Friday, December 23, 2022

P.284 - நன்னிலம் - வானவர்கள் தேனுருவில்

2015-05-24

P.284 - நன்னிலம்

------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

வானவர்கள் தேனுருவில் வந்தேத்தக் குறைதீர்த்தாய்

ஏனமருப் பணிமார்பா ஈரிருவர்க் காலதன்கீழ்

ஞானமருள் தேசிகனே நன்னிலத்துப் பெருங்கோயில்

தானமென நின்றவனே தமியேனைக் காத்தருளே.


வானவர்கள் தேன்-ருவில் வந்து ஏத்தக் குறை தீர்த்தாய் - தேவர்கள் தேனீ வடிவில் வந்து வழிபட அவர்களது குறையைத் தீர்த்தவனே; (தேன் - தேனீ); (ஏத்துதல் - துதித்தல்); (* நன்னிலத்துத் தலபுராணச் செய்தி: விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்கள் வடிவில் வந்து வழிபட்ட தலம் ஆதலின் மதுவனம் என்று பெயர் பெற்றது);

ஏன-மருப்பு அணி மார்பா - பன்றிக்கொம்பை மார்பில் அணிந்தவனே; (ஏனம் - பன்றி); (மருப்பு - தந்தம்; கொம்பு);

ஈரிருவர்க்கு ஆல்-அதன்கீழ் ஞானம் அருள் தேசிகனே - சனகாதியர் நால்வருக்குக் கல்லாலமரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த குருவே; (ஆல் - கல்லாலமரம்); (தேசிகன் - குரு);

நன்னிலத்துப் பெருங்கோயில் தானம் என நின்றவனே - நன்னிலத்துப் பெருங்கோயில் (மாடக்கோயில்) இடமாக எழுந்தருளியவனே; (தானம் - ஸ்தானம் - உறைவிடம்; கோயில்); (நிற்றல் - தங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.98.11 - "கோச்செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை");

தமியேனைக் காத்தருளே - அடியேனைக் காத்தருள்க; (தமியேன் - துணையற்ற நான்);


2)

வாரியுமிழ் நஞ்சுகண்டு வானோர்கள் வந்திறைஞ்சக்

காரியலக் கண்டத்திற் கரந்தவனே காதலுடை

நாரியொரு கூறுடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

ஆரியனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.


வாரிமிழ் நஞ்சு கண்டு வானோர்கள் வந்து இறைஞ்சக் கார் இயலக் கண்டத்தில் கரந்தவனே - பாற்கடல் கக்கிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் வந்து வணங்க, (அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தை உண்டு) கருமை திகழும்படி மிடற்றில் ஒளித்தவனே; (வாரி - கடல்); (கார் - கருமை; மேகம்); (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்; ஒத்தல்); (கரத்தல் - மறைத்தல்);

காதலுடை நாரிரு கூறுடையாய் - அன்புடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவனே;

நன்னிலத்துப் பெருங்கோயில் ஆரியனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் உறையும் பெரியோனே; (ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்);

அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே - உன் திருவடியை வணங்கும் அடியேனைக் காத்தருள்க;


3)

அங்கியினைக் கையேந்தி ஆடுகின்ற ஆரழகா

பொங்கரவும் வெண்மதியும் புனைசடையாய் கொம்பன்ன

நங்கையொரு பங்குடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

அங்கணனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.


அங்கியினைக் கையேந்தி ஆடுகின்ற ஆரழகா - தீயைக் கையில் ஏந்திக் கூத்தாடும் பேரழகனே; (அங்கி - நெருப்பு); (ஆரழகன் - அரிய அழகுடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "ஆதியன் ஆதிரையன் அனள் ஆடிய ஆரழகன்");

பொங்கு-அரவும் வெண்மதியும் புனை-சடையாய் - சீறும் பாம்பையும் வெண்திங்களையும் அணிந்த சடையினனே; (புனைதல் - அணிதல்);

கொம்பு அன்ன நங்கை ஒரு பங்கு உடையாய் - பூங்கொம்பு போன்ற உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே; (நங்கை - பெண்ணிற் சிறந்தவள்);

நன்னிலத்துப் பெருங்கோயில் அங்கணனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் உறையும் அருட்கண்ணனே; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவன்);

அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே - உன் திருவடியை வணங்கும் அடியேனைக் காத்தருள்க;


4)

வம்புலவு கொன்றையினாய் வழிபட்ட சிலந்திதனைச்

செம்பியர்கோன் ஆக்குவித்தாய் சீராரும் சேவடியே

நம்பியவர்க் கன்புடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

எம்பெருமான் எருதேறீ இடர்தீர்த்துக் காத்தருளே.


வம்பு உலவு கொன்றையினாய் - மணம் கமழும் கொன்றையை அணிந்தவனே;

வழிபட்ட சிலந்திதனைச் செம்பியர்கோன் ஆக்குவித்தாய் - (திருவானைக்காவில்) வழிபாடு செய்த சிலந்தியைச் சோழமன்னன் ஆக்கியவனே; (செம்பியன் - சோழன்); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு);

சீர் ஆரும் சேவடியே நம்பியவர்க்கு அன்பு உடையாய் - சீர் மிக்க உன் சிவந்த திருவடிகளையே விரும்பியவர்களுக்கு அன்பு உடையவனே; (நம்புதல் - விரும்புதல்);

நன்னிலத்துப் பெருங்கோயில் எம்பெருமான் எருதேறீ - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய எம்பெருமானே, இடபவாகனனே;

இடர் தீர்த்துக் காத்தருளே - துன்பத்தைத் தீர்த்து அடியேனைக் காத்தருள்க;


5)

சக்கர(ம்)மாற் கீந்தவனே சடைமுடிமேற் கூவிளமும்

கொக்கிறகும் குராமலரும் குளிர்மதியும் அணிந்தவனே

நக்கெயில்கள் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

முக்கணனே முடிவில்லா முன்வினையைத் தீர்த்தருளே.


சக்கரம் மாற்கு ஈந்தவனே - திருமாலுக்குக் சக்கராயுதத்தை வழங்கியவனே;

சடைமுடிமேல் கூவிளமும் கொக்கிறகும் குராமலரும் குளிர்-மதியும் அணிந்தவனே - திருச்சடைமேல் வில்வம், கொக்கிறகு, குராமலர், குளிச்சி பொருந்திய சந்திரன், இவற்றை அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்குவடிவில் இருந்த குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

நக்கு எயில்கள் மூன்று எரித்தாய் - சிரித்துக் கோட்டைகள் மூன்றை எரித்தவனே; (நகுதல் - சிரித்தல்);

நன்னிலத்துப் பெருங்கோயில் முக்கணனே - ன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய முக்கண்ணனே;

முடிவு இல்லா முன்வினையைத் தீர்த்தருளே - தீராத பழவினையைத் தீர்த்து அருள்க;


6)

கள்ளாரும் மலர்தூவிக் கழல்தொழுத உம்பருய்யப்

புள்ளூரும் மால்எரிகால் பொருந்துமொரு கணையெய்து

நள்ளார்ஊர் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

வள்ளால்ஊர் விடையுடையாய் வல்வினையைத் தீர்த்தருளே.


கள் ஆரும் மலர் தூவிக் கழல்தொழுத உம்பர் உய்யப் - தேன் பொருந்திய பூக்களைத் தூவித் திருவடியை வணங்கிய தேவர்கள் உய்யும்படி; (கள் - தேன்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (உம்பர் - தேவர்);

புள் ஊரும் மால் எரி கால் பொருந்தும் ஒரு கணை எய்து - கருடவாகனனான திருமால், தீ, வாயு இம்மூவரும் ஒன்றாகப் பொருந்திய ஓர் அம்பைச் செலுத்தி; (புள் - பறவை); (ஊர்தல் - ஏறுதல்); (கால் - காற்று);

நள்ளார் ஊர் மூன்று எரித்தாய் - பகைத்த அசுரர்களது முப்புரங்களையும் எரித்தவனே; (நள்ளார் - பகைவர்);

நன்னிலத்துப் பெருங்கோயில் வள்ளால் - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய வள்ளலே; (வள்ளல் என்பது விளியில் வள்ளால் என்று ஆகும்);

ஊர்-விடை உடையாய் - இடபவாகனம் உடையவனே; (ஊர்தல் - ஏறுதல்); (பெரியபுராணம் - 12.93 - " ஊர்விடை வள்ளலார் திருவாரூர்");

வல்வினையைத் தீர்த்தருளே - என் வலிய வினையைத் தீர்த்து அருள்க;


7)

முகமாறு திகழ்குகனை முன்னீன்ற முக்கணனே

மகனாகச் சண்டிக்கு வரம்தந்த மணிகண்டா

நகையால்மும் மதிலட்டாய் நன்னிலத்துப் பெருங்கோயிற்

பகவாஎன் பல்பிறவிப் பழவினையைத் தீர்த்தருளே


முகம் ஆறு திகழ்-குகனை முன் ஈன்ற முக்கணனே - ஆறுமுகம் உடைய முருகனை முன்பு ஈன்ற முக்கண்ணனே; (குகன் - முருகன்);

மகன் ஆகச் சண்டிக்கு வரம் தந்த மணிகண்டா - சண்டேசுர நாயனாருக்கு உன்னைத் தந்தையாகத் தந்தருளிய நீலகண்டனே; (பெரியபுராணம் - சண்டேசுரர் புராணம் - 12.20.54 - "அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்தருளி");

நகையால் மும்மதில் அட்டாய் - சிரிப்பால் முப்புரங்களை எரித்தவனே; (நகை - சிரிப்பு);

நன்னிலத்துப் பெருங்கோயில் பகவா - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய பகவனே; (பகவன் - பகவான் - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.4 - "நாகேச்சுர நகருள் பகவா என வல்வினை பற்றறுமே");

என் பல்பிறவிப் பழவினையைத் தீர்த்தருளே - நான் பல பிறவிகளில் செய்த பழைய வினைகளை (& எனக்குப் பல பிறவிகளைத் தரும் பழைய வினைகளை) நீக்கி அருள்க;


8)

மஞ்சடையும் மலையிடந்த வாளரக்கன் வாய்பத்தும்

கெஞ்சியழு திசைபாடக் கேட்டிரங்கி வரமீந்தாய்

நஞ்சடைமா மிடற்றினனே நன்னிலத்துப் பெருங்கோயிற்

செஞ்சடையாய் பெரியோனே செய்வினையைத் தீர்த்தருளே.


மஞ்சு அடையும் மலை இடந்த வாளரக்கன் வாய்பத்தும் கெஞ்சிழுது இசைபாடக் கேட்டு இரங்கி வரம் ஈந்தாய் - மேகம் சூழும் கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனை நசுக்கிப், பின் அவனது பத்துவாய்களும் கெஞ்சி அழுது துதிகள் பாடக் கேட்டு அவனுக்கு இரங்கி நீண்ட ஆயுள், வாள், நாமம் முதலியவற்றை அருளியவனே; (மஞ்சு - மேகம்); (இடத்தல் - பெயர்த்தல்); (வாள் - கொடிய);

நஞ்சு அடை-மா மிடற்றினனே - விஷத்தை அடைத்த அழகிய கண்டனே; (மா - அழகு);

நன்னிலத்துப் பெருங்கோயில் செஞ்சடையாய் - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய சிவந்த சடையினனே;

பெரியோனே - பெருமானே;

செய்வினையைத் தீர்த்தருளே - நான் செய்த வினைகளைத் தீர்த்து அருள்க;


9)

வரியதளை ஆடையென மகிழ்ந்தவனே மலர்மேலான்

அரியிவர்கள் அறியாத அழலுருவா ஆரிருளில்

நரிதிரிகான் நடமாடீ நன்னிலத்துப் பெருங்கோயிற்

பெரியவனே பிஞ்ஞகனே பிணிதீர்த்துக் காத்தருளே.


வரி-அதளை ஆடையென மகிழ்ந்தவனே - வரியுடைய புலித்தோலை ஆடையாகக் கட்டியவனே; (அதள் - தோல்);

மலர்மேலான் அரி இவர்கள் அறியாத அழல்-உருவா - தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினனே; (அழல் - தீ);

ஆரிருளில் நரி திரி-கான் நடம் ஆடீ - நள்ளிருளில் நரிகள் திரியும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனே; (கான் - காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 1.77.3 - "பேய்க்கணஞ் சூழ ஆரிருள்மாலை ஆடும் எம் அடிகள்");

நன்னிலத்துப் பெருங்கோயில் பெரியவனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமானே;

பிஞ்ஞகனே - (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று);

பிணி தீர்த்துக் காத்தருளே - என் பிணிகளை (= நோய்களை & பந்தங்களை) நீக்கி என்னைக் காத்து அருள்க;


10)

கள்ள(ம்)மலி கல்நெஞ்சர் காணாத தத்துவனே

வெள்ளமடை சடையானே வெண்பொடியார் மேனியனே

நள்ளிருளில் நடிப்பவனே நன்னிலத்துப் பெருங்கோயில்

உள்ளவனே உனையன்றி ஒருதெய்வம் உள்கேனே.


கள்ள(ம்) மலி கல்நெஞ்சர் காணாத தத்துவனே - வஞ்சகம் நிறைந்த கல்மனத்தார்கள் அறியாத மெய்ப்பொருளே;

வெள்ளம் அடை- சடையானே - கங்கைப்புனலை அடைத்த சடையினனே;

வெண்பொடி ஆர் மேனியனே - திருநீற்றைப் பூசிய திருமேனியனே;

நள்ளிருளில் நடிப்பவனே - நள்ளிருளில் கூத்தாடுபவனே;

நன்னிலத்துப் பெருங்கோயில் உள்ளவனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளியவனே;

உனை அன்றி ஒரு தெய்வம் உள்கேன் - உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தை நான் எண்ணமாட்டேன்; (உனை - உன்னை); (உள்குதல் - எண்ணுதல்);


11)

பெண்ணாணாய் இறப்போடு பிறப்புமிலாப் பெருமையினாய்

மண்ணோடு நீரெரிகால் வானானாய் ஒருகணையால்

நண்ணார்முப் புரமெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

அண்ணாமுக் கண்ணாஎன் அருவினையைத் தீர்த்தருளே.


பெண்ணாய் இறப்போடு பிறப்பும் இலாப் பெருமையினாய் - பெண்ணும் ஆணும் ஆகிப், பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமை உடையவனே;

மண்ணோடு நீர் எரி கால் வான் ஆனாய் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆனவனே; (கால் - காற்று); (சுந்தரர் தேவாரம் - 7.28.6 - "மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்களாகி மற்றும் பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவாவுரு ஆனவனே");

ஒரு கணையால் நண்ணார் முப்புரம் எரித்தாய் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை ஓரம்பால் எரித்தவனே; (நண்ணார் - பகைவர்);

நன்னிலத்துப் பெருங்கோயில் அண்ணா - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய தந்தையே; (அண்ணா - தந்தையே என்ற திசைச்சொல்; அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என மருவிற்று என்றும் கொள்ளலாம்);

முக்கண்ணா - முக்கண்ணனே;

என் அருவினையைத் தீர்த்தருளே - என் தீர்த்தற்கு அரிய வினையையெல்லாம் தீர்த்து அருள்க;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment