Saturday, December 3, 2022

S.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

2014-02-09

S.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

-------------

மண்ணிருக்கும் காலெரியும் நீராகி வானண்ணும்

மண்ணிதம் சுற்றிவரும் வாழ்விக்கும் - திண்ணம்

முடிவில் நெருப்புருவம் பூணுமொரு முக்கண்

அடிகள் செயற்கைக்கோள் ஆங்கு.


சொற்பொருள்:

கால் - வாயு; காற்று;

எரிதல் - தீப்பற்றி எரிதல்;

எரி - தீ;

வான் - 1. ஆகாயம்; 2. அழகு; பெருமை;

நண்ணுதல் - 1. அடைதல்; / 2. பொருந்துதல்;

மண் - 1. நிலம்; பூமி; / 2. உலகமக்கள்;

நிதம் - தினமும்; (நித்தம்);

முடிவில் - 1. இறுதியில்; / 2. முடிவு இல் - எல்லையற்ற;

அடிகள் - கடவுள்;

ஆங்கு - 1. ஓர் உவமவுருபு; 2. ஓர் அசைச்சொல்;


செயற்கைக்கோள் (Satellite):

மண் இருக்கும் கால் எரியும், நீர் ஆகி, வான் நண்ணும் - பூமியில் இருக்கும் வாயுக்கள் (ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்) எரியும். அதனால் நீர் (நீராவி) உண்டாகி, (அதன் விளைவாக, ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்) ஆகாயத்தை அடையும்;

மண் நிதம் சுற்றிவரும் - எப்போதும் பூமியைச் சுற்றும்;

மண் வாழ்விக்கும் - மக்கள் இனிது வாழ உதவும்; ("மண்" என்ற சொல்லைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருமுறை இயைக்கலாம்);

("நிதம் சுற்றிவரும் மண் வாழ்விக்கும்" - என்றும் இயைத்துப் பொருள்கொள்ளலாம் - "தினமும் சுற்றிவருகின்ற மண்ணுலகை நல்லபடி வாழ்விக்கும்");

திண்ணம் முடிவில் நெருப்பு-உருவம் பூணும் - நிச்சயம் கடைசியில் (சில ஆண்டுகள் கழித்துப் பூமியை நோக்கி விழும்போது வாயுமண்டலத்தில் எரியும்பொழுது) தீயின் உருவத்தைக் கொள்ளும்;

செயற்கைக்கோள்.


சிவன்;

மண் இருக்கும்; கால் எரியும் நீர் ஆகி, வான் நண்ணும் - நிலத்தில் இருப்பவன்; காற்று, தீ, நீர் இவையும் ஆகி, வானிலும் பொருந்துபவன்; (ஐம்பூதங்களாகத் திகழ்பவன்); (கால் எரியும் நீர் - காலும் எரியும் நீரும் - உம் தொக்கது);

நண்ணும் மண் நிதம் சுற்றிவரும் - தொழ அடைந்த மக்கள் தினமும் வலம்செய்வார்கள்;

வாழ்விக்கும் திண்ணம் - (அவ்வடியார்களை) நிச்சயம் காத்து அருள்வான்;

முடிவு-இல் நெருப்பு-உருவம் பூணும் - எல்லையற்ற ஜோதி வடிவானவன்;

ஒரு முக்கண் அடிகள் - ஒப்பற்ற முக்கட்கடவுளான சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment