2015-05-09
P.282 - வலிவலம்
------------------
(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")
(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")
1)
அளவிலா வல்வினை அற்றுநல் லின்பமே ஆக வேண்டில்
இளநிலாச் சென்னிமேல் ஏற்றவன் வெள்விடை ஏறும் எந்தை
வளைவிலா மாமலை ஏந்திய மன்னவன் வாழ்த்து வார்க்கு
வளமெலாம் நல்கிடும் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
அளவு இலா வல்வினை அற்று, நல்-இன்பமே ஆக வேண்டில் - எல்லையற்ற தீவினைகள் எல்லாம் தீர்ந்து மிக்க இன்பமே விளைய வேண்டினால்; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்); (நல்ல - நன்மையான. 2. மிக்க); (சுந்தரர் தேவாரம் - 7.97.10 - "வானோர்உலகில் சாலநல் லின்பம் எய்தித் தவலோகத் திருப்பவரே");
இளநிலாச் சென்னிமேல் ஏற்றவன் - இளம்பிறையைச் சூடியவன்;
வெள்விடை ஏறும் எந்தை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய எம் தந்தை;
வளை-விலா மாமலை ஏந்திய மன்னவன் - வளைத்த வில்லாக மேருமலையை ஏந்திய தலைவன்; (விலா - வில்லாக);
வாழ்த்துவார்க்கு வளமெலாம் நல்கிடும் - போற்றுபவர்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கும்;
வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே; (மறவல் - மறவாதே; அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.50.6 - "மறவல் நீ ... ... பொன்புனஞ் சூழ் புனவாயிலே");
2)
தீர்விலாத் தீவினை தீர்ந்துநல் லின்பமே சேர வேண்டில்
நீர்நிலாச் சென்னியான் நெற்றிமேற் கண்ணினான் நீல கண்டன்
ஆர்வமார் மாணியை அணுகிய காலனை அன்று தைத்த
மார்பரா மாலையான் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
தீர்வு இலாத் தீவினை தீர்ந்து நல்-இன்பமே சேர வேண்டில் - தீராத தீவினையெல்லாம் தீர்ந்து நல்ல இன்பமே பெறவேண்டும் என்றால்; (தீர்வு - நீங்குகை);
நீர் நிலாச் சென்னியான் - கங்கையையும் சந்திரனையும் திருமுடிமேல் ஏற்றவன்;
நெற்றிமேல் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;
நீலகண்டன் - கறைக்கண்டன்;
ஆர்வம் ஆர் மாணியை அணுகிய காலனை அன்று உதைத்த - பெரும்பக்தியுடைய மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய காலனை அன்று உதைத்தருளிய; (ஆர்வம் - அன்பு; பக்தி); (ஆர்தல் - நிறைதல்); (மாணி - மார்க்கண்டேயர்);
மார்பு அரா-மாலையான் - திருமார்பில் பாம்பை மாலையாக அணிந்தவன்; (அரா - பாம்பு);
வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
3)
வழுவெலாம் நீங்கிநல் லின்பமே வாழ்வினில் மல்க வேண்டில்
அழுதுவா னோரெலாம் ஆர்கழல் போற்றவும் ஆலம் உண்டு
பழுதிலா அமுதமீந் தருளினான் பாவையோர் பங்கன் அங்கை
மழுவினான் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
வழு-எலாம் நீங்கி நல்-இன்பமே வாழ்வினில் மல்க வேண்டில் - குற்றமும் பாவமும் தீர்ந்து நல்ல இன்பமே வாழ்வில் பெருகவேண்டும் என்றால்; (வழு - குற்றம்; பாவம்); (மல்குதல் - மிகுதல்; பெருகுதல்);
அழுது வானோர்-எலாம் ஆர்-கழல் போற்றவும் ஆலம் உண்டு பழுது இலா அமுதம் ஈந்து-அருளினான் - பாற்கடலில் தோன்றிய விஷம் சுட்டெரிக்க, மிக வருந்திய தேவர்களெல்லாம் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி அந்த ஆலகாலத்தை உண்டருளி, அவர்களுக்குக் குற்றமற்ற அமுதினை வழங்கி அருளியவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (பழுது - குற்றம்);
பாவை ஓர் பங்கன் - உமையொருபங்கன்;
அங்கை மழுவினான் - கையில் மழுவை ஏந்தியவன்;
சோலை சூழ் வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
4)
தாளலா காவிடர் செய்வினை யாவுமே சாய வேண்டில்
வேளைநீ றாக்கிய வேதியன் ஆதியன் வேத கீதன்
கோளரா கூவிளம் கொன்றையார் சென்னியான் கோல மார்பில்
வாளரா மாலையான் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
தாளல் ஆகா இடர்செய் வினை யாவுமே சாய வேண்டில் - தாங்க ஒண்ணாத துன்பம் செய்கின்ற தீவினை எல்லாம் அழியவேண்டும் என்றால்; (சாய்தல் - அழிதல்);
வேளை நீறு ஆக்கிய வேதியன் - மன்மதனைச் சாம்பலாக்கிய, வேதமுதல்வன்; (வேள் - மன்மதன்); (வேதியன் - வேதத்தைச் சொன்னவன்; வேதத்தின் பொருள் ஆனவன்; வேதத்தில் விளங்குபவன்);
ஆதியன் - ஆதிமூர்த்தி;
வேதகீதன் - வேதங்களைப் பாடியருளியவன்; (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா");
கோள்-அரா கூவிளம் கொன்றை ஆர் சென்னியான் - கொடிய பாம்பு, வில்வம், கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடியவன்; (கோள் - கொடுமை; கொள்ளுதல்); (கூவிளம் - வில்வம்); (ஆர்தல் - பொருந்துதல்);
கோல மார்பில் வாள்-அரா மாலையான் - அழகிய மார்பில் ஒளியுடைய கொடிய பாம்பை மாலையாக அணிந்தவன்; (கோலம் - அழகு); (வாள் - ஒளி; கொடுமை; கொல்லுதல்);
வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
5)
தீதையே நல்கிடும் தீவினை யாவுமே தீர வேண்டில்
காதையார் குழையினான் காலிலார் கழலினான் காத லோடு
போதையார் தூவிநின் றேத்தினும் இன்னருள் புரியும் ஈசன்
மாதையோர் கூறுடை வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
தீதையே நல்கிடும் தீவினை யாவுமே தீர வேண்டில் - துன்பத்தையே தரும் தீவினையெல்லாம் தீரவேண்டும் என்றால்; (தீது - துன்பம்);
காதை ஆர் குழையினான் - காதிற் குழை அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.24.2 - "போதையார் பொற்கிண்ணத்து அடிசில் ... காதையார் குழையினன்");
காலில் ஆர் கழலினான் -
காதலோடு போதை யார் தூவிநின்று ஏத்தினும் இன்னருள் புரியும் ஈசன் - பக்தியோடு பூக்களைத் தூவி யார் வழிபட்டாலும் அவர்களுக்கு இனிது அருள்புரியும் ஈசன்; (போது - பூ);
மாதை ஓர் கூறுடை - பார்வதியை ஒரு பாகமாக உடைய;
வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
6)
பாசமார் கையினார் பாய்ந்தடை யாமுனம் பாவ மெல்லாம்
நாசமாய் நன்மையே உற்றிட வேண்டினால் நாக நாணன்
நேசமார் மங்கையோர் பங்கினன் நிகரிலா நீல கண்டன்
வாசமார் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
பாசம் ஆர் கையினார் பாய்ந்து அடையா-முனம் - பாசத்தைக் கையில் பற்றிய எமதூதர்கள் னம் உயிரைக் கொல்லப் பாய்ந்து வந்துசேர்வதன் முன்பே; (அப்பர் தேவாரம் - 5.86.1 - "காலபாசம் பிடித்தெழு தூதுவர்"); (சம்பந்தர் தேவாரம் - 3.29.7 - "மான்மழு ஏந்திய கையினார்");
பாவம்-எல்லாம் நாசமாய் நன்மையே உற்றிட வேண்டினால் - பாவங்களெல்லாம் அழிந்து நன்மையே பெறவேண்டும் என்றால்;
நாக-நாணன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; முப்புரம் எரித்தபோது வில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்;
நேசம் ஆர் மங்கை ஓர் பங்கினன் - அன்பு மிக்க உமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ந்தவன்;
நிகர் இலா நீலகண்டன் - ஒப்பற்ற நீலகண்டத்தை உடையவன்;
வாசம் ஆர் சோலை சூழ் வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - மணம் நிறைந்த சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
7)
பழையவல் வினையெலாம் பாறிநல் லின்பமே பல்க வேண்டில்
குழையையோர் காதினிற் காட்டினான் காட்டினிற் கூத்தன் நீற்றன்
மழவிடை ஊர்தியான் மான்மறிக் கையினான் மார்பில் நூலன்
மழைநுழை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
பழைய வல்வினையெலாம் பாறி நல்-இன்பமே பல்க வேண்டில் - பழைய வலிய வினையெல்லாம் அழிந்து நல்ல இன்பமே மிக வேண்டுமானால்; (பாறுதல் - அழிதல்); (பல்குதல் - மிகுதல்);
குழையை ஓர் காதினில் காட்டினான் - ஒரு காதில் குழை அணிந்தவன் (= அர்த்தநாரீஸ்வரன்);
காட்டினில் கூத்தன் - சுடுகாட்டில் ஆடுபவன்;
நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;
மழவிடை ஊர்தியான் - இளைய எருதை வாகனமாக ஏறியவன்; (மழ - இளைய);
மான்மறிக் கையினான் - கையில் மான்கன்றை ஏந்தியவன்; (மான்மறி - மான்கன்று);
மார்பில் நூலன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;
மழை நுழை சோலை சூழ் வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - மேகம் நுழைகின்ற பொழில்கள் சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே; (மழை - மேகம்);
8)
அஞ்சிட வந்தடை வினைகள்தீர்ந் தின்பமே ஆக வேண்டில்
வெஞ்சினத் தசமுகன் வீரிட மலைமிசை விரலை ஊன்றி
செஞ்சடை மேலிளம் திங்களைச் சூடிய தேவ தேவன்
மஞ்சடை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
அஞ்சிட வந்து அடை வினைகள் தீர்ந்து இன்பமே ஆக வேண்டில் - நாம் அஞ்சும்படி வந்துசேர்கின்ற வினையெல்லாம் தீர்ந்து இன்பமே விளையவேண்டும் என்றால்;
வெஞ்சினத் தசமுகன் வீரிட மலைமிசை விரலை ஊன்றி - கடுங்கோபமுடைய இராவணன் அலறி அழும்படி கயிலைமலைமேல் திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றியவன் (= ஊன்றி அவனை நசுக்கியவன்); (தசமுகன் - பத்துத்தலைகளையுடைய இராவணன்); (வீரிடுதல் - திடீரெனக் கத்துதல்); (ஊன்றி - ஊன்றியவன்; பிறைசூடி - பிறையைச் சூடியவன், விடையேறி - விடைமேல் ஏறியவன், முதலியனவற்றை ஒத்த பிரயோகம்);
செஞ்சடைமேல் இளம்-திங்களைச் சூடிய தேவதேவன் - சிவந்த சடைமேல் இளம்பிறையைச் சூடிய தேவாதிதேவன்;
மஞ்சு அடை சோலை சூழ் வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - மேகம் அடைகின்ற பொழில் சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே; (மஞ்சு - மேகம்);
9)
மண்டுவல் வினையெலாம் மாய்ந்துவாழ் நாளெலாம் மகிழ வேண்டில்
விண்டுவும் வேதனும் நேடுமா றோங்கினான் வெவ்வி டத்தை
உண்டுகண் டத்தினில் வைத்தவன் நான்மறை ஓது நாவன்
வண்டுபண் செய்பொழில் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
மண்டு-வல்வினையெலாம் மாய்ந்து, வாழ்நாளெலாம் மகிழ வேண்டில் - நெருங்கித் திரள்கின்ற வலிய வினையெல்லாம் அழிந்து, வாழும் நாளெல்லாம் இன்புறவேண்டும் என்றால்; (மண்டுதல் - திரளுதல்; மிகுதல்; நெருங்குதல்);
விண்டுவும் வேதனும் நேடுமாறு ஓங்கினான் - திருமால் பிரமன் இவர்கள் அடிமுடி தேடும்படி ஜோதியாகி நீண்டவன்; (விண்டு - விஷ்ணு); (வேதன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்); (நம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - 11.32.49 - "விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற");
வெவ்விடத்தை உண்டு கண்டத்தினில் வைத்தவன் - கொடிய நஞ்சை உண்டு கண்டத்தில் ஒளித்தவன்;
நான்மறை ஓது நாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;
வண்டு பண்செய் பொழில் வலிவலத்து-அரனை, நீ மறவல் நெஞ்சே - வண்டுகள் இசைபாடும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
10)
வம்பராய் நாள்தொறும் வஞ்சமே பேசுவார் வார்த்தை நீங்கி
உம்பரார் நாதனே ஒண்மலர்ப் பாதனே உவம னில்லாய்
சம்புவே என்பவர்க் கின்பமே நல்குவான் சாம வேதன்
வம்புலாம் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
வம்பராய் நாள்தொறும் வஞ்சமே பேசுவார் வார்த்தை நீங்கி - ; (வம்பர் - வீணர்கள்; பயனற்றவர்; துஷ்டர்);
"உம்பரார் நாதனே; ஒண்மலர்ப் பாதனே; உவமன் இல்லாய் - "தேவர் தலைவனே! ஒளிபொருந்திய மலர்போன்ற திருவடிகளை உடையவனே! ஒப்பற்றவனே"; (உம்பரார் - தேவர்கள்); (உவமன் - உவமை); (அப்பர் தேவாரம் - 6.97.10 - "ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி");
சம்புவே" என்பவர்க்கு இன்பமே நல்குவான் சாமவேதன் - சம்புவே" என்று போற்றி வணங்குபவர்களுக்கு இன்பத்தையே தருவான் சாமவேதம் ஓதும் ஈசன்; (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்); (சாமவேதன் - சாமவேதம் ஓதுபவன்);
வம்பு உலாம் சோலை சூழ் வலிவலத்து அரனை நீ மறவல் நெஞ்சே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே; (வம்பு - வாசனை); (உலாம் - உலாவும்; உலாவுதல் - இயங்குதல்; வியாபித்தல்; சூழ்தல்);
11)
ஊனுடைப் பிறவியில் ஆர்த்திடும் வினைகள்தீர்ந் துய்ய வேண்டில்
தேனுடை மலர்களால் தேவர்கள் போற்றிசெய் செய்ய பாதன்
கூனுடை வான்பிறை குஞ்சிமேற் புற்றராக் கூட வைத்தான்
வானடை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.
ஊனுடைப் பிறவியில் ஆர்த்திடும் வினைகள் தீர்ந்து உய்ய வேண்டில் - புலால-உடம்பில் பிறக்கச்செய்யும் வினைகளெல்ல்லாம் தீர்ந்து நாம் உய்வதற்கு; (ஊன் - மாமிசம்; உடம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.21.4 - "ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்"):
தேனுடை மலர்களால் தேவர்கள் போற்றிசெய் செய்ய பாதன் - வாசமலர்களால் வானவர்கள் வழிபடும் சேவடியை உடையவன்; (செய்ய - சிவந்த);
கூனுடை வான்பிறை குஞ்சிமேல் புற்றராக் கூட வைத்தான் - வளைந்த அழகிய பிறையைத் திருமுடிமேல் பாம்போடு ஒன்றாக வைத்தவன்; (கூன் - வளைவு); (வான் - அழகு; வானம்); (குஞ்சி - தலை); (புற்றரா - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு ); (கூடுதல் - ஒன்றுசேர்தல்);
வான் அடை சோலை சூழ் வலிவலத்து அரனை நீ மறவல் நெஞ்சே - வானளாவும் பொழில்களால் சூழப்பெற்ற திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment