Tuesday, December 27, 2022

P.299 - மருகல் - பணியொன்றை அரையார்த்த

2015-08-09

P.299 - மருகல்

----------------------------------

(கலிவிருத்தம் - காய் காய் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.119.1 - "முள்ளின்மேன் முதுகூகை")


1)

பணியொன்றை அரையார்த்த பரமன், போற்றிப்

பணியும்பர் பயம்தீரப் படுநஞ் சுண்ட

மணிகண்டன், வயலாரும் மருகல் மேய

அணிகொன்றைச் சடையான்பேர் அணியென் நாவே.


பணி ஒன்றை அரை ஆர்த்த பரமன் - ஒரு பாம்பை அரையில் நாணாகக் கட்டிய கடவுள்; (பணி - நாகம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

போற்றிப் பணி உம்பர் பயம் தீர - துதித்து வணங்கிய தேவர்களின் அச்சம் தீரும்படி; (பணிதல் - வணங்குதல்);

படுநஞ்சு உண்ட மணிகண்டன் - கொடிய, கொல்லும் விடத்தை உண்ட நீலகண்டன்; (படு - கொடிய; பெரிய); (படுத்தல் - அழித்தல்);

வயல் ஆரும் மருகல் மேய - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும்;

அணி கொன்றைச் சடையான் பேர் - அழகிய கொன்றைமலரைச் சடையில் அணிந்த சிவபெருமான் திருநாமத்தை;

அணி என் நாவே - என் நாவே, நீ அணிவாயாக;


2)

துதிமாணி உயிர்கொல்லத் தொடர்ந்த டைந்த

கொதிகூற்றை உதைகாலன், குஞ்சி மீது

மதிசூடி, வயலாரும் மருகல் மேய

பதிசீரைத் தினந்தோறும் பாடு நாவே.


துதி-மாணி உயிர் கொல்லத் தொடர்ந்து அடைந்த கொதி-கூற்றை உதை காலன் - சிவனைத் துதித்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்கு நெருங்கிய சினந்த (/ சினம் உடைய) நமனை உதைத்த திருத்தாளினன்; ; (மாணி - மார்க்கண்டேயர்); (கொதித்தல் - கோபித்தல்); (கொதி - கோபம்); (கொதிகூற்றை - கொதித்த கூற்றுவனை; கொதிக்கூற்றை - சினம் உடைய கூற்றுவனை - என்பது எதுகைநோக்கிக் கொதிகூற்றை என்று க் மிகாது வந்தது என்றும் கொள்ளலாம்); (பெரியபுராணம் - 12.29.146 - "சினக்கூற்றின் பொருவீரம் தொலைத்தகழல்"); (சம்பந்தர் தேவாரம் - 1.82.7 - "மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான் கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்");

குஞ்சி மீது மதிசூடி - தலைமேல் பிறையைச் சூடியவன்; (குஞ்சி - தலை); (அப்பர் தேவாரம் - 5.23.9 - "குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே");

வயல் ஆரும் மருகல் மேய பதி - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும் தலைவன்;

சீரைத் தினந்தோறும் பாடு நாவே - என் நாக்கே நீ அப்பெருமானது புகழைத் தினமும் பாடு;


3)

உழைக்கன்றைக் கரத்தேந்தும் ஒருவன், அன்பால்

அழைக்கின்ற அடியார்கட் கருளும் அண்ணல்,

மழைக்கண்டன், வயலாரும் மருகல் மேய

குழைக்காதன் புகழ்நாமம் கூறு நாவே.


உழைக்-கன்றைக் கரத்து ஏந்தும் ஒருவன் - மான்கன்றைக் கையில் ஏந்திய ஒப்பற்றவன்; (உழை - மான்);

அன்பால் அழைக்கின்ற அடியார்கட்கு அருளும் அண்ணல் - அன்போடு அழைக்கும் பக்தர்களுக்கு அருளும் பெருமான்;

மழைக்கண்டன் - மேகம் போன்ற கரிய நிறத்தைக் கண்டத்தில் உடையவன்; (மழை - மேகம்; கருமை);

குழைக்காதன் - காதில் குழை அணிந்தவன்;

வயல் ஆரும் மருகல் மேய குழைக்காதன் - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும், காதில் குழையை அணிந்தவன்;

புகழ் நாமம் கூறு நாவே - என் நாக்கே நீ அப்பெருமானது புகழையும் திருநாமத்தையும் சொல்;


4)

பொறையாளன், இடுகாட்டிற் பூதம் சூழ்ந்து

பறையார்க்க நடமாடும் பாதன், நாலு

மறையோதி, வயலாரும் மருகல் மேய

பிறைசூடி புகழ்என்றும் பேசு நாவே.


பொறையாளன் - பொறுப்பவன்; கருணையுடையவன்; (பொறை - கருணை; சுமத்தல்);

இடுகாட்டில் பூதம் சூழ்ந்து பறை ஆர்க்க நடம் ஆடும் பாதன் - சுடுகாட்டில் பூதகணங்கள் சூழ்ந்து பறைகளை ஒலிக்கக் கூத்து ஆடும் திருவடியினன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);

நாலுமறை ஓதி - நால்வேதம் ஓதுபவன்;

வயல் ஆரும் மருகல் மேய பிறைசூடி - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும், சந்திரனை அணிந்தவன்;

புகழ் என்றும் பேசு நாவே - என் நாக்கே நீ அப்பெருமானது புகழை எப்பொழுதும் பேசு;


5)

தளைக்கின்ற வினைதீரச் சார்ந்தார் இன்பில்

திளைக்கின்ற நிலைநல்கும் செல்வன், ஓர்பால்

வளைக்கையான், வயலாரும் மருகல் மேய

துளக்கில்லான் திருநாமம் சொல்லு நாவே.


தளைக்கின்ற வினை தீரச் சார்ந்தார் இன்பில் திளைக்கின்ற நிலை நல்கும் செல்வன் - தன்னை அடைந்த பக்தர்களைப் பிணித்துள்ள, சுடுகின்ற வினையெல்லாம் தீர, அவர்கள் இன்பத்தில் திளைக்கின்ற நன்னிலையை அருளும் செல்வன்; (தளைத்தல் - கட்டுதல்; கொதித்தல்); (இன்பு - இன்பம்);

ஓர்பால் வளைக்-கையான் - ஒரு பக்கம் வளை அணிந்த கையை உடையவன் - உமைபங்கன்;

வயல் ஆரும் மருகல் மேய துளக்கு இல்லான் - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும், அச்சம் இல்லாதவன் / அசைவு இல்லாதவன்; (துளக்கு - அசைவு; அச்சம்);

திருநாமம் சொல்லு நாவே - என் நாக்கே நீ அப்பெருமானது திருநாமத்தைச் சொல்;


6)

அழகன்வெள் விடையன்வெற் பரையன் பாவை

கொழுநன்கொல் புலித்தோலன் கூரி லங்கு

மழுவன்தண் வயலாரும் மருகல் மேய

குழகன்தன் புகழ்நாமம் கூறு நாவே.


அழகன் - சுந்தரன்;

வெள்-விடையன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

வெற்பு-அரையன் பாவை கொழுநன் - இமவான் மகள் கணவன்; (அரையன் - அரசன்); (கொழுநன் - கணவன்);

கொல்புலித்தோலன் - கொல்லும் தன்மையையுடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்;

கூர் இலங்கு மழுவன் - கூர்மை பொருந்திய மழுவை ஏந்தியவன்;

வயல் ஆரும் மருகல் மேய குழகன்-தன் புகழ் நாமம் கூறு நாவே - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும், இளைஞனான அப்பெருமானது புகழையும் திருநாமத்தையும் என் நாக்கே நீ சொல்;


7)

சரம்வெல்லும் எனவெய்த காமன் தன்னை

உருவில்லி எனவாக்கி, ஊர்மூன் றெய்த

வரைவில்லி, வயலாரும் மருகல் மேய

வரையில்லி கழல்நாளும் வாழ்த்து நாவே.


சரம் வெல்லும் என எய்த காமன் தன்னை உரு-இல்லி என ஆக்கி - தன் மலரம்புகள் வெல்லும் என்று எண்ணி எய்த மன்மதனை உருவம் அற்றவன் என்று ஆக்கியவன்; (சரம் - அம்பு); (ஆக்கி - ஆக்கியவன்);

ஊர் மூன்று எய்த வரை-வில்லி - முப்புரங்களை மேருமலை என்ற வில்லை ஏந்தி எய்தவன்; (வரை - மலை);

வயல் ஆரும் மருகல் மேய வரை-ல்லி - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும், அளவு இல்லாதவன்; (வரை - எல்லை; அளவு);

கழல் நாளும் வாழ்த்து நாவே - என் நாக்கே நீ அப்பெருமானது திருவடியைத் தினமும் வாழ்த்து;


8)

அடியோடு மலைபேர்த்த அரக்கன் பத்து

முடிதோள்கள் நெரிசெய்த முக்கண் மூர்த்தி,

வடியாரும் திரிசூலன், மருகல் மேய

பொடிபூசி திருநாமம் புகலென் நாவே.


அடியோடு மலைபேர்த்த அரக்கன் பத்து-முடி தோள்கள் நெரிசெய்த முக்கண் மூர்த்தி - கயிலைமலையை வேரோடு பெயர்த்த இராவணனது பத்துத்-தலைகளையும் புஜங்களையும் நசுக்கிய முக்கட்பெருமான்; (நெரிசெய்த - நெரித்த; நசுக்கிய); (சம்பந்தர் தேவாரம் - 1.50.8 - "பொன்மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தன் இராவணனைத்")

வடி ஆரும் திரிசூலன் - கூர்மை பொருந்திய திரிசூலத்தை ஏந்தியவன்; (வடி - கூர்மை);

மருகல் மேய பொடிபூசி - திருமருகலில் உறையும், திருநீற்றைப் பூசியவன்;

திருநாமம் புகல் என் நாவே - அப்பெருமானது திருநாமத்தை என் நாக்கே நீ சொல்; (புகல்தல் - சொல்லுதல்);


9)

அன்றிருவர் அறியாத அளவில் சோதி,

ஒன்றிநினை அடியார்தம் உள்ளி ருப்பான்,

மன்றில்நடம் புரிபாதன், மருகல் மேய

வென்றிவிடைக் கொடியான்சீர் விளம்பு நாவே.


அன்று இருவர் அறியாத அளவு-இல் சோதி - முற்காலத்தில் பிரமன் திருமால் இவர்களால் அறிதற்கு அரியவனாய் அளவு இல்லாத ஜோதியாய் நின்றவன்;

ஒன்றி நினை அடியார்தம் உள் இருப்பான் - மனம் ஒன்றி நினைக்கும் பக்தர்களின் நெஞ்சில் உறைபவன்;

மன்றில் நடம்-புரி பாதன் - சபையில் ஆடுகின்ற திருப்பாதன்; (மன்றினடம் - மன்றில் நடம்); (நடம் - கூத்து);

மருகல் மேய வென்றி-விடைக் கொடியான் சீர் விளம்பு நாவே - திருமருகலில் உறைகின்ற, வெற்றியுடைய இடபக்கொடி உடைய சிவபெருமான் புகழை, நாவே நீ சொல்வாயாக; (வென்றி - வெற்றி); (விளம்பு - சொல்);


10)

சல(ம்)முங்கிப் பலபொய்சொல் சழக்கர்க் கென்றும்

இலனங்கம் புனையண்ணல் எரியின் வண்ணன்

மலைமங்கை ஒருபங்கன் மருகல் மேய

கலையங்கை உடையான்சீர் கழறு நாவே.


சலம் முங்கிப் பல பொய் சொல் சழக்கர்க்கு என்றும் இலன் - வஞ்சனையில் மூழ்கிப் பல பொய்கள் சொல்லும் தீயோர்க்கு இல்லாதவன்; அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருள் இல்லாதவன்; (சலம் - வஞ்சனை; பொய்ம்மை); (முங்குதல் - மூழ்குதல்); (சழக்கர் - தீயவர்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

அங்கம் புனை அண்ணல் - எலும்பை அணிந்த பெருமான்; (அங்கம் - எலும்பு);

எரியின் வண்ணன் - தீப் போன்ற செந்நிறம் உடையவன்;

மலைமங்கை ஒரு பங்கன் - உமையொருபங்கன்;

மருகல் மேய கலை அங்கை உடையான் - திருமருகலில் உறைகின்ற, மானைக் கையில் ஏந்தியவன்; (கலை - மான்);

சீர் கழறு நாவே - நாவே, நீ அப்பெருமானது புகழைச் சொல்; (கழறுதல் - சொல்லுதல்);


11)

பங்கமற மலர்க்கண்ணைப் பறித்துப் போற்று

சங்குதரி அரிக்காழி தந்த சம்பு,

மங்கையிட(ம்) மகிழண்ணல், மருகல் மேய

கங்கையணி சடையான்சீர் கழறு நாவே.


பங்கம் அற மலர்க்கண்ணைப் பறித்துப் போற்று சங்கு தரி அரிக்கு ஆழி தந்த சம்பு - (ஆயிரம் தாமரைகளில் ஒரு பூக் குறையவும்) பூசையில் குற்றம் இல்லாதபடி தன்னுடைய மலர் போன்ற கண்ணை இடந்து இட்டு வழிபாடு செய்த, சங்கு ஏந்துகின்ற திருமாலுக்குச் சக்கராயுதம் அருள்செய்த சம்பு; (பங்கம் - குற்றம்); (பறித்தல் - தோண்டுதல்); (ஆழி - சக்கரம்); (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்); (மாலுக்குச் சக்கரம் அளித்தது திருவீழிமிழலைத் தலவரலாறு);

மங்கை இடம் மகிழ் அண்ணல் - உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய பெருமான்;

மருகல் மேய - திருமருகலில் உறைகின்ற;

கங்கை அணி சடையான் - கங்கையை அணிந்த சடையை உடையவன்;

சீர் கழறு நாவே - நாவே, நீ அப்பெருமானது புகழைச் சொல்; (கழறுதல் - சொல்லுதல்);


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு : இப்பதிகம், "சம்பந்தர் தேவாரம் - 1.119.1 - "முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை" என்ற பதிகப் பாடல்களின் அமைப்பை ஒட்டி அமைந்தது. அந்தத் தேவாரப் பதிகத்தின் அமைப்பை - 1) வெள்ளைவாரணனார் "கொச்சக ஒருபோகு" என்கின்றார். 2) தி.வே.கோபாலையர் "கலிவிருத்தம்" என்கின்றார்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment