2015-05-15
N.032 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015
--------------
(3 பாடல்கள்)
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
நலமில்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய
அலகில்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே
மலைமங்கை தருமுலைப்பால் மகிழ்ந்துண்டு தமிழ்பாட
உலகுய்யத் தாமழுதார் உபயமலர்த் தாள்போற்றி.
நலம் இல்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய - நன்மையில்லாத வேற்றுச்சமய நாணம் அற்றவர்கள் நீங்கும்படி;
அலகு இல்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே - அளவு கடந்த திருநடம் உடைய அப்பனான சிவன் அருளால்; (அலகு - அளவு);
மலைமங்கை தரு முலைப்பால் மகிழ்ந்து உண்டு தமிழ் பாட உலகு உய்யத் தாம் அழுதார் உபய-மலர்த்தாள் போற்றி - உமை தந்த திருமுலைப்பாலை இன்புற்று உண்டு தமிழ்ப்-பாமாலைகளைப் பாடவும், உலகம் உய்யவும், அழுதவரான திருஞானசம்பந்தரது இருமலர்ப்பாதங்களுக்கு வணக்கம்; (உபயம் - இரண்டு);
2) ------ அறுசீர் விருத்தம் (மா மா காய் - அரையடி வாய்பாடு) -----
மலரும் மதியும் வார்சடைமேல் .. வைத்தான் கோயில் தனைநோக்கிப்
புலரும் பொழுதில் மருகலிலே .. புலம்பி நின்றாள் தனக்கிரங்கித்
தலைவ தகுமோ இவ்வடியாள் .. தன்னுள் வருத்தம் எனப்பாடிக்
கலியைத் தீர்த்து வாழ்வித்த .. காழி மைந்தர் கழல்போற்றி.
* திருமருகலில் பாம்பு தீண்டியதால் இறந்த வணிகனை உயிர்ப்பித்த வரலாறு;
மலரும் மதியும் வார்சடைமேல் வைத்தான் கோயில்தனை நோக்கிப் - நீள்சடைமேல் மலர்களையும் சந்திரனையும் அணிந்த பெருமானது கோயிலை நோக்கி; (வார்தல் - நீள்தல்);
புலரும் பொழுதில் மருகலிலே புலம்பி நின்றாள்-தனக்கு இரங்கித் - விடியற்காலையில் திருமருகலில் புலம்பிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு இரங்கி;
"தலைவ தகுமோ இவ்வடியாள்தன் உள்-வருத்தம்" எனப் பாடிக் - "தலைவனே, இந்த அடியவளுடைய மனவருத்தம் உனக்குத் தகுமோ" என்று பதிகம் பாடி; (உள் - மனம்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் .. மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே");
கலியைத் தீர்த்து வாழ்வித்த - அவளது துன்பத்தைத் தீர்த்து அவளுக்கு வாழ்வு அளித்த; (வாழ்வித்தல் - வாழச்செய்தல்);
காழி மைந்தர் கழல் போற்றி - சீகாழியில் அவதரித்த திருமகனாரான திருஞான சம்பந்தரது திருவடிகளுக்கு வணக்கம்;
3) --- (வஞ்சித்துறை - மா மாங்காய் - வாய்பாடு) (திருவிருக்குக்குறள் அமைப்பு) ---
ஊனம் தீர்த்தின்ப
வானம் தான்நல்கும்
ஞான சம்பந்தன்
மானத் தாள்போற்றி.
நம் குற்றங்குறைகளைத் தீர்த்துச் சிவலோக வாழ்வை அருளும் திருஞான சம்பந்தரது மேன்மைமிக்க திருவடிகளுக்கு வணக்கம்.
(ஊனம் - குறைவு; குற்றம்); (மானம் - பெருமை - eminence); (கம்பராமாயணம் - "பொய்யிலான்தன் மானக்கழல் தாழும் வேலையில்"); (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - 11.34.42 - "பெறுவது நிச்சயம் .. பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால் .. .. எம்பெருமானவர் பொன்னுலகே");
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment