Saturday, December 24, 2022

P.292 - தேவூர் - சுட்டபொடி சாந்தமென

2015-06-26

P.292 - தேவூர்

(திருவாரூர் அருகு உள்ள தலம்)

------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானதன தானதன தானதன தானா) (திருவிராகம் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளும்")


1)

சுட்டபொடி சாந்தமென மார்பிலணி தூயன்

வட்டணைகள் இட்டுநடம் ஆடுமெரி வண்ணன்

சிட்டரொடு தேவர்தொழு செல்வனணி தேவூர்

இட்டமென நின்றவனை ஏத்தவரும் இன்பே.


சுட்டபொடி சாந்தம் என மார்பில் அணி தூயன் - வெந்த வெண்ணீற்றைச் சந்தனம்போல் மார்பில் பூசிய நின்மலன்;

வட்டணைகள் இட்டு நடம் ஆடும் எரிவண்ணன் - வட்டணை என்னும் நாட்டிய-வகைகளைச் செய்து திருநடனம் செய்யும் தீவண்ணன்; (வட்டணை - வட்டம்; தாளம் போடுதலுமாம்); (சம்பந்தர் தேவாரம் - 3.75.4 - "கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்");

சிட்டரொடு தேவர் தொழு செல்வன் - சிட்டர்களும் தேவர்களும் வணங்குகின்ற செல்வன்; (சிட்டர் - பெரியோர்; சான்றோர்);

அணி தேவூர் இட்டம் என நின்றவனை ஏத்த வரும் இன்பே - அழகிய தேவூரில் விரும்பி உறையும் சிவபெருமானைத் துதித்தால் இன்பம் வந்தடையும்; (இட்டம் - இஷ்டம்);


2)

வெய்யவிடம் வேலையெழ அஞ்சியடை விண்ணோர்

உய்யவமு தாவதனை உண்டமணி கண்டன்

செய்யினிடை மீனுகளும் ஏருடைய தேவூர்

ஐயனடி போற்றுமடி யாரடைவர் இன்பே.


வெய்ய-விடம் வேலை எழ - கொடிய நஞ்சு பாற்கடலில் தோன்றவும்; (வெய்ய - கொடிய); (வேலை - கடல்);

அஞ்சி அடை விண்ணோர் உய்ய - அஞ்சி வந்து சரணடைந்த தேவர்கள் உய்யுமாறு;

அமுதா அதனை உண்ட மணிகண்டன் - அமுதம் போல அந்த நஞ்சை உண்ட நீலகண்டன்; (அமுதா - அமுதாக);

செய்யினிடை மீன் உகளும் ஏர் உடைய தேவூர் - வயல்களில் மீன்கள் பாயும் அழகு உடைய தேவூரில் உறைகின்ற; (செய் - வயல்); (உகளுதல் - பாய்தல்; தாவுதல்); (ஏர் - அழகு; நன்மை);

ஐயன் அடி போற்றும் அடியார் அடைவர் இன்பே - பெருமான் திருவடியைப் போற்றி வணங்கும் அன்பர்கள் இன்புறுவார்கள்;


3)

ஆறுடைய செஞ்சடையன் அஞ்சொலுமை மங்கை

கூறுடைய கொள்கையினன் நீறுதிகழ் மார்பன்

சேறுடைய தண்கழனி சூழ்ந்தவணி தேவூர்

ஏறுடைய ஈசனடி ஏத்தவரும் இன்பே.


ஆறுடைய செஞ்சடையன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

ஞ்சொல் உமைமங்கை கூறுடைய கொள்கையினன் - அழகிய மொழி பேசும் பார்வதியை ஒரு பாகமாக உடையவன்; (அம் - அழகு);

நீறு திகழ் மார்பன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

சேறுடைய தண்-கழனி சூழ்ந்தணி தேவூர் - சேறு திகழும் குளிர்ந்த வயல் சூழ்ந்த அழகிய தேவூரில் உறைகின்ற; (கழனி - வயல்);

ஏறுடைய ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - இடபவாகனம் உடைய பெருமான் திருவடியைத் துதித்து வணங்கினால் இன்பம் வந்தடையும்;


4)

ஐயலரை எய்யு(ம்)மதன் அங்கமெரி அண்ணல்

மையணியு(ம்) மாமிடறன் ஐய(ம்)மகிழ் வள்ளல்

செய்யசடை மேலரவு திங்களணி தேவூர்

ஐயையடை அன்பரிடர் அற்றுவரும் இன்பே.


-அலரை எய்யு(ம்) மதன் அங்கம் எரி அண்ணல் - ஐந்து பூக்களை அம்புகளாக எய்யும் காமனது உடம்பை எரித்த பெருமான்; (அலர் - மலர்); (மதன் - காமன்); (அங்கம் - உடல்);

மை அணியு(ம்) மா-மிடறன் - அழகிய கண்டத்தில் கருமையை அணிந்தவன் - நீலகண்டன்;

ஐய(ம்) மகிழ் வள்ளல் - பிச்சையை உகந்த வள்ளல்; (ஐயம் - பிச்சை);

செய்ய சடைமேல் அரவு திங்கள் அணி தேவூர் - சிவந்த சடைமேல் பாம்பையும் சந்திரனையும் அணிந்த, (அழகிய) தேவூரில் உறையும்; (செய்ய - சிவந்த); (அணி - இவ்வாறு இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளுமாறு நின்றதூ);

ஐயை அடை அன்பர் இடர் அற்று வரும் இன்பே - தலைவனைச் சரண்புகுந்த பக்தர்கள்து துன்பங்கள் நீங்கி இன்பம் வந்தடையும்; (- தலைவன்; அரசன்);


5)

காருருவ ஆனையுரி கண்டனடல் அந்தன்

மாருருவு மூவிலைய வேலுடைய மைந்தன்

சீருலவு சோலைபுடை சூழ்ந்தஅணி தேவூர்

ஏருலவு கொன்றையனை ஏத்தவரும் இன்பே.


கார் உருவ ஆனைரி கண்டன் - கரிய வடிவமுமுடைய யானைத் தோலுரித்த வீரன்; (கண்டன் - வீரன்);

அடல்-அந்தன் மார் உருவு மூவிலையவேல் உடைய மைந்தன் - கொடிய வலிய அந்தகாசுரனது மார்பை ஊடுருவிய திரிசூலத்தை ஏந்திய வீரன்; (உருவுதல் - ஊடுருவுதல்); (மைந்தன் - வீரன்; அழகன்); (சம்பந்தர் தேவாரம் - 1.12.5 - "அந்தன்றனை அயில்மூவிலை அழகார் கறையார்நெடு வேலின்மிசை ஏற்றான்");

சீர் உலவு சோலை புடை சூழ்ந்த அணி தேவூர் - சிறந்த சோலை சூழ்ந்த அழகிய தேவூரில் உறையும்; (சீர் - அழகு; பெருமை);

ஏர் உலவு கொன்றையனை ஏத்த வரும் இன்பே - அழகிய கொன்றைமாலை அணிந்த பெருமானைப் போற்றி வணங்கினால் இன்பம் வந்தடையும்; (ஏர் - அழகு);


6)

மூவரணம் ஆரழலில் மூழ்கவெரி அம்பை

ஏவவலன் ஒண்மழுவு(ம்) மான்மறியும் ஏந்தி

தேவரொடு மாமுனிவர் சென்றுதொழு தேவூர்ச்

சேவகன சேவடிகள் ஏத்தவரும் இன்பே.


மூ-அரணம் ஆர்-அழலில் மூழ்க எரி-அம்பை ஏவ வலன் - முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி தீக்கணையைச் செலுத்த வல்லவன்; (அரணம் - கோட்டை);

ஒண்-மழுவும் மான்மறியும் ஏந்தி - ஒளிவீசும் மழுவையும் மான்கன்றையும் ஏந்தியவன்;

தேவரொடு மாமுனிவர் சென்று தொழு தேவூர்ச் - தேவர்களும் பெரிய முனிவர்களும் சென்று வணங்கும் தேவூரில் உறையும்;

சேவகன சேவடிகள் ஏத்த வரும் இன்பே - வீரனுடைய சேவடிகளைப் போற்றி வணங்கினால் இன்பம் வந்தடையும்; (சேவகன் - வீரன்); (- ஆறாம்வேற்றுமை உருபு); (அப்பர் தேவாரம் - 4.21.7 - "செல்வன சேவடி சிந்திப்பார்");


7)

நான்மறையை ஓதுதிரு நாவுடைய முக்கட்

கோன்மதுர வாக்கினளொர் கூறுமகிழ் அண்ணல்

தேன்மலரை நாடியளி பாடுமணி தேவூர்

வான்பிறையன் வார்கழலை வாழ்த்தவரும் இன்பே.


நான்மறையை ஓது திருநாவுடைய முக்கட்-கோன் - நால்வேதங்களைப் பாடியருளிய முக்கட்பெருமான்;

மதுர-வாக்கினள் ஒர் கூறு மகிழ் அண்ணல் - மதுரபாஷிணியை ஒரு பங்கில் உடைய அண்ணல்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (* மதுரபாஷிணி - இத்தலத்து இறைவி திருநாமம்);

தேன்மலரை நாடிளி பாடும் அணி தேவூர் - தேன் நிறைந்த பூக்களை நாடி வண்டுகள் இசை பாடும் (சோலை சூழ்ந்த) தேவூரில் உறைகின்ற; (அளி - வண்டு);

வான்-பிறையன் வார்-கழலை வாழ்த்த வரும் இன்பே - அழகிய பிறையை அணிந்தவனது நீண்ட திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்; (வான் - அழகு; வானம்); (வார்தல் - நீள்தல்);


8)

அத்தனுறை மாமலையை அன்றெறிய வந்தான்

கத்தவிரல் ஊன்றியவன் அத்தியுரி போர்த்தான்

தெத்தெனன என்றுசிறை வண்டுமுரல் தேவூர்ப்

பித்தனரு நட்டனடி பேணவரும் இன்பே.


அத்தன் உறை மாமலையை அன்று எறிய வந்தான் கத்த விரல் ஊன்றியவன் - நம் தந்தையான சிவபெருமான் உறையும் கயிலைமலையை முன்பு பெயர்த்து எறிய வந்த இராவணன் கத்தியழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (அத்தன் - தந்தை);

அத்தி-உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (அத்தி - யானை); (உரி - தோல்);

தெத்தெனன என்று சிறை-வண்டு முரல் தேவூர் - தெத்தெனன என்று சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற தேவூரில் உறைகின்ற; (சிறை - சிறகு); (முரல்தல் - ஒலித்தல்);

பித்தன் அரு-நட்டன் அடி பேண வரும் இன்பே - பித்தனும் அரிய நடம் ஆடும் கூத்தனுமான சிவபெருமானது திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


9)

மாலினொடு நேடியவர் வாடவளர் சோதி

ஆலினடி ஆரணம்வி ரித்தருளும் ஐயன்

சேலினொடு வாளையவை செய்யிலுகள் தேவூர்ச்

சூலனடி போற்றியெழு தொண்டரிலர் துன்பே.


மாலினொடு நேடியவர் வாட வளர்-சோதி - அறியாமையோடு தேடியவர்களான திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி வாடும்படி ஓங்கிய ஜோதி; (மால் - அறியாமை);

ஆலின்-டி ஆரணம் விரித்தருளும் ஐயன் - கல்லாலமரத்தின்கீழ் இருந்து நால்வேதங்களின் பொருளை உபதேசித்த குரு; (ஆல் - கல்லாலமரம்); (ஆரணம் - வேதம்); (ஐயன் - குரு);

சேலினொடு வாளையவை செய்யிலுகள் தேவூர்ச் - சேல்மீன்களும் வாளைமீன்களும் வயலில் தாவும் (= நீர்வளம் மிகுந்த) தேவூரில் உறைகின்ற;

சூலன் அடி போற்றி-எழு தொண்டர் இலர் துன்பே - சூலபாணியின் திருவடியை வணங்கி எழுகின்ற தொண்டர்களது துன்பம் தீரும்;


10)

புன்மொழிகள் நாளுமுரை புல்லருரை நீங்கும்

அன்பருயிர் காத்துநமன் மார்பிலுதை அண்ணல்

தென்பொழிலில் வாசமலர் நாறுமணி தேவூர்

என்பணியும் ஈசனடி ஏத்தவரும் இன்பே.


புன்மொழிகள் நாளும் உரை புல்லர் உரை நீங்கும் - இழிந்த சொற்களைத் தினமும் பேசுகின்ற கீழோர்களது சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (புல்லர் - கீழோர்);

அன்பர்-யிர் காத்து நமன் மார்பில் உதை அண்ணல் - மார்க்கண்டேயரைக் காத்துக் காலனை மார்பில் உதைத்த பெருமான்;

தென்-பொழிலில் வாசமலர் நாறும் அணி தேவூர் - அழகிய சோலையில் வாசனையுடைய பூக்கள் மணம் வீசும் அழகிய தேவூரில் உறைகின்ற;

என்பு அணியும் ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - எலும்பை அணியும் ஈசன் திருவடியைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;


11)

அங்கமணி கின்றபரன் அஞ்சடையின் மீது

திங்களது வாழவருள் செய்தசிவன் எந்தை

செங்கணிறை அன்பினொடு செய்தவுயர் தேவூர்

மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.


அங்கம் அணிகின்ற பரன் - கங்காளன்; (அங்கம் - எலும்பு);

அஞ்சடையின்மீது திங்களது வாழ அருள் செய்த சிவன் எந்தை - அழகிய சடைமேல் சந்திரன் வாழ அருள்புரிந்த சிவன், எம் தந்தை; (அம் - அழகு);

செங்கண்-இறை அன்பினொடு செய்த உயர் தேவூர் - கோச்செங்கட்சோழன் பக்தியோடு கட்டிய மாடக்கோயிலான தேவூரில் உறைகின்ற; (செங்கணிறை - செங்கண் இறை; சந்தம் கருதி ண் மிகாமல் வந்தது); (இறை - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 3.19.5 - "அம்பர் மாநகர்ச் செங்கணல் இறைசெய்த கோயில்");

மங்கைரு பங்கன் அடி வாழ்த்த வரும் இன்பே - உமைபங்கன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment