2014-10-25
M.062 - என்னாவாய் - அஞ்சேல் - மடக்கு
-------------
என்னாவாய் நீயே எருதேறீ முக்கண்ணா
என்னாவாய் ஒன்றுடையாய் எண்ணாய்நீ - என்னாவாய்
அஞ்சேல் அனகண்ணி நாதன் அடிபரவில்
அஞ்சேல் எனவருவான் ஆங்கு.
பதம் பிரித்து:
"என் நாவாய் நீயே! எருதேறீ! முக்கண்ணா!"
என்னா வாய் ஒன்று உடையாய்; எண்ணாய், நீ என் ஆவாய்?!
அம்-சேல் அன கண்ணி நாதன் அடி பரவில்
"அஞ்சேல்" என வருவான் ஆங்கு.
சொற்பொருள்:
என்னாவாய் - 1. என் நாவாய் (நாவாய் - மரக்கலம்); 2. என்னா வாய்; 3. என் ஆவாய்;
அஞ்சேல் - 1. அம் சேல் (அழகிய சேல்மீன்); 2. அஞ்சாதே;
"என் நாவாய் நீயே! எருதேறீ! முக்கண்ணா!" என்னா வாய் ஒன்று உடையாய் - "என் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலம் நீயே! இடபவானனே! முக்கண்ணனே!" என்று சொல்லாத வாயை உடையாய்;
எண்ணாய் நீ என் ஆவாய் - நீ என்ன ஆவாய் என்று எண்ணிப் பாராய்!
அம்-சேல் அன கண்ணி நாதன் அடி பரவில், "அஞ்சேல்" என வருவான் ஆங்கு - அழகிய சேல் மீன் போன்ற கண்ணுடைய உமைக்கு நாதன் திருவடியைப் போற்றினால், அவன் "அஞ்சேல்" என்று வந்தருள்வான்; (அன - அன்ன - போன்ற); (நாதன் - தலைவன்; கணவன்); (பரவுதல் - துதித்தல்); (ஆங்கு - அவ்விடத்தில்; அச்சமயத்தில்; அசைச்சொல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment