Tuesday, December 27, 2022

P.300 - கருவிலிக் கொட்டிட்டை - அழல்நிகர் செம்மேனி

2015-08-31

P.300 - கருவிலிக் கொட்டிட்டை

(கருவேலி)

------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

அழல்நிகர்செம் மேனியினான், அலைகடலின் நஞ்சுண்டு

மழைநிகர்மா மிடறுடையான், மறவாது மலர்தூவிக்

கழல்நினையும் அடியார்கள் கருதுவரம் தந்தருள்வான்,

கழனிமலி கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


அழல் நிகர் செம்-மேனியினான் - தீப் போன்ற செம்மேனி உடையவன்; (அழனிகர் - அழல் நிகர்);

அலைகடலின் நஞ்சுண்டு மழை நிகர் மா மிடறுடையான் - பாற்கடல் விடத்தை உண்டு மேகம் போன்ற அழகிய கண்டம் உடையவன்; (மழை - மேகம்); (மிடறு - கண்டம்);

மறவாது மலர் தூவிக் கழல் நினையும் அடியார்கள் கருது வரம் தந்தருள்வான் - தினமும் பூத் தூவித் திருவடியை நினைக்கும் பக்தர்கள் விரும்பிய வரத்தைத் தந்து அருள்பவன்; (கழனினையும் - கழல் நினையும்); (நினைதல் - நினைத்தல்);

கழனி மலி கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - வயல்கள் நிறைந்த கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; (கழனி - வயல்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "வயல்மலி சண்பையதே");


2)

அவிர்வேணி தனிலாற்றை அணியண்ணல், அங்கையைக்

குவிவானோர் தமக்கிரங்கிக் குன்றவில்லை ஏந்தியவன்,

செவியாரச் சீர்நாமம் தினம்கேட்பார் வினைதீர்ப்பான்,

கவினாரும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


அவிர்-வேணிதனில் ஆற்றை அணி-அண்ணல் - ஒளிவீசும் சடையில் கங்கையை அணிந்த பெருமான்; (அவிர்தல் - ஒளிவீசுதல்); (வேணி - சடை);

அங்கையைக் குவி-வானோர்-தமக்கு இரங்கிக் குன்ற-வில்லை ஏந்தியவன் - கரம் குவித்து வணங்கிய தேவர்களுக்கு இரங்கி (முப்புரங்களோடு போர்செய்ய) மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

செவியாரச் சீர்-நாமம் தினம் கேட்பார் வினை தீர்ப்பான் - ஈசனது புகழையும் திருப்பெயரையும் காதாரத் தினமும் கேட்கும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 2..41.3 - "புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே");

கவின் ஆரும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - அழகிய கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; (கவின் - அழகு);


3)

பிடியனைய நடையுடைய பெண்ணையிடம் பேணுமரன்,

கொடியவிட நாகத்தைக் குளிர்மதியின் அயல்புனைந்தான்,

அடிபணியும் அன்பரவர் அருவினையைத் தீர்த்தருள்வான்,

கடிபொழில்சூழ் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


பிடி அனைய நடை டைய பெண்ணைடம் பேணும் அரன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய ஹரன்; (பிடி - பெண்யானை);

கொடிய விடநாகத்தைக் குளிர்மதியின் அயல் புனைந்தான் - கொடிய விஷப்பாம்பைக் குளிச்சி பொருந்திய சந்திரன் அரிகே அணிந்தவன்;

அடிபணியும் அன்பரவர் அருவினையைத் தீர்த்தருள்வான் - திருவடியை வணங்கும் அன்பர்களது தீர்த்தற்கு அரிய வினையைத் தீர்த்தருள்பவன்;

கடிபொழில் சூழ் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; (கடி - வாசனை);


4)

நேத்திரமிட் டரிவாழ்த்த நேமியருள் செய்தசிவன்,

பாத்திரமாம் அயன்சிரத்தில் பலிதேரும் பரமேட்டி,

பூத்திரள்கொண் டடியிணையைப் போற்றிசெயும் அடியவரைக்

காத்தருளும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


நேத்திரம் இட்டு அரி வாழ்த்த நேமிருள்செய்த சிவன் - கண்ணைப் பூவாகத் திருவடியில் தூவி இறைஞ்சிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளிய சிவன்; (நேத்திரம் - கண்); (அரி - ஹரி - திருமால்); (நேமி - சக்கராயுதம்);

பாத்திரம் ஆம் அயன்-சிரத்தில் பலி தேரும் பரமேட்டி - உண்கலனாகும் பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்கும் பரம்பொருள்; (பலி - பிச்சை);

பூத்திரள்கொண்டு அடியிணையைப் போற்றிசெயும் அடியவரைக் - மிகுந்த பூக்களால் இருதிருவடிகளை வழிபடும் அடியார்களை;

காத்தருளும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - காத்து அருள்கின்ற, கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; ("காத்து அருள்வான்" என்று செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று என்றும் பொருள்கொள்ளலாம்);


5)

அரையாகாத் தருளாயென் றமரரெலாம் அடிபோற்ற

வரையேந்தி ஒருகணையால் மதில்மூன்றைச் சுட்டபிரான்,

விரையாரும் மலர்தூவி வேண்டுகின்ற அடியவரைக்

கரையேற்றும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


"அரையா காத்து அருளாய்" என்று அமரர்-எலாம் அடிபோற்ற - "அரசனே! காப்பாயாக" என்று தேவர்கள் எல்லாரும் வணங்க;

வரை ஏந்தி ஒரு கணையால் மதில்மூன்றைச் சுட்ட பிரான் - மேருமலையை ஏந்தி ஓரம்பால் முப்புரங்களை எய்த பெருமான்; (வரை - மலை);

விரை ஆரும் மலர் தூவி வேண்டுகின்ற அடியவரைக் - வாசனை மிக்க பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களை; (விரை - வாசனை);

கரையேற்றும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கரையேற்றுகின்ற, கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; ("கரையேற்றுவான்" என்று செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று என்றும் பொருள்கொள்ளலாம்);


6)

பரங்கருணைப் பெருமான்முன் பார்த்தனுக்குப் பாசுபதம்

வரங்கொடுக்க வேட்டுவனாய் வனத்திடையே சென்றசிவன்

சரங்கொடுதாள் இணைபோற்றும் தன்னடியார் கரையேறக்

கரங்கொடுக்கும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


பரங்கருணைப் பெருமான் - பரம-கருணாமூர்த்தி;

முன் பார்த்தனுக்குப் பாசுபதம் வரம் கொடுக்க வேட்டுவனாய் வனத்திடையே சென்ற சிவன் - முன்பு அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் வரமருள வேடனாகிக் காட்டில் சென்ற சிவன்;

சரங்கொடு தாள்இணை போற்றும் தன் அடியார் கரையேறக் கரம் கொடுக்கும் - பூமாலைகளால் இருதிருவடிகளை வணங்கும் தனது அடியவர்கள் உய்யும்படி கைகொடுத்துக் காப்பான்; (சரம் - மாலை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); ("காக்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளலாம்);

கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;


7)

பிறைத்துண்டன் அடியிணையில் பிரசமலர் பலதூவி

மறப்பின்றிப் பணிந்தேத்து மார்க்கண்டர்க் கரணாகி

இறப்பின்றி அவர்வாழ இன்னருள்செய் எம்பெருமான்

கறைக்கண்டன் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


பிறைத்துண்டன் அடியிணையில் பிரசமலர் பல தூவி - பிறையாகிய சந்திரனின் துண்டத்தைச் சூடிய பெருமானது இருதிருவடிகளில் தேன்மலர்கள் பல தூவி; (பிரசம் - தேன்); (அப்பர் தேவாரம் - 4.99.4 - "பிறைத்துண்ட வார்சடையாய்");

மறப்பு இன்றிப் பணிந்தேத்து மார்க்கண்டர்க்கு அரண் ஆகி - மறத்தல் இல்லாமல் வழிபாடு செய்த மார்க்கண்டேயருக்குக் காவல் ஆகி;

இறப்பு இன்றி அவர் வாழ இன்னருள்செய் எம்பெருமான் - சாவாமல் அவர் என்றும் வாழும்படி இனிதே அருளிய எம்பெருமான்;

கறைக்கண்டன் - நீலகண்டன்;

கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;


8)

சினந்துமலை பேர்த்தானைத் திருவிரலால் நசுக்கியவன்

மனந்திருந்தி அவன்பாடி வணங்கவொரு வாளீந்தான்

நினைந்துருகும் அடியார்கள் நீள்விசும்பில் நிலைத்திருக்கக்

கனிந்தருளும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


சினந்து மலை பேர்த்தானைத் திருவிரலால் நசுக்கியவன் - கோபித்துக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கியவன்;

மனம் திருந்தி அவன் பாடி வணங்க, ஒரு வாள் ஈந்தான் - (பின்பு) இராவணன் மனம் திருந்திப் பாடி இறைஞ்ச, இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்; (வாள் - வாளும்; உம் தொக்கது);

நினைந்து உருகும் அடியார்கள் நீள்விசும்பில் நிலைத்திருக்கக் கனிந்தருளும் - மனம் உருகித் தியானிக்கும் பக்தர்கள் என்றும் வானுலகில் வாழ இரங்கி அருள்வான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); ("இரங்கி அருள்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளலாம்);

கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;


9)

பலியிட(ம்)மூ வடியிரந்த பாம்பணையான் அயன்நேடி

மெலியவொரு வெவ்வழலாய் விண்மண்ணைக் கடந்துநின்ற

புலியதளன் பொன்னடியே போற்றிசெயும் அன்புடையார்

கலியகற்றும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


பலியிட(ம்) மூவடி இரந்த பாம்பணையான் அயன் நேடி மெலிய - மஹாபலியிடம் மூன்றடி நிலம் யாசித்தவனான பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி இளைக்க; (அணை - படுக்கை); (நேடுதல் - தேடுதல்); (மெலிய - இளைத்தல்; வருந்துதல்);

ஒரு வெவ்வழலாய் விண்-மண்ணைக் கடந்து நின்ற - ஒப்பற்ற ஜோதியாகி விண்ணையும் மண்ணையும் கடந்து எல்லையின்றி நீண்ட;

புலியதளன் பொன்னடியே போற்றிசெயும் அன்புடையார் கலி அகற்றும் - புலித்தோலை ஆடையாகக் கட்டிய பெருமானது பொற்பாதத்தையே போற்றி வணங்கும் அன்பர்களது துன்பத்தைத் தீர்ப்பான்; (அதள் - தோல்); (கலி - துன்பம்ல்; தரித்திரம்); (அகற்றுதல் - நீக்குதல்); ("தீர்க்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளலாம்);

கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;


10)

கைதவமே தவமாகக் கைக்கொண்ட கல்நெஞ்சர்

பொய்தவிராப் பிரட்டருரை புரட்டுகளில் மயங்காதே

கொய்தமலர் கொண்டுதினம் குரைகழலைப் பணிந்தார்க்குக்

கைதருவான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


கைதவமே தவமாகக் கைக்கொண்ட கல்நெஞ்சர் - வஞ்சனையையே தவம் போலச் செய்கின்ற கல்மனம் உடையவர்கள்; (கைதவம் - வஞ்சனை); (கைக்கொண்ட - மேற்கொண்ட);

பொய் தவிராப் பிரட்டர் உரை புரட்டுகளில் மயங்காதே - பொய்யை நீங்காத பிரஷ்டர்கள் சொல்கின்ற வஞ்சகப் பேச்சில் மயங்கவேண்டா; (பிரட்டர் - நெறியிலிருந்து வழுவியவர்கள்); (மயங்காதே - ஏவல் வினைமுற்று; "மயங்காமல்" என்று வினையெச்சமாகக் கொண்டும் பொருள்கொள்ளலாம்);

கொய்த மலர் கொண்டு தினம் குரைகழலைப் பணிந்தார்க்குக் - பறித்த மலர்களைத் தூவித் தினமும் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);

கைதருவான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - உதவுபவன் (= காத்து அருள்பவன்) கருவிலிக் கொட்டிட்டையில் உறைகின்ற நெற்றிக்கண்ணனான சிவபெருமான்; (கைதருதல் - உதவுதல்); (கைதருவான் - "காத்து அருள்செய்வான்" என்று வினைமுற்றாகவும் கொண்டு பொருள்கொள்ளலாம்); (அப்பர் தேவாரம் - 4.92.4 - "கொடுநரகக்குழிநின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே");


11)

முன(ம்)மலையே வில்லாக முப்புரங்கள் விழவெய்தான்

வனமுலையாள் ஒருபங்கன் மலரடியை மறவாமல்

தின(ம்)மலரால் வழிபாடு செய்வார்தம் தீவினைதீர்

கனவிடையான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.


முனம் மலையே வில்லாக முப்புரங்கள் விழ எய்தான் - முன்பு ஒரு மலையையே வில்லாகக்கொண்டு முப்புரங்களும் சாம்பலாகி விழும்படி கணை எய்தவன்; (முனம் - முன்னம்; இடைக்குறை விகாரம்);

வன-முலையாள் ஒரு பங்கன் - அழகிய முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வனம் - அழகு);

மலரடியை மறவாமல் தின(ம்)மலரால் வழிபாடு செய்வார்தம் தீவினை தீர் கனவிடையான் - மலர்ப்பாதத்தை மறத்தல் இன்றித் தினமும் அன்று பூத்த புதுமலர்களால் வழிபாடு செய்யும் பக்தர்களது தீவினையைத் தீர்க்கும், பெரிய இடபவாகனம் உடையவன்; (தினமலரால் - 1. நாண்மலரால்; (அன்று பூத்த புது மலர்); 2. தினமும் மலரால்); (கனம் - பெருமை); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை யூருமெய் வாழியானை");

கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment