Sunday, December 25, 2022

N.034 - சுந்தரர் துதி - பெண்கள் இருவர்

2015-07-23

N.034 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2015

--------------

(3 பாடல்கள்)

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - "வேதம் ஓதி");

(சுந்தரர் தேவாரம் 7.95.1 - "மீளா அடிமை")


1)

பெண்கள் இருவர் தம்மை மணக்கப் பிறந்து சூளொன்றால்

கண்கள் இரண்டும் இழந்து வாடிக் கதறிக் கசிந்துருகிப்

பண்கள் பாடிப் பார்வை பெற்றார் படர்பொற் சடையாற்கு

நண்பர் ஆன நாவ லூரர் நற்றாள் நம்துணையே.


சூள் - சபதம்;

பண்கள் பாடி - பண்ணோடு பொருந்திய பல பதிகங்கள் பாடி;

படர்-பொற்சடையாற்கு நண்பர் ஆன நாவலூரர் - படரும் பொற்சடையை உடைய சிவனுக்குத் தோழரான, திருநாவலூரில் அவதரித்த சுந்தரர்;

(சுந்தரர் தேவாரம் - 7.54.1 - "ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்"); (சுந்தரர் தேவாரம் - 7.69.1 - "பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்"); (சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே");


2)

எரியின் வண்ணத் தீசன் தாளை எண்ணித் தொண்டுகள்செய்

அரிய பத்தர் அவர்கட் கெல்லாம் அடிமை யானென்ற

பெரிய பதிகம் அருளிச் செய்தார் பிளிறு மதயானை

உரியன் தமரென் றுரைத்த நாவ லூரர் கழல்போற்றி.


எரியின் வண்ணத்து ஈசன் - தீப் போன்ற சிவந்த நிறம் உடைய சிவபெருமான்;

பெரிய பதிகம் - பெருமை மிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகம்; (சுந்தரர் தேவாரம் - 7.39.1 - திருத்தொண்டத்தொகை - "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்");

பிளிறு மதயானை உரியன் "தமர்" ன்றுரைத்த நாவலூரர் - ஆண்யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானால் "நம் தமர்" என்று சொல்லப்பெற்ற சுந்தரர்; (சுந்தரர் தேவாரம் - 7.100.9 - "எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித்தான்மலை உத்தமனே");


3)

சேடர் போற்று சிவனே வெருட்டிச் செல்வம் தனைப்பறிக்கும்

வேடர் வாழும் முருகன் பூண்டி மேய பெருமானே

ஆட வல்ல அடிகேள் இவ்வூர் அமர்ந்த தேனென்று

பாட வல்ல பரவை கேள்வர் பாத மலர்போற்றி.


"சேடர் போற்று சிவனே - "பெரியோர்கள் போற்றும் சிவபெருமானே;

வெருட்டிச் செல்வம்தனைப் பறிக்கும் வேடர் வாழும் முருகன்பூண்டி மேய பெருமானே - அச்சுறுத்திப் பொருளைக் கொள்ளையடிக்கும் வேடர்கள் வாழ்கின்ற திருமுருகன்பூண்டியில் வீற்றிருக்கும் பெருமானே;

ஆட வல்ல அடிகேள் - கூத்தாடும் ஈசனே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி);

இவ்வூர் அமர்ந்தது ஏன்" என்று பாட வல்ல - இந்த ஊரில் நீர் ஏன் இருக்கின்றீர்?" என்று பதிகம் பாடிய; (சுந்தரர் தேவாரம் - 7.49.1 - "கூறைகொண்டு ஆறலைக்குமிடம் .. வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய் .. எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே");

பரவை-கேள்வர் பாதமலர் போற்றி - பரவை நாச்சியார் கணவரான சுந்தரருடைய மலர்ப்பாதங்களுக்கு வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment