Wednesday, December 14, 2022

P.280 - சேத்திரக்கோவை - வளமல்கு முதுகுன்றம்

2015-04-12

P.280 - சேத்திரக்கோவை

------------------

(2014 டிசம்பரில் தரிசித்த தலங்களில் பல தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)

(அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - வாய்பாடு;

காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரோ மாச்சீரோ வரலாம்; அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரல்மடவாள் பாகமா")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

வள(ம்)மல்கு முதுகுன்றம், வயல்சூழ்ந்த திருவைகல் மாடக் கோயில்,

குளிர்மல்கு பொழில்சூழ்ந்த கோழம்பம், நாள்தோறும் கும்பிட் டேத்தி

உளமுள்கும் அடியார்தம் ஊனம்தீர் பாம்புரம், உண்ணஞ் சத்தால்

கள(ம்)மல்கு கண்டத்தன் கருதிடங்கள் கைதொழுதால் கழியும் துன்பே.


* முதுமுகுன்றம் (விருத்தாசலம்), வைகல் மாடக்கோயில், திருக்கோழம்பம், திருப்பாம்புரம்.


உளம் உள்கும் அடியார்தம் ஊனம் தீர் - உள்ளத்தில் எண்ணும் அடியார்களது குறைகளைத் தீர்க்கும்; (ஊனம் - குறை, குற்றம்);

உண்-நஞ்சத்தால் களம் மல்கு கண்டத்தன் கருது-இடங்கள் கைதொழுதால் கழியும் துன்பே - உண்ட விடத்தால் கருமை விளங்கும் கண்டம் உடையவன் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் துன்பம் தீரும்; (களம் - கருமை); (கழிதல் - அழிதல்; ஒழிதல்); (துன்பு - துன்பம்);


2)

சென்றடைந்தார் வினைதீர்க்கும் சிறுகுடி, செல்வமருள் திருமீ யச்சூர்,

தென்றலிலே மணங்கமழும் திருவம்பர்ப் பெருங்கோயில், தேவர் கட்கா

அன்றுவிடம் ஆர்ந்தவன்றன் அம்பர்மா காளம், அரையில் நாகம்

ஒன்றசைத்த உத்தமன்றன் உறைவிடங்கள் கைதொழுதால் உய்ய லாமே.


* திருச்சிறுகுடி, திருமீயச்சூர், அம்பர்ப் பெருங்கோயில் (அம்பல்), அம்பர் மாகாளம் (கோயில் திருமாளம்).


தேவர்கட்கா அன்று விடம் ஆர்ந்தவன்றன் அம்பர் மாகாளம் - தேவர்களுக்காக முன்பு ஆலகாலத்தை உண்டவனது அம்பர் மாகாளம்; (ஆர்தல் - உண்தல்);

அரையில் நாகம் ஒன்று அசைத்த உத்தமன்றன் உறைவிடங்கள் கைதொழுதால் உய்யலாமே - அரையில் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டிய உத்தமன் உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் உய்தி பெறலாம்; (அசைத்தல் - கட்டுதல்);


3)

விண்ணிழி விமானம் விளங்குகின்ற திருவீழி மிழலை, வண்டின்

பண்ணிசை வேதவொலி பயில்திலதைப் பதி,வாளை பாயும் நீரார்

தண்வயல் சூழ்ந்திலங்கு சாட்டியக் குடி,செஞ் சடையின் மீது

வெண்மதி வைத்தபரன் விரும்பிடங்கள் கைதொழுதால் வினைகள் வீடே.


* திருவீழிமிழலை, திலதைப்பதி, திருச்சாட்டியக்குடி.


விண்ணிழி விமானம் விளங்குகின்ற திருவீழிமிழலை - விண்ணிழி விமானம் இருக்கும் திருவீழிமிழலை; (* திருவீழிமிழலைக் கோயில் விமானம் திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்றது - தலவரலாற்றுச் செய்தி); (அப்பர் தேவாரம் - 6.52.1 - "விண்ணிழி தண்வீழி மிழலையானே");

வண்டின் பண்ணிசை வேதவொலி பயில்-திலதைப்பதி - வண்டுகளின் இனிய ஒலியும் வேதத்தின் ஒலியும் கேட்கும் திலதைப்பதி; (பயில்தல் - நிகழ்தல்; தங்குதல்);

வாளை பாயும் நீர் ஆர் தண்வயல் சூழ்ந்து இலங்கு சாட்டியக்குடி - வாளை மீன்கள் பாயும் நீர் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சாட்டியக்குடி;

செஞ்சடையின் மீது வெண்மதி வைத்த பரன் விரும்பு-டங்கள் கைதொழுதால் வினைகள் வீடே - சிவந்த சடைமேல் வெண்பிறையை அணிந்த பரமன் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் வினைகள் தீரும்; (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "ஞானசம்பந்தன்சொல் விரும்புவார் வினை வீடே");


4)

அன்றாப்பே அரனுருவா அக(ம்)மகிழ்ந்து வழிபட்ட அடிய வட்காக்

கன்றாப்பில் நின்றருள் கன்றாப்பூர், புள்ளினத்தின் கானத் தோசை

குன்றாத வலிவலம், குளிர்பொழில்சூழ் கைச்சினம், குரவம் சூடி

மன்றாடு மணிகண்டன் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* திருக்கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்), திருவலிவலம், திருக்கைச்சினம் (கச்சனம்).


அன்று ஆப்பே அரன் உருவா அகம் மகிழ்ந்து வழிபட்ட அடியவட்காக் கன்று-ப்பில் நின்றருள் கன்றாப்பூர் - ஒரு பக்தைக்காகக் கன்றைக் கட்டும் ஆப்பில் எழுந்தருளிய திருக்கன்றாப்பூர்; (ஆப்பு - முளை); (* திருக்கன்றாப்பூர்த் தலரவரலாற்றுச் செய்தி);

(இலக்கணக் குறிப்பு : அடியவட்காக என்பது அடியவட்கா என்று வருவது போன்ற இடங்களில் வல்லொற்று மிகும். உதாரணம்: பெரியபுராணம் - 12.28.740 - "காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை");

புள்ளினத்தின் கானத்து ஓசை குன்றாத வலிவலம் - பறவைகளின் பாட்டு ஓசை எப்பொழுது கேட்கும் திருவலிவலம்; (புள் - பறவை); (கானம் - பாட்டு);

குரவம் சூடி மன்று-டு மணிகண்டன் மகிழ்-டங்கள் கைதொழுதால் மகிழலாமே - குராமலரைச் சூடி அம்பலத்தில் ஆடுகின்ற நீலகண்டன் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் எய்தலாம்; (மகிழ்தல் - 1. விரும்புதல்; 2. இன்புறுதல்);


5)

கறையாரும் பொழில்சூழ்ந்த காறாயில், ஆரூரர் கசிந்து பாடி

இறைவாநெல் அட்டித்தா என்றிறைஞ்சு கோளிலி, இன்த மிழ்ச்சொல்

மறவாத வாகீசர் மனமுருகிப் பாடியருள் வாய்மூர், வன்னி

பிறைசூடு பித்தனவன் பேணிடங்கள் கைதொழுதால் பெருகும் இன்பே.


* திருக்காறாயில் (திருக்காரவாசல்), திருக்கோளிலி (திருக்குவளை), திருவாய்மூர்.


கறை ஆரும் பொழில் சூழ்ந்த காறாயில் - அடர்ந்த சோலை சூழந்த திருக்காறாயில்;

ஆரூரர் கசிந்து பாடி, "இறைவா, நெல் அட்டித்தா" என்று இறைஞ்சு கோளிலி - சுந்தரர் மனம் கசிந்து பாடி, "இறைவனே, இந்த நெல்லைத் திருவாரூரில் கொண்டு தருக" என்று வேண்டிய திருக்கோளிலி; (ஆரூரர் - சுந்தரமூர்த்தி நாயனார்); (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே");

இன்-தமிழ்ச்சொல் மறவாத வாகீசர் மனமுருகிப் பாடியருள் வாய்மூர் - இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாட மறவாத திருநாவுக்கரசர் மனமுருகிப் பாடிப் பரவிய திருவாய்மூர்; (அப்பர் தேவாரம் - 4.1.6 - "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");

வன்னி பிறை சூடு பித்தனவன் பேணு-டங்கள் கைதொழுதால் பெருகும் இன்பே - வன்னியிலை, பிறை இவற்றை அணிந்த பேரருளாளன் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் பெருகும்; (பித்தன் - பேரருளாளன்);


6)

மாக்கதவம் தாழ்திறவாய் மாதேவா என்றென்று வாக்கின் மன்னர்

பாக்களிசைத் தடிபரவிப் பணிந்தேத்து மறைக்காடு, பத்தர் வந்து

நாக்கொடுநற் றமிழ்மாலை நவிற்றகத்தி யான்பள்ளி, ஞாலம் எல்லாம்

ஆக்கியழித் தருள்பெருமான் அமரிடங்கள் கைதொழுதால் அடையும் இன்பே.


* திருமறைக்காடு (வேதாரண்யம்), அகத்தியான்பள்ளி (அகஸ்தியாம்பள்ளி).


"மாக்-கதவம் தாழ் திறவாய் மாதேவா" என்றென்று வாக்கின் மன்னர் பாக்கள் இசைத்து அடிபரவிப் பணிந்து ஏத்து மறைக்காடு - "பெரிய கதவின் தாழ் நீக்கியருள் மகாதேவனே" என்று பலமுறை அப்பர் பாடி அடிபணிந்த திருமறைக்காடு; (மாக்கதவம் - பெரிய கதவு); (என்றென்று - என்று பலமுறை); (வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்); (அப்பர் தேவாரம் - 5.10.7 - "இந்த மாக்கதவம் பிணி நீக்குமே");

பத்தர் வந்து நாக்கொடு நற்றமிழ்மாலை நவிற்று அகத்தியான்பள்ளி - அடியார்கள் வந்து நாவால் தமிழ்ப்பாமாலைகளைச் சொல்லும் அகத்தியான்பள்ளி; (நவிற்றுதல் - சொல்லுதல்);

ஞாலம் எல்லாம் ஆக்கிழித்து அருள் பெருமான் அமர்-டங்கள் கைதொழுதால் அடையும் இன்பே - எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து ஒடுக்கி அருளும் பெருமான் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் வந்தடையும்; (அமர்தல் - விரும்புதல்; உறைதல்);


7)

குரைகடலின் திரைமோதும் கோடிக் குழகர்,வெண் கொக்கி னங்கள்

இரைதேரும் வயல்சூழ்ந்த எழில்விளமர், பேரெயில், இம்பர் வாழக்

கரவாது தருவயல்சூழ் நாட்டியத் தான்குடி, கங்கை சூடி

வரைமாது பங்குடையான் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* கோடிக்குழகர் கோயில் (குழகர்கோயில்), விளமர் (விளமல்), திருப்பேரெயில், நாட்டியத்தான்குடி.


குரைகடலின் திரை மோதும் கோடிக்குழகர் - ஒலிக்கும் கடலின் அலை மோதும் கரையில் உள்ள கோடிக்குழகர் கோயில்;

வெண்-கொக்கினங்கள் இரைதேரும் வயல் சூழ்ந்த எழில் விளமர் - வெண்மையான கொக்குகள் இரைதேரும் வயல் சூழ்ந்த அழகிய விளமர்;

பேரெயில் - திருப்பேரெயில்;

இம்பர் வாழக் கரவாது தரு-வயல் சூழ் நாட்டியத்தான்குடி - இவ்வுலகு வாழ வஞ்சமின்றி நெல்லைத் தரும் வயல் சூழ்ந்த நாட்டியத்தான்குடி; (இம்பர் - இவ்வுலகம்); (கரத்தல் - மறைத்தல்);

கங்கை சூடி வரைமாது பங்கு உடையான் மகிழ்-டங்கள் கைதொழுதால் மகிழலாமே - கங்கையைச் சூடி மலைமகளை ஒரு பாகமாக உடையவன் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் எய்தலாம்; (வரைமாது - மலைமகள்); (மகிழ்தல் - 1. விரும்புதல்; 2. இன்புறுதல்);


8)

நீடுவயல் சூழ்ந்தழகார் நெல்லிக்கா, பூம்பொழில் நிறைந்த தெங்கூர்,

வாடுநிலை அறப்பத்தர் வந்தடைகொள் ளிக்காடு, மரக்க லங்கள்

ஆடுகடல் சூழ்நாகைக் காரோணம், அருவரைக்கீழ் அரக்க னாரைப்

பாடுவித் தருளிறைவன் பயிலிடங்கள் கைதொழுதால் பாசம் வீடே.


* திருநெல்லிக்கா (திருநெல்லிக்காவல்), திருத்தெங்கூர் (திருத்தங்கூர்), திருக்கொள்ளிக்காடு, திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்).


நீடு-வயல் சூழ்ந்தழகார் நெல்லிக்கா - நீண்ட வயல் (/ நெல் நீள்கின்ற வயல்) சூழ்ந்த அழகிய திருநெல்லிக்கா; (நீடுதல் - நீளுதல்; பரத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.131.3 - "சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே"); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்");

பூம்பொழில் நிறைந்த தெங்கூர் - பூஞ்சோலை நிறைந்த தெருத்தெங்கூர்;

வாடு-நிலை அறப் பத்தர் வந்து அடை கொள்ளிக்காடு - வருந்து நிலை தீரப் பக்தர்கள் வந்து அடைகின்ற திருக்கொள்ளிக்காடு;

மரக்கலங்கள் ஆடு-கடல் சூழ் நாகைக்காரோணம் - படகுகளும் கப்பல்களும் இயங்குகின்ற கடலால் சூழப்பெற்ற திருநாகை காரோணம்; (ஆடுதல் - அசைதல்; சஞ்சரித்தல்);

அருவரைக்கீழ் அரக்கனாரைப் பாடுவித்து அருள் இறைவன் பயில்-இடங்கள் கைதொழுதால் பாசம் வீடே - கயிலைமலையின் கீழே இராவணனை நசுக்கி அவனைப் பாடவைத்து அருள்செய்த இறைவன் உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் பந்தங்கள் நீங்கும்; (இராவணனார் - ஆர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு ); (சம்பந்தர் தேவாரம் - 3.89.8 - "அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்த வாய்கள்"); (பாசம் வீடு - பாசநீக்கம் - மும்மலங்களிலிருந்து விடுபடுகை); (சம்பந்தர் தேவாரம் - 3.91.6 - "நீலமா மணிமிடற் றடிகளை நினைய வல்வினைகள் வீடே");


9)

திங்கள் தவழ்மாடச் சிக்கல், திருத்தேவூர், திருக்கீழ் வேளூர்,

கொங்கு கமழ்சோலை நன்னிலம்,கொண் டீச்சரம், கொண்டல் வண்ணச்

சங்கக் கரத்தரியும் தாமரையா னுங்காணாத் தழல தான

அங்கண் அடிகள் அமர்பதிகள் கைதொழுதால் அடையும் இன்பே.


* சிக்கல், திருத்தேவூர், கீழ்வேளூர் (கீவளூர்), நன்னிலம், திருக்கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்).


திங்கள் தவழ் மாடச் - சந்திரன் தீண்டுமாறு உயர்ந்த மாடக்கோயிலான;

சிக்கல் திருத்தேவூர் திருக்கீழ்வேளூர் - சிக்கல் தேவூர் கீழ்வேளூர் என்ற இந்த மூன்று தலங்களும் மாடக்கோயில்கள்;

கொங்கு கமழ் சோலை நன்னிலம் கொண்டீச்சரம் - வாசம் கமழும் பொழில் சூழ்ந்த நன்னிலம் திருக்கொண்டீச்சரம்;

கொண்டல் வண்ணச் சங்கக் கரத்து அரியும் தாமரையானும் காணாத் தழலது ஆன அங்கண் அடிகள் - முகில்வண்ணமும் சங்கு தரித்த கையும் உடைய திருமால், தாமரையில் உறையும் பிரமன் இவர்களால் காண ஒண்ணாத ஜோதி ஆன அருட்கண் உடைய சுவாமி; (கொண்டல் - மேகம்); (சங்கம் - சங்கு); (தாமரையான் - பிரமன்); (அங்கண் - அருள்நோக்கம்);

அமர்-பதிகள் கைதொழுதால் அடையும் இன்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் வந்தடையும்; (அமர்தல் - விரும்புதல்; உறைதல்);விரும்பி உறையும் தலங்கள்;


10)

பொன்னளித்து விண்ணளிக்கும் புகலூர், திருமருகல், பொலிவு மிக்குத்

தென்னையொடு வயல்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை, சிவனை எண்ணாப்

புன்னெறியர் சொல்கின்ற பொய்ம்மதியாப் புந்தியினார் போற்று கின்ற

சென்னிமிசைப் பிறைப்பெம்மான் திகழ்பதிகள் கைதொழுதால் சேரும் இன்பே.


* திருப்புகலூர், திருமருகல், கருவிலிக் கொட்டிட்டை.


பொன்ளித்து விண்ளிக்கும் புகலூர் - சுந்தர் பொன் பெற்ற தலம்; அப்பர் முக்தியடைந்த தலம்;

திருமருகல் - திருமருகல்;

பொலிவு மிக்குத் தென்னையொடு வயல் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை - அழ்கு மிகுந்து தென்னைமரங்களும் வயலும் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை;

சிவனை எண்ணாப் புன்னெறியர் சொல்கின்ற பொய்ம் மதியாப் புந்தியினார் போற்றுகின்ற, சென்னிமிசைப் பிறைப்-பெம்மான் திகழ்-பதிகள் கைதொழுதால் சேரும் இன்பே - சிவனை எண்ணி வழிபடாத சிறுநெறியினர் சொல்லும் பொய்யைப் பொருட்படுத்தாத அறிவுடையவர்கள் போற்றும், முடிமேல் பறையை அணிந்த பெருமான் உறையும் தலங்களான இவற்றை வணங்கினால் இன்பம் வந்தடையும்; (புந்தி - அறிவு);


11)

பேணு பெருந்துறையும், நாலூரும், மயானமும், பெண்ணு மாகி

ஆணும் ஆயவன்றன் கொள்ளம்பூ தூரும், அளவில் லாத

தாணு உறைகின்ற தேதியூ ரும்,கண்டு தலைவ ணங்கிப்

பேணும் அடியார்க்குப் பெருவினைநோய் நலிவில்லை பெருகும் இன்பே.


* திருப்பேணுபெருந்துறை, நாலூர், நாலூர் மயானம், திருக்கொள்ளம்பூதூர், தேதியூர்.


பேணு பெருந்துறையும், நாலூரும், மயானமும் - திருப்பேணுபெருந்துறை, நாலூர், நாலூர் மயானம்;

பெண்ணும் ஆகி ஆணும் ஆயவன்றன் கொள்ளம்பூதூரும் - பெண்ணும் ஆணும் ஆனவனது கொள்ளம்பூதூர்;

அளவு இல்லாத தாணு உறைகின்ற தேதியூரும் - எல்லையில்லாத ஒளித்தூண் ஆனவன் உறையும் தேதியூர்; (அளவு - எல்லை); (தாணு - தூண்; சிவன்);

கண்டு தலைவணங்கிப் பேணும் அடியார்க்குப் பெருவினைநோய் நலிவு இல்லை, பெருகும் இன்பே - முதலான தலங்களைத் தரிசித்துத் தலையால் வணங்கிப் போற்றும் அடியார்களுக்குப் பெரிய வினைநோய்த் துன்பம் இல்லை; அவர்களுக்கு இன்பமே பெருகும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment