முடிவு-இலி அண்ணல் - நித்தியன் (சாவாது என்றும் இருப்பவன்), தலைவன்;
பொடி அணி பெம்மான் - திருநீற்றைப் பூசிய பெருமான்;
அடியை அடைந்தோர் படி அடையாரே - அவனது திருவடியைச் சரணடைந்தவர்கள் மீண்டும் பூமியில் பிறக்கமாட்டார்கள்; (படி - பூமி);
8)
வரையது பேர்த்தான் .. அழவிரல் ஊன்றும்
வரதனை முக்கட் .. பரமனை வாழ்த்தே.
வரையது பேர்த்தான் அழ விரல் ஊன்றும் வரதனை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி திருவடி விரலை ஊன்றி அவனை நசுக்கிய, (பின்னர் அவன் பாடிய இசையைக் கேட்டு) வரம் அருள்பவனை; (வரை - மலை; அது - பகுதிப்பொருள்விகுதி);
முக்கட் பரமனை வாழ்த்தே - முக்கண்ணனைப், பரமனை வாழ்த்துவாயாக;
9)
அயனரி காணா .. வியனெரி ஆனான்
பெயருரை செய்தால் .. துயரற லாமே.
அயன் அரி காணா வியன்-எரி ஆனான் - பிரமன் விஷ்ணு இவர்களால் தேடிக் காண இயலாத பெரிய ஜோதிப்பிழம்பு ஆனவன்; (வியன் - பெரிய); (எரி - தீ);
பெயர் உரை-செய்தால் துயர் அறல் ஆமே - அப்பெருமானது திருநாமத்தைச் சொன்னால் துன்பம் நீங்கும்;
10)
வழியறி யார்சொல் .. மொழிகளை நாடேல்
மழுவனை வாழ்த்தப் .. பழவினை வீடே.
வழி-அறியார் சொல் மொழிகளை நாடேல் - நல்ல நெறியை அறியாதவர்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு மயங்காதே; (நாடுதல் - விரும்புதல்; நினைத்தல்);
மழுவனை வாழ்த்தப் பழவினை வீடே - மழுவை ஏந்திய சிவபெருமானை வாழ்த்தினால் பழவினைகள் நீங்கும்;
11)
கருமணி கண்டன் .. பொருவிடை ஏறும்
பெருமையி னான்றன் .. திருவடி போற்றி.
கருமணி கண்டன் - நீலமணியைக் கண்டத்தில் உடையவன்;
பொரு-விடை ஏறும் பெருமையினான்-தன் திருவடி போற்றி - போர்செய்ய வல்ல இடபத்தின்மேல் ஏறும் பெருமையை உடையவனது திருவடிகளுக்கு வணக்கம்; (பொருதல் - போர்செய்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment