Tuesday, December 27, 2022

P.298 - கைச்சினம் - முயலகன்மேல் திருத்தாள்

2015-08-03

P.298 - கைச்சினம்

("கச்சனம்" - திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

------------------

(வெண்டளையால் அமைந்த கட்டளைக் கலிவிருத்தம். பிற்குறிப்பைக் காண்க)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.18.1 - "ஒன்றுகொ லாமவர்")

(திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்கிலர்")


1)

முயலகன் மேல்திருத் தாள்வைத்த நாதன்

மயலறு நாலு மறைவிரி போதன்

செயல்களொர் ஐந்தினன் செவ்வழல் வண்ணன்

கயலுகள் செய்யணி கைச்சினத் தானே.


முயலகன்மேல் திருத்தாள் வைத்த நாதன் - முயலகன்மேல் திருவடியை ஊன்றிய தலைவன்; (அப்பர் தேவாரம் - 6.90.9 - "தருக்கழிய முயலகன்மேல் தாள் வைத்தானை");

மயல் அறு நாலு-மறை விரி போதன் - அறியாமையைப் போக்கும் நால்வேதங்களை உபதேசித்த குரு (தட்சிணாமூர்த்தி); (விரித்தல் - உபதேசித்தல்); (போதன் - ஞானவடிவினன்);

செயல்கள் ஒர் ஐந்தினன் - பஞ்சகிருத்தியம் செய்பவன்; (பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

செவ்வழல் வண்ணன் - செந்தழல் போன்ற செம்மேனியன்;

கயல் உகள் செய் அணி கைச்சினத்தானே - கயல்மீன்கள் பாயும் (நீர்வளம் மிக்க) வயல் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (- ஈற்றசை);


2)

செவிகளில் தோடு குழைதிகழ் தேவன்

அவிர்சடை வானிழி ஆறணி அண்ணல்

புவியினர் விண்ணவர் போற்றும் புராணன்

கவினுறு காவணி கைச்சினத் தானே.


செவிகளில் தோடு குழை திகழ் தேவன் - ஒரு காதில் தோடும் ஒரு காதில் குழையும் அணிந்த கடவுள்;

அவிர்-சடை வான் இழி ஆறு அணி அண்ணல் - ஒளிவீசும் சடையில் வானுலகிலிருந்து கீழே இறங்கிய கங்கையை அணிந்தருளிய பெருமான்; (அவிர்தல் - பிரகாசித்தல்); (இழிதல் - இறங்குதல்);

புவியினர் விண்ணவர் போற்றும் புராணன் - மனிதரும் தேவரும் தொழும் பழையவன்;

கவின் உறு கா அணி கைச்சினத்தானே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (கவின் - அழகு); (கா - சோலை);


3)

முனிந்துவெங் கூற்றுதை முக்கணன் நாகம்

குனிந்தவெண் திங்கள் குரவிவை குஞ்சிப்

புனைந்தவன் போற்றிப் புதுமலர் தூவிற்

கனிந்தருள் செய்பவன் கைச்சினத் தானே.


முனிந்து வெங்-கூற்று உதை முக்கணன் - கோபித்துக் கொடிய காலனை உதைத்த முக்கண்ணன்; (முனிதல் - கோபித்தல்);

நாகம், குனிந்த வெண்திங்கள், குரவு இவை குஞ்சிப் புனைந்தவன் - பாம்பு, வளைந்த வெண்மையான சந்திரன், குராமலர் இவற்றைச் சென்னிமேல் சூடியவன்; (குனிதல் - வளைதல்); (குஞ்சி - தலை);

போற்றிப் புதுமலர் தூவில் கனிந்து அருள் செய்பவன் - போற்றிப் புதிய பூக்களைத் தூவி வணங்கினால் இரங்கி அருள்பவன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


4)

படிமிசை வீழ்ந்து பணிந்தெழு வார்க்குச்

செடியுடை வல்வினை தீர்த்தருள் செய்வான்

வடியுடைச் சூல(ம்) மழுப்படை ஏந்தி

கடிமலர் ஆர்பொழிற் கைச்சினத் தானே.


படிமிசை வீழ்ந்து பணிந்தெழுவார்க்குச் செடியுடை வல்வினை தீர்த்தருள் செய்வான் - நிலத்தின்மேல் விழுந்து வணங்கும் அன்பர்களுக்கு துன்பம் தரும் வல்வினையௌஇத் தீர்த்தருள்பவன்; (படி - நிலம்); ( செடி - தீமை; துன்பம்); (அப்பர் தேவாரம் - 6.61.2 - "செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்");

வடியுடைச் சூலம் மழுப்படை ஏந்தி - கூர்மை உடைய சூலமும் மழுவாயுதமும் ஏந்துபவன்; (வடி - கூர்மை);

கடிமலர் ஆர் பொழில் கைச்சினத்தானே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (கடி - வாசனை);


5)

காமனை நீறுசெய் கண்ணமர் நெற்றியன்

தூமறை நாவன் சுரர்தொழு நாயகன்

மாமலர் இன்மது மாந்திய வண்டினம்

காமரம் செய்பொழிற் கைச்சினத் தானே.


காமனை நீறுசெய் கண் அமர் நெற்றியன் - மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்;

தூமறை நாவன் - தூய வேதங்களை ஓதியவன்;

சுரர் தொழு நாயகன் - தேவர்கள் வணங்கும் தலைவன்;

மாமலர் இன்மது மாந்திய வண்டினம் காமரம் செய் பொழிற் கைச்சினத்தானே - சிறந்த பூக்களில் இனிய தேனை உண்ட வண்டுகள் இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (மாந்துதல் - உண்ணுதல்); (காமரம் - இசை; சீகாமரம் என்ற பண்ணின் பெயர் முதற்குறை விகாரம்);


6)

தண்மதி கூவிளம் தாங்கு சடையினன்

விண்மகிழ் வெய்த விடத்தினை உண்டவன்

உண்மையில் உள்ளவன் பெண்மயில் பங்கினன்

கண்மலர் ஆர்பொழிற் கைச்சினத் தானே.


தண்மதி கூவிளம் தாங்கு சடையினன் - குளிர்ந்த சந்தினையும் வில்வத்தையும் சடையில் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

விண் மகிழ்வு எய்த, விடத்தினை உண்டவன் - தேவர்கள் இன்புற ஆலகாகலத்தை உண்டவன்;

உண்மையில் உள்ளவன் - மெய்ப்பொருள் ஆனவன்;

பெண்மயில் பங்கினன் - பெண்மயில் போன்ற உமையை ஒரு பங்காக உடையவன்;

கண்மலர் (= கள் மலர்) ஆர் பொழில் கைச்சினத்தானே - தேன்மலர்கள் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (கண்மலர் = கள் + மலர்);


7)

மெய்யிற் பொடியினைப் பூசி வினைகெடப்

பொய்யில் மனத்தொடு பொன்னடி போற்றுதல்

செய்யில் அருளரன் செஞ்சடைக் கொன்றையன்

கையில் மழுவினன் கைச்சினத் தானே.


மெய்யில் பொடியினைப் பூசி, வினை கெடப், பொய்-இல் மனத்தொடு பொன்னடி போற்றுதல் செய்யில், அருள்-அரன் - உடம்பில் திருநீற்றைப் பூசி, வினைகள் தீரும்படி, வஞ்சகமற்ற மனத்தோது பொற்பாதங்களைப் போற்றினால் அருளும் ஹரன்; (பொடி - திருநீறு); (செய்யில் - செய்தால்);

செஞ்சடைக் கொன்றையன் - செஞ்சடையில் கொன்றையை அணிந்தவன்;

கையில் மழுவினன் - மழுவைக் கையில் ஏந்தியவன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


8)

அருவரை பேர்த்த அரக்கனார் வாய்கள்

ஒருபதும் வீரிட ஓர்விரல் ஊன்றித்

திருவருள் செய்த சிவனெரு தேறி

கருமணி கண்டத்தன் கைச்சினத் தானே.


அருவரை பேர்த்த அரக்கனார் வாய்கள் ஒருபதும் வீரிட ஓர் விரல் ஊன்றித் - அரிய மலையான கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்து-வாய்களும் வீரிட்டுக் கத்தி அழும்படி திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி;

திருவருள் செய்த சிவன் - (பின் அவன் பாடிய இசையைக் கேட்டு இரங்கி) அருள்புரிந்த சிவபெருமான்;

எருது-ஏறி - இடபவாகனன்;

கருமணி கண்டத்தன் - கரிய மணியைக் கண்டத்தில் உடையவன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


9)

மாலயன் காணற் கரியவன் வார்சடை

மேலணி கொன்றையன் வெண்பொடி முப்புரி

நூலணி மார்பினன் நோயிலன் மூப்பிலன்

காலனைக் காய்ந்தவன் கைச்சினத் தானே.


மால் அயன் காணற்கு அரியவன் - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவன்;

வார்சடைமேல் அணி கொன்றையன் - நீள்சடைமேல் அழகிய கொன்றையை அணிந்தவன்; (வார்தல் - நீள்தல்);

வெண்பொடி முப்புரிநூல் அணி மார்பினன் - திருநீறும் பூணூலும் அணிந்த மார்பை உடையவன்;

நோய் இலன், மூப்பு இலன் - நோயும் மூப்பும் இல்லாதவன்;

காலனைக் காய்ந்தவன் - கூற்றுவனை உதைத்தவன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


10)

கண்ணிலர் காட்டு வழியைக் கருதிடேல்

நண்ணிய அன்பர்க்கு நல்லவன் நம்சிவன்

எண்ணில் பெயரினன் எண்ணில் வடிவினன்

கண்ணில் நெருப்பினன் கைச்சினத் தானே.


கண்ணிலர் காட்டு வழியைக் கருதிடேல் - குருடர்கள் காட்டுகின்ற நெறியை மதிக்கவேண்டா;

நண்ணிய அன்பர்க்கு நல்லவன் நம் சிவன் - சரண்புகுந்த பக்தர்களுக்கு நன்மை செய்பவன் நம் சிவபெருமான்;

எண்-இல் பெயரினன், எண்-இல் வடிவினன் - எண்ணற்ற நாமங்களும் எண்ணற்ற வடிவங்களும் உடையவன்;

கண்ணில் நெருப்பினன் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


11)

பண்திகழ் பாடல்கள் பாடிப் பரவிடில்

விண்திகழ் விப்பவன் வெள்விடை ஊர்தியன்

பெண்திகழ் மேனியன் பின்னு சடையினன்

கண்திகழ் நெற்றியன் கைச்சினத் தானே.


பண் திகழ் பாடல்கள் பாடிப் பரவிடில் - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடிப் துதித்தால்;

விண் திகழ்விப்பவன் - விண்ணில் திகழவைப்பவன் - வானுலக வாழ்வை அளிப்பவன்;

வெள்விடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

பெண் திகழ் மேனியன் - உமைபங்கன்;

பின்னு சடையினன் - பின்னிய சடையை உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.68.6 - "பெண்புனை கூறுடையானைப் பின்னுசடைப் பெருமானைப்");

கண் திகழ் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு -

  • வெண்டளையால் அமைந்த கட்டளைக் கலிவிருத்தம்.

  • அடிகள் இடையேயும் வெண்டளை பயிலும்.

  • "விளங்காய்"ச் சீர்கள் இல்லாத அமைப்பு;

  • கட்டளை அடிகள். அடிக்குப் 12 எழுத்துகள். அடிகள் நேரசையில் தொடங்கினால் ஈற்றடியில் 11 எழுத்துகள்

  • திருமந்திரம் இவ்வகை யாப்பு.


சில உதாரணங்கள்:

  • திருநாவுக்கரசர் தேவாரம் - 4.18.1 - "ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை"

  • திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்கிலர் தீவினை யாளர்";

  • திருமந்திரம் - 10.1.19.2 - "யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை"


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment