Friday, December 23, 2022

P.285 - பொது - "அருள்வான் வேலை விடமுண் மிடற்றான்" - அமரர் குறையிரக்க

2015-06-01

P.285 - பொது - "அருள்வான் வேலை விடமுண் மிடற்றான்"

----------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு. 1-4-6 சீர்களில் மோனை)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார் தொழுவார்");

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை");


1)

அமரர் குறையி ரக்க அவர்கட் கிரங்கி அறுமுகத்துக்

குமரன் தன்னைப் பயந்தாய்; குழையார் காதா; குரைகழலார்

கமல பாதா; கலையார் கையாய்; நெற்றிக் கண்ணுடைய

விமல என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


"அமரர் குறையிரக்க அவர்கட்கு இரங்கி அறுமுகத்துக் குமரன்-தன்னைப் பயந்தாய் - தேவர்கள் வேண்ட, அவர்களுக்கு இரங்கி முருகனை ஈன்றவனே; (குறையிரத்தல் - தன் குறை கூறி வேண்டுதல்); (பயத்தல் - மகப் பெறுதல்; கொடுத்தல்);

குழைர் காதா - காதில் குழை அணிந்தவனே;

குரைகழல் ஆர் கமலபாதா - ஒலிக்கின்ற கழலை அணிந்த, தாமரை போன்ற பாதத்தை உடையவனே;

கலைர் கையாய் - மானை ஏந்திய கையினனே; (கலை - ஆண்மான்);

நெற்றிக்கண்டைய விமல" - நெற்றிக்கண்ணை உடைய விமலனே";

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - என்று போற்றி வணங்குபவர்களுக்கு -

1. விடம் உண் மிடற்றான் அருள்வான் வேலை (உத்தியோகம்) = விஷத்தை உண்ட நீலகண்டன், அவர்கள் விரும்பிய உத்தியோகம் கிடைக்க அருள்புரிவான்;

2. வேலை (கடல்) விடம் உண் மிடற்றான் அருள்வான் = பாற்கடல் விஷத்தை உண்ட நீலகண்டன் அருள்புரிவான்;

(வேலை - 1. உத்தியோகம்; 2. கடல்); (- ஈற்றசை); (அப்பர் தேவாரம் - 6.52.2 - "வேலை விடமுண்ட மிடற்றினான்காண்"); (சம்பந்தர் தேவாரம் - 3.49.10 - "நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே");


2)

காதார் குழையாய்; உழையார் கையாய்; நுதலிற் கண்ணுடையாய்;

மாதோர் பங்கில் மகிழ்ந்தாய்; வணங்கி நின்ற வான்மதியைப்

போதார் முடிமேற் புனைந்தாய்; பொடியார் மேனிப் புண்ணியனே;

வேதா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


காது ஆர் குழையாய் - காதில் குழை அணிந்தவனே;

உழை ஆர் கையாய் - கையில் மானை ஏந்தியவனே; (உழை - மான்);

நுதலில் கண் உடையாய் - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

மாது ஓர் பங்கில் மகிழ்ந்தாய் - உமையொருபங்கனே;

வணங்கி நின்ற வான்மதியைப் போது ஆர் முடிமேல் புனைந்தாய் - வணங்கிய, வானத்தில் இயங்கும் வெண்திங்களைப் பூ அணிந்த திருமுடிமேல் அணிந்தவனே; (வணங்குதல் - தொழுதல்; வளைதல்); (வான்மதி - வான்+மதி / வால்+மதி); (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை); (போது - பூ);

பொடி ஆர் மேனிப் புண்ணியனே - திருநீற்றைப் பூசிய திருமேனிப் புண்ணியமூர்த்தியே; (பொடி - திருநீறு);

வேதா - வேதனே";

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


3)

நீரார் சடைமேல் அரவும் நிலவும் புனைந்த நின்மலனே;

ஊரா னேறொன் றுடையாய்; உமையாள் கணவா; உம்பரெலாம்

ஏரார் மலரிட் டிறைஞ்ச இரங்கி எயில்மூன் றெரிசெய்த

வீரா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


நீர் ஆர் சடைமேல் அரவும் நிலவும் புனைந்த நின்மலனே - கங்கை பொருந்திய சடைமேல் பாம்பையும் சந்திரனையும் அணிந்த தூயனே;

ஊர் ஆனேறு ஒன்று உடையாய் - இடபவாகனனே; (ஊர்தல் - ஏறுதல்); (ஆனேறு - இடபம்);

உமையாள் கணவா - உமைகோனே;

உம்பரெலாம் ர் ஆர் மலர் இட்டு இறைஞ்ச இரங்கி எயில் மூன்று எரிசெய்த வீரா - தேவரெல்லாம் அழகிய பூக்களைத் தூவி வணங்க, அவர்களுக்கு இரங்கி முப்புரத்தை எரித்த வீரனே; (உம்பர் - தேவர்); (ஏர் - அழகு); (எயில் - மதில்);

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


4)

உடையாய்; நுதலில் ஓர்கண் உடையாய்; கையில் ஒண்மழுவாட்

படையாய்; மலையான் மகளோர் பங்கா; கங்கை பாய்கின்ற

சடையாய்; இமையோர் தலைவா; சாம வேதா; தனிவெள்ளை

விடையாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


உடையாய் - சுவாமியே; உடையவனே; (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.87 - "தாராய் உடையாய் அடியேற்குன் தாளிணையன்பு");

நுதலில் ஓர் கண் உடையாய் - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

கையில் ஒண்-மழுவாட் படையாய் - ஒளிவீசும் மழுவாள் ஆயுதம் ஏந்தியவனே;

மலையான் மகளோர் பங்கா - மலைமாது ஒரு கூறு ஆனவனே;

கங்கை பாய்கின்ற சடையாய் - கங்காதரனே;

இமையோர் தலைவா - தேவர்கள் தலைவனே;

சாமவேதா - சாமவேதம் ஓதுபவனே;

தனி வெள்ளை விடையாய் - ஒப்பற்ற வெள்ளை இடபவாகனம் உடையவனே;

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


5)

வீந்தார் எலும்பைப் பூணும் விகிர்தா; போற்றி விரைமலர்த்தாள்

சார்ந்தார்க் கின்பம் தருவாய்; சரமெய் காமன் தன்னாகம்

காய்ந்தாய்; சடையிற் கங்கை கரந்தாய்; நாகக் கச்சார்த்த

வேந்தே என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


வீந்தார் எலும்பைப் பூணும் விகிர்தா - இறந்தவர்களாகிய பிரமவிஷ்ணுக்களது எலும்பை (கங்காளம்) அணிந்த விகிர்தனே; (வீதல் - சாதல்); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);

போற்றி விரைமலர்த்தாள் சார்ந்தார்க்கு இன்பம் தருவாய் - துதித்து மணம் கமழும் தாமரைத்திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு இன்பம் தருபவனே; (விரை - வாசனை);

சரம் எய் காமன்தன் ஆகம் காய்ந்தாய் - மலர்க்கணை தொடுத்த மன்மதனது உடலை எரித்தவனே;

சடையில் கங்கை கரந்தாய் - சடையில் கங்கையை ஒளித்தவனே; (கரத்தல் - மறைத்தல்);

நாகக்-கச்சு ஆர்த்த வேந்தே - பாம்பைக் கச்சாகக் கட்டிய அரசனே; (ஆர்த்தல் - கட்டுதல்; பூணுதல்); (வேந்து - வேந்தன் - அரசன்);

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


6)

உரித்தாய் மலைபோல் ஆனை ஒன்றை; அரையில் அதளாடை

தரித்தாய்; கங்கை தங்கும் சடையாய்; மலைவில் தனையேந்தி

எரித்தாய் எயில்கள் மூன்றை; எழுதா மறையீ ரிருவர்க்கு

விரித்தாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


உரித்தாய் மலைபோல் ஆனை ஒன்றை - மலை போன்ற யானையைத் தோலுரித்தவனே;

அரையில் அதளாடை தரித்தாய் - அரையில் தோலாடையைக் கட்டியவனே; (அதள் - தோல்);

கங்கை தங்கும் சடையாய் - சடையில் கங்கையை அணிந்தவனே;

மலைவில்-தனை ஏந்தி எரித்தாய் எயில்கள் மூன்றை - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்தவனே; (எயில் - கோட்டை);

எழுதா-மறை ஈரிருவர்க்கு விரித்தாய் - எழுதப்படாத வேதத்தின் பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவனே;

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


7)

நூலார் மார்பா; பத்து நூறு பெயராய்; நுனைமூன்றார்

வேலா; திங்கள் விளங்க வேணி வைத்தாய்; விடையூரும்

மூலா; மூவா முதல்வா; முக்கட் பரமா; மூவரினும்

மேலாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


நூல் ஆர் மார்பா - மார்பில் பூணூல் அணிந்தவனே;

பத்து-நூறு பெயராய் - ஆயிரம் திருநாமங்கள் உடையவனே;

நுனை மூன்று ஆர் வேலா - முத்தலைச் சூலத்தை ஏந்தியவனே; (நுனை - நுனி);

திங்கள் விளங்க வேணி வைத்தாய் - சந்திரனை ஒளிவீசும்படி சடையில் அணிந்தவனே; (விளங்குதல் - திகழ்தல்; பிரகாசித்தல்); (வேணி - சடை);

விடைரும் மூலா - இடபவாகனம் உடைய மூலனே; (மூலன் - அநாதிகாரணன்); (அப்பர் தேவாரம் - 6.15.6 - "மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்");

மூவா முதல்வா - என்றும் மூப்பு அடையாத முதல்வனே;

முக்கட் பரமா - முக்கண் உடைய பரமனே;

மூவரினும் மேலாய் - மும்மூர்த்திகளுக்கும் தலைவனே;

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


8)

முகில்போல் வண்ணன் கண்ணை முளரி போல முன்னிடவும்

திகிரிப் படையைத் தந்த சிவனே; செய்ய திருவிரலின்

உகிரால் இலங்கை வேந்தன் உரத்தை நெரித்தாய்; உண்பலிதேர்

விகிர்தா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


முகில் போல் வண்ணன் கண்ணை முளரி போல முன்டவும் திகிரிப்படையைத் தந்த சிவனே - மேகம் போன்ற நிறம் உடைய திருமால் தன் கண்ணைத் தோண்டித் தாமரைமலர் போலத் திருவடியில் இட்டு வழிபடு செய்ய, இரங்கிச் சக்கராயுதத்தை ஈந்தருளிய சிவனே; (இது திருவீழிமிழலைத் தலவரலாறு); (முகில் - மேகம்); (முளரி - தாமரை); (திகிரிப்படை - சக்கராயுதம்);

செய்ய - செய்யனே - செம்மேனியனே;

செய்ய திருவிரலின் உகிரால் இலங்கை வேந்தன் உரத்தை நெரித்தாய் - சிவந்த திருப்பாதவிரல் நகத்தால் (அதனைக் கயிலைமலைமேல் ஊன்றி) இராவணன் மார்பை நசுக்கியவனே / வலிமையை நசுக்கி அழித்தவனே; (செய்ய - சிவந்த); (உகிர் - நகம்); (உரம் - மார்பு; வலிமை); ("செய்ய" - என்ற சொல் இப்படி இருமுறை இயைத்துப் பொருள்காணவும் அமைந்தது);

உண்பலிதேர் விகிர்தா - பிச்சையேற்கும் விகிர்தனே; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


9)

ஏடார் மலரான் திருமால் எங்கும் நேட எரியானாய்;

தோடோர் காதில் திகழும் துணைவா; தினமும் துணையடிச்சீர்

பாடாப் பணிவார் அகத்தாய்; பார்த்த னுக்குப் படையீந்த

வேடா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


ஏடு ஆர் மலரான் திருமால் எங்கும் நேட எரினாய் - இதழ்கள் நிறைந்த தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் சென்று தேடும்படி ஜோதிவடிவின் நின்றவனே; (ஏடு - பூவிதழ்); (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - ""ஏடுடைய மலரான்");

தோடு ஓர் காதில் திகழும் துணைவா - ஒரு காதில் தோடு அணிந்த (அர்த்தநாரீஸ்வரன்) துணைவனே;

தினமும் துணையடிச்-சீர் பாடாப் பணிவார் அகத்தாய் - தினமும் இருதிருவடிகளின் புகழைப் பாடிப் பணிபவர்கள் சிந்தையில் உறைபவனே; (துணை - இரண்டு); (பாடா - பாடி; செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);

பார்த்தனுக்குப் படை ஈந்த வேடா - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளிய வேடனே;

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


10)

பொல்லா நெறியைச் சுவர்க்கம் புகுத்தும் என்று பொய்யுரைக்கும்

அல்லார் நெஞ்சக் கையர் அவர்சொல் மதியேல்; அன்போடு,

மல்லார் தோளெட் டுடைய மைந்தா; திரிமும் மதிலெய்த

வில்லாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


பொல்லா நெறியைச் சுவர்க்கம் புகுத்தும் என்று பொய்ரைக்கும் - பொல்லாத நெறியைச் "சுவர்க்கத்தில் உம்மைப் புகுத்தும் நெறி" என்று பொய் சொல்கின்ற;

அல் ஆர் நெஞ்சக் கையர் அவர்சொல் மதியேல் - இருள் நிறைந்த உள்ளத்தை உடைய கீழோர்களது பேச்சை மதிக்கவேண்டா; (அல் - இருள்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (கையர் - கீழோர்);

அன்போடு, "மல் ஆர் தோள் எட்டு உடைய மைந்தா" - பக்தியோடு, "வலிமை மிக்க எட்டுத் தோள்கள் உடைய வீரனே;

திரி-மும்மதில் எய்த வில்லாய் - திரிந்த முப்புரங்களை எய்து அழித்த வில்லை ஏந்தியவனே; (பிறையாய் = பிறையைச் சூடியவனே என்பது போல், வில்லாய் - வில்லை ஏந்தியவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.20.8 - "பெரியாய் சிறியாய் பிறையாய்");

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


11)

முத்தே; மணியே; தேனே; மூவா மருந்தே; முடிமீது

கொத்தார் கொன்றை புனைந்த கோனே; இடபக் கொடியுடையாய்;

அத்தா; அன்பர் சித்தா; ஆனஞ் சாடீ; அனைத்திற்கும்

வித்தே என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


முத்தே; மணியே; தேனே; - முத்தும் மணியும் தேனும் போன்றவனே;

மூவா மருந்தே - அமுதமே;

முடிமீது கொத்து ஆர் கொன்றை புனைந்த கோனே - திருமுடிமேல் கொன்றைமலர்க்கொத்தை அணிந்த தலைவனே;

இடபக்கொடி உடையாய் - இடபக்கொடி உடையவனே;

அத்தா - தந்தையே;

அன்பர் சித்தா - பக்தர்களது சித்தத்தில் (மனத்தில்) இருப்பவனே;

ஆனஞ்சு ஆடீ - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் உடையவனே; (ஆனஞ்சு - ஆன் ஐந்து - பஞ்சகவ்வியம்);

அனைத்திற்கும் வித்தே - எல்ளாவற்றிற்கும் காரணம் ஆனவனே; (வித்து - காரணன் என்னும் பொருளது); (அப்பர் தேவாரம் - 6.57.9 - "காற்றிசைக்கும் திசைக்கெல்லாம் வித்தே போற்றி");

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இப்பதிகத்தின் முதற்பாடலில் விளக்கம் காண்க;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment