Tuesday, December 20, 2022

P.281 - கோளிலி - நாவினில் நற்பெயரை

2015-05-02

P.281 - கோளிலி (திருக்குவளை)

------------------

(கலிவிருத்தம் - "தானன தானதனா தானன தானதனா")

(சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும்")


1)

நாவினில் நற்பெயரை நாளும் அணிந்தவர்தம்

தீவினை தீர்த்தருளும் சேவகன் எம்பெருமான்

மூவிலை வேலுடையான் மூப்பொடு நோயுமிலான்

கூவிள மாலையினான் கோளிலி மேயவனே.


நாவினில் நற்பெயரை நாளும் அணிந்தவர்தம் தீவினை தீர்த்தருளும் சேவகன் எம்பெருமான் - தங்கள் நாக்கில் திருநாமத்தைத் தினமும் அணிந்தவர்களது பாவத்தைத் தீர்த்து அருளும் வீரன் எம்பெருமான்; (நற்பெயர் - திருநாமம்); (சேவகன் - வீரன்);

மூவிலைவேல் உடையான் - திரிசூலத்தை ஏந்தியவன்;

மூப்பொடு நோயும் இலான் - முதுமை, நோய் இவையெல்லாம் இல்லாதவன்;

கூவிள-மாலையினான் - வில்வமாலை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (அப்பர் தேவாரம் - 6.3.1 - "வெறிவிரவு கூவிளநல் தொங்கலானை" - (தொங்கல் - மாலை));

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


2)

தேன்மலர் கொண்டுதினம் சேவடி போற்றிடுவார்

வான்பிணி தீர்த்தருளும் வைத்தியன் எம்பெருமான்

மான்மழு ஏந்தியவன் வாளர வச்சடைமேல்

கூன்பிறை சூடியவன் கோளிலி மேயவனே.


தேன்மலர்-கொண்டு தினம் சேவடி போற்றிடுவார் வான்பிணி தீர்த்தருளும் வைத்தியன் - தேன் நிறைந்த பூக்களால் தினமும் சேவடியை வணங்கும் அன்பர்களது பெரிய தீராத நோயைத் தீர்த்தருளும் வைத்தியன்; (வான்பிணி - பெரும்பிணி); (அப்பர் தேவாரம் - 5.77.3 - "பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கி இங்கு இன்பம் வந்து எய்திடும்");

எம்பெருமான் - எங்கள் பெருமான்;

மான் மழு ஏந்தியவன் - கையில் மான்கன்றையும் மழுவாளையும் ஏந்தியவன்;

வாரவச்-சடைமேல் கூன்பிறை சூடியவன் - கொடிய / ஒளி பொருந்திய பாம்பு இருக்கும் சடைமேல் வளைந்த பிறையையும் அணிந்தவன்; (வாள் - கொடிய); (கூன் - வளைவு);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


3)

நீள நினைந்துருகும் நேசர்கள் வானுலகம்

ஆள அருள்புரியும் அன்புடை எம்பெருமான்

வேளை விழித்தெரிசெய் வேதியன் அஞ்சடைமேல்

கோளர வம்புனைவான் கோளிலி மேயவனே.


நீள நினைந்து-உருகும் நேசர்கள் வானுலகம் ஆள அருள்புரியும் அன்புடை எம்பெருமான் - ; எப்போதும் எண்ணி உருகும் அன்பர்களுக்குச் சிவலோகவாழ்வை அருளும் அன்பு மிகுந்த எம்பெருமான்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்"); (நேசர் - அன்பர்; பக்தர்); (அப்பர் தேவாரம் - 6.65.2 - "நேசன்காண் நேசர்க்கு");

வேளை விழித்து எரிசெய் வேதியன் - காமனை நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்த வேதியன்; (வேள் - மன்மதன்); (வேதியன் - வேதம் ஓதுபவன்; வேதப்பொருள் ஆனவன்);

அஞ்சடைமேல் கோளரவம் புனைவான் - அழகிய சடைமேல் கொடிய பாம்பை அணிந்தவன்; (அம் - அழகிய); (கோள் - கொல்லும் தன்மையுடைய; கொடிய);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


4)

பண்திகழ் பாடலொடு பன்மலர் கொண்டுதொழும்

தொண்டர்கள் தொல்வினைதீர் தூயவன் எம்பெருமான்

அண்டர் தமக்கிரங்கி ஆழ்கடல் நஞ்சணியாக்

கொண்ட மிடற்றொருவன் கோளிலி மேயவனே.


பண் திகழ் பாடலொடு பன்மலர் கொண்டு தொழும் தொண்டர்கள் தொல்வினை தீர் தூயவன் - பண் பொருந்திய பாடல்களாலும் பல மலர்களாலும் வழிபாடு செய்யும் தொண்டர்களது பழவினையைத் தீர்த்தருளும் பரிசுத்தன்; (பண்டிகழ் - பண் திகழ் - இசை பொருந்திய); (தொல்வினை - பழவினை);

எம்பெருமான் - எங்கள் பெருமான்;

அண்டர்-தமக்கு இரங்கி ஆழ்கடல் நஞ்சு அணியாக் கொண்ட மிடற்று-ஒருவன் - தேவர்களுக்கு இரங்கி பாற்கடல் விஷத்தை அணியாகக் கொண்ட கண்டத்தை உடைய ஒப்பற்றவன்; (அண்டர் - தேவர்கள்); (மிடறு - கண்டம்); (அணியா - அணியாக);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


5)

மண்டிய அன்பினொடு வார்கழல் ஏத்திடுவார்

பண்டை வினைத்தொகுதி பாற்றி நலந்தருவான்

வண்டமர் பூங்குழலாள் வாம(ம்) மகிழ்ந்தபரன்

கொண்டல் மிடற்றொருவன் கோளிலி மேயவனே.


மண்டிய அன்பினொடு வார்கழல் ஏத்திடுவார் பண்டை வினைத்தொகுதி பாற்றி நலம் தருவான் - மிகுந்த அன்பால் நீள்கழலைத் துதிக்கும் பக்தர்களது பழைய வினைத்தொகுதியை அழித்து நன்மை செய்பவன்; (மண்டுதல் - மிகுதல்); (பண்டை - பழைய); (திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6.6 - "வினையின் தொகுதி ஒறுத்தெனை ஆண்டுகொள்"); (பாற்றுதல் - அழித்தல்; நீக்குதல்);

வண்டு அமர் பூங்குழலாள் வாம(ம்) மகிழ்ந்த பரன் - வண்டுகள் மொய்த்திடும் மென்மையான கூந்தலையுடைய உமாதேவியை இடப்பாகமாக விரும்பிய பரமன்; (* வண்டமர் பூங்குழலி - இத்தலத்து இறைவி திருநாமம்);

கொண்டல் மிடற்று-ஒருவன் - மேகம் போன்ற கண்டத்தை உடைய ஒப்பற்றவன்; (கொண்டல் - மேகம்);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


6)

தளிபல கண்டுதொழும் தன்னடி யார்க்கெளியன்

பிளிறு களிற்றுரிவை போர்த்த பெரும்பெருமான்

ஒளிர்மதி யோடுரகம் ஊர்ந்திடும் உச்சியினான்

குளிர்பொழில் சூழ்ந்தழகார் கோளிலி மேயவனே.


தளி-பல கண்டு தொழும் தன்டியார்க்கு எளியன் - பல கோயில்களைத் தரிசித்து அடிபோற்றும் தன் பக்தர்களால் எளிதில் அடையப்பெறுபவன்; (தளி - கோயில்);

பிளிறு களிற்று-உரிவை போர்த்த பெரும்பெருமான் - பிளிறிய ஆண்யானையின் தோலைப் போத்த மகாதேவன்; (களிறு - ஆண்யானை); (உரிவை - தோல்); (பெரும்பெருமான் - மஹாதேவன்); (திருவாசகம் - அடைக்கலப் பத்து - 8.24.3 - "பெரும்பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான்");

ஒளிர்மதியோடு உரகம் ஊர்ந்திடும் உச்சியினான் - ஒளிவீசும் திங்களோடு பாம்பு ஊர்கின்ற திருமுடியினன்; (ஒளிர்தல் - ஒளிவீசுதல்); (உரகம் - பாம்பு); (ஊர்தல் - நகர்தல்; அடர்தல்); (உச்சி - தலை);

குளிர்பொழில் சூழ்ந்தழகார் கோளிலி மேயவனே - குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


7)

பாட்டுக ளாற்பரவும் பத்தர்கள் வல்வினையை

ஓட்டி அருள்புரியும் உத்தமன் நச்சரவன்

நாட்டமொர் மூன்றுடைய நாயகன் ஓர்கணையால்

கோட்டைகள் நீறுசெய்தான் கோளிலி மேயவனே.


பாட்டுகளால் பரவும் பத்தர்கள் வல்வினையை ஓட்டி அருள்புரியும் உத்தமன் - பாட்டுகள் பாடித் துதிக்கும் பக்தர்களது வலிய வினையைத் தீர்த்து அருளும் பெருமான்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (ஓட்டுதல் - நீங்கச்செய்தல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.91.1 - பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார்);

நச்சரவன் - விஷப்பாம்பை அணிந்தவன்;

நாட்டம் ஒர் மூன்று உடைய நாயகன் - முக்கண்ணுடைய தலைவன்; (நாட்டம் - கண்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

ஓர் கணையால் கோட்டைகள் நீறுசெய்தான் - ஓரம்பால் முப்புரங்களை எரித்துச் சாம்பல் ஆக்கியவன்;

கோளிலி மேயவனே -திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்; (- ஈற்றசை);


8)

அன்று மலைக்குமகள் அஞ்சிட மாகயிலைக்

குன்றெறி மிண்டனது கொட்டம் அழிக்கவிரல்

ஒன்றினை ஊன்றியவன் ஒண்பிறை மத்தமலர்

கொன்றை அணிந்தபிரான் கோளிலி மேயவனே.


அன்று மலைக்குமகள் அஞ்சிட மா-கயிலைக் குன்று எறி மிண்டனது கொட்டம் அழிக்க விரல் ஒன்றினை ஊன்றியவன் - முன்பு உமை அஞ்சும்படி கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலியான இராவணனது செருக்கை அழிக்கத் திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்; (மலைக்குமகள் - பார்வதி); (மிண்டன் - கல்நெஞ்சன்; திண்ணியன்; அறிவிலி - இங்கே, இராவணன்); (கொட்டம் - செருக்கு; சேஷ்டை);

ஒண்-பிறை மத்தமலர் கொன்றை அணிந்த பிரான் - ஒளியுடைய பிறை, ஊமத்தமலர், கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடிய பெருமான்; (மத்தமலர் - ஊமத்தமலர்);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;


9)

உம்பரில் ஏறியயன் உச்சியை நண்ணகிலான்

அம்புய நேத்திரனும் அண்ண கிலாவொளியான்

நம்பிய வர்க்கெளியன் நான்மறை ஓதியவன்

கொம்பனை யாள்கொழுநன் கோளிலி மேயவனே.


உம்பரில் ஏறியன் உச்சியை நண்ணகிலான் - வானில் உயர்ந்து சென்றும் பிரமனால் முடியைக் காண ஒண்ணாதவன்; (உம்பர் - ஆகாயம்); (நண்ணுதல் - கிட்டுதல்); (கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை);

அம்புய நேத்திரனும் அண்ணகிலா ஒளியான் - தாமரைக்கண்ணனான திருமாலாலும் அடைய ஒண்ணாத ஒளிவடிவினன்; (அம்புயம் - அம்புஜம் - தாமரை); (நேத்திரம் - கண்); (அண்ணுதல் - கிட்டுதல்); (ஒளியான் - ஜோதிவடிவினன்);

ஒளியான், நம்பியவர்க்கு எளியன் - தன்னை ஒளித்துக்கொள்ளமாட்டான், விரும்புகின்ற பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்; ("ஒளியான்" என்பதை இடைநிலைத்தீவகமாக முன்னும் பின்னும் கூட்டி இப்படிப் பொருள்கொள்ளலாம்); (ஒளியான் - ஒளித்துக்கொள்ளாதவன்);

நான்மறை ஓதியவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

கொம்பனையாள் கொழுநன் - பூங்கொம்பு போன்ற அழகிய உமைக்குக் கணவன்;

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;


10)

பொக்கம் உரைத்துழலும் புல்லர்சொல் விட்டொழிமின்

அக்கரம் அஞ்சுசொலும் அன்பர் அகத்துறைவான்

முக்கணன் அக்கணியும் மூர்த்தி இருஞ்சடைமேல்

கொக்கிற கும்புனைவான் கோளிலி மேயவனே.


பொக்கம் உரைத்து-ழலும் புல்லர்-சொல் விட்டொழிமின் - பொய்களே பேசித் திரியும் கீழோர் பேச்சை விட்டு விலகுங்கள்; (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (ஒழிமின் - நீங்குங்கள்);

அக்கரம் அஞ்சு சொலும் அன்பர் அகத்து உறைவான் - திருவைந்தெழுத்தை ஓதும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்றவன்; (அக்கரம் - அக்ஷரம் - எழுத்து); (அகம் - நெஞ்சு);

முக்கணன், அக்கு அணியும் மூர்த்தி - நெற்றிக்கண்ணன், எலும்பை அணிபவன்; (அக்கு - எலும்பு);

இருஞ்சடைமேல் கொக்கிறகும் புனைவான் - 1. கொக்கு-வடிவில் நின்ற குரண்டாசுரனை அழித்து அவன் இறகினைப் பெரிய சடையில் சூடியவன்; 2. கொக்கிறகு என்ற பூவைப் பெரிய சடையில் சூடியவன்; (இருமை - பெருமை);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;


11)

மட்டவிழ் மாமலர்கள் இட்டு வணங்கியவர்

இட்டம் எலாமருளும் எந்தை திரிந்தபுரம்

சுட்ட வரைச்சிலையன் தோற்பறை பூதகணம்

கொட்ட நடம்புரிவான் கோளிலி மேயவனே.


மட்டு அவிழ் மாமலர்கள் இட்டு வணங்கியவர் இட்டம் எலாம் அருளும் எந்தை - வாசமலர்களைச் திருவடியில் இட்டு வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருளும் எம் தந்தை; (மட்டு - தேன்; வாசனை); (அவிழ்தல் - சொட்டுதல்; மலர்தல்);

திரிந்த புரம் சுட்ட வரைச்சிலையன் - எங்கும் பறந்து அலைந்த முப்புரங்களை ஓரம்பால் எய்து எரித்த மேருமலைவில்லை ஏந்தியவன்; (வரை- மலை); (சிலை - வில்);

தோற்பறை பூதகணம் கொட்ட நடம் புரிவான் - தோலால் ஆன பறை முதலிய வாத்தியங்களைப் பூதகணங்கள் முழக்கக் கூத்தாடுபவன்; (திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி - "அங்கை நீட்டி.. ..தோற்பறை கொட்டக் கூளிகள்"); (கொட்டுதல் - முழக்குதல்);

கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு -

கலிவிருத்தம் - "தானன தானதனா தானன தானதனா" என்ற சந்தம்.

அடியினுள் வெண்டளை பயிலும்.

தானன வருமிடத்தில் தான வரலாம்; அப்படி வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

தானதனா என்ற இடத்தில் ஒரோவழி தானானா வரலாம்.

அரையடி முடிவில் வகையுளி வரக்கூடாது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment