2015-07-26
P.295 - கொள்ளம்பூதூர்
(இத்தலம் குடவாசலுக்குத் தெற்கே உள்ளது)
------------------
(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்)
(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்");
1)
மூல நாதர் காழி யார்க்கு
.. முள்ளி யாற்றில் ஓடம் செல்லக்
கோல தாகத் தமிழ்ந யந்தார்
.. கொடியில் ஏற்றர் தேவர் வாழ
ஆலம் உண்ட நீல கண்டர்
.. அழலின் வண்ணர் தோளின் மீது
கோல நீற்றர் சோலை சூழ்ந்த
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
மூல நாதர் - ஆதிமூர்த்தி;
காழியார்க்கு முள்ளியாற்றில் ஓடம் செல்லக் கோலதாகத் தமிழ் நயந்தார் - கொள்ளம்பூதூர் ஈசனைத் தரிசிக்க ஆவலோடு வந்த திருஞானசம்பந்தருக்கு இரங்கி, அவர் பாடிய பதிகமே ஆற்றுவெள்ளத்தில் ஓடத்தைச் கோல் போலச் செலுத்திக் கரையை அடைய அருளியவர்; (ஊரின் அருகே முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகின்றது); (* சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்டமே கமழுங் கொள்ளம்பூதூர்" - பதிகப்-பாடலையும் பதிக-வரலாற்றையும் காண்க);
கொடியில் ஏற்றர் - இடபக்கொடி உடையவர்;
தேவர் வாழ ஆலம் உண்ட நீலகண்டர் - தேவர்கள் உய்யுமாறு ஆலகாலத்தை உண்ட நீலகண்டர்;
அழலின் வண்ணர் - தீவண்ணர்;
தோளின் மீது கோல நீற்றர் - புஜங்களில் அழகிய வெண்ணீறு பூசியவர்;
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார். (குழகன் - அழகன்; இளையோன்);
2)
வல்ல வாறு தொண்டு செய்து
.. வாழ்த்து கின்ற அன்பர்க் கென்றும்
இல்லை என்று சொல்ல கில்லார்
.. எயில்கள் வேவக் கையில் மேரு
வில்லை ஏந்தி நின்ற வீரர்
.. வேணி தன்னுள் கங்கை நீரர்
கொல்லை ஏற்றர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
வல்லவாறு தொண்டு செய்து வாழ்த்துகின்ற அன்பர்க்கு என்றும் இல்லை என்று சொல்லகில்லார் - இயன்ற வகையில் தொண்டுசெய்து துதித்து வணங்கும் பக்தர்களுக்கு ஒருநாளும் இல்லை என்று சொல்லமாட்டார்; (கில்தல் - இயல்தல்); (7.53.4 - "எல்லார்க்கும் இல்லை என்னா தருள்செய்வார்");
எயில்கள் வேவக் கையில் மேரு-வில்லை ஏந்தி நின்ற வீரர் - முப்புரங்கள் வெந்து அழியக் கையில் மேருமலையை வில்லாக ஏந்திப் போர்செய்த வீரர்; (எயில் - மதில்);
வேணிதன்னுள் கங்கை-நீரர் - சடையினுள் கங்கையாற்றை உடையவர்; (வேணி - சடை);
கொல்லை-ஏற்றர் - இடபவாகனர்; (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை யேற்றினர்" - கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம்);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
3)
தொண்டு செய்து துணைம லர்த்தாள்
.. தொழுது போற்றி வாழ்த்து வார்கள்
பண்டு செய்த பாவ மெல்லாம்
.. பறையு மாறு நல்கும் ஐயர்
உண்டி யாகப் பிச்சை கொள்ளும்
.. உம்பர் நாதர் மிடறு தன்னில்
கொண்டல் வண்ணர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
தொண்டு செய்து துணை-மலர்த்தாள் தொழுது போற்றி வாழ்த்துவார்கள் - திருத்தொண்டு செய்து இருமலர்ப்பாதங்களை இறைஞ்சும் அடியார்கள்; (துணை - இரண்டு);
பண்டு செய்த பாவமெல்லாம் பறையுமாறு நல்கும் ஐயர் - முன்பு செய்த பாவங்களெல்லாம் அழியும்படி அருள்புரியும் தலைவர்; (பறைதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம்- 1.28.3 - "எம் ஐயர் சோற்றுத்துறை சென்றடைவோமே");
உண்டியாகப் பிச்சைகொள்ளும் உம்பர்-நாதர் - உணவாகப் பிச்சையேற்கும், தேவதேவர்; (உண்டி - உணவு); (உம்பர் - தேவர்);
மிடறுதன்னில் கொண்டல்-வண்ணர் - கண்டத்தில் மேகம் போன்ற கரிய நிறம் உடையவர்; (மிடறு - கண்டம்); (கொண்டல் - மேகம்);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
4)
அமரர் போற்றும் ஆதி மூர்த்தி
.. அறமு ரைக்க ஆல நீழல்
அமரும் அண்ணல் அரவு தன்னை
.. அரையில் ஆர்த்த அரிய வேடர்
சமர்பு ரிந்து சூர பன்மன்
.. தன்னை வென்ற மஞ்ஞை ஊர்திக்
குமரன் அத்தர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
அமரர் போற்றும் ஆதி மூர்த்தி - தேவர்கள் வணங்கும் ஆதிமூர்த்தி;
அறம் உரைக்க ஆலநீழல் அமரும் அண்ணல் - சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;
அரவு-தன்னை அரையில் ஆர்த்த அரிய வேடர் - நாகப்பாம்பை அரையில் அரைநாணாகக் கட்டிய அரிய கோலத்தை உடையவர்; (ஆர்த்தல் - கட்டுதல்); (வேடர் - வேடத்தை உடையவர் - கோலத்தை உடையவர்);
சமர் புரிந்து சூரபன்மன்-தன்னை வென்ற மஞ்ஞை-ஊர்திக் குமரன் அத்தர் - போர் புரிந்து சூரபதுமனை வென்ற, மயில்வாகனம் உடைய முருகனுக்குத் தந்தையார்; (சமர் - போர்); (மஞ்ஞை - மயில்); (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 2.28.10 - "கருவூருள் ஆனிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே");
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
5)
செய்த வத்தைக் கண்டு(ம்) முன்பு
.. தேவர் சொன்ன வண்ணம் அம்பை
எய்த வேளை நீறு செய்தார்
.. ஈன(ம்) மிக்க வார்த்தை பேசி
வைத தக்கன் வேள்வி செற்றார்
.. மலர வன்றன் தலையில் ஒன்றைக்
கொய்து கந்தார் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
செய்-தவத்தைக் கண்டு(ம்), முன்பு தேவர் சொன்ன-வண்ணம் அம்பை எய்த வேளை நீறு செய்தார் - தாம் செய்யும் தவத்தைப் பார்த்த பின்னும், முன்பு தேவர்கள் சொன்னபடி மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவர்; (வேள் - மன்மதன்);
ஈன(ம்) மிக்க வார்த்தை பேசி வைத தக்கன் வேள்வி செற்றார் - இழிவு மிகுந்த சொற்களைப் பேசி இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; (ஈனம் - இழிவு); (வைதல் - நிந்தித்தல்); (செறுதல் - அழித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.93.5 - "அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற மறத்தினர்");
மலரவன்-தன் தலையில் ஒன்றைக் கொய்து-உகந்தார் - பிரமனது சிரங்களில் ஒன்றை அறுத்தவர்; (மலரவன் - தாமரையிலிருப்பவன் - பிரமன்);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
6)
இமைக்கும் போதில் எயில்கள் மூன்றும்
.. எரியில் மூழ்க நகைசெய் ஈசர்
உமைக்கு வாமம் உடைய பண்பர்
.. உண்ப லிக்குத் திரியும் இன்பர்
"சமர்த்த னேகா" என்ற மாணி
.. சங்கை நீக்கிக் கூற்று தன்னைக்
குமைத்த காலர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
இமைக்கும் போதில் எயில்கள் மூன்றும் எரியில் மூழ்க நகைசெய் ஈசர் - நொடியளவு நேரத்தில் முப்புரங்களும் தீயில் மூழ்கி அழியும்படி சிரித்த ஈசர்;
உமைக்கு வாமம் உடைய பண்பர் - இடப்பாகத்தில் உமாதேவியை விரும்பியவர்; (வாமம் - இடப்பக்கம்);
உண்பலிக்குத் திரியும் இன்பர் - பிச்சைக்கு உழலும் இன்பவடிவானவர்;
"சமர்த்தனே கா" என்ற மாணி சங்கை நீக்கிக் கூற்று-தன்னைக் குமைத்த காலர் - "வல்லவனே! காத்தருளாய்" என்ற மார்க்கண்டேயருடைய அச்சத்தைப் போக்கி, நமனை அழித்த காலகாலர்; (சமர்த்தன் - வல்லவன்); (சங்கை - அச்சம்); (குமைத்தல் - அழித்தல்); (திருமுறையில் சதுரன் / சதுரா முதலிய பிரயோகங்களைக் காணலாம். சம்பந்தர் தேவாரம் - 1.33.2 - "சடையார் சதுரன் முதிரா மதிசூடி"; சதுரன் - சமர்த்தன்);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
7)
அடியில் வாச மலர்கள் தூவும்
.. அன்பர் நெஞ்சில் கோயில் கொண்டு
மிடியை நீக்கி இன்பம் ஈவார்
.. வேத நாவர் தேவ தேவர்
முடியில் ஆற்றர் வெள்ளை நீற்றர்
.. முக்க ணெந்தை வென்றி மிக்க
கொடியில் ஏற்றர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
அடியில் வாசமலர்கள் தூவும் அன்பர் நெஞ்சில் கோயில்கொண்டு மிடியை நீக்கி இன்பம் ஈவார் - திருவடியில் மணம் கமழும் பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்கள் நெஞ்சில் குடிகொண்டு அவர்களது துன்பத்தை நீக்கி இன்பம் தருபவர்; (மிடி - வறுமை; துன்பம்);
வேதநாவர் - வேதங்களைப் பாடியருளியவர்;
தேவதேவர் - தேவாதிதேவர்;
முடியில் ஆற்றர் - தலையில் கங்கையை அணிந்தவர்;
வெள்ளை நீற்றர் - வெண்பொடி பூசியவர்;
முக்கண் எந்தை - முக்கண்ணுடைய எம் தந்தை;
வென்றி மிக்க கொடியில் ஏற்றர் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவர்; (வென்றி - வெற்றி);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
8)
குன்று பேர்த்தான் தனைநெ ரித்துக்
.. குருதி வெள்ளம் ஓட வைத்தார்
மன்றில் ஆடு மாந டத்தர்
.. வலிய நஞ்சை உண்ட கண்டர்
என்று கொல்லும் நாள தென்றே
.. எண்ணு கூற்றைக் காய்ந்த பாதர்
கொன்றை மார்பர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
குன்று பேர்த்தான்-தனை நெரித்துக் குருதி வெள்ளம் ஓட வைத்தார் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி, அவனது இரத்தவெள்ளம் ஓடச்செய்தவர்; (நெரித்தல் - நசுக்குதல்);
மன்றில் ஆடு மா-நடத்தர் - அம்பலத்தில் கூத்து ஆடுபவர்;
வலிய நஞ்சை உண்ட கண்டர் - கொடிய நஞ்சை உண்ட கண்டத்தை உடையவர்;
என்று கொல்லும் நாளது என்றே எண்ணு கூற்றைக் காய்ந்த பாதர் - "எந்த நாள் ஒருவரைக் கொல்லும் நாள்" என்பதையே எண்ணுகின்ற காலனைத் திருவடியால் உதைத்தவர்; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்);
கொன்றை மார்பர் - மார்பில் கொன்றைமாலையை அணிந்தவர்;
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
9)
அன்று மாலும் அயனு(ம்) நேட
.. அளவி லாத அழல தாகி
நின்ற ஈசர் சென்னி மீது
.. நிலவு நாகம் ஒன்ற வைத்தார்
பன்றி எய்து பார்த்த னுக்குப்
.. படைய ளித்தார் புரமெ ரித்த
குன்ற வில்லர் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
அன்று மாலும் அயனும் நேட அளவு இலாத அழலது ஆகி நின்ற ஈசர் - முற்காலத்தில் திருமாலும் பிரமனும் தேடுமாறு, எல்லையற்ற ஜோதியாகி நின்ற ஈசனார்; (நேடுதல் - தேடுதல்);
சென்னி மீது நிலவு நாகம் ஒன்ற வைத்தார் - தம் முடிமீது திங்களும் பாம்பும் சேர்ந்திருக்கும்படி வைத்தவர்;
பன்றி எய்து பார்த்தனுக்குப் படை அளித்தார் - ஒரு பன்றியை எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்தவர்; (படை - ஆயுதம்);
புரம் எரித்த குன்ற-வில்லர் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (அப்பர் தேவாரம் 4.66.8 - "பருப்பத வில்லர் போலும்");
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
10)
வம்பர் இங்கே கேப்பை யில்நெய்
.. வடிதல் காணீர் வம்மின் என்பார்
நம்ப வேண்டா நீறு பூசி
.. நாமம் ஓதில் நன்மை நல்கும்
செம்பொ னாரும் செய்ய மேனிச்
.. செல்வர் நூலார் மார்பில் ஏனக்
கொம்ப ணிந்தார் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
வம்பர், "இங்கே கேப்பையில் நெய் வடிதல் காணீர், வம்மின்" என்பார் - "இங்கே கேப்பையில் நெய் வடிகின்றது; வாருங்கள்" என்று சில வீணர்கள் அழைப்பார்கள்; (கேப்பை - கேழ்வரகு); (கேப்பையின்னெய் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
நம்ப வேண்டா - அவர்கள் சொல்லும் அந்தப் பொய்களை மதிக்க வேண்டா;
நீறு பூசி நாமம் ஓதில் நன்மை நல்கும் - திருநீற்றைப் பூசித், திருவைந்தெழுத்தை ஓதினால் நமக்கு இன்னருள் புரிந்து நலம் செய்கின்ற;
செம்பொன் ஆரும் செய்ய மேனிச் செல்வர் - செம்பொன் போன்ற சிவந்த திருமேனியை உடைய செல்வர்; (ஆர்தல் - ஒத்தல்);
நூல் ஆர் மார்பில் ஏனக்-கொம்பு அணிந்தார் - பூணூல் அணிந்தவர்; முப்புரிநூல் பொருந்திய மார்பில் பன்றிக்கொம்பை அணிந்தவர்; (நூல் - பூணூல்; நூலார் - பூணூலை அணிந்தவர்); (ஆர்தல் - பொருந்துதல்); (ஏனம் - பன்றி);
குளிர்-பொழில் சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்;
11)
நறைமி குந்த மலர்கள் தூவி
.. நாளும் ஏத்தில் நன்மை செய்வார்
மறைவி ரிக்க ஆல மர்ந்தார்
.. மலைப யந்த மங்கை பங்கர்
பறைமு ழங்க ஆடு கின்ற
.. பண்ட ரங்கர் பலியி ரந்தும்
குறையி லாதார் குளிர்பொ ழில்சூழ்
.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.
நறை மிகுந்த மலர்கள் தூவி நாளும் ஏத்தில் நன்மை செய்வார் - தேன் நிறைந்த பூக்களைத் தூவித் தினந்தோறும் துதித்தால் நன்மை செய்பவர்; (நறை - தேன்; வாசனை);
மறை விரிக்க ஆல் அமர்ந்தார் - வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருப்பவர்; (விரித்தல் - விளக்கியுரைத்தல்); (ஆல் - கல்லாலமரம்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
மலை பயந்த மங்கை பங்கர் - மலையரசன் ஈன்ற மகளான உமையை ஒரு பாகமாக உடையவர்; (பயத்தல் - பெறுதல்);
பறை முழங்க ஆடுகின்ற பண்டரங்கர் - பறைகள் ஒலிக்கப் பண்டரங்கம் என்ற கூத்தை ஆடுபவர்; (பண்டரங்கம் - பாண்டரங்கம் - சிவன் ஆடும் கூத்துகளில் ஒன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே");
பலி இரந்தும் குறை இலாதார் - உணவை யாசித்தாலும் ஒரு குறையும் இல்லாதவர்; (பலி - உணவு; பிச்சை);
குளிர்பொழில்சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்.
பிற்குறிப்பு: - யாப்புக்குறிப்பு:
எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.
ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.
தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;
தானா - தேமாச்சீர்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment