Saturday, December 24, 2022

P.287 - விளமர் - வெந்த நீறணி

2015-06-06

P.287 - விளமர் (விளமல்)

(திருவாரூர் அருகு உள்ள தலம்)

------------------

(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு)

(திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


முற்குறிப்பு -

1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.

2. படிப்போர்-வசதி கருதிச், சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.


1)

வெந்த நீறணி .. எந்தை விளமரை

முந்தை வினையறச் .. சிந்தி நெஞ்சமே.


வெந்த நீறு அணி - இச்சொற்றொடரைச் சிவபெருமானுக்கு அடைமொழியாகவும் கொள்ளலாம்; நெஞ்சுக்கு ஏவலாகவும் கொள்ளலாம்;

எந்தை விளமரை - எம் தந்தையான சிவபெருமான் உறையும் விளமரை;

முந்தை-வினைறச் சிந்தி நெஞ்சமே - பழவினை தீர எண்ணு நெஞ்சே;


2)

நாயன் கையினில் .. தீயன் விளமரில்

தூயன் தாள்தொழ .. மாயும் வினைகளே.


நாயன் - தலைவன்; கடவுள்;

கையினில் தீயன் - கையில் நெருப்பை ஏந்தியவன்;

விளமரில் தூயன் - விளமரில் உறையும் பரிசுத்தன்;

தாள் தொழ மாயும் வினைகளே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்;


3)

புடையிற் பெண்ணினன் .. விடையன் விளமரிற்

சடையன் தாள்தொழத் .. தடைகள் நீங்குமே.


புடையில் பெண்ணினன் - உமைபங்கன்; (புடை - பக்கம்);

விடையன் - இடபவாகனன்;

விளமரில் சடையன் - விளமரில் உறையும் சடையினன்;

தாள் தொழத் தடைகள் நீங்குமே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் எல்ளா இடையூறுகளும் நீங்கும்;


4)

நீரன் புரமெரி .. வீரன் விளமரில்

ஈரன் தாள்தொழச் .. சாரும் நன்மையே.


நீரன் - கங்காதரன்;

புரம் எரி வீரன் - முப்புரங்களை எரித்த வீரன்;

விளமரில் ஈரன் - விளமரில் உறையும் தயை உடையவன்; (ஈரம் - இரக்கம்; கருணை; அன்பு);

தாள் தொழச் சாரும் நன்மையே - அப்பெருமானுடைய திருவடியைத் தொழுதால் நன்மை வந்தடையும்; (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);


5)

ஆடல் வல்லவன் .. வேடன் விளமரிற்

சேடன் தாள்தொழ .. வீடும் வினைகளே.


ஆடல் வல்லவன் - கூத்தன்;

வேடன் - வேட்டுவன்; பல அருட்கோலங்கள் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.13.5 - "துறையூர் வேடா");

விளமரில் சேடன் - விளமரில் உறையும் பெரியோன்; (சேடன் - உயர்ந்தவன்);

தாள் தொழ வீடும் வினைகளே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்; (வீடுதல் - நீங்குதல்);


6)

பாந்தள் மாலையன் .. சாந்த நீறணி

வேந்தன் விளமரைச் .. சூழ்ந்து வாழ்மினே.


பாந்தள் மாலையன் - பாம்பை மாலை போல அணிந்தவன்; (பாந்தள் - பாம்பு);

சாந்த-நீறு அணி வேந்தன் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசியவன்; (சாந்தம் - சந்தனம்);

விளமரைச் சூழ்ந்து வாழ்மினே - அப்பெருமான் உறையும் விளமரை வலம்செய்து வாழுங்கள்; (சூழ்தல் - சுற்றிவருதல்; பிரதட்சிணம் செய்தல்); (வாழ்தல் - செழித்திருத்தல்); (- ஈற்றசை);


7)

வாச மாருதம் .. வீசு விளமரில்

ஈசன் தாள்தொழ .. நாசம் வினைகளே.


வாச-மாருதம் வீசு விளமரில் - மணம் கமழும் தென்றல் வீசும் விளமரில் உறைகின்ற; (மாருதம் - காற்று - இங்கே தென்றல்);

ஈசன் தாள் தொழ நாசம் வினைகளே - ஈசனது திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்;


8)

குன்று பேர்த்தவன் .. கன்ற ஊன்றினான்

நின்ற விளமரைச் .. சென்று சூழ்மினே.


குன்று பேர்த்தவன் கன்ற ஊன்றினான் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை அவன் வருந்தும்படி விரலை ஊன்றி நசுக்கியவன்; (பேர்த்தவற் கன்ற ஊன்றினான் - பேர்த்தவனைக் கன்ற ஊன்றினான்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்); (கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்);

நின்ற விளமரைச் சென்று சூழ்மினே - அப்பெருமான் நிலையாகத் தங்கிய விளமரைச் சென்றடைந்து வலம்செய்து வழிபடுங்கள்;


9)

எரியன் மாலயற் .. கரியன் விளமரிற்

பிரியன் தாள்தொழப் .. பிரியும் வினைகளே.


எரியன் - சோதி வடிவினன்;

மால்-அயற்கு அரியன் - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவன்;

விளமரில் பிரியன் - விளமரில் உறைகின்ற அன்பன்; (பிரியம் - அன்பு);

தாள் தொழப் பிரியும் வினைகளே - அப்பெருமானது திருவடியைத் தொழுதால் வினைகள் நீங்கும்; (பிரிதல் - விட்டுநீங்குதல்; கட்டு அவிழ்தல்);


10)

தூற்று வாயினர் .. கூற்றை விடுமினே

ஏற்றன் விளமரைப் .. போற்றி உய்ம்மினே.


தூற்று வாயினர் கூற்றை விடுமினே - மறைநெறியைப் பழித்துப் பேசுவோர்களது பேச்சைப் பொருட்படுத்தவேண்டா; பேச்சை நீங்குங்கள்;

ஏற்றன் - இடபவாகனன்;

விளமரைப் போற்றி உய்ம்மினே - அப்பெருமான் உறைகின்ற திருவிளமரைப் போற்றி உய்யுங்கள்; (அப்பர் தேவாரம் - 6.93.1 - "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால்-துருத்தி போக்கலாமே"); (அப்பர் தேவாரம் - 5.43.10 - "நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே");


11)

எண்ணில் பெயரினன் .. கண்ணில் தீயினன்

அண்ணல் விளமரை .. நண்ணில் உய்தியே.


எண் இல் பெயரினன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்; (கண்ணிற்றீயினன் = கண்ணில் தீயினன்);

அண்ணல் விளமரை நண்ணில் உய்தியே - அப்பெருமான் எழுந்தருளிய விளமரை அடைந்தால் (சென்று வழிபட்டால்) உய்வு பெறலாம்; (நண்ணில் - நண்ணினால் - அடைந்தால்); (உய்தி - உய்வு; ஈடேற்றம்); (அப்பர் தேவாரம் - 5.43.2 - "நல்லம் நண்ணுதல் நன்மையே");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment