2015-07-30
P.297 - சாட்டியக்குடி
(திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)
----------------------------------
(கலிவிருத்தம் - மா மா மா கூவிளம் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய")
1)
வேத நாவன் கங்கை வேணியன்
காதல் மாதோர் பாகன் கண்ணுதல்
தாதை ஏர்கொள் சாட்டி யக்குடி
நாதன் அன்பர் வினைகள் நாசமே.
வேதநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;
கங்கை-வேணியன் - கங்கையைச் சடையில் உடையவன்; (வேணி - சடை);
காதல் மாது ஓர் பாகன் - அன்புடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.83.4 - "கச்சி மேய கண்ணுதலை");
தாதை - (நம்) தந்தை;
ஏர்கொள் சாட்டியக்குடி நாதன் அன்பர் வினைகள் நாசமே - அழகிய சாட்டியக்குடியில் உறையும் தலைவனான சிவபெருமான் அடியவர்களது வினைகள் அழியும்; (ஏர் - அழகு);
2)
சந்தத் தமிழை மகிழும் சங்கரன்
அந்தி வண்ணத் தழகன் ஐங்கரன்
தந்தை ஏர்கொள் சாட்டி யக்குடி
எந்தை அன்பர்க் கிடர்கள் இல்லையே.
சந்தத்-தமிழை மகிழும் சங்கரன் - சந்தப்பாமாலைகளை விரும்பும் சங்கரன்; ( சந்தம்- அழகு; செய்யுளின் ஓசைநயம்); (சங்கரன் - நன்மை செய்பவன்);
அந்தி-வண்ணத்து அழகன் - சந்தியாகால வானம் போலச் செம்மேனி உடைய அழகன்;
ஐங்கரன் தந்தை - ஐந்து கைகளையுடைய கணபதிக்குத் தந்தை;
ஏர்கொள் சாட்டியக்குடி எந்தை அன்பர்க்கு இடர்கள் இல்லையே - அழகிய சாட்டியக்குடியில் உறையும் எம் தந்தையான சிவபெருமான் அடியவர்களது துன்பங்கள் தீரும்; (ஏர் - அழகு);(எந்தை - எம் தந்தை); (இடர் - துன்பம்);
3)
மெய்யன் நீறு பூசும் வேதியன்
செய்யன் மதனை நீறு செய்தவன்
தையல் பங்கன் சாட்டி யக்குடி
ஐயன் அன்பர்க் கல்லல் இல்லையே.
மெய்யன் - மெய்ப்பொருள் ஆனவன்;
நீறு பூசும் வேதியன் - திருநீற்றைப் பூசிய வேதம் ஓதுபவன்; (வேதியன் - வேதத்தைச் சொன்னவன்; வேதத்தின் பொருளாவான்; வேதத்தில் விளங்குபவன்);
செய்யன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);
மதனை நீறு செய்தவன் - மன்மதனைச் சாம்பலாக்கியவன்;
தையல் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்; (தையல் - பெண்);
சாட்டியக்குடி ஐயன் அன்பர்க்கு அல்லல் இல்லையே - சாட்டியக்குடியில் உறையும் தலைவனான சிவபெருமான் அடியவர்களது துன்பங்கள் தீரும்; (ஐயன் - தலைவன்);
4)
மழவெள் விடையன் வாச மாமலர்க்
குழலி பாகம் ஆகும் கொள்கையான்
தழலின் உருவன் சாட்டி யக்குடிக்
குழகன் அன்பர்க் கின்பம் கூடுமே.
மழ-வெள்-விடையன் - இளைய வெண்ணிர இடபத்தை ஊர்தியாக உடையவன்;
வாச மாமலர்க்-குழலி பாகம் ஆகும் கொள்கையான் - அழகிய வாசமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாக மகிழ்ந்தவன்;
தழலின் உருவன் - ஜோதிவடிவினன்;
சாட்டியக்குடிக் குழகன் அன்பர்க்கு இன்பம் கூடுமே - சாட்டியக்குடியில் உறையும் அழகனான சிவபெருமான் அடியவர்களுக்கு இன்பம் பெருகும்; (குழகன் - இளைஞன்; அழகன்);
5)
ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக்
காத்துப் பாசம் ஏந்து காலனைச்
சாய்த்த பாதன் சாட்டி யக்குடித்
தீர்த்தன் அன்பர் செல்வர் ஆவரே.
ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக் காத்துப் - வேதத்தை ஓதி வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்து; (ஓத்து - வேதம்); (ஓம்புதல் - பேணுதல்);
பாசம் ஏந்து காலனைச் சாய்த்த பாதன் - பாசத்தைக் கையில் ஏந்தும் காலனைக் காலால் உதைத்தவன்; (சாய்த்தல் - அழித்தல்);
சாட்டியக்குடித் தீர்த்தன் அன்பர் செல்வர் ஆவரே - சாட்டியக்குடியில் உறையும் பரிசுத்தனான சிவபெருமான் அடியவர்களுக்குச் செல்வம் பெருகும்; (தீர்த்தன் - பரிசுத்தன்); (அப்பர் தேவாரம் - 5.65.1 - "தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே"); (சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்");
6)
கடலின் நஞ்சுண் கண்டன் காரிருள்
சுடலை தன்னில் ஆடும் சுந்தரன்
சடையன் ஏர்கொள் சாட்டி யக்குடி
விடையன் அன்பர் வினைகள் வீடுமே.
கடலின் நஞ்சு உண் கண்டன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;
காரிருள் சுடலை-தன்னில் ஆடும் சுந்தரன் - நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்து ஆடும் அழகன்; (காரிருள் - மிகுந்த இருள்);
சடையன் - சடையினன்;
ஏர்கொள் சாட்டியக்குடி விடையன் அன்பர் வினைகள் வீடுமே - அழகிய சாட்டியக்குடியில் உறையும் இடபவாகனனான சிவபெருமான் அடியவர்களது வினைகள் அழியும்; (வீடுதல் - அழிதல்);
7)
கால காலன் திங்கட் கண்ணியன்
நீல கண்டன் நெற்றிக் கண்ணினன்
சால அழகன் சாட்டி யக்குடிச்
சூலன் அன்பர்க் கில்லை துன்பமே.
காலகாலன் - காலனுக்கே காலன்;
திங்கட்-கண்ணியன் - சந்திரனை முடிக்கு அணியும் மாலையாகச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
நீலகண்டன், நெற்றிக்-கண்ணினன் - கரிய கண்டன், முக்கண்ணன்;
சால அழகன் - மிக அழகு உடையவன்;
சாட்டியக்குடிச் சூலன் அன்பர்க்கு இல்லை துன்பமே - சாட்டியக்குடியில் உறையும் சூலபாணியான சிவபெருமான் அடியவர்களது துன்பங்கள் அழியும்;
8)
மலையைப் பேர்த்தான் பத்து வாய்களும்
அலற ஊன்றி அருள்செய் அங்கணன்
தலையில் ஆற்றன் சாட்டி யக்குடித்
தலைவன் அன்பர் வினைகள் சாயுமே.
மலையைப் பேர்த்தான் பத்து-வாய்களும் அலற ஊன்றி அருள்செய் அங்கணன் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத்-தலைகளில் இருந்த வாய்கள் எல்லாம் அலறும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கிப் பின்னர் அருள்செய்த அருட்கண் உடையவன்; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);
தலையில் ஆற்றன் - கங்காதரன்;
சாட்டியக்குடித் தலைவன் அன்பர் வினைகள் சாயுமே - சாட்டியக்குடியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானது பக்தர்களது வினைகள் அழியும்; (சாய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கங்கையான் உறையுங் கரக்கோயிலைத் தம் கையால் தொழுவார் வினை சாயுமே");
9)
மேலும் கீழும் தேடி வேதனும்
மாலும் வாடி வாழ்த்து வான்சுடர்
சாலப் பழையன் சாட்டி யக்குடிச்
சூலப் படையன் தொண்டர்க் கின்பமே.
மேலும் கீழும் தேடி வேதனும் மாலும் வாடி வாழ்த்து வான்சுடர் - முடியும் அடியும் தேடிப் பிரமனும் திருமாலும் வாடி வணங்க நின்ற பெருஞ்சோதி; (வேதன் - பிரமன்); (வான் - வானம்; பெருமை); (சுடர் - ஜோதி);
சாலப் பழையன் - மிகவும் தொன்மையானவன்;
சாட்டியக்குடிச் சூலப்-படையன் தொண்டர்க்கு இன்பமே - சாட்டியக்குடியில் உறையும் சூலபாணியின் தொண்டர்களுக்கு இன்பமே வந்தடையும்;
10)
வழியை மாற்ற இழிவு வார்த்தைகள்
மொழியும் மூர்க்கர் தம்மை நீங்குமின்
உழுவை உரியன் சாட்டி யக்குடி
தொழவல் வினைதீர்ந் தின்பம் சூழுமே.
வழியை மாற்ற இழிவு வார்த்தைகள் மொழியும் மூர்க்கர்-தம்மை நீங்குமின் - நெறியை மாற்றப் புமொழிகள் பேசும் மூடர்களை நீங்குங்கள்; (மூர்க்கன் - மூடன்);
உழுவை உரியன் - புலித்தோலைக் கட்டியவன்; (உழுவை - புலி); (உரி - தோல்);
சாட்டியக்குடி தொழ வல்வினை தீர்ந்து இன்பம் சூழுமே - சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமானை வணங்கினால் வல்வினைகள் தீர்ந்து இன்பம் பெருகும்;
11)
பனிவெண் மலையன் சீறு பாந்தளும்
குனிவெண் பிறையும் குலவு சென்னியன்
தனியன் ஏர்கொள் சாட்டி யக்குடி
இனியன் அன்பர்க் கில்லை துன்பமே.
பனி-வெண்-மலையன் - பனி சூழ்ந்த வெள்ளிமலையில் (கயிலைமலையில்) உறைபவன்;
சீறு-பாந்தளும் குனி-வெண்-பிறையும் குலவு சென்னியன் - சீறும் பாம்பும் வளைந்த வெண்திங்களும் சேர்ந்து இருக்கும் திருமுடியினன்; (பாந்தள் - பாம்பு); (குனிதல் - வளைதல்);
தனியன் - ஒப்பற்றவன்;
ஏர்கொள் சாட்டியக்குடி இனியன் அன்பர்க்கு இல்லை துன்பமே - அழகிய சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமான் அன்பர்களுக்குத் துன்பம் இல்லை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment