2015-06-09
P.288 - தேவூர்
(திருவாரூர் அருகு உள்ள தலம்)
------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்")
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");
1)
ஊனார்தலை ஏந்தித்திரி ஒருவன்பொர வந்த
கானார்கரி உரிபோர்த்தவன் கருமாமணி கண்டன்
தேனார்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
மானார்கரன் அடிவாழ்த்திட மறவேல்மட நெஞ்சே.
ஊன் ஆர் தலை ஏந்தித் திரி ஒருவன் - புலால் பொருந்திய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்கு உழலும் ஒப்பற்றவன்; (ஊன் - மாமிசம்);
பொர வந்த கான் ஆர் கரி-உரி போர்த்தவன் - போர்செய்ய வந்த காட்டில் வாழும் யானையின் தோலைப் போர்த்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (கான் - காடு); (கரி - யானை); (உரி - தோல்);
கரு-மா-மணி கண்டன் - கரிய அழகிய மணியைக் கண்டத்தில் உடையவன்;
தேன் ஆர் பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - வண்டினம் முரல்கின்ற சோலைகள் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினை);
மான் ஆர் கரன் அடி வாழ்த்திட மறவேல் மடநெஞ்சே - கையில் மானை ஏந்திய சிவபெருமான் திருவடியை வாழ்த்த மறவாதே பேதைமனமே; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);
2)
அறையுங்கடல் உமிழ்நஞ்சினை அமுதேயென உண்ட
கறைதங்கிய கண்டத்தினன் கண்ணார்நுதல் அண்ணல்
சிறைவண்டிசை பாடும்பொழில் தேவூருறை கின்ற
இறைவன்கழல் இணைவாழ்த்திட எண்ணாய்மட நெஞ்சே.
அறையும் கடல் உமிழ் நஞ்சினை அமுதே என உண்ட கறை தங்கிய கண்டத்தினன் - ஓலிக்கும் பாற்கடல் உமிழ்ந்த ஆலகாலத்தை அமுதம் போல உண்டருளிய கறை அணிந்த கண்டம் உடையவன்; (அறைதல் - ஒலித்தல்);
கண் ஆர் நுதல் அண்ணல் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);
சிறைவண்டு இசை பாடும் பொழில் தேவூர் உறைகின்ற - சிறகுடைய வண்டினம் முரல்கின்ற சோலைகள் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (சிறை - சிறகு);
இறைவன்-கழல்-இணை வாழ்த்திட எண்ணாய் மடநெஞ்சே - இறைவனது இருதிருவடிகளை வாழ்த்த எண்ணுவாயாக பேதைமனமே;
3)
வெங்கண்விடை ஊருஞ்சிவன் விண்ணோர்க்கொரு தலைவன்
எங்குந்திரி புரமூன்றினை எய்தானொரு கணையால்
செங்கண்ணிறை தொழுதேத்திய தேவூருறை கின்ற
கங்கைச்சடை முடியான்கழல் கருதாய்மட நெஞ்சே.
வெங்கண் விடை ஊரும் சிவன் - சினம் மிக்க கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டருளும் சிவபெருமான்;
விண்ணோர்க்கு ஒரு தலைவன் - எல்ளாத் தேவர்களுக்கும் தலைவன்;
எங்கும் திரி- புர(ம்)மூன்றினை எய்தான் ஒரு கணையால் - எவ்விடமும் பறந்து திரிந்த முப்புரங்களை ஒரு கணஈயால் எய்தவன்;
செங்கண்-இறை தொழுதேத்திய தேவூர் உறைகின்ற - கோச்செங்கட்சோழன் வணங்கிய தேவூரில் உறைகின்ற; (இறை - அரசன்); (* தேவூரில் உள்ள மாடக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட பல மாடக்கோயில்களுள் ஒன்று);
கங்கைச்சடை முடியான்-கழல் கருதாய் மடநெஞ்சே - சடையில் கங்கையை அணிந்த பெருமான் திருவடியை விரும்பி எண்ணுவாயாக பேதைமனமே; (கருதுதல் -விரும்புதல்; எண்ணுதல்);
4)
ஊணாவிடு பலிநாடிய ஒருவன்பட அரவை
நாணாவசை நம்பன்மறை நால்வர்க்குரை குரவன்
சேணார்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
பூணாவர வுடையான்கழல் போற்றாய்மட நெஞ்சே.
ஊணா இடுபலி நாடிய ஒருவன் - பிச்சையேற்று உழலும் ஒப்பற்றவன்; (ஊணா - ஊணாக - உணவாக); (இடுபலி - பிச்சை);
பட-அரவை நாணா அசை நம்பன் - படம் திகழும் பாம்பை (வில்லில் நாணாக / ) அரைநாணாகக் கட்டிய நம்பன்; (படம் - பாம்பின் படம்); (நாணா - நாணாக); (அசைத்தல் - கட்டுதல்); (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்);
மறை நால்வர்க்கு உரை குரவன் - சனகாதியர் நால்வருக்கு வேதங்களை உபதேசித்த குரு;
சேண் ஆர் பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - உயர்ந்த சோலை சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (சேண் - ஆகாயம்; உயரம்);
பூணா அரவு உடையான் கழல் போற்றாய் மடநெஞ்சே - பூணாகப் பாம்புகளை அணிந்தவனது திருவடியைப், பேதைமனமே நீ போற்றுவாயாக; (பூண் - ஆபரணம்);
5)
பூவேந்திய அடியாரொடு புகழுந்தமிழ் மாலை
நாவேந்திய புலவர்க்கிடர் நண்ணாநிலை தருவான்
தேவேந்திரன் வழிபாடுசெய் தேவூருறை கின்ற
சேவூர்ந்தவன் அடிபேணுதல் செய்யென்மட நெஞ்சே.
பூ ஏந்திய அடியாரொடு புகழும் தமிழ்மாலை நா ஏந்திய புலவர்க்கு இடர் நண்ணா நிலை தருவான் - கையில் பூக்களை ஏந்தித் தூவி வணங்கும் அடியார்களுக்கும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்கும் புலவர்களுக்கும் துன்பற்ற நிலையை அருள்பவன்; (ஒடு - எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொல்); (நண்ணுதல் - அடைதல்; நெருங்குதல்);
தேவேந்திரன் வழிபாடுசெய் தேவூர் உறைகின்ற - இந்திரன் வழிபாடு செய்த தலமான தேவூரில் உறைகின்ற; (* இந்திரன் வழிபட்ட தலம் இது - தலவரலாற்றுச் செய்தி);
சே ஊர்ந்தவன் அடிபேணுதல் செய் என் மடநெஞ்சே - இடபவாகனன் திருவடியைப் போற்றி வணங்கு என் பேதைமனமே; (சே - எருது); (ஊர்தல் - ஏறுதல்);
6)
எங்கும்பட அரவந்திகழ் ஈசன்விடை யேறி
சங்கம்புனை தையற்கிடம் தந்தான்விரி சடையன்
தெங்கம்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
அங்கம்புனை ஐயன்கழல் அடையாய்மட நெஞ்சே.
எங்கும் பட-அரவம் திகழ் ஈசன் - திருமேனியில் பல பாம்புகளை அணிந்த ஈசன்; (படம் - பாம்பின் படம்);
விடையேறி - இடபவாகனன்;
சங்கம் புனை தையற்கு இடம் தந்தான் - கைவளையல் அணிந்த உமாதேவிக்கு இடப்பாகம் தந்தவன்; (சங்கம் - கைவளை);
விரி-சடையன் - இரிந்த சடையினன்;
தெங்கம்பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - தென்னஞ்சோலை சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (தெங்கு - தென்னை);
அங்கம் புனை ஐயன்-கழல் அடையாய் மடநெஞ்சே - எலும்பை அணிகின்ற தலைவன் (கங்காளன்) திருவடியைச் சரண்புகு பேதைமனமே; (அங்கம் - எலும்பு);
7)
மாறாதவன் மலரம்புடை மதனைப்பொடி செய்தான்
நீறாடிய திருமேனியன் நிழலார்மழு வாளன்
சேறார்வயல் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
ஏறார்கொடி இறைவன்கழல் எண்ணாய்மட நெஞ்சே.
மாறாதவன் - மெய்ப்பொருள்; என்றும் இருப்பவன்; (மாறுதல் - வேறுபடுதல்; இல்லையாதல்);
மலரம்புடை மதனைப் பொடி செய்தான் - மலர்க்கணை உடைய காமனைச் சாம்பலாக்கியவன்; (மதன் - மன்மதன்);
நீறு ஆடிய திருமேனியன் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்; (ஆடுதல் - பூசுதல்);
நிழல் ஆர் மழுவாளன் - ஒளிவீசும் மழுவாளை ஏந்தியவன்; (நிழல் - ஒளி);
சேறு ஆர் வயல் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - சேறு நிறைந்த வயல் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற;
ஏறு ஆர் கொடி இறைவன் கழல் எண்ணாய் மடநெஞ்சே - இடபக்கொடியை உடைய கடவுளின் திருவடியைப் பேதைமனமே நீ எண்ணுவாயாக;
8)
முன்னவ்வரை பெயர்மூடனை முடிபத்திற ஊன்றிப்
பின்னின்னிசை அதுகேட்டொரு பெயருந்தரு பெருமான்
செந்நெல்வயல் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
மன்னன்தழல் வண்ணன்கழல் மறவேல்மட நெஞ்சே.
முன் அவ்-வரை பெயர் மூடனை முடி-பத்து இற ஊன்றிப் - முன்பு அந்தக் கயிலைமலையைப் பெயர்த்த கொடியவனும் அறிவிலியுமான இராவணனை அவனது பத்துத்-தலைகளும் நெரியும்படி ஒரு பாதவிரலை ஊன்றி நசுக்கி; (அ - பண்டறிசுட்டு); (வரை - மலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்);
பின் இன்னிசை அது கேட்டு ஒரு பெயரும் தரு- பெருமான் - பிறகு அவன் பாடிய இன்னிசையைக் கேட்டு இரங்கி அவனுக்கு இராவணன் என்ற பெயரைக் கொடுத்த பெருமான்; (இசையது - இசை; அது - பகுதிப்பொருள் விகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.68.9 - "தோள்கள் இருபதுந் நெரித்தின்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ளலை");
செந்நெல்வயல் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற மன்னன் - சிறந்த நெல் விளையும் வயல் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற தலைவன்;
தழல்-வண்ணன் கழல் மறவேல் மடநெஞ்சே - தீவண்ணன் திருவடியைப், பேதைமனமே நீ மறத்தல் இன்றிப் போற்றுவாயாக;
9)
வெறியார்மலர் மேலான்அரி விண்ணேறியும் அகழ்ந்தும்
அறியாவணம் எரியாயுயர் அடிகள்புலி அதளன்
செறிவான்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
மறிமான்கரன் அடிவாழ்த்திட மறவேல்மட நெஞ்சே.
வெறி ஆர் மலர்-மேலான் அரி விண் ஏறியும் அகழ்ந்தும் அறியா-வணம் எரியாய் உயர் அடிகள் - வாசனை மிக்க தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் (அன்னமாய்) வானில் பறந்து உயர்ந்து சென்றும் (பன்றியாய்) நிலத்தை அகழ்ந்து சென்றும் அறியமுடியாதபடி ஜோதியாகி நீண்ட சுவாமி; (வெறி - வாசனை);
புலி-அதளன் - புலித்தோலை அணிந்தவன்; (அதள் - தோல்);
செறி-வான்-பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - அடர்ந்த அழகிய உயர்ந்த சோலை சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (செறிதல் - அடர்தல்); (வான் - ஆகாயம்; பெருமை; அழகு);
மறிமான்-கரன் அடி வாழ்த்திட மறவேல் மடநெஞ்சே - மான்கன்றைக் கையில் ஏந்தியவன் திருவடியை வாழ்த்தப், பேதைமனமே நீ மறவாதே; (மறிமான் - மான்மறி - மான்கன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.60.7 - "மறிமான் ஒரு கையதோர் கைமழுவாள்");
10)
வெண்ணீறது பூசார்உரை வெற்றுச்சொலை விடுமின்
பண்ணார்மொழி உமையாளொரு பங்கில்மகிழ் பரமன்
திண்ணார்மதில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற
கண்ணார்நுதல் அண்ணல்கழல் கையால்தொழ இன்பே.
வெண்ணீறது பூசார் உரை வெற்றுச்-சொலை விடுமின் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா; (அது - பகுதிப்பொருள் விகுதி); (சொலை - சொல்லை);
பண் ஆர் மொழி உமையாள் ஒரு பங்கில் மகிழ் பரமன் - பண் போலும் இனிய மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பிய பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 2.82.1 - "பண்ணிலாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்");
திண் ஆர் மதில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - வலிய மதில் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற;
கண் ஆர் நுதல் அண்ணல் கழல் கையால் தொழ இன்பே - நெற்றிக்கண் உடைய பெருமானது திருவடியைக் கைதொழுதால் இன்பம் வந்தடையும்; (இன்பு - இன்பம்);
11)
கையிற்றழல் ஏந்தும்பரன் கரிகானிடை ஆடி
வையத்தினர் வானத்தினர் வந்தேத்திடு தேவன்
செய்யிற்கயல் விளையாடிடு தேவூருறை கின்ற
மையைப்புனை கண்டன்கழல் மறவேல்மட நெஞ்சே.
கையில் தழல் ஏந்தும் பரன் - கரத்தில் தீயை ஏந்திய பரமன்;
கரிகானிடை ஆடி - சுடுகாட்டில் ஆடுபவன்; (கரிகான் - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "கரிகானிடை மாநடம் ஆடுவர்");
வையத்தினர் வானத்தினர் வந்து ஏத்திடு தேவன் - மண்ணோரும் விண்ணோரும் வந்து துதித்து வணங்கும் தேவன்; (ஏத்துதல் - துதித்தல்); (* வியாழன், இந்திரன், குபேரன், சூரியன் முதலிய தேவர்கள் வழிபட்ட தலம் இது);
செய்யில் கயல் விளையாடிடு தேவூர் உறைகின்ற - வயலில் கயல்மீன்கள் விளையாடுகின்ற தேவூரில் உறைகின்ற; (செய் - வயல்);
மையைப் புனை கண்டன்-கழல் மறவேல் மடநெஞ்சே - நீலகண்டனது திருவடியைப், பேதைமனமே நீ மறத்தல் இன்றிப் போற்றுவாயாக; (மை - கருநிறம்; கருமேகம்; இருள்) (சம்பந்தர் தேவாரம் - 1.15.1 - "மையாடிய கண்டன்");
12)
வானீரடை சடைமேல்மதி வளரும்படி வைத்தான்
பானீர்கொடு தொழுதேத்திய பாலற்கருள் தந்தை
தேனார்மொழி உமைகோனணி தேவூருறை கின்ற
வானோர்தொழு வள்ளல்கழல் வாழ்த்தாய்மட நெஞ்சே.
வான்நீர் அடை சடைமேல் மதி வளரும்படி வைத்தான் - ஆகாயகங்கையை அடைத்த சடையின்மீது சந்திரனை என்றும் அழியாமல் இருக்கும்படி சூடியவன்;
பால் நீர்கொடு தொழுதேத்திய பாலற்கு அருள் தந்தை - பால் நீர் இவற்றால் வழிபாடு செய்த சிறுவனுக்கு அருள்செய்த தந்தை; (பாலன்+கு = பாலற்கு = பாலனுக்கு); (இது சண்டேசுர நாயனாருக்கு அருளியதைச் சுட்டும்; மார்க்கண்டேயருக்கு அருளியது என்றும் பொருள்கொள்ளலாம்); (பெரியபுராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.54 - "அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்றருள்செய்து அணைத்தருளி");
தேன் ஆர் மொழி உமைகோன் - தேன் போன்ற இனிய மொழி பேசும் உமைக்குத் தலைவன்; (* மதுரபாஷிணி - இத்தல இறைவி திருநாமம்);
அணி தேவூர் உறைகின்ற - அழகிய தேவூரில் உறைகின்ற;
வானோர் தொழு வள்ளல் கழல் வாழ்த்தாய் மடநெஞ்சே - தேவர்களால் தொழப்படும் வள்ளல் சிவபெருமான் திருவடியைப், பேதைமனமே, நீ வாழ்த்துவாயாக;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment