2015-07-22
P.294 - திலதைப்பதி
------------------
(சந்தக் கலித்துறை - தானதன தனனா தனதானன தானா தனதானா - என்ற சந்தம்)
(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானா தனதானா - என்றும் நோக்கலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன்")
முற்குறிப்பு: சந்தம் கெடாத இடங்களில் படிப்போர் வசதி கருதிச் சந்தி பிரித்து இடப்பெற்றுள்ளது.
1)
கூருடைய இலையார் நுனைவேலுடைக் கூற்றம் குமையாமுன்
நீருடைய சடையன் பெயர்நித்தலும் நெஞ்சே நினைகண்டாய்;
காருடைய மிடறன் மழுவாளொரு கையில் தரியீசன்
சீருடைய திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
கூர் உடைய இலை ஆர் நுனை வேல்-உடைக் கூற்றம் குமையாமுன் - கூர்மையான திரிசூலத்தை ஏந்திய காலன் கொல்வதன்முன்னம்; (நுனை - நுனி); (கூற்றம் - காலன்); (குமைத்தல் - கொல்தல்);
நீர் உடைய சடையன் பெயர் நித்தலும் நெஞ்சே நினை கண்டாய் - மனமே, கங்கைச்சடையன் நாமத்தைத் தினந்தோறும் நினைவாயாக; (கண்டாய் - முன்னிலை அசை); (சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய்");
கார் உடைய மிடறன், மழுவாள் ஒரு கையில் தரி ஈசன், - கரிய கண்டன், ஒரு கையில் மழுவை ஏந்தும் ஈசன்; (கையிற்றரி = கையில் தரி);
சீர் உடைய திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய, பெருமைமிக்க திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (சம்பந்தர் தேவாரம் – 1.87.10 - "விடையூரும் செம்மான்");
2)
பேரழிந்து பிணமாய்ப் பலரும்பல பேசா முனம்நெஞ்சே
நாரணிந்து தினமும் விடையூர்தியன் நாமம் நினைகண்டாய்;
வாரணிந்த முலையாள் மலைமங்கையை வாமத் தமரீசன்
சீரணிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
பேர் அழிந்து பிணம் ஆய்ப் பலரும் பல பேசாமுனம் நெஞ்சே - மனமே! பெயர் நீங்கிப் பிணம் என்ற பெயர் ஆகிப், பலரும் பலவாறு பேசுவதன் முன்னமே; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திர வெண்பா - 11.5.8 - "பெட்டப் பிணமென்று பேரிட்டு"); (திருமந்திரம் - யாக்கை நிலையாமை - 10.1.5.3 - "பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு");
நார் அணிந்து தினமும் விடை-ஊர்தியன் நாமம் நினை கண்டாய் - அன்பு பூண்டு, தினந்தோறும், இடபவாகனனான ஈசன் திருநாமத்தை நினைவாயாக; (நார் - அன்பு)
வார் அணிந்த முலையாள் மலைமங்கையை வாமத்து அமர் ஈசன் - கச்சு அணிந்த ஸ்தனத்தை உடைய மலைமகளை இடப்பாகமாக விரும்பும் ஈசன்; (அமர்தல் - விரும்புதல்);
சீர் அணிந்த திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய, பெருமைமிக்க திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்;
3)
மையணிந்த சவமாய் இடுகாட்டெரி வையா முன(ம்)நெஞ்சே
நெய்யணிந்த இலைமூன் றுடைவேலனை நித்தல் நினைகண்டாய்;
பையணிந்த அரவைப் பனிவெண்மதிப் பக்கம் புனையீசன்
செய்யணிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
மை அணிந்த சவம் ஆய் இடுகாட்டு எரி வையா முனம், நெஞ்சே, - மனமே! மையால் அலங்கரிக்கப்பட்ட கண்ணுடைய பிணம் ஆகிச், சுடுகாட்டில் தீ வைக்கப்படுவதன் முன்னமே; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திர வெண்பா - 11.5.6 - "மாலை தலைக்கணிந்து மையெழுதி");
நெய் அணிந்த இலை மூன்று-உடை வேலனை நித்தல் நினை கண்டாய் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்திய பெருமானைத் தினந்தோறும் நினைவாயாக; (நித்தல் - தினமும்);
பை அணிந்த அரவைப் பனி-வெண்-மதிப் பக்கம் புனை ஈசன் - படத்தை உடைய பாம்பைக் குளிர்ந்த வெண்பிறைக்கு அருகே அணியும் ஈசன்;
செய் அணிந்த திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - வயல்களால் சூழப்பெற்ற திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்;
4)
கான்பொருந்தி எரியில் பொடியாகிடு காலம் அடையாமுன்
ஊன்பொருந்து தலையேந் தரன்நற்பெயர் உன்னாய் மடநெஞ்சே;
மான்பொருந்து கரவன் பொடிபூசிய மார்பில் புரிநூலன்
தேன்பொருந்து திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
கான் பொருந்தி எரியில் பொடி ஆகிடு காலம் அடையாமுன் - சுடுகாட்டை அடைந்து தீயில் சாம்பல் ஆகும் காலம் அடைவதன்முன்பே; (பொருந்துதல் - அடைதல்.)
ஊன் பொருந்து தலை ஏந்து அரன் நற்பெயர் உன்னாய் மட நெஞ்சே - புலால் பொருந்திய பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தும் ஹரனுடைய நல்ல நாமத்தைப், பேதை மனமே, எண்ணுவாயாக; (உன்னுதல் - நினைத்தல்); (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்");
மான் பொருந்து கரவன், பொடி பூசிய மார்பில் புரிநூலன் - கையில் மானை ஏந்தியவன், திருநீறு பூசிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (கரவன் - கரத்தை உடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா");
தேன் பொருந்து திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - (சோலைகளால் சூழப்பெற்றதால்) வாசம் கமழும் திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (தேன் - வாசனை; தேனீ / வண்டு);
5)
உருமெலிந்து வயதாய் அழியாமுனம் உன்னாய் மடநெஞ்சே
மருமலிந்த மலர்வெண் மதியம்புனை மைந்தன் திருநாமம்;
இருள்மலிந்த கரியின் உரிபோர்த்தவன், ஏரார் பொழில்சூழ்ந்த
திருமலிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
உரு மெலிந்து வயதுஆய் அழியாமுனம் உன்னாய் மடநெஞ்சே - உடல் மெலிந்து முதுமையடைந்து இறப்பதன் முன்பே, பேதைமனமே, எண்ணுவாயாக; (உன்னுதல் - நினைதல்);
மரு மலிந்த மலர், வெண்மதியம் புனை மைந்தன் திருநாமம் - வாசமலர்களையும் வெண்திங்களையும் சூடிய அழகனது திருநாமத்தை; (மரு - வாசனை); (மலிதல் - மிகுதல்); (மைந்தன் - இளைஞன்; வீரன்);
இருள் மலிந்த கரியின் உரி போர்த்தவன் - கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (இருள் - கறுப்பு); (கரி - யானை); (உரி - தோல்);
ஏர் ஆர் பொழில் சூழ்ந்த, திரு மலிந்த திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய சோலை சூழ்ந்த, திரு மிகுந்த திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (ஏர் - அழகு);
6)
சங்கையற்று மகிழத் தவறாதிரு தாளைத் தொழுநெஞ்சே
அங்கமேற்ற அணிதோள் உடையான்மதன் ஆகம் பொடிசெய்தான்
கங்கையாற்றின் அயலே கமழ்போதொடு நாகம் கதிராரும்
திங்களேற்ற முடியன் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.
சங்கை அற்று மகிழத், தவறாது இரு-தாளைத் தொழு நெஞ்சே - அச்சம் நீங்கி ஐயமின்றி இன்புறவேண்டில், என்றும் ஈசன் இணையடியை வணங்கு நெஞ்சமே; (சங்கை - அச்சம்; சந்தேகம்);
அங்கம் ஏற்ற அணி தோள் உடையான், மதன் ஆகம் பொடி செய்தான் - கங்காள வேடமுடையவன், மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (அங்கம் - எலும்பு; கங்காளம்); (மதன் - காமன்); (ஆகம் - உடல்);
கங்கையாற்றின் அயலே, கமழ்-போதொடு, நாகம், கதிர் ஆரும் திங்கள் ஏற்ற முடியன் - திருமுடிமேல் கங்கைநதியையும் வாசமலர்களையும் பாம்பையும், ஒளியுடைய சந்திரனையும் அணிந்தவன்; (கதிர் - கிரணம்; ஒளி);
திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவன் அருள்புரிவான்;
7)
நீறணிந்த பெருமான் புகழேதினம் நெஞ்சே நினைகண்டாய்
ஆறணிந்த சடையன் மழுவாளினன் அஞ்சொல் மடவாளோர்
கூறணிந்த வடிவன் துடியேந்திய கூத்தன் குளிர்சோலை
சேறணிந்த வயல்சூழ் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.
நீறு அணிந்த பெருமான் புகழே தினம், நெஞ்சே, நினை-கண்டாய் - திருநீற்றைப் பூசிய பெருமானது திருப்புகழையே தினமும் நினை மனமே;
ஆறு அணிந்த சடையன் - கங்கையை அணிந்த சடையினன்;
மழுவாளினன் - மழுவை ஏந்தியவன்;
அஞ்சொல் மடவாள் ஓர் கூறு அணிந்த வடிவன் - இனிய மொழி பேசும் உமை ஒரு பாகமாகத் திகழும் திருமேனி உடையவன்; (அஞ்சொல் - அம் சொல் - இனிய மொழி); (மடவாள் - பெண்);
துடி ஏந்திய கூத்தன் - உடுக்கினைக் கையில் ஏந்திய கூத்தன்; (துடி - உடுக்கு);
குளிர்-சோலை சேறு அணிந்த வயல் சூழ் - குளிர்ந்த பொழிலும் நீர்வளம் மிக்க வயலும் சூழ்ந்த;
திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவன் அருள்புரிவான்;
8)
துன்னுகின்ற வினைகள் பறையத்தினம் உன்னித் துதிநெஞ்சே
முன்னிலங்கை அரையன் முடிபத்தடர் முக்கட் பெருமான்சீர்
பன்னவங்கு மிகுநாள் வர(ம்)நல்கிய பாந்தட் சடைவள்ளல்
தென்னிலங்கு திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
துன்னுகின்ற வினைகள் பறையத் தினம் உன்னித் துதி நெஞ்சே - நெஞ்சமே, நெருங்கிச் சூழ்கின்ற வினைகளெல்லாம் அழியத், தினந்தோறும் எண்ணி வழிபடுவாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்); (பறைதல் - அழிதல்);
முன் இலங்கை அரையன் முடி பத்து அடர் முக்கட் பெருமான் சீர் பன்ன – முற்காலத்தில், இலங்கைக்கு அரசனான இராவணன், அவனுடைய பத்துத்தலைகளையும் நசுக்கிய முக்கண்ணனது புகழைப் பாட; (அரையன் - அரசன்); (அடர்த்தல் - நசுக்குதல்); (பன்னுதல் - பாடுதல்);
அங்கு மிகு-நாள் வரம் நல்கிய பாந்தட்-சடை வள்ளல் - அப்போது அவனுக்கு இரங்கி நீண்ட வாழ்நாளை வரமாகக் கொடுத்த, சடையில் பாம்பை அணிந்த, வள்ளல்; (பாந்தள் - பாம்பு);
தென் இலங்கு திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (தென் - அழகு);
9)
ஏலுமாறு தினமும் பணிசெய்திட எண்ணாய் மடநெஞ்சே
மாலு(ம்)நாலு மறைசொல் லயனும்தொழ வானோங் கெரியானான்
பாலு(ம்)நீரு(ம்) மகிழும் பரமன்படை பார்த்தற் கருளீசன்
சேலுலாவும் கழனித் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.
ஏலுமாறு தினமும் பணி செய்திட எண்ணாய் மடநெஞ்சே - பேதைமனமே, இயன்றவகையில் தினமும் திருத்தொண்டு செய்ய எண்ணுவாயாக; (ஏல்தல் - இயல்தல்);
மாலு(ம்) நாலு-மறை சொல் அயனும் தொழ வானோங்கு எரி ஆனான் - திருமாலும் நால்வேதம் ஓதும் பிரமனும் வணங்குமாறு எல்லையின்றி நீண்ட ஜோதிவடிவினன்;
பாலு(ம்) நீரு(ம்) மகிழும் பரமன் - பால், நீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுதலை மகிழ்ந்த பரமன்;
படை பார்த்தற்கு அருள் ஈசன் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளிய இறைவன்; (படை - ஆயுதம்); (பார்த்தற்கு - பார்த்தனுக்கு);
சேல் உலாவும் கழனித் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - வயலில் சேல்மீன்கள் உலாவுகின்ற (= நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த) திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவன் அருள்புரிவான்;
10)
பாவமற அரனைப் பணியார்உரை பாங்கில் மொழிநீங்கும்
காவலுடை எயிலெய் தவன்நற்கழல் கையால் தொழுதேத்தும்
தூவலணி முடியன் சுடுநீறணி தூயன் துணையில்லான்
சேவமரும் பெருமான் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.
பாவம் அற அரனைப் பணியார் உரை பாங்கு-இல் மொழி நீங்கும் - தீவினை தீரவேண்டி ஹரனைத் தொழாதவர்கள் சொல்லும் பொருத்தமற்ற பேச்சை நீங்குங்கள்; (உம் - ஏவற்பன்மை விகுதி);
காவல்-உடை எயில் எய்தவன் நற்கழல் கையால் தொழுது ஏத்தும் - பாதுகாப்பு மிக்க முப்புரங்களையும் ஓர் அம்பால் எய்த பெருமானுடைய நல்ல திருவடிகளைக் கையால் தொழுது போற்றுங்கள்; (எயில் - மதில்);
தூவல் அணி முடியன், சுடுநீறு அணி தூயன், துணை இல்லான் - (கொக்கின்) இறகைத் திருமுடியில் அணிந்தவன், திருநீறு பூசிய தூயவன், ஒப்பற்றவன்; (தூவல் - இறகு - இங்கே, கொக்கிறகு); (துணை - ஒப்பு); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்");
சே அமரும் பெருமான் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - இடபவாகனம் உடைய பெருமான், திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (சே - எருது);
11)
இன்றுதுணை இலமென் றிளையாதிரு ஈடில் புகழாளன்
மன்றில்நடம் இடுவான் கழலேதினம் வாழ்த்தாய் மடநெஞ்சே
இன்றமிழை மகிழ்வான் அரிசிற்கரை ஏரார் பொழில்வானைச்
சென்றணவு திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.
இன்று துணை இலம் என்று இளையாது இரு - இன்று நமக்கு ஒரு துணை இல்லோம் என்று நீ வருந்தவேண்டா; (இளைத்தல் - சோர்தல்; மெலிதல்); (இலம் = இலேம் / இலோம் - எமக்கு இல்லோம்); (சம்பந்தர் தேவாரம் - 3.24.5 - "அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே"); (சம்பந்தர் தேவாரம் - 2.82.1 - "தேவூர் அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே");
ஈடு-இல் புகழாளன், மன்றில் நடம் இடுவான் கழலே தினம் வாழ்த்தாய் மடநெஞ்சே - பேதைமனமே! ஒப்பற்ற புகழ் உடையவன், மன்றில் திருநடம் செய்பவன் திருவடியையே தினந்தோறும் வாழ்த்துவாயாக; (மன்றினடம் - மன்றில் நடம்); (நடமிடுதல் - நடனம் ஆடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.76.5 - "நடமிட்ட ஒருவர்க்கிடம தென்பர்");
இன்-தமிழை மகிழ்வான் - இனிய தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்; ( இன்றமிழ் - இன்+தமிழ்);
அரிசிற்கரை ஏர் ஆர் பொழில் வானைச் சென்று அணவு திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அரிசிலாற்றின் கரையில் அழகிய சோலைகள் மேகத்தை நெருங்கும்படி உயர்கின்ற திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (ஏர் - அழகு); (வான் - மேகம்); (அணவுதல் - அணுகுதல்);
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு -
சந்தக் கலித்துறை - தானதன தனனா தனதானன தானா தனதானா - என்ற சந்தம்;
சந்தக் கலித்துறை - தானதான தனதானன தானன தானா தனதானா - என்றும் நோக்கலாம்;
அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானா தனதானா - என்றும் நோக்கலாம்;
இந்தச் சந்தம் உள்ள பாடல்களில், சில பாடல்களில் முதற்சீர் "தானதான" / "தனனதான" என்றும் வரக்காணலாம்;
சம்பந்தர் தேவாரம் -
1.1.1 - தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
1.1.2 - முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
1.1.7 - சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment