2015-06-10
P.289 - மணவாளநல்லூர்
------------------
(12 பாடல்கள்)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
எயில்வேவ மலைவில்லில் எரிகணையைக் கோத்தமைந்தன்
மயிலேறு குகன்தாதை மழுவாளன் இலைமூன்றார்
அயில்வேலன் அமருமிடம் அரிசிலதன் தென்கரையில்
வயல்சூழ்ந்து வளமாரும் மணவாள நல்லூரே.
எயில் வேவ மலை-வில்லில் எரி-கணையைக் கோத்த மைந்தன் - முப்புரங்களும் வெந்து அழிய மேருவில்லில் தீக்கணையைக் கோத்த வீரன்; (எயில் - கோட்டை); (மைந்தன் - வீரன்);
மயில் ஏறு குகன் தாதை - மயில்வாகனம் உடைய முருகனுக்கு அப்பன்; (குகன் - முருகன்); (தாதை - தந்தை);
மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;
இலைமூன்று ஆர் அயில்-வேலன் அமரும் இடம் - இலை போல மூன்று முனைகளை உடைய கூர்மையான சூலத்தை ஏந்தியவன் விரும்பி உறையும் தலம்; (இலை - ஆயுதவலகு); (அமர்தல் - விரும்புதல்);
அரிசில்-அதன் தென்கரையில் வயல் சூழ்ந்து வளம் ஆரும் மணவாளநல்லூரே - அரிசிலாற்றின் தெற்கே வயல் சூழ்ந்து வளம் நிறையும் மணவாளநல்லூர்; (அரிசில் - அரசலாறு);
2)
தினங்கடியார் மலர்தூவிச் சேவிப்பார்க் கன்புடையான்
மனங்கலைக்க ஐந்துமலர் வாளிதொடு மன்மதனை
அனங்கனெனச் செய்தவனூர் அரிசிலதன் தென்கரையில்
வனங்களிடைக் குயில்கூவு மணவாள நல்லூரே.
தினம் கடி ஆர் மலர் தூவிச் சேவிப்பார்க்கு அன்பு உடையான் - தினமும் வாசமலர்கள் தூவி வணங்கும் அன்பருக்கு அன்பு உடையவன்; (கடி - வாசனை);
மனம் கலைக்க ஐந்து-மலர்வாளி தொடு மன்மதனை அனங்கன் எனச் செய்தவன் ஊர் - மனத்தை அசையச்செய்ய ஐந்து மலரம்புகளை எய்யும் காமனை உடலற்றவன் ஆக்கியவன் ஊர்; (வாளி - அம்பு); (தொடு - தொடுக்கின்ற; எய்கின்ற); (அனங்கன் - உடல் அற்றவன்; உருவம் அற்றவன்);
அரிசில்-அதன் தென்கரையில் வனங்களிடைக் குயில் கூவு மணவாளநல்லூரே - அரிசிலாற்றின் தெற்கே சோலையில் குயில் கூவும் மணவாளநல்லூர்; (வனம் - நந்தவனம்; ஊர்சூழ் சோலை);
3)
குளமாகும் கண்ணோடு கும்பிடுவார்க் கொருநாளும்
இளையாத நிலையீவான் எருதேறும் எம்பெருமான்
வளையாரும் முன்கையாள் வாமத்தன் மகிழுமிடம்
வளமாரும் வயல்சூழ்ந்த மணவாள நல்லூரே.
குளம் ஆகும் கண்ணோடு கும்பிடுவார்க்கு ஒருநாளும் இளையாத நிலை ஈவான் - கண்னீர் கசியும் கண்ணராகிக் கும்பிடும் என்றும் துன்பம் இல்லாத நிலையை அருள்பவன்; (ஒருநாளும் - எந்நாளும்); (இளைத்தல் - மெலிதல்; சோர்தல்);
எருது ஏறும் எம்பெருமான் - இடபவாகனம் உடைய எம்பெருமான்;
வளை ஆரும் முன்கையாள் வாமத்தன் மகிழும் இடம் - வளையல் அணிந்த முன்கையை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவன் உறையும் தலம்; (மகிழ்தல் - விரும்புதல்);
வளம் ஆரும் வயல் சூழ்ந்த மணவாளநல்லூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த மணவாளநல்லூர்; (அரிசில் - அரசலாறு);
4)
பண்டொருவேட் டுவனாகிப் பாண்டவனுக் கருள்புரிந்தான்
வண்டறையும் கொன்றையொடு மதிபுனையும் வார்சடையன்
எண்டிசையோர் ஏத்துகின்ற ஈசனிடம் அரிசிலதன்
வண்புனலார் வயல்சூழ்ந்த மணவாள நல்லூரே.
பண்டு ஒரு வேட்டுவன் ஆகிப் பாண்டவனுக்கு அருள்புரிந்தான் - முன்பு ஒரு வேடன் கோலத்தில் அருச்சுனனுக்கு அருளியவன்; (பண்டு - முன்பு); (வேட்டுவன் - வேடன்); (பாண்டவன் - அருச்சுனன்);
வண்டு அறையும் கொன்றையொடு மதி புனையும் வார்-சடையன் - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமலரையும் சந்திரனையும் அணிந்த நீள்சடை உடையவன்; (அறைதல் - ஒலித்தல்); (வார்தல் - நீள்தல்);
எண்-திசையோர் ஏத்துகின்ற ஈசன் இடம் - உலகத்தவர் துதிக்கின்ற ஈசன் உறையும் தலம்;
அரிசில்-அதன் வண்-புனல் ஆர் வயல் சூழ்ந்த மணவாளநல்லூரே - அரிசிலாற்றின் வளமுடைய நீர் நிறைந்த வயல் சூழ்ந்த மணவாளநல்லூர்;
5)
முந்தாகி நடுவாகி முடிவாகும் முக்கண்ணன்
வெந்தார்வெண் பொடிபூசி வென்றிவிடைக் கொடியுடையான்
பந்தாரும் விரலாளைப் பாக(ம்)மகிழ் பரமனிடம்
வந்தார்கள் மகிழ்கின்ற மணவாள நல்லூரே.
முந்து ஆகி நடு ஆகி முடிவு ஆகும் முக்கண்ணன் - ஆதி, நடு, அந்தம் எல்லாம் ஆகும் முக்கண்ணன்; (முந்து - ஆதி); (முடிவு - அந்தம்);
வெந்தார்-வெண்பொடி பூசி - இறந்து எரிக்கப்பட்டவர்களது வெள்ளிய சாம்பலைப் பூசியவன்; (அப்பர் தேவாரம் - 6.6.10 - "வெந்தார் சுடலைநீறாடும்மடி"); (சுந்தரர் தேவாரம் - 7.24.7 - "வெந்தார் வெண்பொடியாய்");
வென்றி-விடைக்-கொடி உடையான் - வெற்றியுடைய இடபக்கொடி உடையவன்; (வென்றி - வெற்றி);
பந்து ஆரும் விரலாளைப் பாகம் மகிழ் பரமன் இடம் - பந்தாடும் விரலை உடைய உமாதேவியை ஒரு பங்கில் மகிழும் பரமன் உறையும் தலம்; (சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரல்மடவாள் பாகமா");
வந்தார்கள் மகிழ்கின்ற மணவாளநல்லூரே - வந்து வணங்கியவர்கள் இன்புறுகின்ற மணவாளநல்லூர்;
6)
அலைபுரிந்த சடையுடையான் அவமதித்த தக்கனது
தலையரிந்து தண்டித்தான் தண்மதியத் துண்டத்தான்
இலைவிரும்பி இட்டாலும் ஏற்றருளும் எளியவனூர்
மலர்விரிந்து மண(ம்)நாறும் மணவாள நல்லூரே.
அலை புரிந்த சடை உடையான் - கங்கையின் அலை மிகுந்த சடையை உடையவன்; கங்கை அலையை முறுக்கிய சடையில் உடையவன்; (புரிதல் - விரும்புதல்; மிகுதல்; முறுக்குக்கொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.4 - "அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா");
அவமதித்த தக்கனது தலை அரிந்து தண்டித்தான் - அவி கொடாமல் அவவேள்வி செய்த தக்கனது தலையை வெட்டித் தண்டித்தவன்; (அரிதல் - அறுத்தல்);
தண்-மதியத் துண்டத்தான் - குளிந்த பிறையை அணிந்தவன்;
இலை விரும்பி இட்டாலும் ஏற்றருளும் எளியவன் - விரும்பி இலையையே இட்டு வழிபாடு செய்தாலும் அதனை ஏற்று அருள்கின்றவன்; எளிதில் அடையப்படுபவன்; (எளியவன் - சுலபமாக அடையப்படுபவன்); (அப்பர் தேவாரம் - 4.72.5 - "எளியவர் அடியர்க் கென்றும்"); (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்");
மலர் விரிந்து மண(ம்) நாறும் மணவாளநல்லூரே - (சோலையில்) மலர்கள் பூத்து மணம் வீசும் மணவாளநல்லூர்;
7)
புரையில்லாப் பெற்றியினான் புகழ்பாடிப் பணிவோர்க்குக்
கரையில்லாக் கருணையினான் காலனுக்கும் காலனவன்
வரையில்லாப் பெருமையினான் மாற்றார்தம் மதிலெய்த
வரைவில்லான் மகிழுமிடம் மணவாள நல்லூரே.
புரை இல்லாப் பெற்றியினான் - குற்றமற்றவன்; (புரை - ஒப்பு; குற்றம்); (பெற்றி - தன்மை);
புகழ் பாடிப் பணிவோர்க்குக் கரை இல்லாக் கருணையினான் - துதிகள் பாடி வணங்கும் பக்தர்களுக்கு அளவு கடந்த கருணை உடையவன்; (கரை - எல்லை); (சேந்தனார் - திருவிசைப்பா - 9.5.2 - "கரையிலாக் கருணைமா கடலை");
காலனுக்கும் காலனவன் - காலகாலன்; (அப்பர் தேவாரம் - 5.57.5 - "காலனாகிய காலற்கும் காலனை");
வரை இல்லாப் பெருமையினான் - எல்லையற்ற பெருமை உடையவன்; (வரை - எல்லை);
மாற்றார்தம் மதில் எய்த வரை-வில்லான் மகிழும் இடம் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை (ஒரு கணையால்) எய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவன் விரும்பி உறையும் தலம்; (மாற்றார் - பகைவர்); (வரை - மலை);
மணவாளநல்லூரே - மணவாளநல்லூர்;
8)
தேர்தரையில் இறங்கியதால் சினந்துமலை இடந்தானை
ஓர்விரலின் நுதியூன்றி ஒருபதுவாய் அழவைத்துப்
பேர்கொடுத்த பெருமானார் பிறைநாகம் கொன்றைமலர்
வார்சடைவைத் துகந்தாரூர் மணவாள நல்லூரே.
தேர் தரையில் இறங்கியதால் சினந்து மலை இடந்தானை - ஆகாயமார்க்கமாகச் செல்லும் தேர் ஓடாமல் கீழே இறநியதால் கோபம்கொண்டு கயிலைமலையைப் பெயர்த்தவனை; (இடத்தல் - தோண்டுதல்);
ஓர்-விரலின் நுதி ஊன்றி ஒருபது-வாய் அழவைத்துப் பேர் கொடுத்த பெருமானார் - திருப்பாதவிரல் ஒன்றின் நுனியை ஊன்றி நசுக்கி, அவனது பத்துவாய்களையும் அழவைத்துப், பின் அவன் இசைபாடக் கேட்டு இரங்கி, இராவணன் (அழுதவன்) என்ற பெயரைக் கொடுத்த பெருமானார்; (நுதி - நுனி); (அப்பர் தேவாரம் - 6.96.11 - "இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்");
பிறை நாகம் கொன்றைமலர் வார்-சடை வைத்து-உகந்தார் ஊர் - நீளும் சடையில் பிறை பாம்பு கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடியவர் உறையும் தலம்; (உகத்தல் - மகிழ்தல்);
மணவாளநல்லூரே - மணவாளநல்லூர்;
9)
செங்கமலத் துறைவானும் திருமாலும் அறியாத
பொங்கழலாய் நின்றபரன் புன்சடையிற் புனல்கரந்தான்
அங்கையினில் அனலேந்தி அருநடஞ்செய் அம்பலவன்
மங்கையொரு பங்கனிடம் மணவாள நல்லூரே.
செங்கமலத்து உறைவானும் திருமாலும் அறியாத பொங்கு-அழலாய் நின்ற பரன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் விஷ்ணுவும் அறியாத ஓங்கும் ஜோதியாகி நின்ற பரமன்;
புன்சடையில் புனல் கரந்தான் - செஞ்சடையில் கங்கையை ஒளித்தவன்; (புன்சடை - செஞ்சடை); (புனல் - கங்கை); (கரத்தல் - மறைத்தல்);
அங்கையினில் அனல் ஏந்தி அருநடம் செய் அம்பலவன் - கையில் தீயை ஏந்தி அரிய கூத்து ஆடும் சிற்றம்பலவன்;
மங்கை ஒரு பங்கன் இடம் மணவாளநல்லூரே - உமைபங்கன் உறையும் தலம் மணவாளநல்லூர்;
10)
இறையறியார் பொய்யுரையை எந்நாளும் தவிராத
கறையுடையார் அவர்சொல்லைக் கருதேன்மின் அடிதொழுவார்
குறைகளையும் சிவபெருமான் குருவாகி ஆலின்கீழ்
மறைவிரித்தான் மகிழுமிடம் மணவாள நல்லூரே.
இறை அறியார் - கடவுளை அறியாதவர்கள்; கொஞ்சமும் அறியாதவர்கள்; (இறை - 1. இறைவன்; 2. சிறிது; கொஞ்சம்);
பொய்யுரையை எந்நாளும் தவிராத கறை உடையார் - எப்பொழுதும் பொய்யையே சொல்கின்ற குற்றம் உடையவர்கள்; (கறை - குற்றம்; களங்கம்);
அவர் சொல்லைக் கருதேன்மின் - அவர்களது பேச்சை மதியாதீர்கள்; (கருதேன்மின் - கருதேல்+மின் - நீங்கள் கருதவேண்டா); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);
அடி தொழுவார் குறை களையும் சிவபெருமான் - திருவடியை வணங்கியவர்களது குறைகளைத் தீர்க்கும் சிவபெருமான்;
குருவாகி ஆலின்கீழ் மறை விரித்தான் மகிழும் இடம் மணவாளநல்லூரே - குரு ஆகிக் கல்லாலமரத்தடியில் வேதத்தை உபதேசித்தவன் உறையும் தலம் மணவாளநல்லூர்; (விரித்தல் - விளக்கியுரைத்தல்);
11)
நம்புமடி யாரவர்க்கு நல்லனவே நல்குமரன்
வெம்புலியின் தோலையரை வீக்கியவன் வேணிமிசை
அம்புலியை அணிந்தானூர் அரிசிலதன் தென்கரையில்
வம்புலவு பொழில்சூழ்ந்த மணவாள நல்லூரே.
நம்பும் அடியார்-அவர்க்கு நல்லனவே நல்கும் அரன் - விரும்பித் தொழும் பக்தர்களுக்கு நல்லவற்றையே அளிக்கும் ஹரன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);
வெம்-புலியின் தோலை அரை வீக்கியவன் - கொடிய புலித்தோலை அரையில் கட்டியவன்; (வீக்குதல் - கட்டுதல்);
வேணிமிசை அம்புலியை அணிந்தான் ஊர் - சடைமேல் சந்திரனை அணிந்தவன் உறையும் தலம்;
அரிசில்-அதன் தென்கரையில் வம்பு உலவு பொழில் சூழ்ந்த மணவாளநல்லூரே - அரிசிலாற்றின் தெற்கே மணம் கமழும் சோலை சூழ்ந்த மணவாளநல்லூர்; (வம்பு - வாசனை);
12)
நட்டமிடு கழல்போற்றி நற்றமிழால் பரவியவர்
கட்டமெலாம் தீர்த்தருள்வான் கயற்கண்ணி ஒருபங்கன்
சுட்டபொடி சாந்தமெனத் தோளிலங்கு சுந்தரனூர்
மட்டலரார் பொழில்சூழ்ந்த மணவாள நல்லூரே.
நட்டம் இடு கழல் போற்றி நற்றமிழால் பரவியவர் கட்டமெலாம் தீர்த்தருள்வான் - கூத்தாடும் திருவடியைப் போற்றி, நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் துதிக்கும் பக்தர்களது கஷ்டங்களைத் தீர்த்து அருள்பவன்; (நட்டம் - கூத்து); (பரவுதல் - துதித்தல்; புகழ்தல்); (கட்டம் - கஷ்டம்);
கயற்கண்ணி ஒரு பங்கன் - மீனாட்சியை ஒரு பங்கில் உடையவன் - உமைபங்கன்; (கயற்கண்ணி - கயல் மீன் போன்ற கண் உடையவள் - மீனாக்ஷி); (* மீனாட்சி - இத்தல இறைவி திருநாமம்);
சுட்ட பொடி சாந்தம் எனத் தோள் இலங்கு சுந்தரன் ஊர் - திருநீறு சந்தனம்போல் புஜத்தில் திகழ்கின்ற அழகன் உறையும் தலம்; (பொடி - சாம்பல்); (சாந்தம் - சந்தனம்); (சுந்தரன் - அழகுள்ளவன்); (* சுந்தரேஸ்வரர் - இத்தல இறைவன் திருநாமம்);
மட்டு-அலர் ஆர் பொழில் சூழ்ந்த மணவாளநல்லூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த மணவாளநல்லூர்; (மட்டு - தேன்; வாசனை); (அலர் - மலர்);
பிற்குறிப்புகள்:
1. மணவாளநல்லூர் - இது திருவீழிமிழலைக்குத் தென்மேற்கே, அரசலாற்றின் தெற்கே, தேதியூர், எரவாஞ்சேரி இவற்றை அடுத்து உள்ள ஊர்.
2. இக்கோயிலில் - இறைவன் - சுந்தரேஸ்வரர்; இறைவி - மீனாட்சி;
3. இக்கோயில் கும்பாபிஷகம் 2015-06-29 அன்று நிகழவிருந்ததை ஒட்டி எழுதிய பதிகம்.
4) This temple's location - coordinates : 10°55'51.9"N 79°33'05.9"E = 10.931082, 79.551626
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment