2015-06-05
P.286 - கருவிலிக் கொட்டிட்டை (கருவேலி)
------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(காய் காய் கருவிளம் காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
தவநால்வர்க் கறமுரைக்கத் தருவமர் சங்கரனார்
கவிநாலு மொழிகாழிக் கவுணியர்க் கருளீசர்
கவினாரும் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைச்
சிவனார்தாள் பணிந்தாரைத் திருமகள் அகலாளே.
தவ-நால்வர்க்கு அறம் உரைக்கத் தரு அமர் சங்கரனார் - சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் சங்கரர்; (தரு - மரம்; இங்கே, கல்லாலமரம்);
கவி-நாலு மொழி காழிக் கவுணியர்க்கு அருள் ஈசர் - நாற்கவிராஜர், சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞானசம்பந்தருக்கு அருளிய ஈசர்; (அருணகிரிநாதர் - திருவெழுகூற்றிருக்கை - "முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்");
கவின் ஆரும் பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைச் - அழகிய சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
சிவனார்-தாள் பணிந்தாரைத் திருமகள் அகலாளே - சிவபெருமானாரது திருவடியை வழிபடுவர்களை லட்சுமி நீங்கமாட்டாள்; (திருமகள் - இலக்குமி); (அகல்தல் - பிரிதல்; நீங்குதல்);
2)
கரஞ்சோரக் கடல்கடைந்தோர் கதறிட அவர்க்கிரங்கிப்
பெருஞ்சோகம் தீர்கண்டன் பிடிநடை உமைபங்கன்
கருஞ்சோலை புடைசூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பரஞ்சோதி அடியாரைப் பழவினை பற்றாவே.
கரம் சோரக் கடல்-கடைந்தோர் கதறிட அவர்க்கு இரங்கிப் பெருஞ்சோகம் தீர் கண்டன் - கைகள் களைப்புறும்படி பாற்கடலைக் கடைந்த தேவர்கள் (ஆலகாலத்தால் வருந்தி) அழுது தொழ, அவர்களுக்கு இரங்கி அவர்களது பெருந்துன்பத்தைத் தீர்த்தருளிய நீலகண்டன்; (சோர்தல் - தளர்தல்);
பிடிநடை உமைபங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (பிடி - பெண்யானை);
கருஞ்சோலை புடைசூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப் - அடர்ந்த சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
பரஞ்சோதி அடியாரைப் பழவினை பற்றாவே - மேலான ஜோதியான சிவபெருமான் அடியார்களைப் பழைய வினைகள் பற்றமாட்டா;
3)
எயில்வேவ மலைவில்லால் எரிகணை ஒன்றெய்தான்
புயல்போலத் திகழ்கண்டன் பொருவிடை ஊர்தியினான்
கயல்பாயும் வயல்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பயில்வானைப் பணிவாரைப் பழவினை பற்றாவே.
எயில் வேவ மலை-வில்லால் எரி-கணை ஒன்று எய்தான் - முப்புரங்களும் வெந்து அழிய மேருமலையை வில்லாக ஏந்தி எரிக்கும் அம்பு ஒன்றை ஏவியவன்; (எயில் - கோட்டை - முப்புரம்);
புயல் போலத் திகழ்-கண்டன் - மேகம் போலத் திகழும் நீலகண்டம் உடையவன்; (புயல் - மேகம்);
பொரு-விடை ஊர்தியினான் - போர்செய்யவல்ல எருதை வாகனமாக ஏறியவன்; (பொருதல் - போர்செய்தல்);
கயல் பாயும் வயல் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப் - கயல்மீன்கள் பாயும் (நீர்வளம் மிக்க) வயல் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
பயில்வானைப் பணிவாரைப் பழவினை பற்றாவே - தங்கிய பெருமானை வணங்கும் பக்தர்களைப் பழைய வினைகள் பற்றமாட்டா; (பயில்தல் - தங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின்றார்க்கு இல்லை பாவமே");
4)
மகனையருள் எனவானோர் வழிபட மயிலேறும்
குகனையருள் கண்ணுதலான் கொடிமிசை ஏறுடையான்
ககனமுயர் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பகவனதாள் பணிவாரைப் பழவினை பற்றாவே.
"மகனை அருள்" என வானோர் வழிபட மயில் ஏறும் குகனை அருள் கண்ணுதலான் - "(சூரனை அழிக்க) ஒரு மகனை அருள்க" என்று தேவர்கள் இறைஞ்ச, மயில்வாகனான முருகனை அருளிய நெற்றிக்கண்ணன்; (குகன் - முருகன்); (கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்);
கொடிமிசை ஏறு உடையான் - இடபக்கொடி உடையவன்;
ககனம் உயர் பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப் - வானளாவும் சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (ககனம் - விண்; ஆகாயம்);
பகவன தாள் பணிவாரைப் பழவினை பற்றாவே - பகவானுடைய திருவடியை வணங்கும் பக்தர்களைப் பழைய வினைகள் பற்றமாட்டா; (பகவன் - பகவான் - சிவன்); (அ - ஆறாம் வேற்றுமை உருபு);
5)
ஓரானை உரிமூடும் ஒருவனை முடிமீது
நீரானை நீறணிந்த நிமலனை விடையானைக்
காராரும் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
பேரானைப் பேசவல்லார் பிணிவினை நில்லாவே.
ஓர் ஆனை உரி மூடும் ஒருவனை - ஒரு யானையின் தோலை மார்புறப் போர்த்த ஒப்பற்றவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.15.1 - "கரியுரி மூடிய ஒருவன்");
முடிமீது நீரானை - கங்காதரனை;
நீறு அணிந்த நிமலனை - திருநீற்றைப் பூசிய தூயனை;
விடையானைக் - இடபவாகனனை;
கார் ஆரும் பொழில் சூழ்ந்த - மேகங்கள் பொருந்தும் சோலை சூழ்ந்த; (கார் - மேகம்; கருமை);
கருவிலிக் கொட்டிட்டை பேரானைப் - கருவிலிக் கொட்டிட்டையை என்றும் நீங்காதவனை; (பேர்தல் - போதல்);
பேச-வல்லார் பிணிவினை நில்லாவே - புகழவல்லவர்களுடைய பிணிகளும் வினைகளும் விலகும்; (பிணிவினை - 1. பிணித்த வினை; 2. பிணியும் வினையும்);
6)
நாற்றமலர் இடுமாணி நடுக்குற நண்ணியவெங்
கூற்றுவனைக் குமைத்தபிரான் குழைதிகழ் காதுடையான்
காற்றினிலே மணங்கமழும் கருவிலிக் கொட்டிட்டை
ஏற்றனடி பணிவாரை இருவினை நலியாவே.
நாற்றமலர் இடு மாணி நடுக்குற நண்ணிய வெங்-கூற்றுவனைக் குமைத்த பிரான் - வாசமலரைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரை நெருங்கிய கொடிய நமனை (உதைத்து) அழித்த தலைவன்; (மாணி - மார்க்கண்டேயர்); (நடுக்கு - நடுக்கம் - அச்சம்); (நண்ணுதல் - நெருங்குதல்); (குமைத்தல் - அழித்தல்); (பிரான் - தலைவன்);
குழை திகழ் காது உடையான் - காதில் குழையை அணிந்தவன்;
காற்றினிலே மணம் கமழும் கருவிலிக் கொட்டிட்டை - வீசும் காற்றில் (சோலைமலர்களின்) வாசனை கமழும் கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
ஏற்றன்-அடி பணிவாரை இருவினை நலியாவே - இடபவாகனன் திருவடியை வணங்கும் பக்தர்களை இருவினை வருத்தமாட்டா; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்);
7)
அந்திவண மேனியினான் அயிலுறு சூலத்தால்
அந்தகனைக் குத்தியவன் அரையினில் அரவார்த்தான்
கந்தமலி பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
எந்தையடி பணிவாரை இருவினை நலியாவே.
அந்திவண மேனியினான் - மாலைவேளைச் செவ்வானம் போன்ற செம்மேனி உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.28.1 - "அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே");
அயில்-உறு சூலத்தால் அந்தகனைக் குத்தியவன் - கூர்மை பொருந்திய சூலாயுதத்தால் அந்தகாசுரனை மார்பில் குத்தியவன்; (அயில் - கூர்மை); (அந்தகன் - அந்தகாசுரன்); (அப்பர் தேவாரம் - 6.96.5 - "அந்தகனை அயிற்சூலத்து அழுத்திக் கொண்டார்");
அரையினில் அரவு ஆர்த்தான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
கந்தம் மலி பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை - வாசனை கமழும் சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (கந்தம் - வாசனை);
எந்தை-அடி பணிவாரை இருவினை நலியாவே - எம் தந்தையாகிய பெருமான் திருவடியை வணங்கும் பக்தர்களை இருவினை வருத்தமாட்டா; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்);
8)
மழைநிறத்து வாளரக்கன் மணிமுடி பத்தடர்த்துப்
பிழைபொறுத்து வாளொடுநாள் பெரிதருள் செய்தபிரான்
கழனியிடைக் கயலுகளும் கருவிலிக் கொட்டிட்டை
அழல்நிறத்தன் அடியாரை அருவினை அடையாவே.
மழை-நிறத்து வாள்-அரக்கன் மணிமுடி பத்து அடர்த்துப் - கரிய நிறம் உடைய, கொடிய அரக்கனான இராவணனது கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் நசுக்கி; (மழை - மேகம்; கருமை); (வாள் - கொடுமை);
பிழை-பொறுத்து வாளொடு நாள் பெரிதருள் செய்த பிரான் - (பின் அழுது இறைஞ்ச) அவன் செய்த குற்றத்தை மன்னித்து அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் மிகவும் அருள்புரிந்த தலைவன்; (திருமந்திரம் - 10.3.11.2 - "பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே");
கழனியிடைக் கயல் உகளும் கருவிலிக் கொட்டிட்டை - வயிலில் கயல்மீன்கள் பாய்கின்ற கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (கழனி - வயல்); (உகள்தல் - தாவுதல்);
அழல்-நிறத்தன் அடியாரை அருவினை அடையாவே - தீவண்ணன் பக்தர்களை வினைகள் நெருங்கா; (அழனிறத்தன் - அழல் நிறத்தன்; அழல் - தீ); (அருவினை - தீர்த்தற்கு அரிய வினை);
9)
மண்ணிடந்த மாலுக்கும் மலருறை பிரமற்கும்
நண்ணலரி தாகியவன் நதியடை செஞ்சடையான்
கண்ணிறைந்த மலர்ப்பொழில்சூழ் கருவிலிக் கொட்டிட்டை
அண்ணலடி அடைந்தாரை அருவினை அடையாவே.
மண் இடந்த மாலுக்கும் மலர்-உறை பிரமற்கும் நண்ணல் அரிது ஆகியவன் - நிலத்தைத் தோண்டிய திருமால் தாமரையில் உறையும் பிரமன் இவர் இருவர்க்கும் அடிமுடி காண்பது அரிது ஆனவன்; (இடத்தல் - தோண்டுதல்);
நதி அடை செஞ்சடையான் - கங்கையை அடைத்த செஞ்சடையினன்;
கள் நிறைந்த மலர்ப்பொழில் சூழ் கருவிலிக் கொட்டிட்டை - தேன் நிறைந்த மலர்ச்சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (கண்ணிறைந்த - கள் நிறைந்த);
அண்ணல்-அடி அடைந்தாரை அருவினை அடையாவே - பெருமான் திருவடியைச் சரண்புகுந்த பக்தர்களை வினைகள் நெருங்கா; (அருவினை - தீர்த்தற்கு அரிய வினை);
10)
தெருவெங்கும் பொய்யொட்டிச் சிறுநெறிக் கழைக்கின்ற
பெருமிண்டர் பேச்சொழிமின் பிறையணி சடையெம்மான்
கருவண்டார் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
ஒருவன்றாள் பணிபத்தர் உயர்கதி பெறுவாரே.
தெரு-எங்கும் பொய் ஒட்டிச் சிறுநெறிக்கு அழைக்கின்ற பெரு-மிண்டர் பேச்சு ஒழிமின் - தெருக்களெங்கும் பொய்களைச் சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்து புன்னெறிக்கு அழைக்கின்ற ஈனர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்; அறிவில்லாதவர்); (மிண்டு - அறிந்து செய்யும் குற்றம்); (மின் - ஏவற்பன்மை விகுதி);
பிறை அணி சடை எம்மான் - சடையில் பிறையை அணிந்த எம் இறைவன்;
கருவண்டு ஆர் பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை - கரிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (ஆர்த்தல் - ஒலித்தல்);
ஒருவன் தாள் பணி பத்தர் உயர்கதி பெறுவாரே - ஒப்பற்றவனான சிவபெருமானது திருவடிகளை வணங்கும் பக்தர்கள் உயர்ந்த கதியை அடைவார்கள்; ( ஒருவன் - ஒப்பற்றவன்);
11)
குருமணியாய் ஆலமர்ந்தான் குளிர்மதி அதனயலே
பருமணியார் நாகத்தைப் படர்சடை மேல்வைத்தான்
கருமணியார் கண்டத்தன் கருவிலிக் கொட்டிட்டை
அருமணிதாள் அடைந்தாரை அருவினை அடையாவே.
குருமணியாய் ஆல் அமர்ந்தான் - தட்சிணாமூர்த்தி வடிவில் கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்தவன்; (குருமணி - குருசிரேஷ்டன் - தட்சிணாமூர்த்தி); (ஆல் - ஆலமரம்);
குளிர்-மதி அதன் அயலே பருமணி ஆர் நாகத்தைப் படர்-சடைமேல் வைத்தான் - படர்ந்த சடைமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரன் அருகே பருத்த மணியுடைய பாம்பை அணிந்தவன்; (பருமணி - பெரிய மணி; இங்கே, நாகரத்தினம்); (ஆர்தல் - பொருந்துதல்); (அப்பர் தேவாரம் - 6.73.1 - "பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்");
கருமணி ஆர் கண்டத்தன் - கரிய மணி போன்ற கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (ஆர்தல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.73.1 - "கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்);
கருவிலிக் கொட்டிட்டை - கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
அருமணி தாள் அடைந்தாரை அருவினை அடையாவே - அரிய மணி போன்றவனான சிவபெருமான் திருவடியைச் சரண்புகுந்த பக்தர்களை வினைகள் நெருங்கா;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment